மூலிகைவளம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 




கள்ளிமுளையான்.


1) மூலிகையின் பெயர் -: கள்ளிமுளையான்.


2) தாவரப்பெயர் -: CARALLUMA FIMBRIATUM.


3) தாவரக்குடும்பம் -: ARACEAE.


4) வேறு பெயர்கள் -: கள்ளிமுடையான்.


5) தாவர அமைப்பு - கள்ளிமுளையான் ஒரு சிறு கள்ளி வகையைச் சார்ந்தது கற்றாழை போல் குத்தாக வளரும் அடிபாகம் நாற்சதுரமாகவும் வளர,வளர நுனி சிறுத்தும் மூங்கில் போத்துப் போல வளரும். சாம்பல்,சிவப்பு நிறங்கலந்து, பசுமையாக வளர்ந்திருக்கும். சுமார் இரண்டடி உயரம்வரை வளரும். வரட்சியைத் தாங்கும். நுனியிலும் பக்கங்களிலும் சிறிய பூக்கள் பூக்கும். இயற்கையாக சிறு குன்றுகளில் ஒட்டுப் பாறைகளின் ஓரங்களில் அதிகம் காணப்படும்.ஆதிவாசிகள் மலையில் நடக்கும் போது தண்ணீர் தாகம் ஏற்பட்டால் இதன் தண்டைச் சாப்பிடுவார்கள. இது கைப்பு, கார்ப்பு, புளிப்பு கலந்த ஒரு சுவை இருக்கும். இனப் பெருக்கம் வேர், பக்கக்கன்றுகள் அல்லது தண்டுகள் மூலம் நடைபெரும்.


6) பயன்படும் பாகங்கள் - : தண்டுகள் மட்டும் பயன்படும்.

7) மருத்துவப் பயன்கள் - : கள்ளிமுளையான் உமிழ் நீரைப் பெருக்கும், பசியைத் தூண்டும், குளிர்ச்சி உண்டாக்கும். செரிப்பை விரைவு படுத்தும், உடலை உரம்பெற வைக்கும். குமட்டல் வாந்தியை நிறுத்தும், நாவின் சவையுணர்வை ஒழுங்கு படுத்தும், நீர் வேட்கையை அடக்கும். ஒரு பாடல் -


"வாய்க்குப் புளித்திருக்கும் வன்பசியை உண்டாக்கும்

ஏய்க்குமடன் வாதத்தையும் ஏறுபித்தம் சாய்க்கும்

தெள்ளிய இன்ப மொழித் தெய்வ மடவனமே

கள்ளிமுளையானை அருந்திக் காண்".


சித்த வடாகம் என்ற நூலில் கும்ப முனி இவ்வாறு கூறுகின்றார்.
புளிப்புச் சுவையுள்ள கள்ளிமுளையான் பசியையுண்டாக்கும் வாத மந்தத்தையும் பித்த தோஷத்தையும் மாற்றும் என்க.


உபயோகிக்கும் முறை - இதனைப் பற்றி தின்ன வாய்க்குள் புளிப்புச் சுவையோடு இதமாக இருப்பதுடன் பசியையுண்டாக்கி பித்தத்தைத் தணிக்கும்.


துவையல் - இதை சிறு துண்டுகளாக நறுக்கி எள் நெய் விட்டு வதக்கி, உழுந்து, இஞ்சி, கொத்துமல்லி, மிளகு, சீரகம், புளி, வைத்துத் துவையலாக அரைக்கவும், வாரம் ஒருமுறை உணவில் உட்கொள்ள மேற்கண்ட பயனைப் பெறலாம். வாந்தி, நீர் ஊறல் நிற்கும், உடல் வெப்பம் குறையும், உடல் நலம் பெறும்.



பித்த குன்மம், குடல் வாய்வுக்கு மருந்து செய்வோர் இதனைச் சேர்த்துச் செய்வார்கள். மேலை நாடுகளில் கள்ளிமுளையானின் முக்கிய வேதியப் பொருளின் தன்மையை ஆராச்சி செய்து (CALLOGENESIS & ORGANOGENESIS) அது உடல் பருமனைக் குறைக்கும் மற்றும் சர்க்கரை நோயைகுணமாக்கும் என்று கண்டு பிடித்து மேலும் ஆராய்ச்சிகள் செய்து செய்துகொண்டுள்ளார்கள். இது தற்போது தமிழ்நாட்டில் வியாபாரப் பயிராகச் செய்கிறார்கள்.


கள்ளிமுளையானின் மெல்லிய் தண்டை நீரில் சுத்தம் செய்து மூன்று அங்குலத் தண்டுகள் இரண்டை தினம் அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதியைக் குணப்படுத்தும் என்று தற்போது அறிந்துள்ளார்கள். இதை ஈரோடு சாம்பார் சண்முகம் எனபவர் செயலில் ஈடுபட்டு நிரூபித்துள்ளார். இதை வீடுகளில் வளர்க்கலாம். என் வீட்டிலும் உள்ளது.