"நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயற்பாடே, பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாகிறது!" என்றார் கார்ல் மார்க்ஸ். அவர் அப்படி வாழ்ந்தார் என்பதால், உலகமே அவரிடம் இருந்து கற்கின்றது. உலகெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வழிகாட்டியாகவும், ஆளும் வர்க்கத்தின் எதிரியாகவும் இருக்க முடிகின்றது. அவர் மரணித்து 130 வருடம் கடந்த நிலையில், இதுதான் எதார்த்தம். எந்தத் தத்துவத்தாலும், எந்த நவீனத்துவத்தாலும் அவர் எடுத்துக் காட்டிய உண்மைகளை மறுத்துவிடவோ மாற்றிவிடவோ முடியவில்லை.
இந்த வகையில் ஆயிரம் ஆண்டுகள் சிந்தனையாளர்களின் வரிசையில் முதலாம் இடத்தில் நிற்பவர் கார்ல் மார்க்ஸ். ஒரு முதலாளித்துவ நாட்டின் செய்தி நிறுவனமான பி.பி.சி, நடத்திய கருத்துக் கணிப்பில், அதன் நேயர்கள் தங்கள் அபிமான சிந்தனையாளராக கார்ல் மார்க்ஸைத் தெரிவு செய்திருக்கின்றனர். இதற்கு எதிர்வினையாற்றிய பிரிட்டிஸ் வலதுசாரிய பத்திரிகை ஒன்று "மார்க்ஸ் எனும் அரக்கன்" என்ற தலைப்பிட்டு, பிச்சைக்கார "அகதி"பற்றி பலவாகத் தூற்றும் அளவுக்கு மார்க்ஸ் ஒடுக்கப்பட்ட மக்களால் போற்றப்படுகின்றார்.
இப்படி வலதுசாரிய ஆளும் வர்க்கங்கள் தூற்ற, ஒடுக்கப்பட்ட மக்கள் அவரை நேசிக்கின்றனர். உலகம் சுரண்டும், மற்றும் சுரண்டப்படும் வர்க்கங்களின் முகாமாக, பிளவுபட்டு இருப்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. உலகின் ஒவ்வொரு பொருளாதார நெருக்கடியும் எழும் போதும், கார்ல் மார்க்ஸ் சொன்னபடி நடப்பதைக் கண்டு ஆளும் வர்க்கம் திகைத்துப் போகின்றனர். அவர் சொன்ன வர்க்கப் போராட்டமும், வர்க்கமற்ற அமைப்பு வந்துவிடுமோ என்று ஆளும் வர்க்கங்கள் பீதியுடன் அலறுகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்கள் கார்ல் மார்க்ஸ்சை தங்கள் வழிகாட்டியாகக் கொண்டு அதற்காக போராடுவதை தடுக்க முடியவில்லை.
மூலதனத்தின் நெருக்கடிகளின் போது, சுரண்டும் வர்க்கம் மார்க்ஸ்சின் மூலதனத்தை தெரிந்து கொள்வதன் மூலம் எதிர்கொள்ள முனைகின்றன. இலண்டனின் "ஃபைனான்சியல் டைம்ஸ்" பத்திரிகை 'உலக முதலாளித்துவம் வெற்றிக்கொடி நாட்டி பத்தாண்டுகள் கூட ஆகவில்லையே! அதற்குள்ளாகவா நாம் நெருக்கடியில் சிக்கிவிட்டோம்?' என்று அதிர்ச்சியுடன் ஒரு கட்டுரையை வெளியிட்டது. அக்கட்டுரையின் தலைப்பென்ன தெரியுமா? "டாஸ் காபிடலை (மார்க்சின் 'மூலதனம்' நூலை) இன்னொருமுறை புரட்டிப் பார்ப்போம்!" என்பதாகும்.
