Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் 1857 பிரிட்டிஷ் நாகரிகக் கோமான்களின் காட்டுமிராண்டித்தனம்!

1857 பிரிட்டிஷ் நாகரிகக் கோமான்களின் காட்டுமிராண்டித்தனம்!

  • PDF

02_2007_puja.jpg

இந்தியாவில் எழுச்சி கொண்ட சிப்பாய்கள் செய்த அட்டூழியங்கள் உண்மையிலேயே திகைக்க வைக்கின்றன; பயங்கரமாக இருக்கின்றன; சொற்களால் வருணிக்க முடியாத அளவு கொடூரமாக இருக்கின்றன. இப்படிப்பட்ட சம்பவங்களை ஆயுதந்தாங்கிய எழுச்சிப் போர்களில், தேசிய எழுச்சிப் போர்களில், இனமோதல்களில், எல்லாவற்றையும் விட மதம் சார்ந்த போர்களில்தான் பார்க்க முடியும்.

 

சுருக்கமாக விவரிப்பதானால், இப்போது இந்தியச் சிப்பாய்களின் நடவடிக்கைகளால் அதிர்ச்சியுற்றிருக்கிற கவுரவமிக்க இங்கிலாந்துதான் மேன்மை தங்கிய பிரிட்டிஷ் மன்னரின் குதிரைப்படை வீரர்களை பிரெஞ்சு மன்னரின் படை தாக்கியதையும், ஃபிரான்சின் வேற்று மதத்தவர்களை ஸ்பானிய கொரில்லாக்கள் தாக்கியதையும், எல்லாவற்றையும் விட பிரெஞ்சுப் பாட்டாளிகளின் அருமைப் புதல்விகளும், புதல்வர்களும் தாக்கப்பட்டதையும் கைகொட்டி ரசித்துக் கொண்டாடியது.

 

இந்தியச் சிப்பாய்களின் செயல்கள் எவ்வளவு வெறுக்கத்தக்கதாக இருந்தாலும், அவை அத்தனையுமே இங்கிலாந்து இந்தியா மீது நடத்திய அட்டூழியங்களின் செறிவான, ஒட்டு மொத்தமான எதிர்வினைதான் கீழைச் சாம்ராச்சியத்தை நிறுவிய கட்டத்தில் மட்டுமல்ல, நிலையான ஆட்சி நிலை நிறுத்தப்பட்ட கடந்த பத்தாண்டுகளில் நடந்ததும் அப்படிப்பட்டதே.

 

அந்த ஆட்சியை விவரிப்பதானால், சித்திரவதையே அதன் நிதிக் கொள்கையின் திரண்ட நிறுவனமாக இருந்தது. மனிதகுல வரலாற்றில் பழி வாங்குதல் என்ற ஒன்றுண்டு; வரலாற்று வெஞ்சினத்தின் விதி ஒன்றுண்டு அதன் கருவியை, அடக்கப்பட்டவர்கள் அல்ல, அடக்குபவரேதான் உருவாக்குகிறார்கள்.

 

பிரெஞ்சுப் பேரரசுக்கு முதலடி விழுந்தது விவசாயிகளின் கரங்களிலிருந்தல்ல; பிரபுக்குலத்திலிருந்துதான். பிரிட்டிஷாரின் சித்திரவதைக்கும் அவமானத்துக்கும் ஆளாகி அம்மணமாக நிறுத்தப்பட்ட விவசாயிகளிலிருந்து இந்திய எழுச்சி தொடங்கவில்லை; அதே பிரிட்டிஷாரால் உடை, உணவு, சலுகைகள் ஊட்டப்பட்ட சிப்பாய்களிடமிருந்துதான் எழுச்சி தொடங்கியது.

 

சிப்பாய்களின் அட்டூழியங்களுக்கு ஒப்பீடுதேட சில லண்டன் ஏடுகள் பாசாங்கு செய்து எழுதுவதுபோல நாம் மத்திய கால காட்டுமிராண்டித்தனத்துக்கோ, ஏன், சமகால இங்கிலாந்து வரலாற்றுக்கோ போய்த் தேடவேண்டாம்; நேற்று நடந்ததுபோல் தோன்றும் அந்த முதல் சீனப்போரின் சம்பவங்களை ஆராய்ந்தால் போதும்1.

