Language Selection

2003 இல் யாழ் நூலக திறப்புவிழாவை புலிகள் எதற்காக தடுத்தனர் என்பது குறித்தான இன்றைய சர்ச்சை, யுத்தத்தின் பின்னான வெள்ளாளிய சாதி எழுச்சியுடன் தொடர்புபட்டது. சமூகம் சாதியமாகவும், அதேநேரம் இந்துத்துவ சாதியமாகவும் பரிணாமமடைந்து வரும் இன்றைய சமூகப் போக்கை, தமிழ் தேசியமாக நிறுவ "சாதியற்ற" புலிகள் தேவைப்படுகின்றது.

புலிகள் ஒடுக்கப்பட்ட தேசியத்தை மறுத்து ஒடுக்கும் தேசியத்தை முன்னிறுத்தியதன் மூலம், சமூகத்தை பின்நோக்கி இழுத்துச் சென்றனர். அதன் தொடர்ச்சியாக எழுச்சிபெற்று வரும் சாதியத்தை, புலித் தேசியத்தின் நீட்சியாக காட்ட முற்படுகின்றனர்.

இதனாலேயே புலிகளின் காலத்தில் சாதி இருக்கவில்லை என்கின்றனர். இப்படி நிறுவுவதன் மூலம் சாதிய ஒடுக்குமுறை கூர்மையடைந்து வரும் இன்றைய சூழலை, மறுக்கவும் - மறைக்கவும் முனைகின்றனர்.

இதற்காக வெள்ளாளிய ஒடுக்குமுறையே இல்லை என்று கூறுமளவுக்கு, ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை களத்தில் இறக்கி இருக்கின்றது வெள்ளாளியம். அது வெள்ளாளிய ஒடுக்குமுறையா! அது என்ன? என்று கேட்குமளவுக்கு வெள்ளாளியம் தன்னை மூடிமறைக்கின்றது. ஒடுக்கப்பட்ட மக்களாகிய எங்களைப் பாருங்கள், நாங்கள் உயரத்தில் பறந்து கொண்டு இருக்கின்றோம், என்று வெள்;ளாளியத்தைப் பாதுகாக்கும் அற்பனத்தனங்களை முன்தள்ளுகின்றது.

இப்படி நவீனமாகும் வெள்ளாளிய ஒடுக்குமுறையைக் கூர்மையாக்க புலிப் பின்புலத்தைக் கொண்ட அறிவுத்துறையினரையும், ஒடுக்கும் சாதிக்காக உழைக்கும் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த புத்திஜீவிகளையும் களத்தில் இறக்கி இருக்கின்றது. இதற்காக கடந்த வரலாறுகள் திரிக்கப்படுகின்றது, புனையப்படுகின்றது. எதையும் மறுக்க, கடைந்தெடுத்த மோசடிகள்.

யாழ் நூலகத்தில் நடந்த சாதிய ஒடுக்குமுறை குறித்து..

யாழ் நூலக திறப்புவிழா மீதான ஒடுக்குமுறை சாதி அடிப்படையில் நடந்தது என்று 2003 இல் கூறப்பட்ட போது, வெள்ளாளிய பாசிச தேசியவாதிகள் யாரும் களத்தில் இறங்கவுமில்லை, கொடுக்குக் கட்டவுமில்லை. புலிகள் மறுக்கவுமில்லை, புலிகளின் பெயரில் இயங்கிய புலிப் பினாமிகள், 300 வெகுஞன அமைப்புகளின் பெயரில் மிரட்டல் கலந்த வெளியிட்ட அறிக்கையோ, புலிகளின் சாதிய ஒடுக்குமுறையை பூசி மெழுக முடியவில்லை.

தினக்குரல் முன்பக்கத்தில் புலியின் வெள்ளாளிய சிந்தனைக்கு – புலியின் நாடித் துடிப்புக்கு ஏற்ப வெளியிட்ட கேலிச்சித்திரத்தை வெளியிட்டதற்காக, புலிகள் யாரையும் தண்டிக்கவுமில்லை, 300 வெகுஞன அமைப்பின் அறிக்கையோ – போராடும் தமிழ் மக்களை சாதிரீதியாக பிரித்த வெள்ளாளிய அயோக்கியத்தனத்தை உச்சிமோந்;தது. சாதிரீதியாக ஒடுக்கியதாக கூறியதற்;கு எதிராக மிரட்டலும் - சாதிரீதியாக பிளந்து காட்டியதை கொண்டாடும் வெள்ளாளிய மனப்பாவம், புலிச் சிந்தனைக்கும் – செயலுக்கும் முரணாக நிகழவில்லை.

2003 இந்த சம்பவம் நடந்த போது ஊடகவியலாளர்களாக இருந்ததாக கூறிக்கொண்டு இன்று வெள்ளாளியத்துக்கு சாட்சி சொல்ல முனையும் அனைவரும், வெள்ளாளிய அடிப்படையில் வெளியான வெள்ளாளிய பத்திரிகையில் இருந்தவர்கள் தான். புலிப் பாசிசத்தை உச்சி மோந்து, ஒடுக்கப்பட்ட மக்கள் மேல் காறி உமிழ்ந்தவர்கள். எல்லா கொலைகளுக்கும் கூனிக் குறுகி கும்பிடு போட்டு நியாயப்படுத்தியவர்கள். அன்று இந்த வெள்ளாளிய கார்ட்டூனை இந்த ஊடகவியலாளர்கள் கண்டித்தனரா, இல்லை. இன்று வெள்ளாளியத்துக்கு மீண்டும் சாட்சி சொல்ல வருகின்றனர்.

உங்கள் ஊடக அறிவு புலிப் பாசிசத்தை நியாயப்படுத்துவதும், வெள்ளாளிய சிந்தனையை பிரதிபலிப்பதும் தான். அன்றைய நிகழ்வை தலித்திய கற்பனையும், அவதூறும் என்று கூறுகின்றதன் மூலம், புலியெதிர்ப்பு என்று முத்திரை குத்துவதன் மூலம், உண்மைகள் பொய்யாகிவிடாது. இன்று புலியெதிர்ப்பு அணியில் இருந்து வெள்ளாளியத்தை பாதுகாக்க களமிறங்கி இருக்;கின்ற எதார்த்தத்தில், புலி ஆதரவு – புலி எதிர்ப்பு இரண்டும் ஒருங்கிணைந்து களமாடும் சாராம்சம் ஒன்று தான். அதுதான் வெள்ளாளியம்.

அன்று செல்லன் கந்தையா சொல்லாத ஒன்றை, கற்பனையில் தலித்தியத்தின் பெயரில் யாரும் கற்பிக்கவில்லை. செல்லன் கந்தையா கூறியதில் இருந்து தான் இந்த விவகாரம் சாதி வடிவம் பெற்றது. அதற்கு வலுச்சேர்க்கும் வண்ணம் அன்றைய "தினக்குரல்’ 16.02.2003 செல்லன் கந்தையனைச் சாதிரீதியாக இழிவுபடுத்தும் வெள்ளாளிய கேலிச் சித்திரம் தாங்கி வருகின்றது. ஆக இது தலித் கற்பனையல்ல. அன்று மக்கள் பெயரில் இயங்கிய (அல்லது இயங்க அனுமதிக்கப்பட்ட அல்லது அவர்களாலேயே உருவாக்கப்பட்டிருந்த) அமைப்புகள் அனைத்தும், புலிப் பினாமி அமைப்புகள் தான். புலி என்ன நினைக்கின்றதோ அதை வெளியிட வெகுஞன அமைப்புப் பெயர்கள் எல்லாம் புலியின் லெட்டர் கெட் அமைப்புகளே.

யாழ் நூலக திறப்புவிழாவில் நடந்தது தலித்திய புனைவு அல்ல. இப்படி உண்மைகள் இருக்க, இதை சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறையாக முன்வைத்தவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான அரசியல் அடிப்படையில் முன்வைக்கவில்லை என்பதால் - அனறைய இந்த சம்பவம் பொய்யாகிவிடாது. இவை அனைத்தையும் ஒருங்காக விளங்கிக் கொள்ள அக்கால கட்டம் என்ன என்பதைப் பார்ப்போம்?;

2003 இல் யாழ் நூலகத்தை திறக்க முற்பட்ட காலகட்டம் என்ன?

2003 இல் யாழ் நூலகம் மீளத் திறப்பு குறித்த சர்ச்சை நடந்த காலத்தில், ஒடுக்கும் வெள்ளாளிய சாதிய சிந்தனையிலான அதிகாரங்களை புலித் தேசியம் இழந்து இருந்த காலம். ஒடுக்கப்பட்ட மக்கள் ஒப்பீட்டளவில் சமூக மேனிலை அடைந்த கொண்டு இருந்த காலம். ஒடுக்கும் பேரினவாத அதிகாரம் மேலோங்கியதால், தமிழனைத் தமிழன் ஒடுக்கும் அதிகாரத்தை செலுத்த முடியாது இருந்த காலம்.

1995 இல் புலிகள் வன்னி நோக்கி சென்ற போது, புலி அனுதாபிகளை மட்டும் கூட்டிச் செல்லவில்லை. மக்களையும் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனர். மாபெரும் இடப்பெயர்வு நடந்தது. யாழ் பிரதேசத்தில் அதிகளவில் எஞ்சியவர்கள் வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களும், சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுமே.

ஏற்கனவே ஒடுக்கும் சாதிகளைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் வெளிநாட்டுக்கும், கொழும்புக்கும் தப்பியோடியிருந்த நிலையில், வன்னிக்கு இடப்பெயர்வு நிகழ்ந்தது. இதன் மூலம் யாழ் மண்ணில் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை, ஒடுக்கும் சாதிகளை விட பெரும்பான்மையாக மாறியது. இடப்பெயர்வு, அரசியல்ரீதியாக ஒடுக்கும் வெள்ளாளிய (புலித்) தேசியம், யாழ் மண்ணில் பலவீனமடையக் காரணமாகியது.

புலிகளின் வெற்றிடத்தில் பேரினவாத ஒடுக்குமுறையாளர்களின் ஆதரவைப் பெற்றவர்கள் நிரம்பத் தொடங்கினர். புலிகள் 1985 – 1987 காலப்பகுதியில் இயக்கங்களை அழிக்க முன்பு ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் செயற்பட்டவர்கள், 1995க்கு பின் அரசு ஆதரவுடன் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் செயற்படத் தொடங்கி - அதில் வெற்றி பெற்றனர். அதாவது தம்மை நிலைநிறுத்த ஒடுக்கும் சாதியை சார்ந்து இருக்காது, ஒடுக்கப்பட்ட சாதிகளை சார்ந்தே பேரினவாத நிகழ்ச்;சியை முன்னெடுத்தனர். புலிகள் ஒடுக்கும் சாதியை சார்ந்து நின்றதற்கு முரணாக, அவர்களால் ஒடுக்கப்பட்ட சாதியை அணிதிரட்டும் வண்ணமான, அரசியல் நகர்வு – ஒடுக்கும் சாதியின் அதிகார இழப்பாக மாறியது.

காலாகாலமாக சாதிய ஒடுக்குமுறைக்குள்ளான மக்களுக்கு எது மறுக்கப்பட்டதோ, அதில் சிலதை வழங்கியதன் மூலம் (உதாரணமாக அரச வேலைகள், சனசமூக நிலையங்கள், உள் வீதிக் கட்டமைப்பு, நவீன கல் வீட்டுத் திட்டங்கள், கல்வி வசதிகள், இலகுவாக பாடசாலை செல்ல மாணவர்களுக்கு சைக்கிள்கள், வாழ்க்கையை மேம்படுத்தும் சுய சார்பு உதவிகள்.. மூலம் ஒடுக்கப்பட்ட மக்கள், சமூகப் படிநிலையில் மேனிலை அடைந்தனர். சாதிரீதியான இலங்கை ஒடுக்குமுறை வரலாற்றில் நடந்த மாற்றங்களில் இது முக்கியமானது. பெரும்பாலும் இதை யாரும் பேசுவதில்லை. 1995 - 2015 வரையான காலத்தில், சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள், சமூகப் பொருளாதார ரீதியாக முன்னேறி - சமூகரீதியாக மேனிலை பெற்றனர். பேரினவாத அரசு பிரித்தாளும் தந்திரத்தை, தமிழனைத் தமிழன் ஒடுக்கும் வெள்ளாளிய முரண்பாட்டில் கையாண்டது. சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் சாதிரீதியாக ஒடுக்கும் தரப்பில் தங்கி இருக்காத, சுயாதீனமான - தன்னிறைவான பொருளாதாரத்துக்கான அடித்தளத்தைப் பெற்றனர். இன்று வரை அரசு சார்பு குழுக்களின் வாக்கு வங்கியின் அடித்தளம் இதுதான். நடந்த இந்த மாற்றம் தான் இதற்கான காரணம்.

2003இல் ஒடுக்கும் வெள்ளாளியம் அதிகாரமிழந்து, உறைநிலைக்கு வந்திருந்த காலம். 1995க்கு முன் புலிகள் அதிகாரத்தில் இருந்த போது, சமூகத்தில் இருந்த ஜனநாயகத்தின் எச்சசொச்சங்களை எல்லாம் அழித்துவிட்ட சூழலில், 1995 பின் அதிகாரத்தை எடுத்துக் கொண்ட அரசும் - அரசு ஆதரவு குழுக்;களும், ஜனநாயகமற்ற ஆட்சியை மேலும் வலுப்படுத்தினர். இக்காலத்தில் நடந்த தேர்தல்கள் சுதந்திரமானதல்ல. முன்பு புலி ஆதரவாளர்கள் வென்றது போல், அரசு ஆதரவு பெற்றவர்கள் வெற்றி பெற்றனர். ஆட்சி அதிகாரங்கள் வெள்ளாளிய சிந்தனையிலானதாகவும், அதேநேரம் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களைச் சார்ந்து இருந்தது.

புலித் தேசியத்தை முன்னிறுத்திய ஒடுக்கும் சாதியின் அதிகாரம் பலவீனமடைந்திருந்த சூழலில் - ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் அரச ஆதரவு பெற்று அதிகாரம் செலுத்தும் நிலை காணப்பட்டது. இவை அனைத்தும் ஒடுக்கப்பட்ட தங்கள் மக்களுக்காக அல்ல. ஒடுக்குபவனுக்காகத்தான்.

இப்படிப்பட்ட சூழலில், அதாவது 2003 சமாதான காலத்தில் புலிகள் மீள யாழ் வந்தபோது இதுதான் நிலைமை. ஒடுக்கும் வெள்ளாளிய சிந்தனை கொண்ட ஒடுக்கும் சாதி தனக்கான காலத்திற்காகவும் – புலிகளின் மீள்வருகைக்காகக் காத்திருந்த காலம். இப்படித் தான் அன்றைய அரசியற்களம் இருந்தது. முடிவுகள் இதற்குள் தான் எடுக்கப்பட்டது. வெகுஞன லெட்டர் கெட் வெள்ளாளிய சங்கங்கள் திடீரென தோன்றி - வெள்ளாளிய அறிக்கைகளை வெளியிட்டன.

2003 இல் புலம்பெயர் சூழல்

2003 இல் புலம்பெயர் நாட்டில் புலியல்லாத அரசியலானது வர்க்க அரசியலைக் கைவிட்டு இருந்த காலம்;. தலித்தியத்தையும் - புலியெதிர்ப்பு அரசியலையும் முன்வைத்திருந்த காலம். சுய அடையாளத்துக்காக நடைமுறை அரசியலை நீக்கம் செய்து, அரசியல் கொசிப்புகள் மேலோங்கி இருந்த காலம். தீப்பொறி உள்ளிட்ட பலரை, புலிகள் திட்டமிட்டு உருவாக்கிய "தமிழீழ மக்கள் கட்சி" மூலம் அணிதிரட்டியிருந்த காலம். அது "தமிழீழம்" என்ற புலிப் பினாமி பத்திரிகையைக் கொண்டு வருமளவுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை இல்லாததாக்கி இருந்த காலம்;. ஒடுக்கப்பட்ட வர்க்க அரசியலுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து இருந்த காலம்.

நாங்கள் மட்டும் தனித்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த காலம்;. இக்காலத்திலேயே, யாழ் நூலக மீள்திறப்பு மீதான ஒடுக்குமுறை நடந்தேறியது. இந்த பின்னணியில் தான், அன்று யாழ் நூலக சாதிய ஒடுக்குமுறை குறித்து தலித்தியக் கண்டனம் வெளிவந்தது. ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தாததால், இந்த தலித்திய அணுகுமுறையுடன் நாங்கள் முரண்பட்டு இருந்தோம்.

ஒடுக்கப்பட்ட மக்களும் - தலித்தியமும்

தலித்தியம் இலங்கைக்கு இன்னமும் அன்னியமான சொல்தான். 1990க்கு பின் வர்க்க அரசியல் புலம்பெயர் சமூகத்தில் மட்டும் பேசுபொருளாக இருந்த போது, அதை ஒழித்துக் கட்டவே, தலித்தியம் புலம்பெயர் சமூகத்திற்குள் கொண்டு வரப்;பட்டது.

யுத்தத்தின் பின் இலங்கையில் தலித்திய அடிப்படையில் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்ட தனிப்பட்ட ஒருவரின் முயற்சியைத் தவிர, மற்றவை ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து அன்றும் சரி இன்றும் சரி இருக்கவில்லை.

சாதிய அமைப்புமுறையைப் பின்பற்றுகின்ற எல்லா சாதி அடுக்குகளிலும் இருப்பது வெள்ளாளிய சிந்தனைமுறை தான். இது வெள்ளாளர் என்ற சாதியை மட்டும் குறிப்பதில்லை. வெள்ளாளன் என்ற சாதியைக் குறித்து சாதி வகைப்படுத்தும் சாதிய சிந்தனைமுறை, வெள்ளாளிய தலித்தியம். சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை தலித் என்று தம் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக உணர்வது, எதிர் வினையாற்றுவது வெள்ளாளிய சிந்தனைமுறைக்கு எதிரானது. அதேநேரம் இதை வெள்ளாளர் என்ற சாதிக்கு எதிராக முன்வைப்பின், அது வெள்ளாளிய தலித்தியம்.

சாதிய ஒடுக்குமுறையை உணர்கின்ற – அதற்கு எதிராகப் போராடுகின்றவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக தலித்தியத்தை முன்னிறுத்த முடியும். வெள்ளாளியத்தை எதிர்த்து போராடுவதற்கான ஒரு ஆயுதமாக, தலித்தியத்தை முன்னிறுத்தி இருக்க வேண்டும். தலித்தின் பெயரில் வெள்ளாளர் என்ற சாதியை எதிர்த்தோ, மனிதப் பிறப்பை கொண்டு சாதிய அடையாளம் காட்டியோ செய்யும் சாதி அரசியல், ஒடுக்கப்பட்ட மக்களின் தலித்தியமல்ல, மாறாக இது வெள்ளாளியத் தலித்தியமாகும். தலித்தியம் பேசுகின்றவர்கள் சாதியத்தை வெள்ளாளியம் என்று கூறுவதில்லை. தலித் அரசியலில் வெள்ளாளியத் தனம் இப்படித்தான் பிரதிபலிக்கின்றது.

புலத்தில் தலித்தியத்தை முன்வைத்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பிறப்பிலான தங்கள் சாதி அடையாளங்களை முன்னிறுத்தி தலித்தியத்தை பேசிய அதேநேரம், பிறப்பை முன்நிறுத்தி வெள்ளாளரை எதிர்ப்பதையே தலித்தியம் என்றனர். வெள்ளாளியத்தை எதிர்த்து தலித்தியத்தை முன்வைக்கவில்லை. இன்று தலித்தியம் பேசுகின்றவர்கள், வெள்ளாளியம் பற்றிப் பேசுவதில்லை. மாறாக வெள்ளாளர் பற்றிப் பேசுகின்றனர். நபர்களின் பிறப்பிலான சாதியை தெரிந்து வைத்துக் கொண்டு, அதற்கு ஏற்ப அரசியல் கதைக்கின்றனர்.

சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் சாதி ஒடுக்குமுறையில் இருந்து விடுதலையடைய, பிற ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடும் மக்களுடன் தலித்துகள் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்வதன் மூலமே, சாதி ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை அடைய முடியும். இதை ஏற்றுக்கொள்ளாத தலித்தியம் வெள்ளாளியத் தலித்தியமே. வெள்ளாளிய தமிழ் தேசியம் போன்று, வெள்ளாளிய தலித்தியமும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே.

புலம்பெயர் தலித்தியமானது பெரும்பாலும் புலியெதிர்ப்பு அரசியலாகவும், தனிப்பட்ட தங்களை முதன்மைப்படுத்திக் கொள்வதற்கான அடையாள தலித்தியமாகவுமே இருந்தது, இருக்கின்றது. இந்தப் பின்புலத்தில் இலங்கையில் நடந்த சாதிய ஒடுக்குமுறைகள் பொதுவாக அணுகப்பட்டது, அணுகப்படுகின்றது.

சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், பிற ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நடைமுறையுடன் கூடிய அரசியல் மூலம் முன்வைக்கப்படவில்லை. வர்க்க அரசியலை மறுக்கின்ற அரசியல் பின்னணியில், தலித்தியம் முன்வைக்கப்பட்டது. இதற்காகவே சாதிரீதியாக செல்லன் கந்தையாவை முன்னிறுத்தி அணுகியது.

சாதிரீதியாக முன்னிறுத்தப்பட்ட செல்லன் கந்தையா

செல்லன் கந்தையா ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து, ஒடுக்கும் வெள்ளாளிய சாதி சமூக முறைமைக்காக அயராது உழைத்தவர். புலியெதிர்ப்பு – புலி ஆதரவு வெள்ளாளிய சிந்தனையாளர்கள் கூறுவது போல், சாதிக்கு எதிரான சமூகத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருந்தவர் அல்ல.

செல்லன் கந்தையா சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியல்ல. இது பலருக்கு பொருந்தும். ஒடுக்கும் வர்க்கம் மற்றும் ஒடுக்கும் சாதிக்காக உழைப்பவர்கள். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து சமூக மேனிலை பெற்றவர்களாக இருக்க முடியுமே ஒழிய, ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக இருப்பதில்லை. இதைக் கண்டுகொள்ளாது, சாதி ஊடாக அணுகுகின்ற பார்வை வெள்ளாளியத் தலித்தியம் தான்.

செல்லன் கந்தையாவின் அன்றைய எதிர்வினை என்பது, ஒடுக்கும் வெள்ளாளிய சாதிக்காக உழைத்த தன்னை, பிறப்பை முன்னிறுத்தி ஒடுக்கிய குமுறலை வெளிப்படுத்தினாரே ஒழிய - ஒடுக்கப்பட்ட மக்களின் குமுறலையல்ல. சாதி ஒடுக்குமுறைக்காக அவர் அதற்கு முன்னும் பின்னும் போராடியவர் அல்ல. அவர் மீது சாதி அடையாளம் சுமத்தப்பட்ட பின், தன் சமூகம் மீதான சாதி ஒடுக்குமுறைக்காக எதையும் செய்யாதவர். அன்று இவர் மீதான சாதிய ஒடுக்குமுறையை தலித்தியத்தின் பெயரில் கண்டித்தவர்கள், செல்லன் கந்தையாவின் வெள்ளாளியத்தனத்தைக் கடந்து தலித்தியத்தை முன்வைக்கவில்லை.

செல்லன் கந்தையா சாதி இழிவுபடுத்தலில் பின்பு, ஒடுக்கும் வெள்ளாளிய சாதிய சமூகத்தின் பிரதிநிதியாக தொடர்ந்து வாழ்ந்தவர். அந்த சமூகத்தின் தயவில் தொடர்ந்து பிழைத்துக் கொண்டவர். இன்று அதையே மீள பிரதிபலிக்கின்றார். ஒடுக்கும் தரப்புடன் வாழ்ந்த ஒருவர், இன்று அதை சொல்லும் போது, அதைக் கொண்டு அன்று சொன்னது பொய் என்று கூறுவதன் பின்னால் இருப்பது, கடைந்தெடுத்த வெள்ளாளிய சிந்தனைமுறையும் - அணுகுமுறையும் தான்.

செல்லன் கந்தையாவின் அன்றைய - இன்றைய கூற்றுக்குள் உள்ள முரண்பாட்டைக் கொண்டு, பிறரை குற்றஞ்சாட்டுவது எப்படி அறிவுபூர்வமானது!? சாதியை நியாயப்படுத்தும் சதிகள்.

செல்லன் கந்தையாவின் பிறப்பை முன்வைத்து நடந்ததை சாதியாக வரையறுத்தன் மூலம், அவரின் ஒடுக்கும் சாதிய அரசியலை கண்டுகொள்ள மறுத்தது தலித்தியம் என்றால், அது வெள்ளாளிய தலித்தியம்;. இன்று தலித்தின் பெயரில், ஒடுக்கும் புலி வெள்ளாளிய தேசியத்தை பாதுகாக்கும் தலித்தியமும், வெள்ளாளியத் தலித்தியமே.

பிறப்பைக் கொண்டு ஒருவரின் அரசியலையும் - நடத்தையையும் குறுக்கிக் காட்டுவது – அளவிடுவது என்பது, வெள்ளாளிய சாதிய சிந்தனைமுறை. இது தலித்துக்கும் பொருந்தும். சாதிச் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களுக்கும் விதிவிலக்கல்ல.

புலிகள் வெள்ளாளிய இயக்கமே

புலிகள் வெள்ளாளிய சிந்தனையிலான யாழ்மையவாத ஒடுக்குமுறையிலான சமூகத்தின் பிரதிநிதிகள்;. அதைப் பாதுகாக்கும் பொறுப்பே புலிகளின் தேசியம்;. படுபிற்போக்கான சமூகக் கூறுகளை பாதுகாக்கும் தேசியத்தை புலிகள் முன்னெடுத்தனரே ஒழிய, முதலாளித்துவ ஜனநாயகக் கூறுகளை கொண்ட தேசியத்தையல்ல. முதலாளித்துவ ஜனநாயகக் கூறுகளைக் கொண்ட தேசியத்தைத் ஒடுக்கினர்.

சாதியம் என்பது முதலாளித்துவ ஜனநாயகத்துக்கு முரணானது. இன்று சாதியை முண்டுகொடுக்கும் சாதிய சிந்தனைமுறை முதலாளித்துவத்துக்கு முரணானது. முதலாளித்துவ ஜனநாயகத்தைக் கொண்டு சாதியைப் பாதுகாக்கும் ஜனநாயக விரோதக் கூறுகளே. பிற்போக்கு சமூகக் கூறுகளைக் கொண்டு ஜனநாயகக் கூறுகளை ஒடுக்கியதே, புலிப் பாசிச வரலாறு.

புலிகளின் பிற்போக்கு ஜனநாயக விரோதக் கூறுகளின் வளர்ச்சியே பாசிச இயக்கமாகியது. மக்களை எதற்காக ஒடுக்கியது? மக்களின் ஜனநாயக உரிமையான கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்தை ஒடுக்கியது ஏன்? தமிழனைத் தமிழன் ஒடுக்கிய - ஒடுக்குகின்ற பின்னணியில், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளை பெறவும் – தங்கள் மீதான ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடுவதையே ஒடுக்கியது.

தமிழ் சமூகத்தில் சாதிய ஒடுக்குமுறை, பிரதேசவாத ஒடுக்குமுறை, ஆணாதிக்க ஒடுக்குமுறை, சுரண்டல் முறையை எதிர்த்து யாரும் போராடக் கூடாது என்பதால் ஒடுக்கியது. இதற்கான ஜனநாயகத்தை மறுதளித்தது. இந்த ஒடுக்குமுறைக்கு தலைமை தாங்கும் அதே தளத்தில், தனிமனித அதிகாரத்திலான ஒடுக்குமுறையாக பரிணாமமடைகின்றது. தனிமனித சர்வாதிகாரமென்பது ஒடுக்கும் சமூகத்தின் அகக் கூறேயொழிய, புறநிலைக் கூறல்ல. அதாவது தனிமனித சர்வாதிகாரத்துக்காக ஒடுக்குமுறை என்பது, ஒடுக்கும் அமைப்புமுறையைப் பாதுகாக்க முனையும் மேல் பூச்சு.

புலிகள் சாதியம், ஆணாதிக்கம், பிரதேசவாதம், வர்க்கம் சார்ந்த ஒடுக்குமுறைகளை மீற முடியாத சமூக தரப்பாக, உறைநிலைக்குள் கொண்டு வந்ததன் மூலம் - ஆட்சேர்ப்பு மற்றும் புலி தேசியத்தை உருவாக்கியது.

புலியின் சாதியம் குறித்து விரிவாக ஆராய்வது அவசியம் இருந்தாலும், இங்கு குறிப்;பாக ஆராய வேண்டி இருக்கின்றது. புலிகளின் சமகாலத்தில் சாதியத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தும் பிறரால் நடந்ததே ஒழிய, புலிகள் அந்த மாற்றங்களை தடுத்து நிறுத்த முனைந்தவர்கள். இது தான் வரலாறு.

1960 -1970 களில் சாதிக்கு எதிரான கம்யூனிஸ்டுகளின் போராட்டமானது, பொது இடங்களில் சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடியது. அதில் வெற்றியும் பெற்றது. இந்த போராட்டம் சமூக விழிப்புணர்வை உருவாக்கியது. 1970 – 1977 காலகட்டமானது, வெள்ளாளிய தமிழ் தேசியம் யாரை துரோகியாக காட்டியது எவரெனில் அவர்கள் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் அன்றைய உழைப்புக்கு, பணமதிப்பை உருவாக்கிக் கொடுத்தவர்கள்.

1978 – 1995 காலகட்டமே புலிகள் காலம். இதில் 1980 -1987 பிற இயக்கங்களும், 1987 – 1991 இந்திய தலையீட்டைக் கொண்ட இந்திய சார்பு குழுக்களின் காலம்;. இக்காலத்தில் சில இயக்கங்கள் சாதியைக் கொண்டு அடையாளம் காணுமளவுக்கு, புலிகள் வெள்ளாளிய இயக்கமாகவே அடையாளப்படுத்தப்பட்டது. இக்காலம் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து இளைஞர்களை இயக்க அரசியலுக்குள் உள்வாங்கிய காலம்;, புலி இயக்க அழிப்பு – மற்றும் படுகொலைக்கு தப்பி ஓடிய ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பலர், புலம்பெயர்ந்ததன் மூலம், ஒடுக்கப்பட்ட மக்களின் பொருளாதார அடித்தளத்தை உருவாக்கியது இக்காலம் தான்;. இதன்பின் 1991 – 1995 வரையான காலத்தில் தான், சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் புலிகளின் கீழ் வாழ்ந்தனர். அப்போது புலிகள் உருவாக்கிய சட்டங்கள் - நடந்து வந்த மாற்றத்தை தடுக்கும் வண்ணம் இருந்தது. சாதிய வடிவங்களை மீறுவதை தண்டனைக்குரிய குற்றமாக்கியது. வெள்ளாளிய சாதிய ஒடுக்குமுறையை மீற முடியாத சட்ட வடிவமானது.

1995 – 2009 வரை புலிகளின் கீழ் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் வாழவில்லை. மாறாக அரசின் கீழ், ஒடுக்கப்பட்ட மக்களை அரவணைத்துச் சென்ற அரசு ஆதரவு குழுவின் கீழ் வாழ்ந்தனர். இக்காலம் சாதி ரீதியாக ஒடுக்கபட்ட மக்களின் சுய பொருளாதாரத்தை சார்ந்திருக்கும், வாழ்க்கைமுறைக்கு வித்திட்டது.

இப்படி 1948 - 2020 இடையில் வரலாற்றில், வெள்ளாளிய தமிழ் தேசியத்தின் கீழ் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த போது நசிந்து கிடந்ததும், அவர்களின் அதிகாரமற்ற காலத்தில் மேலே வந்ததும் வரலாறு. இது பற்றி பின்னால் விரிவாக ஆராய்வோம். புலிகள் காலம் என்பது, ஒடுக்கப்பட்ட மக்கள் சாதி ரீதியாக வெள்ளாளிய ஒடுக்குமுறைக்கு உள்ளான காலம்;. புலிக்கு உள்ளேயே சாதியமானது, ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிபலிக்கவில்லை. இராணுவ கட்டமைப்புக்குரிய வரையறைகள்.

முடிவாக

நீ என்ன சாதி என்று கேட்டு ஒடுக்குவதும் - ஒருவனின் சாதியைக் காட்டி எங்கே ஒடுக்குமுறை என்று கேட்பதுவும் – நான் ஒடுக்கப்பட்டவில்லை என்று கூறுவதும், ஒடுக்கும் சாதிய சிந்தனைமுறையே. இது வெள்ளாளிய சிந்தனை முறை. இது தான் முன்புபோல் ஒடுக்குமுறையில்லை என்கின்றது. ஒடுக்குவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ளாதே என்கின்றது.

1800 களில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்குவோரின் தனிப்பட்ட சொத்;து. சீதனமாக கொடுக்கவும், அவர்களை சந்தையில் விற்குமளவுக்கும் வெள்ளாளிய ஒடுக்குமுறை இருந்தது. 1950 முன் காவோலை கட்டாமல், கழுத்தில் சிரட்டை தொங்கவிடாமல் ஊருக்குள் நுழைய முடியாது. இவை அனைத்தும் வெள்ளாளியம் கூறுவது போல், தானாக இல்லாமல் போகவில்லை. அப்படிக் கூறுவது, வெள்ளாளியத்தின் இன்றைய சாதிய ஒடுக்குமுறையை பாதுகாக்கத்தான்.


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