Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

ஆதிரையாள்........

  • PDF

சாக எத்தனிக்கும் போதெல்லாம் தனது பிள்ளைகளின் முகங்களும் அவர்களின் எதிர்காலமுமே அவளுக்கு கண்முன் வருகின்றது. வாழ நினைக்கும் போதெல்லாம் அவளுக்கு நடந்த கொடுர சம்பவங்கள் வழ்க்கையில் பிடிப்பில்லாமல் சாவுவரை துரத்துகிறது. சாகவும் துணிவற்றவளாகவும் வாழவும் பிடிக்காதவளாகவும் தனது பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி கனடாவுக்கு நடைப்பிணமாக வந்து சேர்ந்தாள் ஆதிரையாள்.

 

 

புது நாடு, புது இடம், பார்க்குமிடமெல்லாம் மேகத்தை எட்டித்தொட நிற்கும் கட்டிடங்கள், புது மனிதர்கள், சட்டென்று ஒட்டமுடியாத சூழல், புது மொழி, ஏதிலியாய் பிடுங்கி எறியப்பட்ட மன உறுத்தல். எல்லாவற்றையும் மீறி இவற்றுக்குள் தானும் கால் பதித்திடவேணும் என்ற பறப்பு. அவளுடைய பழைய நினைவுகள் எல்லாவற்றையும் ஒரு புறம் பின்னுக்கு ஒதுக்கி ஒடுக்கிவிட்டு மற்றவர்களோடு சேர்ந்து தானும் ஓட எத்தனித்துவிட்டாள். இவை எல்லாவற்றுக்குமப்பால் அவள் நாளாந்தம் சந்திக்கும் உடன் பிறவா சக மனிதர்கள் அவள் மனதில் ஏதோ ஒரு மூலயில் ஒடுங்கிக் கொண்டிருக்கும் பழைய ஞாபகங்களை ஒருக்காவேனும் தட்டியெழுப்ப முயற்சிக்காமல்லில்லை. எப்போதெல்லாம் அவளுக்கு மனம் சலித்துப்போகுதோ அப்போதெல்லாம் தன் பிள்ளைகளின் முகங்களை கண்ணுக்குள் கொண்டுவந்து தன்னை ஆற்றுப்படுத்திக்கொள்வதில் தேற்சிபெற்ற தொடங்கினாள். இன்னமும் மாறாமனங்களை கொண்ட மனிதர்களை எண்ணி அவள் மனதில் ஒரு மூலையில் இங்கும் நிம்மதியாக இருக்க முடியுமால் போய்விடுமோ என்ற பயம் அவளுக்கு இருந்து கொண்டே இருந்தது. எதெல்லாவற்றையும் மறக்கவேணும் என்று இங்கு வந்தாளோ அதற்கு எதிர்மாறாகவே இங்கும் அவளுக்கு இருந்தது.

 

ஆதிரயாள் வன்னியில் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவள். வறுமை பட்டினி எல்லாத்துக்கும் மேலாக பிள்ளைகளின் படிப்பையும் கருத்திற்கொண்டு,  யாழ்ப்பாணத்தில் இருந்த ஆதிரயாளின் அம்மம்மாவின் வீட்டில் ஆதிரையாளையும் தம்பியையும் குடும்பத்தார் விட்டிருந்தார்கள். பன்னிரெண்டு வயது நிரம்பிய ஆதிரையாள் அம்மம்மாவின் வீட்டிலிருந்து பள்ளிக்குப் போகத் தொடங்கினாள். காலம் நகரத் தொடங்கியதுளிந்தியது. இந்திய இராணும் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த காலம். பள்ளிகுப் போகும் போதெல்லாம் இராணுவம் வீதிகளில் துப்பாக்கியை நீட்டி வேலிகளில் பதுங்கி நின்ற போதெல்லாம் அதை பார்த்து ரசித்து, விளளையாட்டாக திரும்பி பார்க்க கூடிய மனதைத் தவிர 'ஏன் இவர்கள் நிற்கிறார்கள்' என்ற கேள்வியை கேட்டுப் பார்க்க கூடிய பக்குவம் கூட அவளிடமிருக்கவில்லை.

