Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் அமெரிக்காவுக்கு எரிபொருள் ஏழைக்குப் பட்டினிச் சாவு

அமெரிக்காவுக்கு எரிபொருள் ஏழைக்குப் பட்டினிச் சாவு

  • PDF
PJ_2007 _12.jpg

புவி வெப்பம் உயர்வதைத் தடுப்பதற்காக உயிரிஎரிபொருளைப் பயன்படுத்துவது என்ற ஏகாதிபத்தியத் திட்டம் உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருகிறது.

 

அமெரிக்க ஐக்கிய நாடுகளை ஒட்டி அமைந்துள்ள மெக்சிகோ நாட்டு மக்களின் அன்றாட உணவான மக்காச் சோளம் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் அசாதாரணமான அளவிற்கு உயர்ந்ததையடுத்து,

 அந்நாட்டில் கடந்த ஆண்டு உணவுக் கலகம் ஏற்பட்டது. பட்டினி கிடக்க மறுத்து, அந்நாட்டு மக்கள் நடத்திய போராட்டங்கள், மக்காச் சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்காகத் தனிச் சட்டம் போட வேண்டிய நிலைக்கு, மெக்சிகோ அரசைத் தள்ளியது.

 

மெக்சிகோவுக்கு அருகில் அமைந்துள்ள பிரேசில், குவாதிமாலா நாடுகளிலும் கூட, இதே நிலைமை தான். குவாதிமாலாவில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் மக்காச் சோளத்தின் விலை 37% அதிகரித்ததால், அந்நாட்டு ஏழை மக்கள் அரைகுறை பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 

ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள சுவாசிலாந்து நாட்டு மக்கள் உணவாகப் பயன்படுத்தும் ""கசாவா'' என்றொரு கிழங்கு வகைக் கிடைப்பதற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஏறத்தாழ 40 சதவீத மக்கள் முழுப்பட்டினி கிடைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 

உணவுப் பொருட்களின் விலையேற்றமும், தட்டுப்பாடும் ஏமன், பர் கினோ ஃபாசோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உணவுக் கலகங்கள் ஏற்படும் நிலையைத் தோற்றுவித்துள்ளன.

 

அர்ஜெண்டினா நாட்டில் இறைச்சியைவிடத் தக்காளியின் விலை அதிகமாகிப் போனதால், விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக, அந்நாட்டு மக்கள் தக்காளியைப் புறக்கணிக்கும் போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.

 

இத்தாலியில் உணவுப் பொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, பஸ்தா என்ற உணவுப் பொருளை ஒருநாள் மட்டும் புறக்கணிக்கும் போராட்டம் நடந்திருக்கிறது.

பால், ரொட்டி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை, அடுத்த ஆண்டு சனவரி 31ந் தேதி வரை உயர்த்தக் கூடாது என ரசியாவில் அரசாங்கத் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

 

""கடந்த ஓராண்டுக்குள் மக்காச் சோளத்தின் விலை 50 சதவீதமும்; அரி சியின் விலை 20 சதவீதமும்; கோதுமையின் விலை இரண்டு மடங்காகவும் அதிகரித்துள்ளதாக''க் குறிப்பிட்டுள்ள ஐ.நா மன்றம், ""உலக அளவில் தானியக் கையிருப்பு 57 நாட்களுக்கு மட்டுமே இருப்பதாகவும்; கடந்த 25 ஆண்டுகளில் இது போன்றதொரு மோசமான சூழ்நிலை ஏற்பட்டதில்லை'' என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

 

சுருக்கமாகச் சொன்னால், உலகின் ஏழை மக்கள் பட்டினியை நோக்கித் தள்ளப்படுகின்றனர். இதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள் ஜமைக்கா, நேபாளம், பிலிப்பைன்ஸ், ஆப்பிரிக்காவில் உள்ள துணை சகாரா நாடுகளில் தென்படுவதாகக் கூறப்படுகிறது. எனினும், பங்குச் சந்தை வீழ்ச்சியின் துயரம் விவாதிக்கப்படும் அளவிற்கு, உலக அளவில் எழுந்துவரும் உணவுப் பொருள் தட்டுப்பாடும், அவற்றின் விலையேற்றமும் விவாதிக்கப்படுவதில்லை.