"நியூயார்க்கர்" பத்திரிகையின் வணிகத்துறைச் செய்தியாளர் ஜான் காசிடி, ஒரு முதலீட்டு வங்கியின் முதலாளியுடன் பேசிக் கொண்டிருந்த உரையாடல் பற்றி அக்டோபர் 1997இல் எழுதினார். 'வால் தெருவில் (நியூயார்க்கின் பங்குச் சந்தைத்தெரு) நான் எந்த அளவிற்கு நேரத்தைச் செலவிடுகிறேனோ, அந்த அளவிற்கு மார்க்ஸ் கூறியது சரிதான் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். முதலாளித்துவத்தை ஆய்வு செய்வதற்கு மார்க்ஸ் மேற்கொண்ட முறைதான் சரியானது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை' என்று சொன்னாராம் அந்த வங்கி முதலாளி.மார்க்சின் நூல்களை இதுவரை படித்திராத நியூயார்க்கர் செய்தியாளரான காசிடி, ஆவலை அடக்கமாட்டாமல் முதன்முறையாக மார்க்சைப் படித்தபின் எழுதுகின்றார். "உலகமயமாக்கம், ஏற்றத் தாழ்வுகள், அரசியல் ஊழல், ஏகபோகமயமாதல், தொழில்நுட்ப வளர்ச்சி, உயர் கலாச்சாரத்தின் வீழ்ச்சி, தொடர்ந்து உயிர்த் துடிப்பை இழந்து வரும் நவீன வாழ்க்கையின் தன்மை இவை பற்றியெல்லாம் ஆணி அடித்தாற் போலப் பேசும் மார்க்சின் எழுத்துக்களைக் கண்டேன். இதே விசயங்களைத்தான் இன்றைய பொருளாதார வல்லுனர்கள் ஏதோ புதிய பிரச்சினைகளாகக் கருதி எதிர்கொண்டு வருகிறார்கள். சில நேரங்களில், மார்க்சின் கால்த்தடம் பதிந்த பாதையில்த்தான் செல்கிறோம் என்பதை அறியாமலேயே அந்தப் பாதையிலும் நடக்கிறார்கள்". மார்க்சைப் படித்தபின் நியூயார்க்கர் இதழில் காசிடி எழுதிய கருத்துக்கள் இவை.சுரண்டும் வர்க்கங்களைச் சேர்ந்த உலகின் முன்னணி பிரதிநிதிகள், மார்க்சைப் பற்றி கடந்த பத்தாண்டில் சொன்னவை இவை. சுரண்டப்படும் வர்க்கங்கள் 130 வருடங்களுக்கு முன் இறந்து போன மார்க்சை நேசிப்பது ஏன் என்பதை, சுரண்டும் வர்க்கமே சொல்லும் கூற்றில் இருந்து தெரிந்து கொள்ள முடியும். சோவியத் திரிந்து சிதைந்து சிதறிய பொழுது மார்க்ஸ்சின் தத்துவம் பொய்த்துவிட்டது என்றவர்கள், கம்யூனிசம் செத்துவிட்டது என்றவர்கள், மக்கள் மத்தியில் மார்க்ஸ் உயிர்வாழ்வதை சாகடிக்க முடியவில்லை.
1883இல் இறந்த மனிதன் தொடர்ந்து மரணிக்காமல் மக்களுடன் இருப்பது கண்டு கதறும் ஆளும் வர்க்கங்கள், மக்களை ஒடுக்கியடக்கி ஆள்வதன் மூலம் மார்க்சியத்தை புதைத்துவிட முனைகின்றனர். இப்படித்தான் ஆளும் சுரண்டும் வர்க்கங்கள் மார்க்சியத்தை எதிர்கொள்கின்றது. தத்துவ ரீதியாகவல்ல.
மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ்சின் காலத்துக்கு முன்போ அல்லது பின்போ, எக்காலத்திலும் சமூக வளர்ச்சியிலும், அதன் மாற்றத்திலும் தொழிலாள வர்க்கத்தின் முக்கிய பங்கு பற்றி ஒரு உயர்ந்த, உண்மையான, அறிவியல் கோட்பாடுகள் எவராலும் உருவாக்கப்படவில்லை. அந்தப் பெருமை மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் என்ற மாபெரும் தத்துவ மேதைகளையே சாரும்.எனவேதான், பாட்டாளி வர்க்கத்துக்கும், அதன் தலைமைச் சக்திகளுக்கும் சமூக மாற்றத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்கவும், சமவுடமைச் சமூகத்தை - சோசலிச சமூகத்தை நிர்மாணிக்கும் பெரும் பணிக்கும் மார்க்சிச அறிவை பெற்றுக்கொள்ளல் என்பது மிகமுக்கிய முன்னிபந்தனையாக உள்ளது. தற்போதுள்ள சமூக ஒழுங்கின் பாதுகாவலர்களாக இருந்து கொண்டிருக்கும் மார்க்சிச எதிர்ப்பாளர்களின் தொடர்ந்த கடுமையான தாக்குதல்கள் எதுவும் அதன் அடித்தளத்தின் ஒரு சிறு துரும்பைக் கூட அசைக்க முடியவில்லை.
இப்படிப்பட்ட மார்க்சியத்தைப் படைத்த கார்ல் மார்க்சின் வாழ்க்கையையும் எங்கெல்ஸ்சின் நட்பையும் ஜென்னியின் தோழமையையும் நாம் தெரிந்து கொள்வோம்.