 

அம்மம்மாவிற்கு தூரத்து சொந்தங்கள் என்று அம்மம்மா சொன்ன மாமாமார் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு போவதும், அவர்களை சந்திக்க சில அண்ணன்மார் வருவதும் அம்மமா விறாந்தையில் இருந்து தெருவை எட்டிப்பார்த்துக் கொண்டிருப்பதும் வழமையானவை. சில வேளைகளில் ஒரு சிலர் இரவில் தங்கி நின்று மறுநாள் விடியுமுன் போவதும் வழமை. அந்த மாமாமார் கதைத்துக் கொண்டிருக்கும் போது ஆதிரையாளும் தம்பியும் படுக்கைக்கு போய்விடுவார்கள். விடியுமுன் மாமாமார் போனபின்பே எழும்புவார்கள். இதெல்லாம் ஆதிரையாளைப் பொறுத்த மட்டில் அம்மம்மாவின் தூரத்துச் சொந்தக்காரர்கள். அம்மம்மாவும் அப்படித்தான் சொல்லி வைத்திருந்தாள். இதில் அவள் பெரிதும் அக்கறை காட்டிக் கொள்ளவுமில்லை. அதுக்கான தேவையும் அவளுக்கிருக்கவில்லை. பள்ளிக்குப் போவதும் வீட்டுக்கு வருவதும், வீட்டுக்கு வந்தவுடன் சாப்பிட்டுவிட்டு தம்பியையும் கூட்டிக் கொண்டு அயலட்டைப் பிள்ளைகளோடு சேர்ந்து சிவனடியாரின் தோட்டக்காணிக்குள் விளையாடுவதுமே அவளின் உலகம்.

 

அன்றைய அதிகாலை நேரம் வீட்டில் எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள். அந்த அரவத்தில் ஆதிரயாளும் விழித்துக் கொண்டாள். வீட்டைச் சுற்றி நாய்கள் ஓலமிடுவதும் இடைக்கிடையே வேற்றுமொழி உரையாடலும் அவளுக்கு காதில் விழுந்தது. அம்மம்மா அவளை பார்த்து சத்தம் போடாமல் படுக்க சொல்லி வாயில் விரலை வைத்து சைகை காட்டினாள். கட்டிலில் படுத்திருந்த மாமா இறங்கி கட்டிலுக்கு கீழே போய் படுத்துக் கொண்டார். ஆதிரையாளை அந்தக்கட்டில் போய்படுக்கச் சொன்னார்கள். பாயில் நிலத்தில் படுத்திருந்த அவளின் தம்பியையும் அம்மம்மா தூக்கி கட்டிலில் கிடத்திவிட்டார். 'அக்கா முன்னாலுள்ள கதிரையில் இருந்து கொண்டாள். அம்மம்மா அறை கதவின் வாசலில் நின்று கொண்டார். சிறிது நேரத்தில் வாசலைத் தாண்டி அறைப் பக்கம் வழியாக வந்த இந்திய இராணுத்தினர் கதவின் வாசலில் வழிமறித்தால் போல் நின்ற அம்மம்மாவை நெத்தியில் சுட்டார்கள் அம்மம்மா அப்படியே தூக்கி எறியப்பட்டு மூலையில் விழுந்தார், அந்த நேரத்தில் யன்னல் பகுதியால் வந்த தோட்டாக்கள் அக்காவின் காலில் பட்டு துளைத்து தசைகள் நிலத்திலும், சுவரிலும் தெறித்துச் சிதறியது, வீட்டுக்குள் வந்த இராணுவத்தினர் அவைகளைப் பொருட்படுத்தாது கட்டிலுக்கு கீழே படுத்திருந்த மாமாவையும் வெளியே இழுத்தெடுத்து அதிலே வைத்தி சுட்டார்கள்.' என்ன நடக்குதென்று அறியாதிருந்த ஆதிரையாளை சுற்றி இரத்தமும் சதையுமே கொட்டிக் கிடந்தது. கதிரையில் இரத்த வெள்ளத்தில் இருந்த அக்காவை இரண்டு இராணுவத்தினர் கைத்தாங்கலாக தூக்கியபோது காலின் சதைகள் நிலத்தில் கொட்டுண்டு போனதையும், அம்மம்மாவின் தலையிலையும் உடலிலிலும் இருந்து சிதறிக்கிடந்த வெள்ளை வெள்ளை தசைத் துகள்களும், அங்கு நடந்த அந்த சம்பவங்களும் அவள் கண்முன் இன்னமும் நிழலாடிக் கொண்டிருக்கிறது.

