Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

  • PDF

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

ஒடுக்குகின்ற வர்க்கத் தலைமையைக் கொண்டு, மாற்றுத் தலைமையைக் கோருகின்ற தமிழ் சிந்தனை முறையென்பது, அடிப்படையில் யாழ் மையவாத வெள்ளாளிய சிந்தனை முறையாக இருக்கின்றது.

இது போன்று ஒடுக்கும் தமிழர்களின் தலைமையில் ஒற்றுமை பற்றியும், ஒன்றுபட்டு போராட்டமும் வேண்டும் என்பதுவும், இந்த யாழ் மையவாத வெள்ளாளிய சமூக ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளக் கோருவது தான்.

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையிலான ஒற்றுமை அடிப்படையிலான வர்க்கத் தலைமை பற்றி, தமிழ் "இடதுசாரிய" எழுத்தில் காண முடியாதுள்ளது. இங்கு மாற்றுத் தலைமையாக

1.தேர்தல் மூலம் தமிழ் முகமாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட மாற்றுத் தலைமையையே தீர்வாக காணுகின்றனர்.

2."நேர்மையான" தமிழ் நவதாராளவாத முதலாளித்துவ தலைமைகளையே மாற்றாக முன்னிறுத்துகின்றனர்.

3.தமிழ் மக்களை வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. மூலம் ஒடுக்கும் யாழ் மையவாத தலைமையைக் கடந்து, மாற்றுத் தலைமையை முன்மொழியவில்லை.

அதாவது இந்த சமூக அமைப்பில் வர்க்க ஆதிக்க அரசியலைக் கடக்காத ஒன்றைத்தான், மாற்றாக அணுகினரே ஒழிய, வர்க்க அமைப்பை தூக்கியெறியக் கோருவதை மாற்றாக முன்வைப்பதில்லை.

ஒடுக்கும் இந்தச் சமூக அமைப்பை தூக்கியேறியக் கோரும் அரசியலைச் சாத்தியமற்றதாக கருதுகின்ற சுயநலச் சிந்தனைமுறையைக் கொண்டு, முதலாளித்துவ மாற்றே முன்னிறுத்தப்படுகின்றது. முதலாளித்துவமானது அழிக்கப்பட முடியாதொரு சக்தியாக முன்னிறுத்துகின்ற, முதலாளித்துவ சிந்தனைமுறையின் பிரதிபலிப்பாகும்.

முதலாளித்துவத்தை அண்டிப் பிழைக்குமாறு மக்களைக் கையாளும் முதலாளித்துவ சிந்தனை எல்லையைக் கடந்து, ஒடுக்கப்பட்ட மக்கள் சக்தியை நம்பும் மாற்று நடைமுறை அரசியலை முன்வைப்பதில்லை. மக்களை நம்பி முதலாளித்துவத்திற்கு எதிராக அணிதிரளுமாறு கோருவதிலும், இதை தனது அரசியல் பாதையாக வரித்து கொண்டு செயற்படுவதில் நம்பிக்கையற்ற சக்திகள், தீர்வுகளைத் தரும் முதலாளித்துவ மாற்றுப் பற்றி கனவு காண்கின்றனர். மற்றவர்களை கனவு காணக் கோருகின்றனர்.

உதாரணமாக இலங்கையில் இனவாதப் பிரச்சனையை எடுப்போம். வர்க்க அமைப்பை தூக்கியெறிவதன் மூலம் தீர்வு என்ற கருத்தாக்கத்திலும், செயலாக்கத்திலும் நம்பிக்கையற்ற சிந்தனைமுறை, முதலாளித்துவ முறையில் நம்பிக்கை கொள்கின்றது. முதலாளித்துவம் மூலம் தீர்வைக் காணும் தலைமையை வாக்குகள்; மூலம் தெரிவு செய்யப்பட்டது தொடங்கி, ஆயுதம் ஏந்திய போராட்டம் நடத்திய வரை, அதனால் தீர்வு காண முடியவில்லை.

உண்மையில் இந்த முதலாளித்துவ முறைக்குள் தீர்வு காணமுடியாது என்பதே உண்மை. முரணற்ற ஜனநாயகம் மூலம் தீர்வு காண முடியாதளவுக்கு, முதலாளித்துவம் முரணுள்ளதாக இருப்பதே இதற்குக் காரணமாகும்;. முதலாளித்துவமானது வர்க்க அடிப்படையைக் கொண்டதாலேயே, முரணுள்ளதாக இருக்கின்றது. இதனால் முரணற்ற ஜனநாயகத்தை கையாள்வதற்கு முதலாளித்துவத்தால் முடியாது.

இதை மூடிமறைக்க இனம், சாதி, பால், நிறம், மதம் .. மூலம் சமூகத்தை பிளந்து, முரண்நி;லையில் வைத்திருக்கின்றது. மக்களை பிரித்தாளும் வண்ணம், வெவ்வெறு பிரச்சனைகள் மூலம் மோதவைத்து, வர்க்க ரீதியான மோதலை முதலாளித்துவம் தடுக்க முடிகின்றது.

குறிப்பாக ஏகாதிபத்திய சமூக அமைப்பு முறையில், ஏகாதிபத்திய பொருளாதார நலன்களை பூர்த்தி செய்யும் பொருளாதாரக் கட்டமைப்பைக் கொண்ட நாடுகள், முதலாளித்துவத்தின் குறைந்தபட்ச ஜனநாயகத்தை கூட அமுல் செய்ய முடியாது. இன்று ஏகாதிபத்திய நாடுகளாக இருக்கின்ற நாடுகள், முரணற்ற ஜனநாயகத்தை அக முரண்பாடுகளுக்கு தீர்வாக கையாண்ட போது, தேசிய முதலாளித்துவ பொருளாதாரமாக வளர்ச்சி கண்டது. அதே வழியை பிற நாடுகள் இன்று கையாள்வதாக இருந்தால், தேசிய பொருளாதாரத்தை முன்னெடுக்கும் செயல்திட்டம் மூலம், முரணற்ற ஜனநாயகத்தை கையாண்டு தீர்வு காண முடியும். இதன் அர்த்தம் ஏகாதிபத்திய பொருளாதாரத்தை முன்னெடுப்பதை மறுத்து, தேசிய பொருளாதாரத்தை உயர்த்திப் பிடித்தலாகும்.

அதாவது ஏகாதிபத்திய நவதாராளவாத பொருளாதாரத்தை தூக்கியெறியும் தலைமைகளால் மட்டுமே, முதலாளித்துவ முறை மூலம் தீர்வு காணமுடியும். பொருளாதாரத்தில் நவதாராள முறைமையைக் கொண்ட எந்த மாற்றுத் தலைமையாலும், முரணற்ற ஜனநாயகத்தைக் கொண்டு தீர்வு காண முடியாது. நவதாராளமயத்தை மறுக்கும் மாற்றுத் தலைமையால் மட்டும் தான், முரணற்ற ஜனநாயக கூறுகளுக்கு தீர்வு காணமுடியும். நவதாராளவாத பொருளாதாரத்தை அடிப்படையாகக்  கொண்ட எந்த மாற்றுத் தலைமையும், முக மாற்றத் தலைமையாக இருக்குமே ஒழிய, தீர்வு காணக் கூடிய மாற்றாக ஒரு நாளும் இருக்க முடியாது. இந்த அரசியல் எதார்த்தமே, தீர்வு காண முடியாத இனமுரண்பாடாக நீடிக்கின்றது. இதைப் புரிந்து கொள்வதன் மூலமே, ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையிலான மாற்றுத் தலைமையை உருவாக்க முடியும்.