Wed01262022

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

நெல்சன் மண்டேலா-உன்னதமான மனிதன்,தோற்றுப்போன புரட்சியாளன்

  • PDF

சிறைச்சாலையால் எங்களது உறுதியை,அர்ப்பணிப்பை முறியடிக்க முடியாது. மாறாக இறுதிவெற்றி அடையும் வரை போராடுபவர்களாக எம்மை மாற்றுகிறது. இருபத்தேழு வருடங்களை தனிமைச்சிறையில் கொடும் சித்திரவதைகளை எதிர்கொண்ட மனிதனின் எழுச்சிவரிகள் இவை. ஆபிரிக்க தேசிய காங்கிரசின் இராணுவப்பிரிவினது தலைவராக சிறை சென்றவர் சிறை மீண்டு தென்னாபிரிக்க குடியரசின் ஜனாதிபதியானார். நெல்சன் மண்டேலா சிறையில் அடைக்கப்பட்ட போது தென்னாபிரிக்காவில் இருந்த நிலைமைகள் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக அவர் பதவியேற்ற பின்பு மாறியுள்ளனவா?

தென்னாபிரிக்காவின் கறுப்பின மக்கள் சிறுபான்மை பிரித்தானிய ,டச் வெள்ளையினத்தவரின் நிறவெறிக் கொடுமையிலிருந்து விடுபட்டிருக்கிறார்கள். கறுப்பினத்தவர்கள் ஜனாதிபதியாகவும்,மந்திரிகளாகவும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள். ஆனால் பசியிலும்,பட்டினியிலும் வாழ்ந்த கறுப்பு மனிதர்களின் வயிறுகள் நிறைகின்றனவா? சேரிகளின் நெரிசல்களில் வாழ்ந்த வாழ்க்கை மாறி விட்டதா?. வயிற்றுப்பசிக்காக ஆபத்து மிகுந்த வைரச்சுரங்கங்களில் தமது குழந்தைப் பருவங்களை தொலைத்த வாழ்க்கை மாறி விட்டுதா? வேலை இல்லாததால் களவிலும்,வன்முறையிலும் ஈடுபட்டு வாழ்க்கையை சிறைச்சாலைகளில் தொலைத்த நாட்கள் மாறி விட்டனவா?

வரலாறு முழுக்க திரும்ப திரும்ப பார்த்த காட்சிகள். காலனித்துவ காலத்தில் மக்களின் எழுச்சிகளை கண்டு பயந்த ஏகாதிபத்தியவாதிகள் தமது நலன்களை உறுதி செய்து கொண்டு தமது உள்ளூர்கூட்டாளிகளிடம் ஆட்சிப்பொறுப்புகளை கொடுத்து விட்டு புரட்சிகளை திசை திருப்பிய அதே நாடகங்கள். தென்னாபிரிக்காவின் மக்கள் எழுச்சிகளை கொடூரமாக ஒடுக்கிய போத்தாவின் அடக்குமுறைகள் பலனற்று தோற்றுப் போயின. கறுப்பினமக்களின் போராட்டங்கள் அலை அலையாக எழுந்தன. தென்னாபிரிக்க நிறவெறி அரசின் இருப்பிற்கு,வெள்ளை முதலாளிகளின் கொள்ளைகளிற்கு சாவுமணி அடிக்கப்படும் அபாயம் நெருக்கிக் கொண்டு வந்தது.

 


ஆபிரிக்க தேசிய காங்கிரசில் தென்னாபிரிக்க கம்யுனிஸ்ட் கட்சியின்   உறுப்பினர்கள் நிறைந்திருந்தனர். ஆயிரத்து தொளாயிரத்து அறுபத்துஇரண்டாம் ஆண்டு ஆவணி மாதம் கைது செய்யப்பட்ட போது நெல்சன் மண்டேலா ஒரு கம்யுனிஸ்ட் கட்சி உறுப்பினர் மட்டுமல்ல தடை செய்யப்பட்ட அக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் கூட. அரசியற் காரணங்களிற்காக மறுக்கப்பட்ட இந்த விடயம் நெல்சன் மண்டெலாவின் மரணத்திற்குப் பிறகுதென்னாபிரிக்க கம்யுனிஸ்ட் கட்சியின் உபசெயலாளர் சொல்லி மாபைலா விடுத்த இரங்கல் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