 

அந்த சம்பவத்துக்கு பிறகு ஆதிரையாளையும் அவளது தம்பியையும் பெற்றோர் திரும்பவும் வன்னிக்கு கூட்டிச் சென்றார்கள். அவளுக்கு உடனடியாக வன்னிச் சூழலோடு பெரிதாக ஒட்டிக் கொள்ள முடியவில்லை. அம்மம்மாவின் வீட்டில் நடந்த சம்பவங்களே நிழலாய்த் துரத்தியது. பயத்தினாலும் தூக்கமின்மையாலும் இராப்பகலாய் வேதனைப் பட்டாள். ஆதிரயாளின் குடும்பமும் இவளால் தூக்கமிளந்தது. ஏன் இவளை யாழ்ப்பாணத்துக்கு கொண்டுபோய் விட்டோம் என்ற வேதனைக்கு தள்ளப்பட்டார்கள். இப்போது போன்று உழவியல் மருத்துவமோ ஆற்றுப்படுத்தலோ அப்போ அங்கிருக்கவில்லை. சொந்தமும் சுற்றுச் சூழலும் தான் அவளுக்கு மருந்தாக இருந்தது. காலம் செல்லச் செல்ல அம்மம்மாவுக்கு என்ன நடந்தது, அந்த மாமா யார் என்பதெல்லாம் தாய் சொல்லி மெல்லமெல்ல அறிந்து கொள்கிறாள். அதிரையாள் திரும்பவும் வன்னியில் பள்ளிக்கூடம் போகத் தொடங்குகிறாள்.

 

இந்தக்காலம் ஊரூராய் கிராமம் கிராமமாய் இயக்கத்தின் பரப்பபுரைகள் பரவலாக நடந்த காலம். இளைஞர்களை உருவேற்றி வழிகாட்டிய காலம். அறிவுக்கு முன்னுரிமை என்பதை விட உணர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட காலம். இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக இயக்கத்துக்கு போன காலம். இந் நிலைமை அதிரையாளையும் தள்ளி வைக்க விரும்பவில்லை. பள்ளிப்பருவம், கொதிக்கும் இள இரத்தம், ஆதிரையாளின் கண்முன் நிழலாடும் அம்மம்மாவின் சம்பவம் எல்லாமக அவளுக்குள் ஒரு வெறியை ஊட்டியது. அம்மம்மாவை கொண்டவனை கொல், என்ற வெறியின் தெரிவு தன்னை விடுதலைப் புலிகளில் இணைத்துக் கொண்டாள்.

 

2002ம் ஆண்டு வரை பல களங்களைக் கண்ட ஆதிரையாள் சமாதான ஒப்பந்த காலதில் தன்னுடன் இருந்த தளபதி நிலைப் போராளியை திருமணம் செய்து கொண்டு இரண்டு பிள்ளைகளுக்குத் தாயானாள். தளபதியின் மனைவி என்ற அந்தஸ்த்தில் பல கடைநிலைப் போரளிகளின் மதிப்புக்குரியவளுமானாள். இந்தத் திருமணத்தில் மாப்பிள்ளை வீட்டாருக்கு பெருத்த வாரப்பாடு இருக்கவில்லை. ஏதோ மகன் செய்திட்டான் என்ற நிலையில் ஓட்டியும் ஓட்டாமலும் கூடும்ப உறவுகள் போய்க் கொண்டிருந்தது.

 

மீண்டும் போர் தொடங்கியது. நான்காம் கட்ட ஈழப் போர் தொடங்கிய போது மன்னார் தரை வழிப் பாதையால் முன்னேறிய இராணுவ முறியடிப்பு தாக்குதலில் களமிறங்கிய தளபதிகளுள் ஆதிரையாளின் கணவனும் ஒருவர். தாக்குதலில் விடுதலைப் புலிகளிள் நிலைகொண்டிருந்த நிலப்பரப்பை இராணுவத்தினர் கைப்பற்றினர். தொடர்ந்த வலிந்த தாக்குதலினால் இராணுவத்தை பின்தள்ளி மீண்டும் அந்த நிலப்பரப்பை விடுதலைப் புலிகள் கைப்பர்றினர்.

 

தாக்குதல் படையணிகளால் கைப்பற்றப்பட்ட நிலப்பரப்பில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றி அடுத்த தாக்குதலுக்கு தயார் நிலைக்கு கொண்டு வரவேண்டிய வேலைக்கு பொறுப்பாயிருந்தவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் செய்து கொடுக்க மறுத்ததால்,  தாக்குதல் பின்னடைவை நேக்கிச் செல்லல்லாம் அத்துடன் தற்போது பிடித்த இடமும் இல்லாமல் தங்களிடமிருந்து போய்விடும் என்ற அச்சம் ஆதிரையாளின் கணவனுக்கு இருந்தது. இதனால் தானே கன்ணிவெடிகளை அகற்றும் பொறுப்பையும் செய்கிறேன் என்று சக போரளிகளுடன் களத்தில் குதித்தார். நிலக்கண்ணி வைத்தவர்களுக்குத்தான் தெரியும் எந்த முறையில் அதை எங்கு புதைத்திருக்கிறோம் என்று. ஆனால் இதில் எந்த முன் அனுபவமும் இல்லாமல், அந்த துறை சார்ந்தும் இல்லாமல் இருந்த ஆதிரையாளின் கணவன் களத்தில் இறங்கி கால் வைத்த முதல் அடியே கண்ணி வெடிக்கு மேலாகத்தான் இருந்தாது. சக போரளிகள் வைத்த பொறியில் தன்னுயிரை ஈந்தான் ஆதிரையாளின் கணவன்.

 

கடைசி நேர சண்டையில் தனது பிள்ளைகளை அம்மாவிடம் கொடுத்து விட்டு ஆதிரையாளும் களமுனைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சண்டை உக்கிரமாக நடந்து கொண்டிருந்த கடைசி நேரத்தில் திக்குத் திணறி ஆளொருபக்கம் ஓடிக்கொண்டிருக்கையில் ஆதிரையாளுக்கு தனது பிளைகளின் நினைப்பாகவே இருந்தது. ஆதிரையாள் நின்ற காவலரண் பகுதியை நோக்கி இராணுவம் ஷெல் வீசத் தொடங்கினான். இராணுவத்தின் பல்குழல் எறிகணைகள் வீச்சின் பலத்துக்கு தங்களிடம் இருக்கும் துப்பாக்கிகள் ஈடுகொடுக்க முடையாத நிலையில் தங்களுடைய காவலரணைத் தாண்டி சனங்களுடன் இயக்க உறுப்பினர்களும் பின்வாங்கி ஓடுவதைப் பார்த்து என்ன செய்வதென்று தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில் அவளுடன் நின்ற இயக்க உறுப்பினர் "அக்கா நீங்களும் துவக்க இதில வைத்து விட்டு பிள்ளைகளைப் பாருங்க போங்க என்றான்", போகவும் மனமில்லாமல் நிக்கவும் மனமில்லாமல் இரண்டு மனதுடன் நின்ற ஆதிரையாளை பார்த்து "நீங்கள் போங்கக்கா என்று அந்த உறுப்பினர் கடிந்து கொள்ள.." அடுத்த கதை பேசாம துப்பாக்கியை வைத்து விட்டு அவனை திரும்பி பார்த்து பார்த்து ஓடத்தொடங்கினாள். சிறிது தூரம் சென்று தான் வந்த திசையை நோக்கி திரும்பி பார்த்தாள். தன்னுடைய காவலரண் இருந்த மரத்தடி புகைமண்டலமாக இருந்தது. தன்னை வழியனுப்பிய சக நண்பனை நினைத்து கண்ணீரோடு மீண்டும் ஓடத் தொடங்கினாள்.

 