 

ஆங்கிலேயச் சிப்பாய்கள் வேடிக்கைக்காகச் செய்த அருவெறுக்கத்தக்க செயல்களைப் பாருங்கள் போதும்: எந்த ஒரு மதவெறி இயக்கமும் அதற்குப் புனிதப்பட்டம் கொடுக்கவில்லை; ஒரு இனம் அடக்கியதால் மற்றொரு இனம் கசப்போடும் வெறுப்போடும் அதற்கெதிராக எழுந்து செய்த பதில் வெறியாட்டமும் அல்ல அது; எதிரி வீரதீரமான கடும் எதிர்ப்பைக் காட்டியதால் தூண்டப்பட்டதுமல்ல.

அங்கு நடந்ததென்ன? பெண்களின் கற்பு சூறையாடப்பட்டது; பச்சிளங் குழந்தைகள் துடிக்கத் துடிக்க வெட்டி வீசப்பட்டன; இண்டு இடுக்கு விடாமல் கிராமம் கிராமமாகக் கொளுத்திச் சாம்பலாக்கப்பட்டன. இவை அத்தனையும் அவர்களுக்குச் சிறுபிள்ளை விளையாட்டு. கொடுமைகள் பற்றிய இந்தப் பதிவுகள் சீனர்களுடையதல்ல, அத்தனையும் பிரிட்டிஷ் அதிகாரிகளின் ஆவணங்களே!

 

இத்தனைப் பெரிய அழிவுக்கும் எல்லா வன்முறைகளுக்கும் காரணம் இந்தியச் சிப்பாய்கள்தான் என்றும், ஆங்கிலேயத் தரப்பில் அமுதமாய்ச் சுரந்தது பேரன்பென்றும் சொன்னால் அது பெரிய தவறாகி விடும்; அப்புறம் அப்பதிவை எப்போதுமே சரி செய்ய முடியாது போய்விடும். பிரிட்டிஷ் அதிகாரிகள் தான் கடிதங்கள் மூலம் வெறுப்பைக் கக்குகிறார்கள்.

 

ஓர் அதிகாரி பெஷாவரிலிருந்து விரிவாக எழுதுகிறான் — 55வது காலாப்படைமீது தாக்குதல் நடத்தச் சொல்லி 10வது குதிரைப் படைக்கு உத்தரவு போட்டபோது, 10ஆம் படை மறுத்துவிட்டதால் அப்படையிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்தானாம் அவன். அதுமட்டுமல்ல, ""அவர்களின் கோட்டுக்களையும் கழற்றினோம், பூட்களையும் பிடுங்கினோம், ஒவ்வொருவருக்கும் அபராதம் போட்டோம், பிறகு அவர்களை வெறுங்கால்களோடு ஆற்றங்கரை வரை இழுத்துச் சென்று படகுகளில் இறக்கி சிந்து நதியின் காட்டாற்று வேகத்தில் தள்ளிவிட்டோம்'' என்றும் பொங்கி வழியும் சந்தோசத்தோடு விவரிக்கிறான். ஒவ்வொருத்தனும் வெள்ளத்தில் மூழ்கிச் செத்திருப்பான் என்ற மகிழ்ச்சி அவன் எழுத்துக்களில் தெரிகிறது.

 

இன்னொருத்தன் எழுதுகிறான் — பெஷாவர் மக்களில் சிலர் தங்கள் குடும்பத் திருமண விழாவை பட்டாசு வெடித்துச் சந்தோசமாகக் கொண்டாடினார்களாம். இரவு நேரத்தில் அது அவர்களைப் பயமுறுத்திவிட்டதாம். அடுத்தநாள் காலை அவர்களை இழுத்துச் சென்று மரத்தில் கட்டி வைத்தார்கள்; அவர்கள் செயலுக்குத் தண்டனையாக ""அவர்கள் என்றுமே மறக்க முடியாதபடி சவுக்கடிகள் கொடுக்கப்பட்டன'' என்று எழுதுகிறான்.