···

கடந்த இரண்டு ஆண்டுகளாக உணவுப் பொருட்களின் விலை விஷம் போல ஏறி வருவதற்கும், உணவுப் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதற்கும் வெள்ளம் / வறட்சி போன்ற நொண்டிச் சாக்குகளைக் கூறி ஆளும் கும்பல் தப்பிவிட முடியாது. மாறாக, ""உயிரிஎரிபொருள்'' (Bio-fuel) என்ற ஏகாதிபத்திய நாடுகளின் தான்தோன்றித்தனமான திட்டத்தைத்தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்.

 

உயிரி எரிபொருள் தயாரிப்புக்காக மக்காச்சோளம், சோயா, கரும்பு, சில வகையான கிழங்குகள், எண்ணெய் வித்துகள் போன்ற விவசாய விளைபொருட்கள் திருப்பிவிடப்பட்டதால்தான் இந்த விலையேற்றமும், தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளன.

 

இயற்கையாகக் கிடைக்கும் கச்சா எண்ணெய், நிலக்கரி போன்ற மரபு சார்ந்த எரிபொருட்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொண்டு, அதனிடத்தில் தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் உயிரிஎரிபொருளைப் பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டும் என ஏகாதிபத்திய நாடுகள் உபதேசிக்கத் தொடங்கியுள்ளன. இதன் மூலம், ""சுற்றுப்புறச் சூழல் மாசு அடைவதைத் தடுக்கலாம்; புவியின் வெப்பம் உயர்ந்து கொண்டே போவதைத் தடுக்கலாம்; கச்சா எண்ணெய் இறக்குமதி; அதனின் விலை உயர்வு ஆகியவற்றால் தேசியப் பொருளாதாரம் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம்'' என உயிரிஎரிபொருள் பயன்பாட்டுக்கான காரணங்கள் அடுக்கப்பட்டு, உயிரிஎரிபொருளுக்கு ஆதரவாக உலகெங்கிலும் தீவிரமாகப் பிரச்சாரம் நடந்து வருகிறது.

 

ஏழை நாடுகளைவிட, அமெரிக்க ஏகாதிபத்தியமும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும்தான் உயிரிஎரிபொருள் பயன்பாட்டினை அதிகரிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. ""ஐரோப்பிய யூனியன் நாடுகளில் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும் எரிபொருளில் 2010க்குள் 5.75 சதவீதமும்; 2015க்குள் 8 சதவீதமும் உயிரிஎரிபொருளைப் பயன்படுத்த வேண்டும்'' என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ""இந்த நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள், அமெரிக்காவில் பயன்படும் எரிபொருளில் 30 சதவீதம், உயிரிஎரிபொருளாக இருக்க வேண்டும்'' என அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் புஷ் அறிவித்திருக்கிறார்.

 

அமெரிக்காவிற்கும், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும் தேவைப்படும் இந்த உயிரிஎரிபொருளைத் தயாரித்துக் கொடுக்கும் சமூகப் பொருளாதாரக் ""கடமை'' ஏழை நாடுகளின் மீது சுமத்தப்பட்டு, அதற்கான திட்டங்களும் தயாராகி வருகின்றன.

 

· உயிரிஎரிபொருளான எத்தனால் தயாரிப்பில், 1 சதவீதமாக உள்ள மத்திய அமெரிக்க நாடுகளின் பங்கை, 2020க்குள் 5 சதவீதமாக உயர்த்தும் திட்டத்தை அறிவித்துள்ள ""ஐ.டி.பி.'' என்ற அமெரிக்க வங்கி, இதற்காக எட்டு இலட்சம் கோடி ரூபாய் மூலதனமிடப் போவதாகக் குறிப்பிட்டுள்ளது.

 

· அமெரிக்காவிற்கும், மத்திய அமெரிக்க நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில், உயிரிஎரிபொருள் தயாரிப்புக்கும், விற்பனைக்கும் இறக்குமதி வரி விலக்கு உள்ளிட்டுப் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.