ஆதிரையாள் சன நெரிசலுக்குள் தனது குடும்பத்தை சந்தித்தபோது பசியிலிம், இருக்க இடமில்லாமலும், ஏக்கத்திலும் பிள்ளைகள் துடித்துக் கொண்டிருந்தனர். பிள்ளைக்கு பால் கொடுக்க பால்மா இல்லாமல் பிள்ளை பசியால் துடித்தது. இயக்கம் தங்களுடைய உறுப்பினர்களுக்கு கொடுப்பதற்கென பொருட்கள் சேமித்து வைத்திருந்த் இடத்துக்கு ஆதிரயாள் தனது கடைசி பிள்ளையையும் கூட்டிச் சென்று, அங்கு நின்ற போரளியிடம் தன்னுடைய நிலைமையை சொல்லி பிள்ளைக்கு கொடுக்க பால்மாவை கேட்டாள். 'அப்படியெல்லாம் தர முடியாதக்க' என அவர் மறத்துவிட்டார். அந்த நேரம்  அந்த இடத்திலிருந்து அவர் வோக்கிடோக்கியில் உரையாடிக் கொண்டிருந்தார். "அண்ண இப்படி பொதுமக்கள் இருக்கிற இடத்தில் நின்று வோக்கிடோக்கியில் கதைக்கிறியள் ஆமிக்காரனும் இதை கவர் பண்ணித்தானே ஷெல் அடிக்கிறான்" என்று ஆதிரையாள் சொன்னதற்கு எனக்கு எல்லாம் தெரியும் நீ உன்ர வேலையை பார்த்திட்டு போ என்றமதிரியான பார்வை ஆதிரயாளிடம் பார்த்துவிட்டு தனது உரையாடலை தொடர்ந்து கொண்டிருந்தார். அடுத்த ஒரு நிமிடத்தில் ஷெல் தலைக்குமேல் கூவிக்கொண்டு வரவும் ஆதிரையாள் பிள்ளையை தனது வயிற்றுக்கடியில் போட்டு நிலத்தில் படுத்துக் கொண்டாள். ஆதிரையாள் நின்ற இடத்திலிருந்து சிறிது தூரத்தில் ஷெல் விழுந்து சிதறியது. அடுத்த ஷெல் வருவதற்கிடையில் ஆதிரையாள் பிள்ளையை தூக்கி கொண்டு தனது குடும்பத்தை தேடிஓடினாள்.

 

பிள்ளைக்கு பால்மா இல்லை, கையிலும் காசில்லை என்ற நிலையில்; ஆதிரயாளின் கலியாண நேரத்தில் உறவினர்களால் அவளுக்கு கொடுத்த காசில் சிறுதொகைப் பணத்தை தமிழீழ வைப்பகத்தில் வைப்பு செய்திருந்தாள். எங்கு போனாலும் காசு தேவைப்படும். அதை கையில் எடுத்து வைத்திருப்பது நல்லது என்ற எண்ணத்தில் மறுநாள் வங்கிக்கு சென்றாள். "காசெல்லாம் கட்டி அனுப்பியாச்சு" எடுக்க முடியாது என்று வங்கியாளர்கள் மறுத்து விட்டனர். காசு மூட்டையாக கட்டி வைத்திருந்ததை பார்த்திவிட்டு அதை அவிட்டு தரல்லாம்தானே என்று ஆதிரையாள் கேட்டதற்கும்கூட, அதெல்லம் கட்டியாச்சு இனி எடுக்கமுடியாது என்று ஒற்றை வார்த்தையில் மறுத்துவிட்டனர் வங்கியாளர்கள்.

 

"இராணுவமும் ஷெல்லால் சனங்களை ஒதுக்கி கொண்டு வாறான். இயக்கமும் ஆளையாள் ஓடித்தப்பிற வழியத்தான் பாக்கிறாங்கள். இதுக்குள்ள கிடந்தும் நாம ஷெல்லில் அடிபட்டுத்தான் சாகவேணும்." என்று தனக்கு எண்ணிக்கொண்ட ஆதிரையாள் இனி இங்கிருப்பதில் எந்த பலனும் இல்லை என்ற நிலையில் சனங்களோடு சனங்களாக ஆதிரயாள் குடும்பத்துடன் சேர்ந்து இராணுவம் இருக்கும் பகுதியை நோக்கி நகரத்தொடங்ககினாள்.

 

வட்டுவாகலில் வைத்து இராணுவத்திடம் சரணடைய சனங்களோடு சனங்களாக ஆதிரயாளும் குடும்பமும் காத்திருந்தனர். இராணுவம் குறிப்பிட்ட அளவு தொகுதையை மட்டுமே கூப்பிட்டு பதிவு செய்து சோதனை செய்த பின்பே மற்றைய தொகுதியை கூப்பிட்டுக் கொண்டிருந்தான். ஆதிரையாளோடு சேர்ந்த தொகுதியை கூப்பிடும் நேரமும் வந்தது. இரணுவத்தினர் அங்கிருந்தவர்களை புலி உறுப்பினர்கள் வேறாகவும், பொதுமக்கள் வேறாகவும் என தரம்பிரித்தனர். தன்னுடன் களமுனையில் இருந்த பிள்ளைகள் இரணுவத்துடன் சேர்ந்து நின்று தரம்பிரிப்பதற்கு இராணுவத்துக்கு உதவி செய்து கொண்டிருந்தனர்.

