Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் வாச்சாந்தி : நிவாரணம்தான் நீதியா?

வாச்சாந்தி : நிவாரணம்தான் நீதியா?

  • PDF
PJ_2007 _12.jpg

தருமபுரி மாவட்டத்தில் உள்ள வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, பதினைந்து ஆண்டுகள் கழித்து நிவாரணம் கிடைத்திருக்கிறது.

 

சந்தன மரக் கடத்தலைத் தடுப்பது, வீரப்பனைப் பிடிப்பது என்ற பெயரில் தமிழக போலீசு நடத்தியுள்ள எத்தனையோ அட்டூழியங்களில், அரசு பயங்கரவாதத் தாக்குதல்களில் வாச்சாத்தி சம்பவமும் ஒன்று.

 

 

வாச்சாத்தி பழங்குடியினர் சந்தன மரக் கடத்தில் ஈடுபடுவதாக வதந்தியைப் பரப்பிய தமிழக போலீசும், வனத்துறையும், 1992ஆம் ஆண்டு ஜூன் மாதம் "தேடுதல் வேட்டை' நடத்த வாச்சாத்திக்குள் புகுந்தன.

 

இவ்வேட்டையின்பொழுது, ஆண்பெண்குழந்தை என்ற வேறுபாடின்றி அப்பழங்குடி இன மக்கள் அடித்து நொறுக்கப்பட்டனர்; பலரின் கைகால் எலும்புகள் முறிக்கப்பட்டன. அவர்கள் சேமித்து வைத்திருந்த தானியங்களில் கண்ணாடித் துண்டுகள் கலக்கப்பட்டன. குடிநீருக்குப் பயன்பட்டு வந்த கிராமக் கிணற்றில் எண்ணெய் கொட்டப்பட்டு பாழடிக்கப்பட்டது.

 

ஆண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, ஒருவரின் சிறுநீரை மற்றவர் குடிக்குமாறு நிர்பந்திக்கப்பட்டனர். பழங்குடி இனப் பெண்களுள் அழகான, இளமையான 18 பெண்கள் பொறுக்கி எடுக்கப்பட்டு, அப்பெண்களைப் பல போலீசு மிருகங்கள் ஒருவர் மாற்றி ஒருவர் என கும்பலாகப் பாலியல் பலாத்காரப்படுத்தினர். மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்த இச்சித்திரவதைக்குப் பின் அப்பழங்குடியினர் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

தமிழ்நாடு மலைவாழ் சங்கத்தின் ஆதரவோடு, வாச்சாத்தி பழங்குடியினர் கடந்த பதினைந்து ஆண்டுகளாக விடாப்பிடியாகப் போராடியதால், நடந்த அநீதிக்கு நிவாரணமாக 34 இலட்ச ரூபாயை வழங்கியிருக்கிறது, தமிழக அரசு.

 

எனினும், இவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் திரும்பப் பெறப்படவில்லை. அதேசமயம், இப்பழங்குடி இன மக்கள் மீது சாதிவெறியோடு தாக்குதல் நடத்திய 269 போலீசுவனத்துறை மிருகங்கள் மீதான வழக்கோ, இன்னும் விசாரணை கட்டத்தையே தாண்டவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தீண்டத்தகாத பழங்குடியினர் என்பதாலேயே வழக்கு விசாரணை இழுத்தடிக்கப்படுகிறது.

 

இந்திய "ஜனநாயக' அமைப்பில் ஒரு அநீதிக்கு நிவாரணம் பெறவே 15 ஆண்டுகள் போராட வேண்டும் என்றால், நீதி கிடைப்பதற்கு...?


· அறிவு