· அமெரிக்காவின் தேசங்கடந்த தொழில்கழகமான கார்கில், பிரேசில், எல்சல்வடார் ஆகிய நாடுகளுடன் இணைந்து உயிரிஎரிபொருள் சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவும் ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது.

 

· இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டி1ஆயில் நிறுவனம், ஜமைக்கா நாட்டில் ஒப்பந்த விவசாய அடிப்படையில் காட்டாமணக்குப் பயிரிடுவதை, 4,000 ஹெக்டேர் பரப்பளவில் இருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 1,74,000 ஹெக்டேர் பரப்பளவிற்கு விரிவாக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.

 

· இந்தியாவில், 1.4 கோடி ஹெக்டேர் பரப்பளவில் காட்டாமணக்கு பயிரிடும் திட்டமொன்றை இந்திய அரசு தீட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

 

· மலேசியாவிலும், இந்தோனேஷியாவிலும் ""பாமாயில்'' உற்பத்திக்காக விளைவிக்கப்படும் கூந்தல் பனை விளைச்சலில் 40% சதவீதத்தை உயிரிஎரிபொருள் உற்பத்திக்காக ஒதுக்கப் போவதாகவும்; பிரேசில் நாட்டில் விளையும் கரும்பில் 50 சதவீதத்தை எத்தனால் தயாரிக்க ஒதுக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

இவை மட்டுமின்றி, கோதுமை, சோயா ஆகிய உணவு தானியங்களிலிருந்தும் வணிக ரீதியாக உயிரிஎரிபொருள் தயாரிக்க முடியுமா? என்பது குறித்த ஆராய்ச்சிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

···

உயிரிஎரிபொருள் மாசற்ற, சுத்தமான எரிபொருள் (Clean energy) தானா? இதனை எரிப்பதால் சுற்றுப்புறச் சூழல் மாசு அடையுமா, அடையாதா? என்பதெல்லாம் அறிவியல்பூர்வமாக விவாதித்துத் தீர்க்க வேண்டிய நிலையில்தான் உள்ளன. எனினும், ஏகாதிபத்தியங்களால் முன் தள்ளப்படும் இந்தத் திட்டம், ஏழை நாடுகளின் விவசாயத்தின் மீதும், ஏழை மக்களின் மீதும் பாரதூரமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இப்பொழுதே ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

 

""ஒரு காரின் டாங்கை நிரப்பும் அளவிற்கு உயிரிஎரிபொருளைத் தயாரிக்கத் தேவைப்படும் உணவுப் பொருளைக் கொண்டு, ஒரு ஏழையின் ஓராண்டு உணவுத் தேவையை நிறைவு செய்து விட முடியும்'' எனக் கூறப்படுகிறது. அதனால்தான் இந்தத் திட்டத்தை எதிர்த்துப் போராடும் இலத்தீன் அமெரிக்க மக்கள், ""அமெரிக்காவில் கார்கள் ஓடுவதற்கு நாங்கள் பட்டினி கிடக்க வேண்டுமா?'' என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

 

· அமெரிக்காவில் கடந்த ஆண்டு விளைந்த மொத்த மக்காச் சோள விளைச்சலில் 20 சதவீதம் (1.4 கோடி டன்) உயிரிஎரிபொருளான எத்தனால் தயாரிப்புக்குத் திருப்பிவிடப்பட்டதன் விளைவாக, அந்நாட்டில் மக்காச் சோளத்தின் விலை கடந்த ஓராண்டுக்குள் 50 சதவீதம் அதிகரித்திருக்கிறது.


· ஐரோப்பிய யூனியன் நாடுகளில் விளையும் ஒருவித கடுகு எண்ணெய் வித்து, உயிரிஎரிபொருள் தயாரிப்புக்கும் பயன்படுத்தப்படுவதால், அதன் விலை 2005ஆம் ஆண்டில் 75 சதவீதம் அதிகரித்தது.

 

· ஆப்பிரிக்க நாடான சுவாசிலாந்தில் விளையும் உணவுப் பொருளான கசாவா கிழங்கு உயிரிஎரிபொருள் தயாரிப்புக்காக ஏற்றுமதி செய்யப்பட்டதால்தான், அந்நாட்டைச் சேர்ந்த 40 சதவீத மக்கள் பட்டினி கொடுஞ்சிறைக்குள் தள்ளப்பட்டனர்.