 

இதைக் கண்ட ஆதிரையாளுக்கும் குடும்பத்தினருக்கும் இனி என்ன நடக்கபோகுதோ என்பதை நினைத்து பயம் வந்தது. அங்கு நிற்கும் பிள்ளைகள் எப்படியும் என்னைக் காட்டிக் கொடுக்கத்தான் போகிறார்கள். என்னுடைய இரண்டு பிள்ளைகளையும் விட்டு போகவேண்டிய நிலை ஏற்படப் போகுதே என்ற பயம் ஆதிரையாளை குடையத்தொடங்கியது. "அவளவையள் உன்னை இவனுகளிட்ட காட்டிக் கொடுத்து பிரச்சினை வாறத்துக்கு முதல்ல நீயா போய் சரணடை, பிள்ளைகளை நான் பார்த்துக்கிறன்" என்று ஆதிரையாளின் தாய் சொன்னாள்". நடப்பது நடக்கட்டும் என்று ஆதிரையாள் தானகவே கையை உயர்த்தி இராணுவத்திடம் சரணடைந்தாள். ஆதிரையாள் தனியான இராணுவக் கூடரத்துக்கு கொண்டு செல்லப்பட்டாள். ஒரு நாள் விசாரணையும், பதிவுகளின் பின்பு குடும்பத்துடன் இருக்க ஆதிரையாள் இராணுவத்தினரால் அனுபதிக்கப்பட்டாள்.

 

அங்கிருந்து மறுநாள் வவுனியா மெனிக்பாம் முகாமுக்கு ஆதிரையாளின் குடும்பம் மாற்றப்பட்டது. எல்லோரையும் போன்று முகாமில் அவளுடய குடும்பத்துக்கும் கூடாரம் ஓதுக்கப்பட்டு ஒழுங்குகள் செய்து கொடுக்கப்பட்டது. இரண்டு நாட்களின் பின் வவுனியா முகமில் வைத்து விசாரணைக்கா அவளுடைய பெயர் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது. அடுத்து என்ன நடக்கப்போகுதோ என்ற பயத்துடன் தாயையும் கூட்டிக் கொண்டு விசாரணைக்காக அழைக்கப்பட்ட இடத்துக்கு ஆதிரையாள் சென்றாள். அங்கு மூன்று இராணுவ அதிகாரிகளின் முன்னிலையில் ஆதிரையாளின் முழுவிபரங்களும் எழுதப் பட்டபின் திருப்பி அனுப்பப்பட்டாள். அவளுக்கு நடக்கப் போகும் ஆபத்தை உணராதவள், எந்தப் பிரச்சினையும் இல்லாமல் எல்லாம் முடிந்துவிட்ட திருப்தியில் கொட்டிலிக்கு திரும்பினாள்.

 

இரண்டு நாள் கழித்து மாலைநேரமளவில் ஆதிரையாள் தங்கியிருந்த கொட்டகை வசலில் சிவில் உடையில் வந்த இராணு சிப்பாய் கையில் துண்டுடன் நின்றிருந்தான். அந்த துண்டில் ஆதிரயாளின் பெயரும் எந்த கொட்டகைக்கு விசாரணைக்கு வரவேண்டும் என்ற தகவலும் எழுதப்பட்டிருந்தது. தகவல் துண்டு கொண்டு வந்தவன் 'விசாரணைக்கு வரும் போது அம்மாவைக் கூட்டிக் கொண்டு வரவேண்டாம்' என்ற மேலதிகமான ஒரு தகவலையும் சொல்லி சென்றான். அப்போதுதான் அதிரையாளுக்கு தனக்கு என்ன நடக்கப்போகுதோ என்ற பயம் ஏற்படத் தொடங்கியது. பலரும் சொல்லி கேள்விப்பட்ட செய்திகள் வந்து அவள் காதில் மோதி கொஞ்சநேரத்தில் அவளுக்கு தலை சுற்றத் தொடங்கியது.

 

போகமலும் விடமுடியாது வீட்டுக்கே தேடி வந்திடுவானுகள் எப்படியும் போய்த்தான் ஆகவேண்டும் என்ற நிலையில் மனதை திடப்படுத்திக் கொண்டு தாயிடம் விடயத்தை சொல்லிவிட்டு பிள்ளைகளையும் பார்த்து கொள்ள சொல்லிவிட்டு குறிப்பிட்ட கூடாரத்துக்கு சென்றாள்.

