சமையல்கலை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


துவரம் பருப்பில் நிறைந்த புரோட்டின் இருப்பதால் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இவ் வகையில் தயாரிக்கப்பட்ட உணவுதான் இது.

மிக விரைவாகச சமைக்கவும் பச்சிலேஸ்சிற்கும் இலகுவானது என்பதால் அனைவரும் விரும்புவர்.

சாதத்துடன் பருப்பும் சேர்வதால் போஷாக்கைக் கொடுக்கும். பசியையும் தணிக்கும்.

டயபடிஸ், கொலஸ்டரோல் உள்ளோரும் நெய் தவிர்த்து செய்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்


1. அரிசி - 1 கப்
2. துவரம் பருப்பு – ½ கப்
3. தக்காளி – 5
4. சின்ன வெங்காயம் - 10, அல்லது பெரிய வெங்காயம்
5. பெருங்காயம்- சிறிதளவு
6. மஞ்சள் பொடி – சிறிதளவு
7. புளி - சிறிதளவு
8. உப்பு தேவைக்கு ஏற்ப
9. நெய் - 2 டேபிள் ஸ்பூன்


வறுத்து அரைக்க


கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - ½ ரீ ஸ்பூன்
வெந்தயம் ¼ ரீ ஸ்பூன்
செத்தல் மிளகாய் - 4-5
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்


தாளிக்க


கடுகு – சிறிதளவு
கருவேற்பிலை – சிறிதளவு
செய்முறை

வெங்காயத்தை நீளவாட்டில் வெட்டுங்கள்.

தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டுங்கள்.

அரிசி பருப்பு மஞ்சள் பொடி கலந்து 2 ½ கப் தண்ணீர் விட்டு பிரஷர் குக்கரில் அவித்து எடுங்கள்.

நெய்யில் கடுகு கருவேற்பிலை தாளித்து வெங்காயம் வதக்கி தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

வதங்கியதும் உப்பு புளி விட்டு அரைத்த பொடி சேர்த்து கொதிக்க, ரைஸ் போட்டு கிளறி இறக்குங்கள்.

பரிமாறும் பிளேட்டில் போடுங்கள்.

விரும்பிய கறியுடன் பரிமாறுங்கள்.

பப்படம் சுவை கொடுக்கும்

:- மாதேவி -: