Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் அம்பலம் ஏறாத ஏழைகளின் சாட்சியம்

அம்பலம் ஏறாத ஏழைகளின் சாட்சியம்

  • PDF

PJ_2008_02.jpg

சந்தன மரக் கடத்தல் வீரப்பனைத் தேடுவது என்ற பெயரில், கர்நாடகா தமிழ்நாடு கூட்டு அதிரடிப் படைகள் நடத்திய மனித உரிமை மீறல்களை விசாரிக்க சதாசிவம் கமிசன் அமைக்கப்பட்டு, அக்கமிசன் அளித்தத் தீர்ப்பின்படி தேடுதல் வேட்டையால் பாதிக்கப்பட்ட 89 பேருக்கு 2.8 கோடி ரூபாய் நட்டஈடு வழங்கப்பட்டதோடு, இப்பிரச்சினைக்கு மங்களம் பாடிவிட்டது, ஆளுங் கும்பல். பொதுமக்களும்கூட, இப்பிரச்சினையில் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் வழங்கப்பட்டு விட்டதாகவே எண்ணிக் கொண்டுள்ளனர்.

ஆனால், சதாசிவம் கமிசன் அளித்த ""நீதி''யின் பின்னே, மிகப் பெரும் அநீதி மூடி மறைக்கப்பட்டுள்ளது. சதாசிவம் கமிசன் இழைத்துள்ள இந்த அநீதி, அதிரடிப் படை கிரிமினல்கள் இழைத்த கொடூரங்களுக்கு இணையானது மட்டுமல்ல; பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள் என்பதனாலேயே அவர்களின் நேர்மையையும், நாணயத்தையும் கேள்விக்குள்ளாக்கி, அவர்களை மீண்டுமொருமுறை கேவலப்படுத்தி விட்டது.

 

அதிரடிப் படையின் அட்டூழியங்களால் பாதிக்கப்பட்ட மக்கள், மனித உரிமை அமைப்புகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்திய பிறகுதான், தேசிய மனித உரிமை கமிசன் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட சதாசிவம் கமிசனை அமைத்தது. 1999ஆம் ஆண்டு ஜூன் 28 அன்று சதாசிவம் கமிசன் அமைக்கப்பட்ட பிறகு, அது பற்றி ""தி வீக்'' என்ற வார இதழுக்குப் பேட்டியளித்த தமிழ்நாடுகர்நாடகா கூட்டு அதிரடிப்படைகளின் தலைவர் தேவாரம், ""சில சுயநலமிகள் பணத்தாசையைக் காட்டி, அப்பாவி மலைவாழ் மக்களை எங்களுக்கு எதிராகத் தூண்டிவிடுவதாக''க் குற்றஞ்சுமத்தினார்.

 

காக்கிச் சட்டை கிரிமினல் தேவாரத்திடம் மட்டுமல்ல, அதிரடிப்படை அட்டூழியங்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட சதாசிவம் கமிசனிடமும் இந்த போலீசு புத்தி இருந்தது என்பதுதான் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

""போலீசு, வீரப்பனுக்கு எதிராக எடுத்தத் தீவிரமான நடவடிக்கைகள்... நியாயமான நடவடிக்கைகள்கூட, போலீசாருக்கும், மலைவாழ் மக்களுக்கும் இடையே நம்பிக்கையின்மை, தப்பெண்ணம், கோபம், ஏமாற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தியிருக்கும். இத்தகைய நிலையில் இரண்டு தரப்புமே ஒருவர் மற்றவருக்கு எதிராகப் பொய்யான, மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைப் பழி தீர்த்துக் கொள்வதற்காகக் கூறுவது இயற்கையானது'' என சதாசிவம் கமிசன் தனது அறிக்கையில் தாரக மந்திரம் போலக் குறிப்பிட்டுள்ளது.

 

இத்தகைய ""நடுநிலையான'' பார்வையோடுதான், அக்கமிசன் விசாரணையை நடத்தியிருக்கிறது. இந்த நடுநிலை, ஒருபுறம் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட பலருக்கு நீதி கிடைக்காமல் செய்துவிட்டது; மறுபுறம் அதிரடிப் படைகளைச் சேர்ந்த குற்றவாளிகளைத் தண்டிக்காமல் விட்டுவிட்டது.

···

தமிழ்நாடுகர்நாடகா கூட்டு அதிரடிப் படைகளின் தேடுதல் வேட்டையால், ஏறத்தாழ 50 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. பல அப்பாவிகள் ""மோதல்'' என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, அதிரடிப் படையால் பிடித்துச் செல்லப்பட்ட, 50 பேர் ""காணாமல்'' போய்விட்டனர். 121 பேர் ""தடா'' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்; அவர்களுள் 107 பேர் மீது தொடரப்பட்ட ""தடா'' வழக்குகள் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டாலும், அவர்கள் ஆறு முதல் எட்டு ஆண்டுகள் வரை குற்றம் நிரூபிக்கப்படாமலேயே சிறைத்தண்டனை அனுபவித்தனர். ஏறத்தாழ ஐநூறுக்கும் மேற்பட்டோர் சட்ட விரோதக் காவலில் அடைத்து வைக்கப்பட்டு, சித்திரவதை, பாலியல் வன்புணர்ச்சி போன்ற கொடூரங்களுக்கு ஆட்படுத்தப்பட்டனர்.

 

அதிரடிப்படைகளின் அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டவர்களுள் 140 பேர், போலீசாரின் அச்சுறுத்தலையும் மீறி சதாசிவம் கமிசன் முன் நேரடி சாட்சியம் அளித்தனர். இவர்களுள் 89 பேரின் சாட்சியத்தை மட்டுமே சதாசிவம் கமிசன் உண்மை என ஏற்றுக் கொண்டது. பாதிக்கப்பட்ட மீதிப் பேரின் வாக்குமூலங்களை, ஆதாரம் இல்லையென்றோ, மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு என்றோ; மருத்துவச் சான்றிதழ் இல்லை என்றோ கூறி நிராகரித்து விட்டது.

 

18 வயதான ரதினி என்ற இளம்பெண், தன்னை எம்.எம்.மலைக் குன்றில் உள்ள கொட்டடியில் அடைத்து வைத்து, 10 போலீசார் கும்பலாகப் பாலியல் பலாத்காரப்படுத்தியதாகச் சாட்சியம் அளித்தார். ஆனால், ""இப்பாலியல் வன்புணர்ச்சித் தாக்குதலை, ரதினியின் கணவரின் சாட்சியம் உறுதி செய்யவில்லை; எனவே, ரதினியின் குற்றச்சாட்டுக்குப் போதுமான ஆதாரம் இல்லை'' எனக் கூறி, அவரது சாட்சியத்தை நிராகரித்து விட்டது, சதாசிவம் கமிசன்.

 

லெட்சுமி என்ற பழங்குடியினப் பெண், தான் கர்ப்பமாக இருந்ததைக் கூடப் பொருட்படுத்தாமல் கூட்டு அதிரடிப் படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தன்னைப் பாலியல் பலாத்காரப்படுத்தியதால், தனது கர்ப்பம் கலைந்து விட்டதாக சாட்சியம் அளித்தார். ""லெட்சுமி, இப்பாலியல் வன்புணர்ச்சி குறித்து உடனடியாக யாரிடமும் கூறவில்லை; கர்ப்பம் கலைந்த பிறகு, தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பெயரையும் அவரால் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை'' எனக் கூறி, அவரது குற்றச்சாட்டு நம்பத் தகுந்தது அல்ல எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

தங்கம்மாள் என்ற பெண், ""பெரிய அய்யா என்று அழைக்கப்படும் அதிகாரி, தனது நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்டி, ஆடைகளைக் களைய வைத்து நிர்வாணப்படுத்தி, தொடர்ந்து மூன்று நாட்கள் தன்னைப் பாலியல் பலாத்காரப்படுத்தியதாக''ச் சாட்சியம் அளித்தார்.

 

கீழ் அதிகாரிகளால் "பெரிய அய்யா' எனப் பணிவுடன் அழைக்கப்பட்ட கூட்டு அதிரடிப் படைகளின் தலைவர் வால்டர் தேவாரத்தைத்தான், தங்கம்மாள் குற்றவாளியாக அடையாளம் காட்டுகிறார் என்பது விசாரணையின் போக்கிலேயே நிரூபணம் ஆனது. எனினும் சதாசிவம் கமிசன், ""தங்கம்மாள், குற்றவாளியை அவரது சொந்தப் பெயரால் அடையாளம் காட்டவில்லை. தமிழக அதிரடிப் படையில் ""பெரியய்யா'' என்ற பெயர் கொண்ட மற்றொரு உயர் அதிகாரி இருக்கும் பொழுது "பெரிய அய்யா' எனக் கீழ் அதிகாரிகளால் அழைக்கப்பட்ட தேவாரம்தான் அவரைப் பாலியல் பலாத்காரப்படுத்தினார் என நிரூபிக்கும் அளவிற்கு அவரது சாட்சியம் போதுமானதாக இல்லை'' எனக் கூறி தங்கம்மாளின் சாட்சியத்தை நிராகரித்து விட்டது.

 

மேலும், ""தங்கம்மாள் இக்கமிசனின் முன் சாட்சியம் அளித்த தோரணையை வைத்துப் பார்க்கும் பொழுது, அவரை யாரும் மிரட்டி மௌனமாக்கிவிட முடியாது எனத் தெரிகிறது. அவர், கைது செய்யப்பட்டுச் சிறை வைக்கப்பட்ட பொழுதே, இந்தப் புகாரை நீதிமன்றத்திடம் தெரிவிக்காமல், எட்டு ஆண்டுகள் கழித்துக் கூறுகிறார். இவரது குற்றச்சாட்டு உண்மையல்ல என்பதோடு, அனுதாபத்தைப் பெறும் நோக்கத்தோடு கற்பனையும் கலந்து கூறுகிறார்'' எனக் கூறி, தங்கம்மாள் நாடகமாடுவதாகக் குற்றஞ் சுமத்தி, அவரை அவமானப்படுத்தியது, சதாசிவம் கமிசன்.

 

சதாசிவம் கமிசன் விசாரணையில் 11 பெண்கள், தாங்கள் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டதாகச் சாட்சியம் அளித்தனர். இவர்களுள் ஒரேயொரு பெண்தான் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டார்; மூன்று பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டனர் என்று தான் சதாசிவம் கமிசன் அறிக்கை அளித்தது. பாலியல் வன்புணர்ச்சியால் பாதிக்கப்பட்ட 10 பெண்களின் சாட்சியங்களை, ""போதிய சாட்சியமில்லை; நீதிமன்றத்திடம் கூறவில்லை; பாலியல் பலாத்காரப்படுத்திய அதிகாரியின் பெயரைக் குறிப்பிடவில்லை'' என மேலோட்டமான காரணங்களைக் கூறி நிராகரித்து விட்டது.

 

தனிக் கொட்டடியில் சட்ட விரோதமாக அடைக்கப்பட்டு, பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட பெண்களிடம், மனசாட்சியைத் தவிர, வேறென்ன சாட்சியத்தை எதிர்பார்க்க முடியும்? அதிரடிப்படையின் அட்டூழியங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நீதிபதிகளிடம், பாலியல் வன்புணர்ச்சி குறித்து முறையிட்டிருந்தால், குற்றவாளியான போலீசைக் கொண்டே ஒரு விசாரணை நாடகம் நடந்திருக்குமே தவிர, வேறென்ன நியாயம் கிடைத்திருக்கும்? வீரப்பன் நடமாடிய மலைவாழ் கிராமங்கள் அனைத்திலும் அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த வேளையில், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை, எட்டு ஆண்டுகள் என்ன, எண்பது ஆண்டுகள் கழித்துச் சொல்வதற்குக் கூட கூட உரிமை உண்டு. இக்குற்றச்சாட்டுக்களைக் கால தாமதத்தைக் கூறிக் கழித்துக் கட்டுவது, அதிகாரவர்க்கத் திமிர்த்தனம் தவிர வேறெதுவுமாக இருக்க முடியாது.

 

கூட்டு அதிரடிப்படை எம்.எம். குன்றில் நடத்தி வந்த இரகசியக் கொட்டடியில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட பலரும், ""தாங்கள் அந்த ஒர்க்ஷாப்பில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டுத் தாக்கப்பட்டதாக''ச் சாட்சியம் அளித்தனர். "ஒர்க்ஷாப்' என அழைக்கப்பட்ட அந்த இரகசியக் கொட்டடி, அதிரடிப் படையால் கைவிடப்பட்ட பிறகு, அதனை நேரில் சென்று பார்வையிட்ட சதாசிவம் கமிசன், ""தலைகீழாகக் கட்டித் தொங்கவிடுவதற்குத் தேவைப்படும் கொக்கியோ அல்லது வேறு வகையான பொருளோ, அந்த ஒர்க்ஷாப்பின் மேற்கூரையில் காணப்படாததால், இப்படிப்பட்ட சித்திரவதை நடந்ததற்கான வாய்ப்பில்லை'' எனக் கூறிவிட்டது.

 

மேலும், ""சாட்சியம் அளித்தவர்கள் மற்றவர்களின் அனுதாபத்தைப் பெறும் நோக்கத்தோடுதான், தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு தாக்கப்பட்டதாக மிகைப்படுத்தி நாடகமாடுகிறார்கள்'' என்றும் குறிப்பிட்டுள்ளது. ஓர் இரகசியச் சித்திரவதைக் கூடம் போலீசாரால் எப்படி இயக்கப்படும், அதில் எந்தெந்த வகையான சித்திரவதைகள் செய்யப்படும் என்பதை அறியாத அப்பாவிகள் போல நீதிபதிகள் நடந்து கொண்டதைவிடவா, வேறு நாடகம் இருந்துவிட முடியும்?

