தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் இழுத்தடிக்கும் தந்திரம்
அவ்வாறான ஒரு காலகட்டத்தில் கியூ பொலிஸ் அதிகாரியின் அலுவலகத்தில் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனைச் சந்திக்க முடிந்தது. எம்மை மகேஸ்வரனிடம் அறிமுகப்படுத்தி எமது கஸ்டமான நிலைமைகளைச் சொல்லி ஏதாவது பணவசதி செய்ய முடியுமா என்று கேட்டோம். அவரோ தன்னிடம் இருந்த பணத்தினை இந்திய அதிகாரிகள் பறித்து விட்டனர் என்றும் ஒரு நாளைக்கு இவ்வளவு என்று தான் திருப்பித் தருகிறார்கள் என்றும் தாம் யோசித்து முடிவு சொல்வதாகவும் கூறினார்.
தம்பாப்பிள்ளை மகேஸ்வரனிடம் காத்தான்குடி வங்கிப்பணம் நிறைய இருந்தபோது அதில் ஒரு பகுதியினை ரெலோ 1984 இல் கொள்ளை அடித்திருந்தது. அந்தக் கொள்ளைக்கு ரெலோ கூறிய காரணம், அந்தப் பணம் சிறிலங்கா அரசினால் திரும்பவும் மீட்கப்படப் போவதாகவும் மகேஸ்வரனின் இயக்கத்தால் அந்தப் பணத்தினைப் பாதுகாக்க முடியாது என்பதுமாகும். அதனால் அவர்கள் ரெலோ மீது ஆத்திரத்துடன் இருந்தனர். அதைவிட அது மனோ மாஸ்ரரின் ஒப்புதலின் அடிப்படையில் நடந்ததாகவும் நாம் மனோ மாஸ்ரர் சார்ந்த குழுவினர் என்பதால் உதவி செய்ய முடியாது எனவும் கூறினார். பின்னர் எம்முடன் பெண்கள் இருப்பதால் தாம் மீண்டும் யோசித்து முடிவு சொல்வதாகக் கூறினார். எனவே அடிக்கடி தம்பாப்பிள்ளையைச் சந்திப்பதும் அவர்களின் முடிவுக்காகக் காத்திருப்பதும் எமது வேலையாகி விட்டது.
அவ்வாறு ஒருமுறை தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் தன் வீட்டிற்கு எம்மை வருமாறும் தாம் முடிவு சொல்வதாகவும் சொன்னார். எம்மைப் பொறுத்தவரையில் நம்பிக்கை இல்லாவிடினும் நாம் போகாவிட்டால் பணம் கொண்டு வந்திருந்தோம் நீங்கள் வராதபடியால் போய் விட்டோம் எனவும் சொல்வார்கள் என்றபடியால் நான் அவர்களின் வீட்டிற்குச் சென்றேன். நான் வருவதாக அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நான் வருவதைக் கண்ட அவர்கள் (அதுவரையும் வெளியில் நின்று உதைபந்து விளையாடியவர்கள்) உள்ளே போய் கைகால் கழுவி விட்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்கள்.
நான் வீட்டினுள் வந்ததும் என்னை வரவேற்று தேநீர் தயாரிக்க ஒருவர் போய் விட்டார். எனவே அதுவரையிலும் அவர் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தினை எடுத்துப் பார்த்தேன். அது துப்பறியும் சித்திரக் கதையாக இருந்தது. நான் புத்தகத்தினைப் புரட்டிப் பார்க்கும் போது அந்த வீட்டின் பொறுப்பாளர் வந்து சிரித்து நிலைமைகளைச் சமாளித்தார். அவர்களுக்கு நாம் ஏதோ அரசியல் புத்தகங்களைப் படித்துக் குடித்தவர்கள் போன்ற மாயை தம்பாப்பிள்ளையினால் கொடுக்கப்பட்டிருந்தது. நானும் சிரித்து விட்டு தம்பாப்பிள்ளையை எதிர்பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி விட்டேன்.
