Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்

குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்

  • PDF
PJ_2007 _12.jpg

இந்து மதவெறி அமைப்புகள், இசுலாமியத் தீவிரவாதிகளைப் போல
குண்டுவெடிப்பு போன்ற பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள்
என்ற பொதுக் கருத்து அடிப்படையிலேயே ஆதாரமற்றது.

 

நாட்டின் எந்த மூலையிலும் ஏதாவது ஒரு பயங்கரவாதக் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தாலும், ஒன்று இசுலாமிய பயங்கரவாதிகள் செயல் என்று முத்திரை குத்தப்படுகிறது.

அல்லது நக்சலைட்டு தீவிரவாதிகளின் தாக்குதல் என்று சந்தேகப்பார்வை திரும்புகிறது. ஆனால், அது பார்ப்பனஇந்துமத பயங்கரவாதிகளின் செயலாகவும் இருக்கலாம் என்ற கோணத்தில் செய்தி ஊடகங்களோ, போலீசுஉளவுத்துறையோ சந்தேகிப்பதும் இல்லை; அந்தத் திசையில் விசாரணையை நடத்துவதுமில்லை.

 

ஆனால், நவீன வெடிகுண்டுகள் முதல் தாக்குதலுக்கான ஏவுகணைகள் வரை தயாரிக்கவும் அவற்றைக் கொண்டு இசுலாமிய சமுதாயத்துக்கு எதிராகப் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தவும் பார்ப்பனஇந்து மதவெறிக் கும்பல்கள் பயிற்றுவிக்கப்பட்டு நாடுதழுவிய வலைப்பின்னலை அமைத்திருக்கின்றது என்பது சமீபத்தில் அம்பலமாகியிருக்கிறது.

 

· மத்திய மராட்டிய மாநிலம் பார்பானி நகரின் ரெஹமத் நகரில் உள்ள மெகமதியா மஸ்ஜித்தில் 2003ஆம் ஆண்டு நவம்பர் 21 அன்று வெள்ளிக்கிழமை ஒரு குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது.

 

· அதே பார்பானி மாவட்டம் புர்ணா நகரின் சித்தார்த் நகரில் உள்ள மிராஜ்உல்உலூரம் மதார்சா மற்றும் மஸ்ஜித்தில் 2004ஆம் ஆண்டு ஆகஸ்டு 27 அன்று வெள்ளிக்கிழமை குண்டு வெடிப்புகள் நடந்தன.

 

· மத்திய மராட்டிய மாநிலத்தின் ஜால்னா நகரின் சதர் கடைவீதியில் உள்ள காதிரியா மஸ்ஜித்தில் 2004 ஆகஸ்டு 27 அன்று வெள்ளிக்கிழமை குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது.

 

மேற்கண்ட மூன்று குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கும் சில வியத்தகு பொதுத்தன்மைகள் உள்ளன. எல்லாம் மத்திய மராட்டிய மாநிலத்தில் உள்ள நகரங்களின் பிரபல மசூதிகளில், வெள்ளிக் கிழமைகளில் மிக அதிகமாக இசுலாமியர்கள் திரளும் மதியம் தொழுகைக்குப் பிறகு, 1.45 முதல் 2 மணிக்குள் நடந்திருக்கின்றன. இந்தக் குண்டுவெடிப்புகளில் இசுலாமியர்கள்தாம் பலியாகியிருக்கின்றனர்.

 

இருந்தபோதும், இவையெல்லாம் அண்டை நாடுகளில் இருந்து, மிதவாத இசுலாமியர்களைப் பலிவாங்கவோ அல்லது மதவெறியைத் தூண்டிவிட்டு இந்துக்களோடு மோதவிடவோ இசுலாமியப் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகள் என்று உளவுத்துறையும், செய்தி ஊடகங்களும், பா.ஜ.க. மற்றும் காங்கிரசு போன்ற அரசியல் கட்சிகளும் கூறி வந்தன; இன்னமும் கூறி வருகின்றன.

 

ஆனால், 2006, ஏப்ரல் 7 அன்று வெள்ளிக்கிழமை மத்திய மராட்டியத்தில் உள்ள ஒளரங்காபாத் மசூதியில் குண்டு வைக்க வெடிகுண்டுகள் தயார் செய்யும்போது, நாண்டெட் நகரில் நடந்த வெடிகுண்டு விபத்தில் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. வி.இ.ப. பஜ்ரங்தள் கூட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேர் மாண்டு போய், ஐந்து பேர் படுகாயமுற்றுக் கைதானபோது உண்மை வெளியானது.

 

இந்தக் கும்பல் கைதான பிறகும், 2006ஆம் ஆண்டு, செப்டம்பர் 8, வெள்ளிக்கிழமை அன்று மதியம் தொழுகைக்குப் பிறகு நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 38 இசுலாமியர்கள் கொல்லப்பட்டார்கள்; நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமுற்றார்கள். அதன்பிறகு, இந்த ஆண்டு ஐதராபாத் மெக்கா மசூதி மற்றும் அஜ்மிர் தர்கா ஆகிய குண்டுவெடிப்புகள் அதேபாணியில் நடந்துள்ளன.

 

பார்பானி, ஜால்னா, புர்ணா மசூதிகளின் குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., வி.இ.ப., பஜ்ரங்தள் சதிகாரக் கும்பல் நாண்டெட் நகர வெடிகுண்டு தயாரிப்பு விபத்துக்குப் பிறகு கைது செய்யப்பட்டு விட்டது; என்ற போதும், அந்தக் கும்பலின் அதே பாணியிலான, இசுலாமியர்களைப் படுகொலை செய்யும் குண்டுவெடிப்புகள் தொடர்ந்து நிகழ்த்தப்படுகின்றன.

 

இனிமேலும் இதேபாணியிலான குண்டுவெடிப்புகளைத் திட்டமிட்டு நடத்துவதற்காகப் பார்ப்பனஇந்துமதவெறி சதிகாரக் கும்பல் ஒரு பயங்ரவாத வலைப்பின்னலைக் கொண்டிருப்பதை நாண்டெட் நகர வெடிகுண்டு தயாரிப்பு விபத்தில் சிக்கிய குற்றவாளிகளின் வாக்குமூலங்களே காட்டுகின்றன.

 

பர்பானி, புர்ணா, ஜல்னா மற்றும் நாண்டெட் குண்டுவெடிப்புக் குற்றவாளிகளான சஞ்சய் எனப்படும் பாபுராவ் சௌதுரி மற்றும் ஹிமான்சு பான்சே ஆகிய இருவரும் பெங்களூருவில் உள்ள குற்றவியல் ஆய்வுக் கூடத்தில் பயங்கரவாத எதிர்ப்பு அதிரடிப் படை போலீசால் 2006, ஜூலை 19 அன்று நரம்பியல் ஆய்வு மற்றும் மூளை வரைவு சோதனைகளுக்குட்படுத்தப்பட்டனர்.

 

சஞ்சய் என்பவனிடம் நடத்தப்பட்ட சோதனையின் அறிக்கைப்படி, அவனும் மேலும் மூன்று பேரும் அடங்கிய குழு, பூனே அருகே சிங்காகு பகுதியில் உள்ள ஆகாஷ் சுற்றுலா விடுதியில் 2003ஆம் ஆண்டு வெடிகுண்டு தயாரிப்புப் பயிற்சியளிக்கப்பட்டனர். குண்டுவெடிப்புகளையெல்லாம் பான்சே தான் திட்டமிட்டுக் கொடுத்தான். பான்சேவுக்குத் தலைமையிடமிருந்து செல்பேசி மூலம் உத்தரவுகள் வந்தன; இதற்கென்று பான்சே தனியான செல்பேசி இணைப்புப் பெற்றிருந்தான். நாண்டெட்டில் உள்ள பஜ்ராங் நகரில் வசிக்கும் உள்ளூர் பஜ்ரங் தள் தலைவன் பாலாஜி பகாடியாவுடன் அவர்கள் தொடர்பு வைத்திருந்தார்கள். விசுவ இந்து பரிசத் தலைவன் கோவிந்த் புரானிக், ஒளரங்காபாத் ஆர்.எஸ்.எஸ். தலைவன் அபய் மதுக்கர், பஜ்ரங் தள் தலைவன் வினோத்ராவ் கம்தேகர் ஆகியோர் சதிக் கும்பலுக்கு உதவிகள் செய்து வந்தனர். நாண்டெட் குண்டு வெடிப்பில் காயமடைந்த குருராஜ் ஜெயராம் துப்டேவர் குண்டு வைப்பதற்காக ரூ. 45,000 முதல் 50,000 வரை தலைமையிடமிருந்து பெற்றார்.