 

கூடாரத்துக்குள் மங்கலான இருட்டையும் அவளுக்கு முன்னால் நீள காற்சட்டையுடனும், பென்னியனுடனும் வாசலோடு சேர்ந்தாப் போல் நின்ற இராணுவ அதிகாரியையும் தவிர அவளுக்கு அங்கு ஒன்று தெரியவில்லை. அவளுக்கு ஏற்கனவே தெரிந்த முகமாக இருந்தாலும், அந்த அதிகாரியை பார்த்தவுடன் அவளுக்கு பயம் வந்தது. இராணுவ அதிகாரி அவளுடைய பெயரைச் சொல்லிக் கொண்டு அவளுக்கு நெருக்கமாக வந்தான். தன்னுடைய வலது காலை வாசலை நோக்கி பின்னுக்கு வைக்கவும் அந்த அதிகாரி அவனுடைய கையை அவளின் தோழில் வைக்கவும் சரியாக இருந்தது. அவளின் உடம்பு பயத்தால் நடுங்கியது. தன்னை கணத்தில் சுதாகரித்துக் கொண்ட ஆதிரையாள் அவனுடைய கையை தன்னுடைய கையால் தட்டி விட்டாள். திரும்பவும் அந்த அதிகாரி அவளின் மார்பை எட்டிப் பிடித்தான். அவனுடைய கையை தட்ட அவளை தயார் படுத்துவதற்கிடையில் அவளின் பின் பிடரியில் பலத்த அடி விழுந்தது. அவ்வளவுதான் அவளுக்கு ஞாபகம்.

 

கண் திறக்க முடியாமல் மெல்ல மெல்ல கண்ணை திறக்க முயற்சிக்கிறாள். நிலத்தில் முகடைபார்த்து கிடந்த அவளுக்கு எல்லாமே இருட்டாக இருக்கிறது. அவள் தலைய மெல்ல உயர்த்த முயற்சி செய்கிறாள். அவளுக்கு முன்னால் மூன்று இராணுவத்தினர் நின்றிருப்பது அவளுக்கு மங்கலாகத் தெரிகிறது. உடம்பை அசைக்க முடியாத வலி. அவள் போட்டிருந்த பஞ்சாபி மேற்சட்டை பிராவுடன் சேர்த்து கழுத்துவரை உயர்த்தப்பட்டிருந்தது. பஞ்சாபியின் கீழ்பகுதியும் உள்ளுடுப்பும் முழங்கலுக்கு கீழ் இழுத்துவிடப்பட்டிப்பதை உணர்ந்துகொள்கிறாள். அவளுக்கு முன்னால் அவளை வெறித்து பார்த்துக் கொண்டிருந்த வெறி நாய்களின் பார்வை அவளுக்கு அருவருப்பாக இருந்தது. அந்த பார்வைக்கு இடம் கொடுக்காது தன்னுடைய உடுப்புக்களை கஷ்ட்டப்பட்டு சரிசெய்ய முனைந்தாள். அவளால் சிறிதும்கூட முடியவில்லை. கையை அசைக்கும் போதெல்லம் அவளது இடது மார்பு வலியெடுத்தது. ஆங்காங்கே பற்களால் கடித்த தழும்புகள், காயாத இரத்தம் தொடை பகுதியில் இவைகளைப் பார்த்தவுடன் அவளுக்கு திரும்பவும் தலை சுற்றுவதை போலிருந்தது. வேதனையுடன் அழுவதைத் தவிர அவளால் எதுவும் செய்யமுடியவில்லை. ஆடைகளை மெல்ல மெல்ல சரி செய்து கொண்டு அந்த வெறி நாய்களின் பார்வையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள்.

 

தள்ளாடி தள்ளாடி எழுந்து நின்றுகொண்டு தன்னெதிரில் நின்ற வெறிநாய்களின் பதிலுக்கு காத்திராமல் மங்கலான இருட்டில் யாரும் தன்னுடைய நிலையைக் கண்டு கேட்டிரக் கூடாது என்று ஒருவாறாக தட்டுத்தடுமாறி நடைப் பிணமாக கொட்டிலுக்குப் போய் சேர்ந்தாள். தனக்கு நடந்த கொடூரத்தை பிள்ளைகளுக்கு முன் தாய்க்கு எப்படி சொல்லுவது என்று ஒரு மூலையில் சுருண்டு கொண்டாள். தாயின் எந்த கேள்விகளுக்கும் அவளால் பதிலளிக்க முடியவில்லை. விம்மலும் முனகலும்தான் அவளிடமிருந்து பதிலாகா இருந்தது. எந்த தாய்க்கும் மகளின் இந்த நிலை விளங்காமலிருக்க முடியாது. தாயும் ஆதிரையாளிடம் மேற்கொண்டு எதையும் கேட்காமல் பெருமூச்சுடன் படுத்திருந்தாள். ஆதிரையாள் படுத்திருந்தாலும் அவளுடய நினைவெல்லாம் தனக்கு நடந்த கொடூரத்தையே நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.