 

ராவல்பிண்டியிலிருந்து உள்ளூர்த் தலைவர்கள் மூன்று பேர் சேர்ந்து சதி செய்வதாகத் தகவல் வர அந்தக் கூட்டத்துக்கு அரசு உளவாளியை அனுப்பி செய்தியை அறிந்து கொண்டான் சர் ஜான் லாரன்ஸ். உளவாளியின் அறிக்கைக்கு சர் ஜான் பதில் அனுப்பினான்: ""அவர்களை உடனே தூக்கில் போடுங்கள்'' அந்தத் தலைவர்கள் (விசாரணையே இல்லாமல்) தூக்கில் போடப்பட்டார்கள்.

 

அலகாபாத் அரசு அதிகாரி எழுதுகிறான்: ""எவர் ஒருவருடைய வாழ்வும் சாவும் எங்கள் கையில்தான். ஒரு பயலைக் கூட நான் விட்டுவைக்கவில்லை'' அதே இடத்திலிருந்து இன்னொரு அதிகாரி எழுதுகிறான்: ""சிப்பாய்கள் அல்லாத பொதுமக்களில் ஒவ்வொருநாளும் பத்துப் பதினைந்து பேரையாவது தூக்கில் போட்டு விடுகிறோம். போடாமல் ஒரே ஒருநாள் கூடக் கழிந்ததில்லை.'' இன்னொரு அதிகாரி மகிழ்ச்சி பொங்க எழுதுகிறான்: ""ஹோல்ம்ஸ் அவர்களை எல்லாம் "செங்கல்' கட்டித் தொங்கவிடுவது போல எண்ணி எண்ணித் தூக்கில் போடுகிறான்.''

 

இன்னொருவன், கிராமத்து மக்களை ஒரே நேரத்தில் தூக்கில் போட்டதை இப்படி உருவகப்படுத்தி எழுதினான்: ""பிறகுதான் எங்கள் கொண்டாட்டம் ஆரம்பித்தது.'' மூன்றாவது ஆள் எழுதினான்: ""விசாரணையை நாங்கள் குதிரைமேல் இருந்தவாறே முடித்துவிட்டோம். வழியில் எங்கள் எதிர்ப்பட்ட ஒவ்வொரு கருப்பனையும் தூக்கில் போட்டோம், அல்லது சுட்டுத் தள்ளினோம்.''

 

பனாரசிலிருந்து எங்களுக்குக் கிடைத்த தகவல்படி, உள்ளூர் மக்களுக்கு ஆதரவாக இருந்த காரணத்துக்காகவே முப்பது ஜமீந்தார்கள் தூக்கில் போடப்பட்டார்கள்; அதே காரணத்துக்காக, பல கிராமங்கள் முழுக்க எரித்து அழிக்கப்பட்டன.2 லண்டன் டைம்ஸில் பனாரசிலிருந்து ஓர் அதிகாரி எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது. அவர் சொல்கிறார்: ""உள்ளூர் மக்களோடு மோதிய ஐரோப்பியப் படைகள் கொலைகாரப் படைகளாகவே மாறிவிட்டன.'' 3

ஒன்றை நீங்கள் மறந்துவிடக் கூடாது — ஆங்கிலேயரின் வன்முறைகளையெல்லாம் போர்க்கால வீரச் செயல்களாக, எளிமையாகவும் வேகமாகவும் எழுதிச் செல்லும் அவர்கள் அருவெறுப்பு மிகுந்த உள்விவகாரங்களை மறந்தும் கூட எழுதவில்லை; அதேசமயம், உள்ளூர் மக்களின் கோபத்தை விவரித்தபோது, அவை அதிர்ச்சி ஊட்டுபவைதான் என்றாலும் கூட, அவற்றை வேண்டுமென்றே அளவுக்கதிகமாகப் பெரிசுபடுத்தி எழுதினார்கள்.