 

குறித்த நேரத்தில் வெடிக்கும் வெடி குண்டு தயாரிப்பதற்கு இந்தச் சதிகார கும்பலுக்கு மிதுன் சக்ரவர்த்தி என்பவன் புனேயில் பயிற்சியளித்தான். தண்ணீர் இணைப்புக் குழாயை வைத்து குழாய் வெடிகுண்டு தயாரிக்கவும் கற்றுக் கொடுக்கப்பட்டது. அவ்வாறான ஒன்றுதான் நாண்டெட்டில் வெடித்து விபத்து ஏற்பட்டது. அவன்தான் ஒரு பையில் வெடிமருந்துகள் போட்டு, புனே ரயில் நிலையத்தில் வைத்துச் சதிகாரர்களுக்குக் கொடுத்தான். விசுவ இந்து பரிசத்தின் அகில உலகப் பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா (குஜராத் 2002 இசுலாமியர் படுகொலையில் முக்கிய பங்காற்றிய இந்து வெறித் தலைவன்) இந்த சதிகாரக் கும்பலுக்கு வகுப்பு நடத்தியிருக்கிறான்.

 

சஞ்சய் என்பவனிடம் நடத்தப்பட்ட நரம்பியல் ஆய்வின் அறிக்கையை, ஹிமான்சு பான்சே என்ற மற்றொரு குற்றவாளியிடம் நடத்தப்பட்ட மூளை வரைவு ஆய்வு அறிக்கை உறுதி செய்தது.

 

புனேயில் வெடிகுண்டுகள் தயாரிப்பில் பயிற்சி பெற்றபிறகு ஹிமான்சு பான்சே இரண்டு ஆண்டுகளுக்கு விசுவ இந்து பரிசத் மற்றும் பஜ்ரங் தள் உறுப்பினர்களோடு கோவாவில் தங்கிப் பயிற்சி பெற்றான். அதன்பிறகு, நாண்டெட் குண்டுவெடிப்பில் படுகாயமுற்ற மரோட்டி கிஷோர் வாகா என்பவனோடு நாக்பூரில் உள்ள போன்ஸ்லே இராணுவப் பள்ளியில் நாற்பது நாட்கள் பயிற்சி பெற்றான்.

 

புகைப்படத் தொகுப்பு, ஆர்.எஸ்.எஸ். நாட்குறிப்பு, ஆர்.எஸ்.எஸ். தனிச் சுற்றுக்கு வெளியிடும் பத்திரிக்கை, இன்னும் பல ஆர்.எஸ்.எஸ். ஆவணங்கள், குண்டு வைப்பதற்காக ஒளரங்காபாத் போனபோது பான்சே எடுத்த புகைப்படங்கள், குறிப்பாக அந்நகர மசூதியைப் பல கோணத்தில் காட்டும் புகைப்படங்கள், ஒளரங்காபாத் மசூதியை தெளிவாகக் குறியீடு செய்துள்ள ஒரு வரைபடம் (மேப்) மற்றும் ஒரு ஒட்டுத்தாடி ஆகியவை பான்சேவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன.

 

இவை ஒளரங்காபாத் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் மராட்டிய பயங்கரவாத எதிர்ப்பு அதிரடிப்படை உதவி ஆணையாளர் அனில் தமாய்சேகர் என்பவரால் முன்வைக்கப்பட்டன.