 

வவுனியா முகமிலிருந்து குறிப்பிட்ட காலத்தில் வெளியேறிப் போவதறிகான சந்தர்ப்பம் ஒன்று ஆதிரையாளுக்கு கிடைத்தது. முகாமை விட்டு வெளியேறி யாழ்ப்பாணத்துக்கு சென்றாள். அங்கு சென்ற ஓரிரு நாளிலே விராணை என்று சொல்லி அவள் இருந்த வீட்டுக்கே இராணுவத்தினர் வரத்தொடங்கினர். மீண்டும் முகாங்களுக்கு அழைக்கப்பட்டாள். விசாரணை என்ற பெயரில் பாலியில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டாள். தன்னால் மற்றவர்களுக்கும் துன்பத்தை கொடுக்ககூடாது என்று குறிப்பிட்ட சில நாட்களில் குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணத்தையே விட்டு வெளியேறி யாருக்கும் தெரியாமல் நண்பர் ஒருவரின் உதவியுடன் தென்பகுதிக்கு வந்து சேர்ந்தாள்.

 

அவள் நிழல் போல் எங்கெல்லாம் அவள் போகிறாளே அங்கெல்லாம் அவளுக்கான விசாரணையும் சென்று கொண்டிருந்தது. கடைசியில் தென்பகுதிக்கும் 'நாங்கள் அரச விசாரணப் பிரிவினர்' என்று சொல்லி அவளிருந்த வீட்டு வாசற் படியில் வந்து நின்று கொண்டார்கள். அடிக்கடி கைத் தொலைபேசியையும் காட்டி இதில் உன்னைப் பற்றிய எல்லா விடயங்களும் எங்களிடம் இருக்கு என்று பயமுறுத்த தொடங்கினார்கள். அவர்களுடைய விசாரணைகளெல்லாம் மறைமுகமாக தங்களுடைய கம இச்சைக்கு அவளை இணங்க வைப்பதாகவே என்பதாகவே இருந்தது.

 

'நாங்கள் அரச விசாரணப் பிரிவினர்' என்று விசாரணைக்காக வந்தவர்கள் "யாழ்ப்பாணத்து, வன்னி இராணுவ சிவில் நிருவாகம் எப்படி இருக்கிறது, இராணுவத்துக்கும் மக்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது" என்பவை உள்ளிட்ட பல் வேறுபட்ட கேள்விகளுக்கு எழுத்து மூலமாக ஆதிரையாளிடம் விடை எழுதியும் வேண்டிச் சென்றார்கள்.

 

இவ்வாறான சூழல் ஒன்றிலிருந்து விடுபட ஆதிரையாள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர அவளுக்கு வேறு வழி இருக்கவில்லை. காலம் ஓட்டம் அதிரையாள் வெளிநாடு வருவதற்கான ஒழுங்கும் கைகூடிவர, இலங்கை தேசத்தையே விட்டு கனடாவுக்கு குடும்பத்தோடு வந்து சேர்ந்தாள்.

 

இராணுவம், விசாரணை என்ற நெருக்கடிகளிலிருந்து தப்பித்து தேசம் விட்டு தேசம் வந்தாலும் ...........

 

"உங்களுக்கு புருசனுமில்லை, இங்க தனியாக இருக்க உங்களுக்கு கஷ்டமாக இருக்கும் என நீலிக்கண்ணிர் வடிக்கும் மனிதர்களின் ஆக்கினை...", அவள் பட்ட காயம் ஆறுமுன் அதனை உரசிப் பார்க்கத்தான் எல்லோரும் நினைக்கிறோமே தவிர அது அவளுக்கு வலிக்கிறதா, சீழ்கட்டியிருக்கா...; அந்தக் காயங்களுக்கு மருந்து தேவையா, இல்லையா... என்பதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு அக்கறையில்லை.

 

எங்கள் எல்லோருக்கும் மத்தியில் இன்னமும் ஆதிரையாள்......

Last Updated on Wednesday, 11 June 2014 14:52