 

எடுத்துக்காட்டாக, ""தி டைம்ஸ்'' நாளேட்டில் நுணுக்கமான விவரங்களாக முதலில் வெளியாகி, பிறகு லண்டன் செய்தியாளரிடையே வலம் வந்த "டெல்லி மீரட் அட்டூழியங்கள்' பற்றித்தான் சொல்கிறேன்,அந்தக் கட்டுக் கதைகள் முதலில் யாரால் தொடங்கப்பட்டன? சம்பவ இடத்திலிருந்து ஒரு ஆயிரம் மைல் தொலைவுக்கப்பால் மைசூர் அருகே பெங்களூரில் உள்ள ஒரு கோழைக் கிறித்தவப் பாதிரியிடமிருந்துதான் முதலில் அது செய்தியாக வந்தது.

 

டெல்லியில் நடந்த உண்மை நடப்புகளை வைத்துப் பார்க்கும்போது, ஓர் இந்துச் சிப்பாயின் கட்டற்ற கற்பனையைவிட, ஒரு ஆங்கிலேயப் பாதிரியின் மூளை மிகப் பயங்கரமான கொடூரங்களை உற்பத்தி செய்திருப்பது தெரிகிறது. மான்செஸ்டர் அமைதி நிறுவனச் செயலர் சீனாவின் கேன்டன் குடியிருப்புகள் மீது வீசிய பழுக்கச் சிவந்த குண்டுகளைவிட, ஒரு குகையில் அடைக்கப்பட்ட அராபியரை ஒரு பிரெஞ்சுத் தளபதி தீயிட்டு வறுத்ததைவிட, போர்க்களத்திலேயே ஒப்புக்கு விசாரணை நடத்தி வார்க்கச்சையில் தொங்கவிட்டு பிரிட்டிஷ் படைவீரரை அவர் நாட்டு அதிகாரிகளே உயிரோடு தோலுரிப்பதைவிட, பிரிட்டன் சீர்திருத்தச் சிறைகளில் இரக்கப்பட்டுக் கொடுக்கிற கருவித் தண்டனைகளைவிட மூக்கையும் முலைகளையும் அறுத்த சிப்பாய்களின் கோரச் செயல்கள் அவர்களுக்கு அருவெறுப்பு மிக்கதாக இருக்கிறது.

 

மற்ற எல்லா விசயங்களைப்போலவே காலம், இடத்துக்குத் தகுந்தாற்போல கொடூரத்தின் பாணிகள் மாறிக் கொண்டுதான் இருக்கின்றன. பல திறப்பட்ட பண்புகள் நிறைந்த சீசர் ஆயிரக்கணக்கான காலிக் (Gallic) போர்வீரர்களின் வலது கரங்களை வெட்டி வீசி எறியத் தான் உத்தரவிட்டதை விலாவாரியாக விளக்குகிறான்; ஆனால், நெப்போலியன் இப்படிச் செய்ய மனம் கூசியிருப்பான் குடியரசுவாதிகள் என தன்படையில்தான் சந்தேகித்தவர்களை கண் காணாத புனித டொமிங்கோவுக்குக் கப்பலேற்றி அனுப்பினான் அவன்; அங்கே பிளேக் போன்ற கொடிய நோய்கள் பீடித்து அப்படியே அவர்கள் செத்துப் போவதைத்தான் அவன் விரும்பினான்.

 

சிப்பாய்கள் செய்த மோசமான மூக்கறுப்பும் பிறவும் கிறித்தவ சமயஞ்சார்ந்த பண்டைய கீழை ரோம சாம்ராச்சியப் பழக்கங்களையோ, அல்லது, ஐந்தாம் சார்லஸ் மன்னனின் குற்றவியல் சட்டங்களில் விதிக்கப்பட்ட தண்டனைகளையோ, அல்லது, ராஜத்துரோகத்துக்கு ஆங்கிலேயர் வழங்கிய தண்டனைகளையோதான் நினைவூட்டுகின்றன; அவை இன்றளவும் ஆங்கிலேய நீதிமான் பிளாக்ஸ்டோனால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