 

பார்ப்பன இந்துமதவெறி பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆள் பிடிப்பதற்காக உடற்பயிற்சிக் கூடம், அனாதை இல்லம் போன்றவைகளை இந்தச் சதிகாரர்கள் நடத்தினார்கள். மராத்தி புத்தாண்டு, விஜயதசமி, விநாயக சதுர்த்தி, ராமநவமி போன்ற பண்டிகைகளை கொண்டாடினார்கள்.

 

இவ்வளவு ஆதாரங்களைத் திரட்டி பார்ப்பன இந்துவெறி பயங்கரவாதிகள் 21 பேரைக் கைது செய்த மராட்டிய பயங்கரவாத எதிர்ப்பு அதிரடிப் போலீசு, அவர்களுக்கு எதிராகக் குற்றப் பத்திரிக்கைகள் தாக்கல் செய்யும்போது போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி 11 பேரை விடுவிக்க எத்தணித்தது. இதை அறிந்த உள்ளூர் இசுலாமிய அமைப்பினர், மத்திய உளவுத் துறை விசாரணை கோரி மும்பை உயர்நீதி மன்றத்தின் ஒளரங்காபாத் கிளையில் வழக்குத் தொடுத்தனர்.


இந்த வழக்கு விசாரணைக்கு வரவிருந்த நிலையிலேயே, ஒருபோதும் இல்லாதவாறு நீதிமன்ற தாக்கீது ஏதுமின்றியே மத்திய உளவுத் துறைக்கு கூடுதல் வேலைச்சுமை உள்ளதாகவும், போதிய விசாரணை அதிகாரிகள் இல்லை என்றும் தானே முன்வந்து வக்காலத்துப் போட்டு ஒதுங்கிக் கொள்ள எத்தணித்தது. மத்திய உளவுத் துறையுங்கூட பார்ப்பன இந்துமதவெறி பயங்கரவாதத்துக்குத் துணை போவதுதான் என்பதற்கு வேறு என்ன சான்று தேவை. நாடு தழுவிய அளவில் பார்ப்பன இந்து மதவெறி பயங்கரவாதிகள் பயிற்சியும் ஆயுதங்களும் கொண்ட வலைபின்னலை உருவாக்கியிருக்கிறார்கள். நாண்டெட் நகரக் குண்டுவெடிப்பு விவகாரத்தில் வெளியான (பயங்கரவாத எதிர்ப்பு அதிரடிப்படை போலீசு திரட்டிய) ஆதாரங்கள் இதைத் தெளிவாகக் காட்டுகின்றன.

 

ஆர்.எஸ்.எஸ். என்றால் முரட்டுத்துணி காக்கி அரை டிராயரும், வெள்ளை பனியனும் ஒரு நாலடிக் கம்பும் கொண்ட ஆட்கள்தாம் என்று வெளியுலகுக்குத் தெரியும். அதன் இன்னொரு அவதாரமாகிய விசுவ இந்து பரிசத் மற்றும் இளைஞர் அணியான பஜ்ரங் தள் என்றால் கழுத்திலும் தலையிலும் காவித்துணி சுற்றிக் கொண்டு ஒரு மூன்றங்குல திரிசூலம் ஏந்திய குண்டர்கள்தாம் பலரின் கண்ணுக்குத் தெரிகிறார்கள். சில சமயம் நீண்ட வாளோடும், குறுங்கத்திகளோடும் அவர்கள் தெருவில் அலைவதைக் கலவரப் பகுதிகளில் காணலாம். இந்த ஆயுதங்கள் எல்லாம் தனிநபர் படுகொலைகளுக்குத்தான் பயன்படும். 1992 மும்பை, 2002 குஜராத் போன்ற பெருந்திரளான கொலைவெறியாட்டம் போடவும் பயங்கரவாதப் படுகொலைகளை நிகழ்த்தவும் கையெறி குண்டுகள், நேரங் குறித்து வெடிக்கும் குண்டுகள் முதல் குண்டுவீசித் தாக்கும் ஏவுகணைகள் வரை அதிநவீன ஆயுதங்களும் அவற்றைத் தயாரிக்கவும் கையாளவும் கற்றுத் தரும் பயிற்சி முகாம்களை இந்து மதவெறி பயங்கரவாதிகள் நடத்துகின்றனர்.