சமீபத்தில் இறந்த சூனியக்காரி மார்க்கிரட் தச்சர் மரணமடைந்த போது முன்னாள் தெற்கு ஆபிரிக்க ஜனாதிபதி F.W. de Klerk எழுதிய கட்டுரை ஒன்றில் என்ன காரணத்திற்காக பெரும்பான்மையான தெற்கு ஆபிரிக்காவின் சொந்த மக்களான கறுப்பினமக்களிற்கு, குடியேறிய காலனித்துவவாதிகளின் பரம்பரையினரான சிறுபான்மை நிறவெறி வெள்ளையர்களால் உரிமைகள் வழங்கப்பட்டன என்பதை எந்தவித கூச்சமும் வெட்கமும் இன்றி எழுதுகிறார். P.W போத்தா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஆபிரிக்க தேசிய காங்கிரசில் (A.N.C) இருந்த கம்யுனிஸ்டுக்களின் வளர்ச்சியை கண்டு பயந்தே அவர்கள் ஆபிரிக்க தேசிய காங்கிரசுடன் உடன்படிக்கை செய்து கொண்டனர். தீவிர கம்யுனிஸ்ட் எதிர்ப்பாளர்களும், யுத்த வெறியர்களுமான மார்க்கிரட் தச்சர், டொனால்ட் ரீகன் போன்றோர் கம்யுனிச அபாயத்தை கண்டு கொண்டனர். உறுதியான கம்யுனிஸ்ட்டு போராளியான Chris Hani உட்பட பல கம்யுனிஸ்ட்டுக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.


எழுச்சிகளைக் கண்டு பயந்த அவர்கள் ஒரு காலத்தில் பிரச்சனையாக இருந்த நெல்சன் மண்டெலாவையே தங்களது தீர்வாக கண்டு கொண்டனர். கம்யுனிஸ்டாக,கறுப்பினப்போராளியாக சிறை சென்றவர் கறுப்பர்களிற்கும்,வெள்ளையர்களிற்குமான தென்னாபிரிக்கா என்ற வானவில் கொள்கையுடன் வெளிவந்தார். முதலாளிகளைக் காப்பாற்றும் அமைப்புமுறையில் முன்னாள் கம்யுனிஸ்ட் அதிபரானார். உண்மைக்கும்,நல்லிணக்கத்திற்குமான விசாரணை மன்றம் அமைக்கப்பட்டது. போத்தா போன்ற நிறவெறிகொலைகாரர்கள் எவருமே தண்டிக்கப்படவில்லை.தென்னாபிரிக்காவை சூறையாடிய வெள்ளையின முதலாளிகள் எவரும் தண்டிக்கப்படவில்லை. கறுப்பினமக்களின் மண்ணை களவாடிய காலனித்துவவாதிகளின் சொத்துகள் எதையுமே அரசு பறிமுதல் செய்யவில்லை.  முதலாளித்துவ அரசுகளின் விசாரணை மன்றங்கள் முதலாளிகளை தண்டிக்குமா? சுரண்டல்கள் தொடர்கின்றன. வறுமை தான் கறுப்பினமக்களிற்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை என்பதும் தொடர்கிறது.


பகத் சிங்கையும்,தோழர்களையும் கொன்று விட்டு காந்தியை புனிதராக்கியவர்கள் நெல்சன் மண்டலாவிற்குள் இருந்த கம்யுனிஸ்ட்டை கொன்று விட்டு அதிபராக்கினர். பராக் ஒபாமா,டேவிட் கமரோன் என்று உலகமகாகொள்ளையர்கள் எல்லாம் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.  நெல்சன் மண்டேலாவை ஒப்பற்ற தலைவர் என்று, தென்னாபிரிக்காவில் சமாதானத்தை கொண்டு வந்தவர் என்று கண்ணீர் வடிக்கிறார்கள். ஆம்,இவர்களது கொள்ளைகள் தொடர்வதற்கு தேவையான சமாதானத்தையே அவர் அவரையும் அறியாமல் கறுப்பினமக்களின் விடுதலை என்ற பெயரில் கொண்டு வந்தார். நெல்சன் மண்டேலா அவரையும் அறியாமல் இந்த கொள்ளையர்களிற்கு உதவியிருக்கிறார். நெல்சன் மண்டேலாவை தென்னாபிரிக்காவின் மக்களிற்காக போராடியவர் என்று முதலைக்கண்ணீர் விடும் இவர்கள் ஒடுக்கப்படும் உலகமக்கள் முழுமைக்கும் போராடிய மார்க்ஸ்,ஏங்கெல்ஸ்,லெனினின் பெயர்களை மறந்து கூட சொல்வதில்லை. மரணித்த பிறகும் கூட தோழன் சே குவாரா ஒரு பயங்கரவாதி தான் இவர்களிற்கு.

Last Updated on Saturday, 07 December 2013 10:49