தம்மைத்தாமே வருத்திக் கொள்ளும் கலையையே ஒரு மதக் கோட்பாடாகக் கொண்டிருக்கும் இந்துக்கள் தங்கள் எதிரிகளை இவ்வாறு சித்திரவதை செய்வதை மிகவும் இயல்பாகவே கருதியிருக்கக் கூடும். ஆங்கிலேயர்களுக்கும் கூட இது இயல்பாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், ""தேர்ச்சக்கரத்தில் தலைகொடுத்துச் செத்தால் நேரே சொர்க்கம் போகலாம்'' என்ற இந்து மதத்தின் கொடூரமான ரத்தப்பலிச் சடங்குக்குத் துணைநின்று பாதுகாப்பு கொடுத்து, அந்தத் திருவிழாவிலிருந்து வரியும் வசூலித்தவர்கள் அல்லவா இவர்கள்!

 

"லண்டன் டைம்ஸ்' நாளேடு ரொம்பவும் அலட்டிக் கொள்கிறது... அதற்கு என்ன வேண்டுமாம்? கணக்குகளை விரிவாக எழுதி, அரசாங்கத்தை எப்படியாவது மூடி மறைத்துக் காப்பாற்ற வேண்டும், அவ்வளவுதானே? படை எடுத்து வென்றவர் எக்காளம் எடுத்து ஊதிய உடனே "ஜெரிச்சோ' சுவர்கள் பொடிப் பொடியாக நொறுங்கி விழுகிறதே பைபிளில், அதுபோல டெல்லி வீழ்ந்துவிடவில்லை; அதனால்தான் ஆங்கிலேய அதிகாரி ஜான்புல் "பழிதீர்ப்பேன்' என்று வாய்கிழியக் கத்தினான். அவனது அரசாங்கம்தானே முன் செய்த அத்தனைக் கொடுஞ்செயலுக்கெல்லாம் காரணம்? அதுதானே இப்போது பிரம்மாண்டமாக வளர்ந்து பேரழிவாய் வெடித்திருக்கிறது? அவனும் அவனைச் சுற்றியிருப்பவரும் கத்தித் தீர்த்துவிட்டால் காரணம் மறந்துவிடுமா? இல்லாமல் போய்விடுமா?

 

தமிழில்: புதூர் இராசவேல்

 

அடிக்குறிப்புகள்:


1 கார்ல் மார்க்ஸ் இங்கே குறிப்பிடுவது சீனாமீது பிரிட்டன் நடத்திய வெறிகொண்ட போர்; இந்தப்போர் (18391842) முதல் அபினிப்போர் என்று அறியப்படும். அந்த ஆண்டுகளில்தான் சீனா அரைக்காலனிய நிலைக்கு கீழே இறக்கித் தள்ளப்பட்டது.

 

 

2 பிரிட்டிஷ் கம்பெனியின் ஊழியர் போலாநாத் சந்திரா என்பவர் பிரிட்டிஷ் படைகள் வாரணாசியில் செய்த அக்கிரமங்களை விவரிக்கும்போது, பனாரசில் மட்டும் 6000 பேர் தூக்கில் போடப்பட்டதாகச் சொல்கிறார். ஆதாரம்: ""ஓர் இந்துவின் பயணங்கள்'', தொகுப்பு, டால்பாய் வீலர். இப்பகுதி கேயே என்ற பிரிட்டிஷ் வரலாற்றறிஞரின் "சிப்பாய்ப் போரின் வரலாறு' பகுதி 2 (லண்டன், 1881), பக். 66869ல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

3 ஆர்.எச். பார்ட்ரம், 13.7.1857, தி டைம்ஸ், எண் 22775, 2.9.1857, மார்க்ஸ், ஏங்கெல்ஸ், திரட்டப்பட்ட படைப்புகள், தொகுதி 15, பக். 355, அடிக்குறிப்பு.

Last Updated on Saturday, 26 April 2008 08:37