 

1992 பாபரி மசூதி இடிப்புக்காக குஜராத்திலுள்ள சர்கேஜ் எனுமிடத்தில் முன்னாள் இராணுவத்தினரை வைத்து பயிற்சியளிக்கப்பட்டது என்று காலஞ்சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேஷ் பைலட் நாடாளுமன்றத்திலேயே அறிவித்தார். அது உண்மைதான் என்றும் நாட்டிலேயே முதன் முறையாக பஜ்ரங் தள் உறுப்பினர்களுக்குத் தான் 1987 முதல் பயிற்சி அளித்து வருவதாகவும் 2002 குஜராத் படுகொலையைத் தொடங்கி வைத்த கோத்ரா எம்.எல்.ஏ. ஹரேஷ் பட் ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளார். மத்திய உளவுத்துறை விசாரணைக்குப் பின்னும் இன்னமும் அங்கே பயங்கரவாதப் பயிற்சி தரப்படுகிறது.

 

இந்த ஹரேஷ் பட்டுக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் டீசல் வெடிகுண்டு, குழாய் வெடிகுண்டு போன்றவை தயாரிக்கப்பட்டு 2002 இஸ்லாமியர் படுகொலை வெறியாட்டத்தின்போது இந்துமதவெறி பயங்கரவாதிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

 

""பஞ்சாபில் இருந்து இரண்டு லாரிகள் நிறைய வாட்கள் வரவழைக்கப்பட்டன. ம.பி., உ.பி., பீகார் ஆகிய வெளிமாநிலங்களில் இருந்து நாட்டுத் துப்பாக்கிகள் கொண்டு வரப்பட்டன. எங்கள் பட்டாசுத் தொழிற்சாலையிலேயே குழாய்களைக் கொண்டு முக்கால் அடி சுவர்களையும் துளைத்துச் செல்லும் வெடிகுண்டு முனைகளைக் கொண்ட முழு ஏவுகணைகளைத் தயார் செய்தோம்'' என்கிறார் ஹரேஷ் பட்.

 

தவால் ஜெயந்தி பட்டேல் என்ற விசுவ இந்து பரிசத்தின் சபர்கந்தா மாவட்டத் தலைவருக்குச் சொந்தமான கல் குவாரியில் வைத்து சக்தி வாய்ந்த ஆர்.டி.எக்ஸ் கலவையுடன் கூடிய வெடிகுண்டுகள் ஏராளமாக தயாரித்து வெளியிடங்களுக்கு அனுப்பப்பட்டன. இதற்காக வெடிகுண்டுகள் தயாரிப்பு தொழில்நுட்ப வல்லுநரும் ஆர்.எஸ்.எஸ்.காரருமான அம்ருத் பட்டேல் பயிற்சியளித்திருக்கிறார். இவர் ஏற்கெனவே வெடிகுண்டு தயாரிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்றவர். இவ்வாறு சபர்கந்தா மாவட்ட விசுவ இந்து பரிசத் தலைவர் ஜெயந்தி பட்டேலும், குஜராத் மாநிலப் பிரச்சார செயலாளர் அனில் பட்டேலும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

 

நாட்டில் எங்கு குண்டுவெடிப்பு பயங்கரவாதத் தாக்குதல் நடந்தாலும், போலீசின் உளவுப் பிரிவும் தடயவியல் நிபுணர்களும் செய்யும் முதல் ஆய்வு எந்தவகை வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் அதிலிருந்து எந்த பயங்கரவாதக் குழு / கும்பல் அந்தத் தாக்குதலை நடத்தியிருக்கும் என்றும் அனுமானிக்கிறார்கள். முக்கியமாக ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து பயன்படுத்தியிருந்தால் எல்லைக்கப்பால் இருந்து ஏவிவிடப்படும் பயங்கரவாதிகளின் செயல் என்று முடிவு செய்கிறார்கள். ஆனால், பலவகை வெடிகுண்டுகள் மட்டுமல்ல, ஆர்.டி.எக்ஸ் வெடிபொருள் கலந்த வெடிகுண்டுகள் சபர்கந்தாவிலுள்ள கல்குவாரியில் தயாரித்து 2002 குஜராத் கொலைவெறியாட்டத்திற்காக விநியோகப்பட்டிருப்பதை விசுவ இந்து பரிசத் மற்றும் பஜ்ரங் தள் பிரமுகர்களே ஒப்புக் கொண்டுள்ளனர்.