 

அதிரடிப்படை நடத்திய சித்திரவதையால் எலும்பு முறிவு உள்ளிட்டு, பல்வேறு வகையான உடற் காயம் அடைந்தவர்களுக்கும், மனநோய்க்கு ஆளானவர்களுக்கும் மேட்டூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள் தனியார் மருத்துவர்களிடம்தான் சிகிச்சை எடுத்துக் கொண்டனர். ஆனால், இதற்கான ஆதாரங்கள் எதுவும் அவர்களால் காட்ட இயலாததையே காரணமாகக் காட்டி, சித்தரவதையால் பாதிக்கப்பட்ட பலரின் சாட்சியங்கள் கமிசனால் நிராகரிக்கப்பட்டன.

 

மின் அதிர்ச்சி உள்ளிட்டு பல்வேறு வகையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்ட கோவிந்தம்மாளின் இடுப்பெலும்பு முறிந்து போனதோடு, அவர் மனநோய்க்கும் ஆளாகி, பலமுறை தற்கொலை செய்து கொள்ளவும் முயன்று இருக்கிறார். இதற்காக மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டபொழுது, அவர், தான் போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டதைச் சொல்லவில்லை. மருத்துவமனை ஆவணங்களில் அவரின் உடற்காயங்கள் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்படாததையே ஆதாரமாகக் காட்டி, அவரின் சாட்சியத்தை நம்ப மறுத்துவிட்டது, சதாசிவம் கமிசன்.

 

சதாசிவம் கமிசன் 89 பேரின் சாட்சியத்தை மட்டுமே உண்மை என ஏற்றுக் கொண்டது. இவர்களுள் 73 பேர், கர்நாடகா தடா நீதிமன்றத்தால், ""தடா'' வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர்கள். இவர்கள் அதிரடிப்படையால் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டது; தடா சட்டத்தின் கீழ் அவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டது ஆகிய அத்துமீறல்கள் ""தடா'' நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு விட்டதால், இந்த 73 பேரின் சாட்சியத்தை சதாசிவம் கமிசனால் நிராகரிக்க முடியாமல் போய்விட்டது. இந்த 73 பேரைக் கழித்துவிட்டுப் பார்த்தால், சதாசிவம் கமிசனால் ""நீதி'' கிடைக்கப் பெற்றவர்கள் 16 பேர்தான்.

 

சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள், கூட்டு அதிரடிப் படையைச் சேர்ந்த 38 அதிகாரிகளைக் குற்றவாளிகளாக அடையாளம் காட்டினார்கள். இக்குற்றவாளிகளுள் கர்நாடகா அதிரடிப் படையின் தலைவர் சங்கர் பித்ரியும் ஒருவர். ""சங்கர் பித்ரி, தன்னைக் கைது செய்த பிறகு, துப்பாக்கியைக் காட்டிக் கொலை செய்து விடுவதாக மிரட்டியதை''ச் சாட்சியமாக அளித்தார், ஒருவர். சதாசிவம் கமிசனோ, ""கீழ் அதிகாரியைக் கொண்டே இது போன்ற மிரட்டலை, சங்கர் பித்ரி செய்திருக்க முடியும்'' எனக் கூறி, சங்கர் பித்ரியின் மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்து விட்டது.

 

""ஒர்க்ஷாப்பில் நடந்துள்ள சித்திரவதைகளால் பலரும் காயம் அடைந்திருப்பது உண்மை; குறிப்பாக, கண்கள் கட்டப்பட்ட நிலையில் பலர் ஒர்க்ஷாப்பில் அடைத்து வைக்கப்பட்டுச் சித்திரவதை அனுபவித்திருப்பதும் உண்மை. எனினும், காலம் கடந்துவிட்ட நிலையில், 2000 அதிரடிப் படை வீரர்களுள், இந்தக் குற்றங்களை யார் செய்திருப்பார்கள் எனத் தற்பொழுது அடையாளம் காட்டுவது சாத்தியமில்லாதது'' எனக் கூறி அடையாளம் காட்டப்பட்ட 40 காக்கிச் சட்டை கிரிமினல்களையும் தப்ப வைத்து விட்டது, சதாசிவம் கமிசன்.

 

குற்றம் நடந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாத சதாசிவம் கமிசன், குற்றம் குறித்த சாட்சியங்களை நைச்சியமாக ஒதுக்கித் தள்ளியிருப்பதை விநோதம் என்றோ முரண்பாடு என்றோ எளிமைப்படுத்திவிட முடியாது. இதுதான் வர்க்க நீதி. அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்கள் கிராமத்து ஏழை விவசாயிகள்; தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள். அதனால் தான் அவர்களின் சாட்சியம் அம்பலம் ஏறவில்லை.


· செல்வம்