 

தற்பொழுது கிடைக்கும் அதிகாரபூர்வ புள்ளி விவரத்தின்படி, உலகில் ஏறத்தாழ 85 கோடி மக்கள் அரைகுறைப் பட்டினியோடுதான் காலத்தை ஓட்டுகின்றனர். உயிரிஎரிபொருள் தயாரிப்புக்காக உணவுப் பொருட்கள் திருப்பி விடப்படுவது அதிகரித்துக் கொண்டே செல்லும் பொழுது, உணவுப் பொருட்களின் விலை மட்டும் உயராது. இந்தப் பட்டினி பட்டாளத்தின் எண்ணிக்கையும் தற்பொழுது உள்ளதைவிடப் பல மடங்காக அதிகரித்துவிடும்.

 

உணவுப் பொருளை, உலகில் ஓடும் 80 கோடி கார்களின் எரிபொருள் தேவைக்குப் பயன்படுத்துவதா? அல்லது உலகில் வாழும் 200 கோடி ஏழை மக்களின் நல்வாழ்வுக்காகப் பயன்படுத்துவதா? என்ற கேள்வியில் இருந்துதான் உயிரிஎரிபொருள் திட்டத்தைப் பரிசீலிக்க வேண்டும்.

 

உலகின் எரிபொருள் தேவையை ஈடுகட்டவும்; சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதைத் தடுக்கவும்; புவி வெப்பம் உயர்வதைத் தடுக்கவும் அறிவியல்பூர்வமான வேறு வழிகள் இருக்கும்பொழுது, ஏழை மக்களைப் பட்டினிக்குள் தள்ளிவிட்டுத்தான் இதனைச் சாதிக்க முடியும் என்பது மனிதாபிமானத்திற்கு எதிரான வக்கிரத் திட்டமாகவே இருக்க முடியும்.

···

பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற மரபுசார்ந்த எரிபொருளுக்கு முற்றிலும் மாற்றீடாக உயிரிஎரி பொருள் அமைந்து விட முடியாது. ""இந்தப் புவியில் உள்ள அனைத்து விவசாய நிலங்களிலும், வீரிய மக சூலைத் தரும் உயிரிஎரிபொருள் தாவரங்களைப் பயிரிட்டால் கூட, அது, உலகின் கச்சா எண்ணெய் தேவையில் வெறும் 20 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்'' என்பதை உயிரிஎரிபொருள் ஆதரவாளர்கள் கூட ஏற்றுக் கொள்கிறார்கள்.

 

புவியின் நிலப்பரப்பில் 40 சதவீதம் விவசாய நிலங்களாகவோ, மேய்ச்சல் நிலங்களாகவோ, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளாகவோ இருந்து வருகின்றன. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் உயிரிஎரிபொருள் தேவையை ஈடு செய்யும் வண்ணம் உயிரிஎரிபொருள் தாவரங்களை வளர்ப்பதற்குப் புதிதாக நிலம் எதுவும் இல்லாததால், ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்துவரும் இந்த 40 சதவீத நிலங்களைத்தான் ஆக்கிரமிக்க வேண்டியிருக்கும்.

 

இது, பாரம்பரிய விவசாயம் அழிவதற்கும், வனப் பகுதிகள் அழிக்கப்படுவதற்கும் ஈட்டுச் செல்வதோடு, சுற்றுப்புறச் சூழல், பல்லுயிர் பெருக்கம் (Bio-Diversity) ஆகியவற்றில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள்.

 

போக்குவரத்து வாகனங்களில் பயன்படுத்தப்படும் பெட்ரோல் டீசலில், 10 சதவீதம் அளவிற்கு எத்தனால் கலக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் திட்டம் நிறைவேற வேண்டுமானால், அதனைத் தயாரிப்பதற்குத் தேவையான உயிரிஎரிபொருள் தாவரங்களைப் பயிரிட அமெரிக்காவின் மொத்த விவசாய நிலப்பரப்பில் 30 சதவீதமும்; ஐரோப்பாவின் மொத்த விவசாய நிலப்பரப்பில் 50 சதவீதமும் தேவைப்படும். அதாவது, பாரம்பரிய விவசாயத்தை அழிப்பதன் மூலம் மட்டுமே, அமெரிக்கஐரோப்பிய நாடுகளின் தேவையை ஈடு செய்ய முடியும்.

