Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் உழைத்தவர் மெலிந்தனர் வலுத்தவர் கொழுத்தனர்

உழைத்தவர் மெலிந்தனர் வலுத்தவர் கொழுத்தனர்

  • PDF
PJ_2007 _12.jpg

பத்திரிக்கைகள் முதல் ப.சிதம்பரம் வரை நமது பொருளாதார வளர்ச்சி வீதம் 9 சதவீதத்தைத் தொடப் போகிறது எனச் சொல்கிறார்கள். பங்குச் சந்தைக் குறியீட்டெண் 20 ஆயிரத்தைத் தொட்டுவிட்டது. இந்திய தொழில் நிறுவனமான டாட்டா, அயல்நாட்டு நிறுவனமான கோரஸ்ஸை விலைக்கு வாங்கி விட்டது. அம்பானி உலகிலேயே பெரிய பணக்காரராகி விட்டார். இந்தியாவில் ரூ.4 கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொட்டு விட்டது.

 

மேலும் ""புதிதாய் உருவாக்கப்படும் நாற்கரச் சாலைகள். மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் போன்ற உள்கட்டுமானத் திட்டங்களும் புதிது புதிதாய் வந்திறங்கும் நுகர்பொருட்களும் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியைத்தானே காட்டுகிறது. இந்த வளர்ச்சியும் கடந்த 16 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உலகமய, தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் பலன்கள்தானே'' என்று ஆளும் வர்க்கம் வாதிடுகிறது.

 

ஆனால், 1991இல் இருந்து இன்றுவரை தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உலகமய, தாராளமயப் பொருளாதாரக் கொள்கையால் வறுமையை ஒழிக்க முடிந்திருக்கிறதா?

 

பட்டினியால் வாடும் மக்களின் தன்மையை அளவிடும் சர்வதேச அளவிலான குறியீட்டெண்ணின் அடிப்படையில் இந்தியா. எத்தியோப்பாவை விடத் தாழ்ந்து போயுள்ளது. சீனா (47வது இடம்), பாகிஸ்தானை விடவும் (88 ஆவது இடம்) இந்தியா (94 ஆவது இடம்) மிகவும் பின்னோக்கிச் சென்றுக்கொண்டிருக்கிறது.

 

மகப்பேற்றின்போது போதிய மருத்துவ வசதி இன்மையால் இறந்து போகும் இந்தியப்பெண்களின் எண்ணிக்கை மட்டும் ஆண்டுக்கு 1.17 லட்சம். வயது வந்த இந்தியர்களில் 48.5% பேர்கள் ஊட்டச்சத்துக்குறைவானவர்கள். 3 வயதுக்குக் குறைவான குழந்தைகளில் 47% பேர்களுக்கு வயதுக்கேற்ற உயரமில்லை. 15.5% பேர்களுக்கு உயரத்துக்கேற்ற எடை இல்லை என்பதெல்லாம் ஆய்வுகளில் தெரியவந்தவை.

 

சென்னை வளர்ச்சி நிறுவனம் அண்மையில் செய்துள்ள ஆய்வு ஒன்று, 1997 முதல் 2005 வரை இந்தியா முழுவதும் விவசாயிகளிடம் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளது என்றும் உயிரை மாய்த்துக்கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை மட்டும் ஒன்றரை லட்சம் என்றும் சொல்கிறது. மராட்டியம், கருநாடகம், ஆந்திரம், மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் மட்டும் 89,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பதை அரசே ஒத்துக் கொள்கிறது. இந்தப் பொருளாதாரக் கொள்கையால் தற்கொலை விகிதம் 27% அதிகரித்திருப்பதுதான் சாதனை.

 

32 ஆயிரம் பேர்கள் தற்கொலை செய்து கொண்ட மராட்டிய மாநிலத்தில்தான் 4 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள பணக்காரர்கள் 25 ஆயிரம் பேர் வாழும் மாநகரமான மும்பை உள்ளது என்பது வேதனை கலந்த உண்மை.

 

விவசாயத்துக்கு 1990இல் வங்கிகள் வழங்கிய கடன் 13.8 சதவீதமாக இருந்தது. அதே வங்கிகள் 200102 நிதியாண்டில் வழங்கிய கடனோ 7.2 சதவீதம் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலில் இருந்தே, ஆட்சியாளர்களுக்கு விவசாயத்தின் மீதுள்ள அக்கறை தெளிவாகப் புரியும்.

 

விவசாயிகளின் குடும்பத்தில் யாருக்காவது நோய்நொடி என்று வந்து விட்டால் மருத்துவமாவது பார்க்க முடிகிறதா? உலக சுகாதார நிறுவனம் தரும் அறிக்கை இந்தியாவின் பொது மருத்துவத்தின் தன்மையை அம்பலப்படுத்துகிறது. இந்தியாவில் 6 மாநிலங்களில் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, மருத்துவம் தனியார்மயமானதன் விளைவாக மருத்துவச் செலவால் மட்டும் 16% மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே போயுள்ளனர் என்றும் 12% பேர் தங்கள் குடும்பத்தின் மருத்துவச் செலவிற்காகச் சொத்தை விற்றுள்ளனர் என்றும், 43% பேர் நிரந்தரக் கடனாளிகளாகியுள்ளனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

 

இத்தகைய பன்முனைத்தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் நிலத்தை கந்துவட்டிக்காரர்களுக்கு எழுதிக் கொடுத்து விட்டு நகரங்களுக்குத் தப்பி ஓடிக்கொண்டுள்ளனர் விவசாயிகள். 2000த்தில் இந்தியப் பொருளாதாரத்துக்கு விவசாயத்தின் பங்களிப்பு 25.3 சதமாக இருந்த நிலை சரிந்து, இன்று அது 19.9 சதவிகிதமாகி, இன்னும் கீழே போய்க்கொண்டிருக்கிறது.

