முற்குறிப்பு:
பேராசிரியர் அய்ஜாஸ் அஹ்மத் (Aijaz Ahmed) Globalisation: a society of aliens? என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம். இக் கட்டுரை ப்ரொண்ட் லைன் (Frontline) இதழில் வெளிவந்தது.
அடுத்தபடியாக மிகவும் அறிவுபூர்வமாக ஒழுக்க நியதிகளைப் போதிக்கும் அமெரிக்க நாட்டுப் பல்கலைக் கழகங்களின் தத்துவாதிகள் கூறும் “நீதிக்கான போர்”. “இந்தக் கருத்து முதலில் ரோம சாம்ராஜ்யத்தில் தோன்றியது என்பது சுவாரசியமான ஒரு விடயம்” மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்க பிறநாடுகள் மீது “தலையிடும் உரிமை” ஆகியவை. இவை உலக அளவில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை உருவாக்கின. ஏகாதிபத்தியத்தின் மையங்களில் துவங்கி, மூன்றாம் உலக நாடுகளில் அதன் வாடிக்கையாளர்களுக்குப் பரவியது. சதாம் உசேனை ஒரு அரக்கனாகச் சித்தரிக்கும் பட்சத்தில் பனிப்போர் காலத்தில் பயன்படுத்திய “தீய சாம்ராஜ்யம்” என்ற கருத்தாக்கத்தை மீண்டும் அதன் முழு அர்த்தத்திற்கு நியாயம் கற்பிக்கும் வகையில், ஈராக் நாட்டில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உள்ளிட்ட மக்களைக் கொல்லமுடியும். நீதிக்கான போரில் அதற்காக வருத்தப்படவும் முடியும்.
பொருளாதார ஒழுக்கநெறி என்கிற ஏகாதிபத்தியத்தின் இந்தப் புனிதப் பயணத்தில் ராணுவத் தொழில் நுட்பமும் இணைந்து கொண்டது. பெர்சின்ஸ்கி யாரைக் காட்டுமிராண்டிகள் எனக் குறிப்பிட்டாரோ அவர்கள் தானே இந்தப் போரில் இறந்தனர் என்பது ஓர் அடிப்படை உண்மை. அரக்கர்களை அடக்கச் சென்ற எந்தவொரு நாகரிக மனிதனும் இறக்கவில்லை. காட்டுமிராண்டித் தனத்திலிருந்து நாகரிகம் பாதுகாக்கப்பட்டதோடு அதன்மீது வெற்றியும் கண்டது. தொலைக்காட்சிப் பெட்டிகளின் திரையில் காட்சிகள் மாறிக் கொண்டிருந்தன. போரில் பாதிக்கப் பட்டவர்கள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து போயினர். சாம்ராஜ்யங்கள் புரிந்த கொடுஞ் செயல்கள் உலகின் பல மூலைகளில் பதுங்கியிருக்கும் தீய காட்டுமிராண்டிகளிடமிருந்து அதனைப் பாதுகாத்துக் கொள்ளத் தலையிடும் உரிமையாகக் காண்பிக்கப்பட்டது. கொசாவோவில் நடைபெற்ற கொடுமைகளை யாரும் கண்டுகொள்ளவில்லை.
தேசிய அரசு அல்லது அவற்றின் கூட்டணி போன்றவைதான் போர்களை உருவாக்குகின்றன. போர்களுக்கான புறவயக் காரணமாக தேசிய அரசுகளே அமைகின்றன. இருப்பினும் உலகமயமாக்கலானது தேசிய அரசுகள் மறைந்து வருவதாகக் கற்பனை செய்யச் சொல்கிறது. வளர்ச்சியடைந்த நாடுகளின் கடவுச் சீட்டுக்களையும் குடியுரிமைகளையும் தங்களிடம் வைத்திருப்பவர்களின் வாயிலிருந்து உலகக் கிராமம் மற்றும் “உலகக் குடிமக்கள்” போன்ற வார்த்தைகளை நாம் கேள்விப்படுகிறோம்.