வட அமெரிக்க டொக்ரர்களின் மனிதாபிமானம்
அந்த 1985 ஜனவரி காலகட்டத்தில் வட அமெரிக்காவில் இருந்து சில டொக்ரர்கள் இயக்கங்களுக்குப் பணம் கொடுப்பதற்காகச் சென்னை வந்திருந்தார்கள். அவர்களிடம் எம்மைப் பணம் கேட்கச் சொல்லியும் அவர்களைச் சந்திப்பதற்கு எமக்கு நேரம் எடுத்துத் தருவதாகவும் ஈரோஸ் பாலகுமார் எம்மிடம் கூறினார். அவர்கள் இயக்கத்திற்குத்தான் பணம் கொடுப்பதற்கு வந்தவர்கள் என்றாலும் இயக்கத்தை விட்டுப் பிரிந்த எமக்கும் விசேஷமாகப் பெண்கள் எம்மிடம் இருப்பதால் அவர்கள் உதவுவார்கள் என்றும் எமக்கு நம்பிக்கை ஊட்டிய பாலகுமாரின் விருப்பத்தின்படி நானும் ராஜனும் அவர்களைச் சந்திக்கச் சென்றோம்.
எனக்கிருந்த குறைந்தபட்ச நம்பிக்கையிலும் பத்து வீதமாவது மற்றத் தோழரிடம் இருக்கவில்லை. எனினும் நாம் சந்திக்காததால் தான் எமக்குப் பணம் கிடைக்கவில்லை என்ற நிலையைத் தோற்றுவிக்காமல் அவர்களைச் சந்திக்கச் சென்றோம். அங்கிருந்த டொக்ரர்களின் அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது. நாம் எவ்வாறு அவர்களைச் சந்திக்க அனுமதி பெற்றோம் என்பதிலிருந்து, எவ்வளவு விரைவில் எம்மை வெளியேற்றி விடலாம் என்ற முயற்சியாகவுமே அது இருந்தது. அதைப் புரிந்து கொண்ட நாமும் எவ்வாறு எம்மை வெளியேற்றப் போகிறார்கள் என்று பார்ப்போமே என்ற முறையில் இருந்தோம்.
நாமும் பணம் பெறாமல் போகப்போவதில்லை என்ற நிலையில் இருந்தபோது அவர்களின் இன்னொரு பக்கம் எமக்கு அறிமுகமாகியது. ஒரு டொக்ரர் இந்தியப் பணம் நூறு ரூபாயை எடுத்து இங்கு வந்த உங்களின் போக்குவரத்துச் செலவுகளுக்கு வைத்திருங்கள் என்று பிச்சை போட ஆரம்பித்தார். எம்மையும் எமது போராட்டத்தினையும் கொச்சைப்படுத்தும் அந்த நடவடிக்கையினால் ஆத்திரமடைந்த எமக்கு என்னுடன் வந்த தோழர் அந்த நூறு ரூபாயை வாங்கிக் கொண்டு வெளியேறியது எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது.
இரு நிமிடங்கள் எதுவும் பேசாதவாறு வெளியேறிய என்னிடமிருந்த ஐம்பது ரூபாயை எடுத்துக் கொண்ட மற்றத் தோழர் அவர்களிடம் திரும்பிப் போனார். நூற்றைம்பது ரூபாயை அவர்களிடம் கொடுத்து, நாம் இங்கிருக்கின்றோம் எம்முடைய போக்குவரத்துச் செலவுகளை விட அமெரிக்காவில் இருந்து வந்த உங்களுக்கு நிறையச் செலவு இருக்கும் என்று நூற்றைம்பது ரூபாவை அவர்களிடம் கொடுத்து விட்டு வந்து விட்டார்.
