Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயக மக்கள் முன்னணி என்னது, விமர்சனமா!! எடடா துவக்கை!!!

என்னது, விமர்சனமா!! எடடா துவக்கை!!!

  • PDF

தமிழ்க்கவி புலிகளின் மீது விமர்சனம் வைத்ததும் நெற்றிக்கண்ணை காட்டினும் குற்றம், குற்றமே என்று வாழும் கவியரசுகள், கொள்கை ஒன்றுக்காகவே பேனா பிடித்திருக்கும் பத்திரிகை ஆசிரிய திலகங்கள் எல்லாம் பொங்கி எழுந்தன. இதை எல்லாம் புலிகளில் இருந்த காலத்தில் சொல்லியிருக்கலாமே என்று அவரைக் குற்றம் சாட்டுகின்றன. அவர் வைத்த விமர்சனங்களிற்கு அவர்களிடம் மறுமொழி இல்லை. தமிழ்க்கவியை குற்றம் சாட்டுவதன் மூலம் அவரின் விமர்சனங்களை பொய்யாக்க முனைகிறார்கள்.

 

 

தமிழ்க்கவி அரச ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து இந்த விமர்சனங்களை வைக்கிறார் என்று சொல்வதன் மூலம் அவரின் விமர்சனங்களை பொய்யாக்க முயலுகின்றனர். அவர் என்ன நிலைப்பாட்டில் இருந்து சொன்னாலும் அவர் வைத்த விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் எதுவும் புதியன அல்ல. மக்களைப் பணயக்கைதிகளாக வைத்திருந்தது, பிள்ளைகளை கடத்தியது என்ற அராஜகங்களை அவரும் பதிவு செய்கிறார். அதற்கு இவர்களால் என்ன மறுமொழி சொல்ல முடியும். மனச்சாட்சி என்ற ஒன்று இந்த பிழைப்புவாதிகளிற்கு இருக்குமாயின் குறைந்தபட்சம் மெளனமாகவேனும் இருந்திருப்பார்கள். இவர்கள் தான் வியாபாரிகள் ஆச்சே. நேர்மை, மனச்சாட்சி என்றால் என்ன விலை என்று கேட்கிறார்கள்?


தமிழ்க்கவி புலிகளில் இருந்த காலத்தில் இந்த விமர்சனங்களை வைத்திருக்கலாமே என்று கவிப்பெருந்தெகை ஒருவர் கனவுலகில் இருந்து கேட்கிறார். ஏன் புலிகளிடம் விமர்சனம் வைக்கவில்லை என்று ஒருவர் கேட்கிறார் என்றால் அவர் இவ்வளவு நாளும் கோமாவில் இருந்திருக்க வேண்டும் அல்லது இலங்கையைப் பற்றிய செய்திகளை ஒருமுறை கூட கேள்விப்படாதவராக இருக்க வேண்டும். ஊசி முனையளவு நிலம் கூட தமது கட்டுப்பாட்டில் இல்லாத காலத்திலேயே எல்லா இயக்ககாரர்ளும் கொலைக்கு மேல் கொலை செய்தார்கள்.


தங்களின் இயக்க உறுப்பினர்களை கொலை செய்தல். மற்ற இயக்க உறுப்பினர்களை கொல்லுதல். தொழிற்சங்கவாதிகள், ஆசிரியர்கள், அரசாங்க ஊழியர்கள் என்று பொதுமக்களை கொல்லுதல். முஸ்லீம், சிங்கள மக்களை கொல்லுதல் என்று போராட்டம் என்றால் கொலை செய்வதுதான் என்று வெறியாட்டம் ஆடியவர்கள் இவர்கள். உளவாளிகள் என்று சந்தேகப்பட்டு கொல்லப்பட்ட மனநோயாளிகளின் எண்ணிக்கை எண்ணில் அடங்காது. இந்தக் கொலைகாரர்கள் கேட்ட கேள்விகளிற்கு மறுமொழி சொல்லத்தெரியாத அந்த மனநிலை பிறழ்ந்த மனிதர்களை கொல்வதற்கு கொஞ்சமும் தயங்கவில்லை இந்த மிருகங்கள்.


உலக சமாதானம் வேண்டி நாடு நாடாக ஒரு சிறுபறை ஒன்றை முழங்கிக் கொண்டு திரிந்த ஒரு ஜப்பானிய புத்தபிக்கு தமிழ் பிரதேசம் வந்த போது உளவாளி என்று இந்த மூர்க்கரால் கொல்லப்பட்டார். இப்படி உளவாளிகள் என்று அப்பாவிகள் பலரைக் கொன்ற கொள்கைக்குன்றுகள் இன்று இலங்கையின் பேரினவாத அரசுடன் கொஞ்சமும் வெட்கமின்றி கொஞ்சிக் குலாவுகின்றனர்.


