Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் ஒப்பந்தத் தொழிலாளர்களின் உரிமை பறிப்புக்கெதிராக ஆர்ப்பாட்டம்

ஒப்பந்தத் தொழிலாளர்களின் உரிமை பறிப்புக்கெதிராக ஆர்ப்பாட்டம்

  • PDF

PJ_2007 _12.jpg ஓசூர்சிப்காட் 1 பகுதியில் உள்ள அசோக் லேலண்டு தொழிற்சாலை 1980 முதல் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் நிரந்தரத் தொழிலாளர்கள் 2332 பேரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 1100 பேரும் வேலை செய்து வருகின்றனர். 200607 நிதியாண்டில் ரூ.441 கோடி இலாபம் ஈட்டிய இந்திறுவனம் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு ரூ.23,000 போனஸ் வழங்கியது. ஆலை நிர்வாகத்தால் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குப் போனஸ் வழங்கப்பட்டுள்ள போதிலும், ஒப்பந்ததாரர்கள் தொழிலாளர்களுக்கு போனசைக் கொடுக்காமல் முழுப்பணத்தையும் ஏப்பம் விட்டுள்ளனர்.

 

போனஸ் உரிமை மட்டுமல்ல; எந்த உரிமையும் அசோக் லேலண்டில் வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளிக்குக் கிடையாது. 8 மணி நேரவேலை என்ற பெயரில் இவர்கள் 16 மணிநேரம் வேலை வாங்கப்படுகிறார்கள். ஒப்பந்ததாரர்கள் சுருட்டிக் கொண்டது போக, அற்பத்தொகைதான் இவர்களுக்குச் சம்பளமாகத் தரப்படும். ஓவர்டைம் வேலை செய்தாலும் இரட்டிப்புச் சம்பளம் முழுவதையும் ஒப்பந்ததக்காரர்களே பறித்துக் கொள்வார்கள். மருத்துவ ஈட்டுறுதித் தொகை, சேமநல நிதி முதலானவற்றை சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ளும் இக்கொள்ளையர்கள், அவற்றைப் பயன்படுத்த தொழிலாளிக்கு எந்த உரிமையும் தராமல் ஏய்க்கிறார்கள்.

 

ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கமாக அணிதிரண்டு போராடினால் மட்டுமே உரிமைகளை மீட்டெடுக்க முடியும் என்பதை உணர்த்தி, லேலண்டு ஆலையில் செயல்படும் பு.ஜ.தொ.மு. பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு, அதன் தொடர்ச்சியாக ஒப்பந்தத் தொழிலாளர்களை அணிதிரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை ஆலை வாயில் முன்பாக 20.11.07 அன்று நடத்தியது. நிரந்தரத் தொழிலாளர்களையும் அணிதிரட்டி நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் ஓசூர் தொழிலாளர்களிடம் புதிய பார்வையையும் புதிய நம்பிக்கையையும் விதைத்துள்ளது. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்காக லேலண்டு ஆலை முன் இத்தகையதொரு ஆர்ப்பாட்டம் இதுவரை நடந்ததில்லை என்று குறிப்பிடுமளவிற்கு ஏறத்தாழ 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்புடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டம் ஒரு தொடக்கம்தான்; அடுத்த கட்டப் போராட்டம் தொடரும் என முன்னணியாளர்கள் சூளுரைத்துள்ளனர்.


— புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஓசூர்.