சுரண்டும் வர்க்கத்துக்கு எதிராக சதி செய்ததாக நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டவர் மார்க்ஸ். இதற்காக பெல்ஜியத்தில் மார்க்ஸ்சும் அவரது மனைவி ஜென்னியும் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து 24மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இப்படி பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் இத்தாலி என்று பலமுறை நாடு கடத்தப்பட்டார். இறுதியில் பிச்சைக்கார "அகதி"யாக 1849இல் இலண்டனில் குடியேறினர்.இலண்டனில் வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலையில், வீட்டை விட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டவர். அவரின் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் அவர்கள் அபகரித்தனர். சின்னஞ்சிறு குழந்தைகளுடன் மார்க்ஸ் குடும்பம் குளிரில் வாடியது. நிரந்தர வருமானமற்ற, அடுத்த நேர உணவுக்கு வழிதெரியாத ஒரு "அகதி"க் குடும்பம், அகதி என்றால் வீடு கொடுக்க மறுக்கும் கொடுமையான சூழலில் வாழ்ந்த மார்க்ஸ்சை, இன்று உலகம் தன் வழிகாட்டியாகக் கொள்கின்றது.
இலண்டனில் வீட்டு வாடகை கொடுக்கவும் முடியாத சூழலில் மார்க்சின் கோட்டும் சூட்டும் அடகுக் கடைக்குப் போனது. இதனால் வெளியில் கூட அவர் செல்ல முடியாத, இயல்பான வாழ்வைக் கூட மார்க்ஸ் இழந்தார்.
அந்தக் குடும்பத்தை பற்றி மார்க்ஸ்சின் மனைவி ஜென்னியின் வார்த்தையில் கூறினால் “என் குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தைக்கு தொட்டில் இல்லை. என் குழந்தை இறக்கும் போது அந்தக் குழந்தைக்கு சவப்பெட்டி கூட வாங்க முடியவில்லை” என்கிறார். வறுமையே தொழுநோயாக, கார்ல் மார்க்ஸ்சின் குழந்தைகளில் சில வறுமைக்கு இரையாகி இறந்தனர். மார்க்சியத்தைப் படைத்த மார்க்ஸ், அதை எழுதும் பேப்பருக்கும் கூடத்தான் போராட வேண்டி இருந்தது.
குழந்தைக்கு ஒரு ரொட்டித் துண்டா, எழுத ஒரு பேப்பரா என்று முடிவெடுக்க வேண்டிய சூழலில் மார்க்ஸ் போராடினார். வசதியான உயர்குடி ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த பணக்காரப் பெண்ணாகப் பிறந்த ஜென்னி, அதை துறந்து மார்க்ஸ்சுடன் இணைந்து தன் வாழ்வில் பேப்பரா ரொட்டியா என்பதற்குக் கூட தீர்வு காண போராடினார்.
இப்படிப்பட்ட ஜென்னி கார்ல் மார்க்ஸ்சை விரும்பி ஏற்கக் காரணமாக இருந்தது 'மனிதன் தனக்காக மட்டுமே வாழ்பவன் அல்லன், அவன் சக மனிதர்களுக்காகவும் பாடுபட வேண்டும். தனக்காகப் பாடுபடுபவன் நல்ல சிந்தனையாளனாக இருக்கலாம் - நல்ல நிர்வாகியாக இருக்கலாம். ஆனால், நல்ல மனிதனாக இருக்க முடியாது." என்ற வரிகள் தான். இப்படித்தான் ஜென்னி வாழ்க்கையும் போராட்டமும் தொடர்ந்தது.
இது பற்றி 1862இல் மார்க்ஸ் ஏங்கல்சுக்கு எழுதிய கடிதத்தில் 'நானும் குழந்தைகளும் செத்து விட்டால் நல்லது என்று என் மனைவி தினமும் சொல்கிறாள். நான் அவளைக் குறைகூற முடியாது. இந்த நிலைமையில் நாங்கள் தாங்கிக் கொள்ள வேண்டிய அவமரியாதைகளும் கடும் துன்பங்களும் பயங்கரங்களும் உண்மையிலேயே வர்ணிக்க முடியாதவை" என்று எழுதுகின்றார்.
தனது மகள் இறந்ததும் தன் தோழருக்கு எழுதிய கடிதத்தில் 'இந்நாட்களில் நான் அனுபவித்த மிகையான துன்பங்களுக்கு இடையேயும் உன் நட்பும் நாம் இவ்வுலகத்திற்கு செய்ய வேண்டிய அறிவார்ந்த பணியும் இருக்கிறது என்ற நம்பிக்கையுமே என்னை நிமிர்த்தி வைத்துள்ளது" என்றார்.
அந்தளவுக்கு பிறருக்காக துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்தவர். ஜென்னி புற்று நோயால் 1881இல் மரணித்தபோது மருத்துவம் செய்யக்கூட பணம் இருக்கவில்லை. 1883இல் மார்க்ஸ்சின் சுவாசப் பையில் கட்டி இருந்தபோது மருத்துவம் செய்யப் பணமின்றி மெல்ல மெல்ல செத்துக் கொண்டிருந்தார்.