 

ஆகவே, குண்டுவெடிப்புப் பயங்கரவாதச் செயல்கள் என்றாலே இசுலாமியப் பயங்கரவாதிகளின், குறிப்பாக எல்லைக்கப்பால் அதாவது பாகிஸ்தான் அல்லது வங்கதேசத்திலிருந்து ஏவிவிடப்படும் / ஊடுருவி வரும் பயங்கரவாதிகளால் நடத்தப்படுவன என்றும் இந்தமத தீவிரவாதிகள் தனிநபர் தாக்குதல் அல்லது கலவரம் மூலம் படுகொலைகள்தாம் செய்வார்கள் என்றும் கருதுவது தவறாகும்.

இந்தியப் போலீசும் உளவுப்படையும் இந்தக் கோணத்திலேயே குண்டுவைப்புக் குற்றவாளிகளைத் தேடி அலைகிறது. அதனால் குண்டுவைப்பு குற்றவாளிகள் என்று அப்பாவி இசுலாமிய இளைஞர்களைப் பிடித்துக் கொண்டு போய், சட்டவிரோதமாக நடத்தப்படும் இரகசிய சித்திரவதைக் கூடங்களில் வைத்துப் பல நாட்கள் சித்திரவதை செய்கின்றனர். அதன்பிறகு ஆதாரம் இல்லை என்று கூறி போலீசும் உளவுப் படையுமே பலரை விடுவித்துள்ளனர்.

 

பெங்களூரு இந்திய விஞ்ஞானக் கழக மாநாட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கில் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ஒரு இசுலாமியரைப் பயங்கரவாத முத்திரை குத்தி, கைது செய்து சித்திரவதைக்குள்ளாக்கிய பிறகு ஆதாரம் இல்லையென விடுவிக்கப்பட்டார். ஐதராபாத் தொடர் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர் என்று வங்கதேசத்தைச் சேர்ந்த வேலூர் கல்லூரி மாணவி, பலநாள் விசாரணைக்குப் பிறகு, கடவுச்சீட்டு ஆவணத்தைக் கையில் வைத்திருக்கவில்லை என்ற வழக்குடன் விடுவிக்கப்பட்டார். குண்டுவெடிப்புக்கும் அம்மாணவிக்கும் சம்பந்தமில்லை என்று ஆந்திர டி.ஜி.பி.யே மறுத்தபோதும் அந்த மாணவிக்கு எதிரான அவதூறுகளையும் வதந்திகளையும் பத்திரிக்கைகள் எழுதிவந்தன.

 

அதே ஐதராபாத் தொடர் குண்டுவெடிப்பில் சந்தேகத்துக்குள்ளான 20 இசுலாமிய இளைஞர்களை பிடித்துக் கொண்டு போய் இரகசிய இடத்தில் வைத்துச் சித்திரவதை செய்தபிறகு, ஆதாரமில்லையென போலீசு விடுதலை செய்தது. அஜ்மீர் தர்கா வெடிகுண்டு வைப்பிற்குக் குற்றவாளி என்று ஒரு மசூதியின் மௌலவியைப் பிடித்துக் கொண்டு போய் சித்திரவதை செய்து, பிறகு ஆதாரமில்லை என்று விடுவிக்கப்பட்டார்.

 

சென்னை, கோவை, ஐதராபாத் (1993) போன்ற இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு இசுலாமியர்கள்தாம் காரணமாக இருப்பார்கள் என்ற அடிப்படையில் கைது செய்து, சித்திரவதைக்குப் பிறகு, கட்டாய ஒப்புதல் வாக்குமூலங்கள் பெற்று சம்பந்தமில்லாதவர்கள்மீது குற்றப் பத்திரிகைகள் போட்டு, பல ஆண்டுகள் சிறையிலடைத்து, விசாரணைகள் நடத்தியபிறகு ஆதாரங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று தீர்மானிக்கப்பட்டு, வழக்கு மன்றங்களால் விடுவிக்கப்பட்ட விவகாரங்களும் உண்டு.