ராஜினி திரணகம மக்களின் மேல் அதிகாரத்தை செலுத்துபவர்களின் மேல், அராஜகம் செய்பவர்களின் மேல் விமர்சனத்தை வைத்தார். இலங்கை அரசு, இந்திய அரசு, இயக்கங்கள் என்று எல்லோரது அநியாயங்களையும் கேள்வி கேட்டார். மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்கும் மாணிக்கங்கள் ஆயுதம் எதையும் தொட்டுக்கூடப் பார்த்திராத அந்த அபலைப் பெண்ணை அய்ந்தாறு பேர் சேர்ந்து கொன்றனர்.


புளொட் இயக்க தலைவர் உமாமகேஸ்வரன் இந்தியாவில் இருந்து வந்து சுழிபுரத்தில் தங்கியிருந்த போது புலிகள் இயக்கத்தின் சுவரொட்டிகளை ஒட்டிய புலிகளின் ஆதரவாளர்களான ஆறு பேர் உமாமகேஸ்வரன், சங்கிலி கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். எங்களின் கோட்டைக்குள், எங்களின் பெரியைய்யா வந்து நிற்கும் போது எதிர் இயக்கத்தவர்கள் சுவரொட்டி ஒட்டுவதா என்று அந்த படுகொலைகள் இந்தக்கும்பல்களால் நடத்தப்பட்டது. இயக்கத்தலைவனை அடிமைகள் போல் பெரியைய்யா என்று அழைத்துக் கொண்டு வெறியாட்டம் ஆடிய இந்த கொலைகாரர்களும் தமிழ்மக்களின் விடுதலைக்காகத் தான் போராடினார்களாம்.


ரமணி (செல்வக்குமார் சிவசுந்தரம்) பொலிகண்டியை சேர்ந்தவர். கடற்புலிகளின் பொறுப்பாளர் சூசையின் உறவினர். பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவர். பல்கலைக்கழகத்திற்கு மருத்துவபீடத்திற்கு தெரிவான போதிலும் அதைத்தூக்கி எறிந்து விட்டு தமிழ்மக்களின் விடுதலைக்காக "தமிழீழ தேசிய விடுதலை முன்னணியில்" (National Liberation Front of Tamil Eelam) இணைந்து போராடியவர். புலிகள் வலதுசாரிகள். ரமணி மார்க்கசியத்தை தம் போராட்ட வழிமுறையாகக் கொண்டவர், புலிகள் ஆயுதங்களின் மேல் நம்பிக்கை கொண்டவர்கள், ரமணி மக்கள் போராட்டத்தின் மேல் நம்பிக்கை கொண்டவர் என்ற அரசியல் முரண்பாடுகள் தவிர அவருக்கும் புலிகளிற்கும் எந்தவிதமான முரண்பாடுகளும் இருக்கவில்லை. ஆனாலும் அவரை புலிகள் கொன்றார்கள். அவரைத் தேடித் திரிந்த அவரது தாய், தந்தையருக்கு அவரது சட்டையையும், மணிக்கூட்டையும் கொடுத்து விட்டு சென்றார்கள்.


ரமணியின் கொலையும், அவருடையதைப் போன்ற ஆயிரம், ஆயிரம் கொலைகளும் இந்த கொலைகார இயக்கங்களால் ஏன் செய்யப்பட்டன? தான், தன்னுடைய குடும்பம் என்று சுயநலமாக வாழ்ந்திருந்தால் இந்த கொலைகாரர்களிற்கு பிரச்சனை இல்லை. பிணங்களை மிதித்துக் கொண்டு வெளிநாடுகளிற்கு தப்பியோடி விட்டு பிறகு திடீர் ஞாபகம் வந்து "தமிழ்தேசியம்" பேசினால் அவர்கள் தேசபக்தர்கள். ஆனால் ஒருவன் மக்களிற்காக போராடினாலும் அவன் தங்களினுடைய இயக்கம் இல்லை என்றால் அவனை கொலை செய்ய வேண்டும். தங்களினுடைய பிழையான போராட்ட முறைகளை, மக்கள் விரோத அரசியலை விமர்சிப்பவனை, அம்பலப்படுத்துபவனை கொலை செய்ய வேண்டும். இந்தக் கொலைவெறி தான் முள்ளிவாய்க்காலில் மக்களை பலியிட வைத்தது.

Last Updated on Tuesday, 10 June 2014 07:25