 

ஒரு ஹெக்டேர் நிலத்தில் வளர்க்கப்படும் கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் உயிரிஎரிபொருளான எத்தனால், ஓர் ஆண்டில் 13 டன் கரியமில வாயு, வாயு மண்டலத்தில் கலப்பதைத் தடுக்கும்; அதேசமயம், அந்த ஒரு ஹெக்டேர் நிலத்தில் வளர்ந்து நிற்கும் காடோ, 20 டன் கரியமில வாயுவைக் கிரகித்துக் கொண்டு, சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதைத் தடுக்கும் எனக் கூறப்படுகிறது.

 

உயிரிஎரிபொருளைத் தயாரிக்கத் தேவைப்படும் தாவரங்களை வளர்க்க மண்ணில் கொட்டப்படும் இரசாயன உரங்களையும், பூச்சி மருந்துகளையும் கணக்கில் கொண்டால்; தாவரத்தில் இருந்து உயிரிஎரிபொருளைப் பிரித்து எடுத்துச் சுத்திகரிப்பதற்கும், அதனைப் பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்கும் தேவைப்படும் எரிபொருளைக் கணக்கில் கொண்டால், உயிரிஎரிபொருளால் சுற்றுப்புறச் சூழலுக்குக் கிடைக்கும் பலன் பெரிதாக எதுவும் இராது என்றும் கூறப்படுகிறது. இதிலிருந்தே, புவியின் வெப்பம் உயர்வைத் தடுப்பதற்கும், சுற்றுப்புறச் சூழல் மாசு அடைவதைத் தடுப்பதற்கும் உயிரிஎரிபொருளைவிட, வனப்பகுதிகளைப் பெருக்குவதையும், பாதுகாப்பதையும் முக்கியமானதாகக் கருத முடியும்.

 

ஆனால், உயிரிஎரிபொருளை உற்பத்தி செய்வதற்காக தென் அமெரிக்க நாடுகளில் வளர்க்கப்படும் கரும்பு மற்றும் சோயா விவசாயத்தால் அமேசான் காடுகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவிலும், மலேசியாவிலும் கூந்தல் பனை பயிரிடும் நிலப்பரப்பை அதிகரிப்பதற்காகக் காடுகள் அழிக்கப்படுகின்றன. காடுகளின் அழிவு, குறிப்பாக அமேசான் மழைக் காடுகளின் அழிவு புவியின் வெப்பத்தை 0.6 டிகிரி முதல் 1.5 டிகிரி சென்டிகிரேடுவரை அதிகரிக்க வைக்கும் எனச் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள்.

 

புவியின் வெப்பம் உயர்வதைத் தடுக்கும் நோக்கத்திற்காக உலக நடுகள் ஏற்றுக் கொண்டுள்ள கியோடோ ஒப்பந்தத்தில் இன்றுவரை கையெழுத்துப் போட மறுத்துவரும் நாடு அமெரிக்கா. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானபொழுது, ""மற்ற நாடுகளுக்காக, எங்கள் மக்களின் (ஆடம்பர) வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள முடியாது'' எனக் கூறி, ஒப்பந்தத்தை எதிர்த்து அறிக்கை விட்டவர் சீனியர் புஷ். அப்படிப்பட்ட அமெரிக்கா, புவி வெப்பம் உயர்வதைத் தடுக்க உயிரி எரிபொருள் தேவை என வாதாடுகிறது. ஏழை நாடுகளின் ஆளும் கும்பல்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கொண்டு, உயிரிஎரிபொருள் தாவரங்களைப் பயிர் செய்வதன் மூலம், விவசாயிகளின் ஏழ்மையை விரட்டிவிட முடியும் என ஆசை காட்டுகிறார்கள். தங்க ஊசி என்பதற்காகக் கண்ணைக் குத்திக் கொள்ளவா முடியும்?


· செல்வம்