 

இந்து மதவெறி பயங்கரவாதிகளும் பல குண்டு வெடிப்புகளுக்கு காரணமாயிருப்பார்கள் என்ற கோணத்தில் புலன் விசாரணைகள் நடத்தப்படாததால், ஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு, 2007ஆம் ஆண்டு இரட்டை குண்டுவெடிப்பு, லூதியானா சினிமா கொட்டகை குண்டு வெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, மராட்டிய மாநிலம் மாலேகான் குண்டு வெடிப்பு போன்றவற்றுக்கு காரணமானவர்கள் இதுவரை ""கண்டுபிடிக்கப்'' படாமலேயே இருக்கின்றனர்.

 

குஜராத் அக்சார்தம் கோவில் துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமானவர்கள் என்று மாநிலப் போலீசார் சிலரைப் பிடித்துச் சித்திரவதை செய்தும், சிலரைப் போலீசுடன் மோதல் என்ற பெயரில் சுட்டுக் கொன்றும் இருக்கும் அதேசமயம், அந்தத் துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமானவர்கள் என்று காசுமீர் போலீசு வேறு சிலரைப் பிடித்தது. இப்படிக் குண்டுவெடிப்புதுப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களுக்குச் சம்பந்தமில்லாமலேயே உளவுத்துறையின் வழக்கமான பொய்யான எச்சரிக்கைகள் அடிப்படையில் பயங்கரவாதிகளுக்கு எதிரான சோதனை, தேடுதல் வேட்டை என்கிற பெயரில் அப்பாவி இசுலாமியர்கள் கைது செய்யப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் கூட நடக்கிறது. தலைநகர் புது தில்லியிலேயே பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரிலும் பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்றால் பதவி உயர்வு கிடைக்கும் என்பதற்காகவும் இரண்டு சீக்கியத் தொழிலதிபர்கள் நகரின் மையமான கடைத்தெருவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 

இவைதவிர, மோடி போன்ற தலைவர்களைக் கொலை செய்ய வந்த பயங்ரவாதிகள் என்ற பெயரில் போலி மோதல்கள் நடத்தி இசுலாமியர்களைப் படுகொலை செய்வதும் அடிக்கடி நடக்கிறது. பாகிஸ்தானில் இருந்தும், வங்கதேசத்திலிருந்தும் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்ற பெயரில் பல அப்பாவிகள் படுகொலை செய்யப்படுவதும் நடக்கிறது.

 

அப்படியென்றால், இசுலாமியப் பயங்கரவாதச் செயல்கள் குண்டுவெடிப்புகள் நடப்பதே இல்லையா என்ற கேள்வி எழுகிறது. இசுலாமியர்கள் ஈடுபடும் பயங்கரவாதச் செயல்கள் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவை அனைத்தும் ஒரே அடிப்படையை உடையனவென்றோ, அவற்றுக்காக இசுலாமிய சமுதாயம் முழுவதையுமோ காரணமாக்குவது சரியல்ல.

 

""திரும்பத் திரும்ப அநீதியிழைப்பது தீவிரவாதத்தை பெற்றெடுக்கிறது என்பது மிகப் பெரிய பாடமாகும். குஜராத்தின் போலீசு நிலையங்களில் குரான் மீது சிறுநீர் கழிப்பது, (டி.ஐ.ஜி. வன்சாரா செய்ததைப் போல) போலி மோதல் படுகொலை செய்து விடுவதாக மிரட்டி, ""தடா'' பொய்வழக்கில் கைது செய்யப்பட்டவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெறுவது முதலானவற்றால் வன்முறை எதிர்விளைவுகளை எதிர்பார்க்காமல் இருக்க முடியாது'' என்கிறார் மூத்த பத்திரிக்கையாளரான பிரஃபுல் பித்வாய்.