 

விவசாயத்தைப் படிப்படியாய் தலைமுழுகி விடுவது என்ற அடிப்படையில், 1991இல் விவசாயத் துறையில் அரசு செய்த முதலீடு 3.4 சதவிகிதமாக இருந்த நிலைமை மாறி, அதை 2001இல் 1.3 சதவிகிதமாகச் சுருக்கி, விவசாயிக்கு சுருக்குக் கயிறைத் திரித்துத் தந்தது.

 

தேசிய ஊட்டச்சத்து நிறுவனம், ஒரு தனிமனிதன் ஆண்டொன்றுக்கு உண்ணும் தானியத்தின் எடை குறைந்தபட்சம் 157 கிலோ இருக்க வேண்டும் என நிர்ணயித்துள்ளது. 1991இல் 161 கிலோவாக இருந்த இந்த அளவு, தாராளமயத்தின் காலகட்டத்தில் 144 கிலோவுக்கும் கீழே போய்க்கொண்டுள்ளது.

 

உடல் உழைப்புக்கு அவசியமாகத் தேவைப்படும் புரதத்தை வழங்கும் பருப்பின் நுகர்வோ 15.2 கிலோவில் இருந்து 10.6 கிலோவாகச் சரிந்துள்ளது. உலக அளவில் நாளொன்றுக்கு தனிநபர் உண்ணும் உணவின் கலோரி மதிப்பு 3206. ஆனால் இந்திய மக்களில் ஏழைகளான 30 சதவிகிதம் பேர் உண்பதோ வெறும் 1626 கலோரிதான் என்று புள்ளி விவரங்கள் எச்சரிக்கின்றன என்றால், இந்திய ஏழைகளின் வாழ்க்கை என்பதே ஏதோ உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதுதானே பொருள்?

 

மக்களை பட்டினிச் சாவுக்கு தள்ளிய இந்த நாசகாரக் கொள்கை, தொழில் துறையில் மட்டும் என்ன சாதித்திருக்கிறது?

 

உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பு 1970களில் 28.3 சதவிகிதமாக இருந்தது. அதுவே 80களில் 16.9 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. புதிய பொருளாதாரக் கொள்கை இதனைத் தூக்கி நிறுத்தியதா? அது உருவாக்கிய வேலைவாய்ப்போ 1.7 சதவிகிதம் மட்டுமே.

 

அந்நிய முதலீடு உருவாக்கியதாய்ச் சொல்லப்பட்ட வேலைவாய்ப்புகளின் சதவிகிதம் என்ன? வெறும் 0.2 சதவிகிதம் மட்டுமே. அதுவும் உயர்கல்வி கற்றலை முன்நிபந்தனையாக முன்வைக்கும் தகவல் தொழில் நுட்பத் துறையில் மட்டும்தான் வேலைவாய்ப்பை அது உருவாக்கியது. இத்துறையினால் உள்நாட்டு உற்பத்திக்கு எத்தனை சதவிகிதம் பங்களிப்பு உள்ளது? வெறும் 3.2 சதம் மட்டுமே.

 

தாராளமயம் புதிது புதிதாய் வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது என்று கதை சொல்கின்றன முதலாளித்துவப் பத்திரிக்கைகள். எப்படிப்பட்ட வேலைகள் என்று இந்தியாடுடேயைக் கேளுங்கள். நட்சத்திர விடுதிகளில் ஓட்கா சாராயத்தை பிராந்தியுடனும், ஒயினுடனும் எப்படிக் கலக்கி காக்டெயில் தயாரிப்பது என்பது பற்றிய புதுவகை டிப்ளமோ படிப்பை படித்துவிட்டு, மதுவகைகளை வாடிக்கையாளர்களுக்கு ஊற்றிக்கொடுக்க பெண்களுக்கு அது வழி சொல்கிறது.

 

இந்திய மக்களில் 91 கோடி பேர்களின் தினசரி வருமானம் 80 ரூபாய்க்கும் கீழே என்றும், அந்தக் கொஞ்ச நஞ்ச பணத்துக்குள் தங்கள் உணவு, வீட்டு வாடகை, மருத்துவம், குழந்தைகளுக்கான கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்படியான அவல நிலைக்குத் தள்ளி உள்ளது என்றும் உலக வங்கியே குறிப்பிடுகிறது.

 

ஆனால் அதே நேரத்தில், நாட்டில் உள்ள 10 சதவீதப் பணக்காரர்கள் இந்நாட்டின் 52 சதவீத சொத்துக்களையும் வளங்களையும் அனுபவிக்கின்றனர். அடித்தட்டில் இருக்கும் 10 சத ஏழைகள் அனுபவிக்கும் வளங்களோ வெறும் 0.21 சதமாகச் சுருங்கி உள்ளது.

 

110 கோடி இந்திய மக்களில் வெறும் ஒரு லட்சம் பேரை மட்டும் கோடீஸ்வரர்களாக்கி, பல பத்து கோடிப்பேரை ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடுபவர்களாக மாற்றியிருப்பதுதான் தனியார்மயம்தாராளமயக் கொள்கையின் சாதனை!


· செங்கதிர்