சோசலிச நாடுகள் இருந்த காலத்தில், மேற்கத்திய நாடுகளின் கொள்கையாளர்கள் “மக்களின் சுதந்திரமான பயணம்” என்கிற உரிமை குறித்து அடிக்கடி பேசுவது வழக்கம். ஆனால் உலக அளவில் நவீன தாராளமயம் கோலோச்சும் இன்று தங்களுக்குத் தேவைப்படும் போது சுங்கச் சுவர்களை எழுப்பி பொருட்களின் வரவைத் தடுக்கும் வளர்ச்சியடைந்த நாடுகள் மூலதனத்தினதும்; பண்டங்களினதும் சுதந்திரமான பயணம் குறித்தும் பேசக் கேட்கிறோம். “மக்களின் சுதந்திரமான பயணத்திற்குச்” செய்ய வேண்டிய ஒரே காரியம் கடவுச் சீட்டுக்களை ஒழிப்பதே. பிறகு எல்லா மேற்கத்திய மூலதனமும் இந்தியாவிற்குள் வரமுடியும். இந்திய உழைப்பாளிகள் ஏகாதிபத்திய நாடுகளுக்குள் நுழைய முடியும்.
உண்மையில் ஏகாதிபத்தியத்தின் தேவை மூன்றாம் உலக நாடுகளின் தேசிய அரசுகளை அழிப்பதல்ல. மாறாக அவற்றைத் தனக்கு ஏற்றவாறு பலப்படுத்தி, பயன்படுத்துவதாகும். உண்மையில் நடைபெற்றது என்னவென்றால் சோசலிச நாடுகளின் தோல்வி தொழிலாளர் இயக்கங்களின் பின்னடைவு ஆகிய காரணங்களால் அரசு என்ற அமைப்பின் மூலம் குடிமக்களின் குறைந்தபட்சத் தேவைகளைக்கூட நிறைவேற்ற வேண்டிய அவசியம் பூர்ஷ்வாக்களுக்கு இல்லாது போயிற்று. வலதுசாரித் தாக்குதல்கள் துவங்கிய 1970களின் மத்திய காலத்திலிருந்து அரசுகள் உலகம் முழுவதும் தங்களை மக்கள் நலப் பணிகளிலிருந்து துண்டித்துக் கொண்டு அவற்றைக் கொடூரமான முறையில் சந்தையிடம் ஒப்படைக்கும் போக்கு தொடர்கிறது.
இருப்பினும் மக்கள் நலன்களை சீர்குலைப்பதும், உலகெங்கிலும் உள்ள நாடுகளில் தாராளமயத்தை நடைமுறைப்படுத்துவதும் அரசேயாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் தேசிய அரசு என்பது மூலதனத்திடம் மிகவும் பலவீனமாகவும், அதன் எண்ணங்களை மிக அநாகரீகமான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்றாகவும் உள்ளது. தொழிலாளர்களுடனான உறவில் அதே அரசு தொழிலாளர்களின் நலன்களை நடைமுறைப்படுத்துவதில் பலவீனமாகவும். அவர்களை வெறுப்புடன் புறக்கணிக்கிற ஒன்றாகவும் உள்ளது. மேலும் வேறு வார்த்தைகளிற் சொல்வதானால், அரசு என்பது எவ்விதப் பாசாங்கும் இன்றி ஒட்டுமொத்த பூர்ஷ்வாக்களினது மட்டுமின்றி எல்லை கடந்த பூர்ஷ்வாக்களினதும் நிர்வாகக் குழுவாகவும் உள்ளது. மூன்றாம் உலக நாடுகளில் இப்போது அரசு என்பது ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதுபோல் நடிப்பது கூட இல்லை. மாறாக அது மக்களிடம் ஏகாதிபத்திய நலன்களைக் கொண்டு செல்லும் ஒன்றாக உள்ளது.