 

ஆமாம். கிட்டத்தட்ட இதே கருத்தைத்தான் சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்த ""அல் உம்மா''வினருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிபதியும் கூறியிருக்கிறார். 1992இல் பாபரி மசூதியை இடித்ததோடு இந்து மதவெறி பயங்கரவாதிகள் நாடு முழுவதும் ஆயிரக்க ணக்கான இசுலாமியர்களைப் படுகொலை செய்தனர். அதன் நேர் விளைவாகத்தான் அல்உம்மா போன்ற இசுலாமியத் தீவிரவாதக் குழுக்கள் தோன்றின. இவர்கள் எந்த வெளிநாட்டிலும் பயிற்சியோ, ஆயுதங்களோ, நிதியோ பெறவில்லை.

 

கோவையில் இந்துவெறியர்கள் கொலைவெறியாட்டம் போட்டு பல அப்பாவி இசுலாமியர்களைக் கொன்றபோது தடுக்கவும் இல்லை; கொலையாளிகள் கைது செய்து, தண்டிக்கப்படவும் இல்லை. விளைவு: தொடர்குண்டு வெடிப்புகளும்; 53 அப்பாவி மக்கள் சாவும். அதேபோன்று மும்பையில் 1992இல் மூன்றாயிரம் முசுலீம்கள் ஆர்.எஸ்.எஸ். சிவசேனா இந்து மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டனர். விளைவு: 1993இல் மும்பை தொடர்குண்டு வெடிப்புகள், நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் மாண்டு போயினர்.

 

1992 மும்பை முசுலீம்கள் படுகொலைக்கு, 2002 குஜராத் கொலைவெறியாட்டத்துக்கு காரணமான இந்து மதவெறி பயங்கரவாதிகளில் ஒருவர் கூட தண்டிக்கப்படாத அதேசமயம், இசுலாமிய தீவிரவாதிகள் பலருக்கு மரண தண்டனைகளும், ஆயுள் தண்டனைகளும் அளிக்கப்படுகின்றன; குற்றங்கள் நிரூபிக்கப்படாமலேயே பல ஆண்டுகள் சித்திரவதை, சிறைத்தண்டனைகளை அப்பாவி இசுலாமியர்கள் அனுபவிக்கின்றனர்.

 

அதுமட்டுமல்ல, இசுலாமிய சமுதாயம் முழுமையுமே, இந்திய தேசத்துக்கு எதிரானது, விரோதமானது என்றும் தடா, பொடா போன்ற கருப்புச் சட்டங்களும், போலீசு இராணுவத்தை வைத்து போலி மோதல் கொலைகள் போன்ற கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்வது கூட அவசியமானதுதான் என்றும் வலதுசாரி மற்றும் அரசியலற்ற அறிவுஜீவிகளால் பகிரங்கமாகவே வலியுறுத்தப்படுகிறது.

 

இத்தகைய குரூரமான, அநீதியான யதார்த்தமே சில இசுலாமியர்கள் மத்தியில் பயங்கரவாத எண்ணங்கள் வேரூன்றவும் வளரவும் வளமான பூமியாக அமைகின்றன. இதையே வங்கதேச மற்றும் பாகிஸ்தான் மதவெறி பயங்கரவாதிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்தியாவில் அல்கொய்தா அமைப்பு காலூன்றி இருப்பதற்கான சான்று எதுவுமே இல்லாதபோது, செய்தி ஊடகங்கள் அதுபற்றி வெறுமனே பீதி கிளப்பிக் கொண்டிருக்கின்றன.

 

இந்த யதார்த்தத்தை மாற்றாமல் சுதந்திரமாகவும், ஜனநாயகமாகவும், எல்லா அரசியல், மத உரிமைகளோடும், குடியுரிமைகளோடும் இந்த நாட்டில் வாழ முடியும் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு இசுலாமியரிடமும் உருவாக்காமல், இசுலாமியப் பயங்கரவாதத்தை ஒடுக்க முடியாது.


· ஆர்.கே.