தன் இந்த நிலை பற்றி கார்ல் மார்க்ஸ் குமுறி எழுதும் போது '..... நியூயார்க் ட்ரிப்யூன் பத்திரிகை ஏதோ எனக்கு தயவு காட்டுவதாக நினைத்துக் கொண்டு, போனால் போகிறது என்பதுபோல் எனக்கு சன்மானம் தருவதும், அந்த நிலைமை எனக்கு ஏற்பட்டிருப்பதைக் கண்டும் உண்மையில் எனக்கு வெறுப்பாய் இருக்கிறது. உலர்ந்த எலும்புகளை உடைத்து மாவாக அரைத்து அதிலிருந்து சாறு பிழிவதும், அரசியல் சம்பந்தமாகக் கட்டுரைகள் எழுதுவதும் ஒன்றுதான். நான் ஒரு கழுதையாய் இருந்திருக்கலாம். இந்தப் பத்திரிகை நிர்வாகிகளுக்கு, அவர்கள் கொடுத்த பணத்திற்கு அதிகமாகவே கட்டுரைகள் எழுதிக் கொடுத்திருக்கிறேன் என்பதை மட்டும் என்னால் உணரமுடிகிறது..." என்று தன் ஒருநேர ரொட்டித் துண்டுக்கான வருமானத்தைப் பெற அவர் பட்டபாட்டை வெளிப்படுத்துகின்றார்.
எதற்காக இந்தத் துயரத்தை தாங்கிக் கொள்கின்றேன் என்பதைக் குறித்த மார்க்ஸ், 'நான் அந்தக் காலம் முழுவதும் மரணத்தின் விளிம்பில் இருந்தேன். எனவே உடல் நலத்துடன் இந்த ஒவ்வொரு நிமிடத்தையும் எனது நூலை எழுதி முடிப்பதற்காகப் பயன்படுத்த வேண்டியிருந்தது. அதற்காக நான் எனது உடல்நலம், சந்தோசம் மற்றும் குடும்பத்தைத் தியாகம் செய்ய வேண்டியிருந்தது. நான் காரியவாதிகளைப் பற்றியும் அவர்களது விவேகம் பற்றியும் சிரித்துக் கொள்கிறேன். ஈவிரக்கம் அற்றவர்களுக்கே மனித குலத்தின் துயரங்கள் குறித்துக் கவலைப்படாமல், தம் சொந்த விசயங்களைக் கவனித்துக் கொண்டிருக்க முடியும். ஆனால் எனது மூலதன நூலை குறைந்த பட்சம் கைப்பிரதி வடிவத்தினாலாவது முழுமையாக உருவாக்காமல் சாவேனானால், நான் என்னை மெய்யாகவே உலகம் தெரியாதவன் என்று எண்ணிக் கொள்வேன்" என்றார்.
மார்க்சியம் இப்படித்தான் பிறந்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை குறித்து மார்க்ஸ் போராட்டம் மார்க்சியமானது. மார்க்ஸ்சின் தியாகங்கள் அர்ப்பணிப்புகள் மூலம் உருவானதே மார்க்சியம். இதில் ஏங்கெல்ஸின் பங்களிப்பு இன்றி மார்க்ஸியம் உருவாகவில்லை. மார்க்ஸ்சின் ஒவ்வொரு நாடி நரம்புடனும் அது பிணைக்கப்பட்டு இருந்தது.
இது பற்றி லெனின் 'தமது முன்னோரிடையே காணப்பட்ட எந்த நெஞ்சுருக்கும் கதையையும் மீறும் உறவு கொண்ட அறிஞர்களும் போராளிகளுமான இவ்விருவராலேயே தமது அறிவியல் உருவாக்கப்பட்டது என பாட்டாளி வர்க்கம் சொல்லக்கூடும்" என்றார். 'எங்கெல்ஸ் எப்போதுமே தன்னை இரண்டாம் இடத்திற்கு ஒதுக்கிக் கொள்பவராகவும் தன்னலம் அற்றவராகவுமே காணப்பட்டார்..." என்று அவரின் பங்களிப்பை லெனின் எடுத்துக் காட்டுகின்றார்.
அப்படிப்பட்ட ஏங்கெல்ஸ், மார்க்ஸின் மரண நிகழ்வில் 'நம் கட்சியின் மிகப் பெரும் அறிஞர் தம் சிந்தனையை நிறுத்திவிட்டார். நானறிந்த அளவில், மிகவும் பலமான இதயம் தன் துடிப்பை நிறுத்திவிட்டது.., யுக யுகாந்திரங்களுக்கு அவர் பெயர் நிலைத்து நீடித்து நிற்கும். அவரது மாபெரும் பணியும் நிலைத்து நிற்கும் என்றார்.lஅதுதான் உண்மை. அந்த மார்க்சியத்தைக் கற்றுக் கொண்டு போராட முனைவோம்.
தொடரும்