பெரியார்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 


சகுனம்!

சகுனம் பார்ப்பது எவ்வளவு காட்டுமிராண்டித்தனமாக வாழ்கிறார்கள்; எத்தனை டிகிரி முட்டாள் என்பதை அளக்கப் பார்ப்பான் வைத்துள்ள அளவுகோலேயாகும்.

முகூர்த்தம் பார்ப்பது அஸ்திவாரமே இல்லாமல் ஆகாயத்திலே கட்டுகிற கோட்டைக்கு வாயிற்படி கிழக்கிலா? மேற்கிலா? என்று அடித்துக் கொள்வதாகும்.காலை 4-மணிக்குத் திருமணம் என்பார்கள். அப்போது தான் நல்ல நேரம் என்பார்கள். எந்த வேலைக்கும் சரியில்லாமல் ஒன்றுமே செய்ய முடியாமல் இடைஞ்சலான நேரத்தில் வைத்துக் கொண்டு நேரம், நேரம் என்று பறக்கிறார்களே எவ்வளவு முட்டாள்தனமிது? நல்ல ராகு காலத்தில் 3-மணிக்குக் கோர்ட்டிலே கூப்பிட்டால் பேசாமல் இருந்து விடுவார்களா? எக்ஸ்பார்டியாகி விடும். உடனே ஒடிவிடுவார்கள். நல்ல எமகண்டத்தில் ரயில் புறப்படுகிறது என்பதற்காக ஏறாமல் இருந்து விடுவார்களா? உலகமெல்லாம் முன்னேறுகின்ற சமயத்தில் நம்முடைய சங்கதியைப் பார்த்தால் எவ்வளவு பிற்போக்கு? முற்காலத்தில் முன்னேறி இருந்தவர்கள் இந்தக் காலத்தில் இம்மாதிரி இருக்கலாமா? நம்மிடமே வாங்கிக் கொண்டு நம்மையே கீழ்மகனாக ஆக்கி விட்டுப் போய் விடுகிறானே பார்ப்பான் என்பதற்காக எதிர்க்கிறோமே தவிர 2-படி அரிசி வாங்கிக் கொண்டு போகிறான் என்பதற்காகவா? எதிர்க்கிறோம். அந்தக் காலத்தில் மோட்டார் ஆகாய விமானம் ரயில் இல்லை. இப்போது அவைகளையும் பயன்படுத்திக் கொள்கிறோம். நாம் இழிவு படுத்தப்படுகிற சங்கதிகளை மட்டும் ஏற்றுக் கொண்டு முன்னேற மறுக்கிறோம். எல்லாத்துறைகளிலும் எல்லோருக்குள்ளும் மாற்றஉணர்ச்சி ஏற்பட்டால் ஒழிய நம் நாட்டைப் போன்ற நம் சமூதாயத்தைப் போன்ற தாழ்த்தப்பட்ட – அடிமையாக்கப்பட்ட நாட்டுக்கும், சமூதாயத்திற்கும், விமோசனமில்லை.

------------- பெரியார் ஈ.வெ.ரா. - நூல்: "வாழ்க்கைத்துணை நலம்" பக்கம் - 34-35

 

http://thamizhoviya.blogspot.com/2008/08/blog-post_8447.html