மக்கள் நலத்துடன் தொடர்புடைய நல்வாழ்வு கல்வி, வேலை வாய்ப்பு இயற்கை வளங்களைப் பேணிப் பாதுகாத்தல் போன்றவற்றிலிருந்து “அரசு பின்வாங்குவது” என்ற அம்சம் பலவித பக்க விளைவுகளை உருவாக்குவதோடு, ஒரு பெரிய வெற்றிடத்தையும் உருவாக்குகிறது. குறுகிய பார்வையும், பிரதேசப் பார்வையும் வெளிநாட்டு நிதி உதவியைச் சார்ந்தும் இயங்குகிற அரசுசாராத் தன்னார்வ அமைப்புகள் மூலமாகவும் சமூக இயக்கங்கள் மூலமாகவும் இத் திட்டங்கள் நிறைவேற்றப் படுகின்றன.
தேச-அரசு நிறைவேற்ற வேண்டிய சமூகக் கடமைகள் என ஒரு காலத்தில், கருதப்பட்டவைகளைத் தாங்கள் செய்வதாக இந்த அரசுசாரா அமைப்புகள் கூறிக்கொண்டு வரலாற்று ரீதியான வெகுஜன மக்கள் அமைப்புகளின் வடிவங்களான தொழிற் சங்கங்களும் கட்சிகளும்; இருந்த இடத்தைக் கைப்பற்றிக் கொண்டு கொள்கைப் பிடிப்புள்ள இளைஞர் சமுதாயத்தை திசை திருப்புகின்றன. இந்தப் பல்வேறு அமைப்புகளுக்கான நிதியை ஏகாதிபத்திய மையங்கள், உலக வங்கி மூலம் வழங்குகின்றன. தேசிய அரசுகளுக்கான அவற்றின் எதிர்ப்பு பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதில் தனக்கு ஆர்வமில்லை என்பது ஒரு கட்டுக்கதை.
உண்மையில் இந்த ஆர்வமின்மை என்கிற விடயத்தில் நிதியை வழங்குபவரும், பெறுபவர்களும் ஆர்வத்தோடு இருக்கிறார்கள். இதன்மூலம் ஏகாதிபத்திய மையங்கள், அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த “காட்டுமிராண்டித்தனமான” அரசுகளைவிட தங்களுக்கு மக்கள் மீது அக்கறை அதிகம் என்ற கருத்தை வலுப்படுத்துகிறார்கள். இதில் பங்கேற்பவர்களுக்கோ ஒழுக்க ரீதியான அரசியலையும், சந்தர்ப்பவாத அரசியலையும் பிரித்தறிவது கடினமான பணியாகிவிட்டது. இது சாம்ராஜ்யத்தின் ஒழுக்கரீதியிலான பொருளாதாரத்தை அமுலாக்கும் போது உருவாகும் எதிர்ப்பை சமூக சேவகர்களிடம் ஊழலாக மாற்றும் ஏகாதிபத்திய நிர்வாக முறையாகும்.
இதற்கிடையில் வளர்ச்சியடைந்த நாடுகளில் நவீன தாராளமயத்தின் வெளிப்பாடுகளாக ‘மிக அதிகமான அரசாங்கத்தனம்’ என்கிற கூப்பாடும், “அரசு பின்வாங்குதல்” என்பதற்கு மகிழ்ச்சியாரவாரமும் செய்யப்படுகிறது. அதே நேரம் உலகமயமாக்கலுக்கு ஆதாரமாக விளங்குகிற தகவல் தொழில்நுட்பம் முழுக்க முழுக்க அரசின் நிதியுதவியோடு உருவாகிறது. காட்டுத்தனமான ஊகங்களுக்கு மத்தியில் அரசே பணத்தின் ஸ்திரத்தன்மையை மேற்பார்வையிடுகிறது. இராணுவத் தொழில் நிறுவனங்களுக்கு முதலீடுகளை அமைத்துக் கொடுக்கிறது. மிக வேகமாகத் தொடர்ச்சியான சீரான முறையிலான சட்டங்களை இயற்றி ஏழை மக்களிடமிருந்து அவர்களின் வருமானத்தைப் பிடுங்கிப் பணக்காரர்களுக்குக் கொடுக்கிறது.
தொடரும்…..
September 8, 2009