நாம் திரும்பி வரும்போது நமக்கிடையில் எந்தப் பேச்சுமே இருக்கவில்லை. சைக்கிள் மட்டும் வேகமாகச் சென்றது. அன்றிரவு முழுவதும் எமது நாளாந்தப் பொருளாதாரப் பிரச்சினைகளைச் சந்திக்கும் போது அவர்களின் நூறு ரூபாவை எடுக்காமல் போனது மட்டுமல்லாமல் எம்மிடமிருந்த ஐம்பது ரூபாவை இழந்ததையும் சிரித்துக் கொண்டே உணர ஆரம்பித்தோம்.
கோவை மகேசனின் வீரம்
அதே காலகட்டத்தில் தான் சுதந்திரன் ஆசிரியரான கோவை மகேசனைத் தற்செயலாகச் சென்னையில் சந்தித்தோம். எனக்கும் மற்றத் தோழருக்கும் ஏற்கெனவே அறிமுகமானவர் என்பதால் எம்மிடம் மனம் விட்டுப் பேசினார். புலிகளின் வீரவேங்கைப் பத்திரிகையில் வேலை செய்து கொண்டிருந்த அவரை எவ்வாறு புலிகளுடன் சேர்ந்து வேலை செய்ய முடிகின்றது என்று கேட்டபோது அவரது பதில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை. அதே கோவை மகேசன் சுதந்திரன் பத்திரிகையில் இருந்தபோது பாண்டிபஜாரில் நடைபெற்ற செய்திகளை உமா-பிரபா மோதல் என்று எழுதியதற்காக உமாவின் பெயரை முதலில் போட்டதற்காக பிரபாகரனால் மிரட்டப்பட்டவர். அதைக் கூறியவரும் கோவை மகேசன் தான். அதைத் தெரிந்த எமக்கு அவர் புலிகளுக்கு ஆதரவாக வேலை செய்வதை எங்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
விடுதலைப் போராட்ட வரலாறு ஆவணப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம்
எனது குறுகியகால இயக்க வரலாற்றில் பலவகைப்பட்ட ஏமாற்றங்களும் பல தோழர்களின் இழப்பும் எனக்கு ஏற்பட்டன. என்னைப் பாதுகாக்கப்பட வேண்டிய நிலை பலவேளைகளில் இருந்தன. இக்கட்டான பொருளாதார நிலையில் பலமுறை இருந்தேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் நான் எடுத்துக் கொண்ட முடிவுகள் சரியா பிழையாக என்ற வினாக்கள் என்னிடம் இருந்தன. நான் எடுத்துக் கொண்ட பாதைகள் சரியா பிழையா, என்ற கேள்வியும் இருந்தன. என்னால் பல உயிர்களைக் காப்பாற்ற முடியாமல் போய் விட்டது என்பதும் உண்மை. சில உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறேன் என்பதும் உண்மை. இருப்பினும் அதுவரை நான் எடுத்த முடிவுகள் எனக்குச் சரியானதாகவே படுகின்றது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்;கென என்னைப் போன்ற பலர் தம் உயிரை அர்ப்பணித்திருக்கின்றனர். சிலர் வித்தியாசமான போராட்டத்தினையும் நடத்தியுள்ளனர். இந்தியாவின் விருப்பத்தின் படியும் கட்டளைக்கு இணங்கவும் செயற்பட்ட செயற்திறனற்ற ரெலோவில் இருந்த நான் இன்று உயிரோடு இருப்பதனால் இதை எழுதக் கூடியதாக உள்ளது. நான் ரெலோவில் இருந்து வெளியேறிய அனைத்து பெண்போராளிகளும் தங்கள் தங்கள் விருப்புக்கு ஏற்ப உயிர் பாதுகாப்பாக நாட்டுக்கு போகும் வரை (இதில் புலிகளில் இணைய விரும்பிய 6 பெண் போராளிகளை அவர்களின் விருப்பபடி புலிகளின் திருவான்மியூரில் அன்ரன் அடல் பாலசிங்கம் இருந்த வீட்டிலும்) அவர்களின் பாதுகாப்புக்கு துணை நின்று 1985 செப்டெம்பர் இந்தியாவைவிட்டு வெளியேறி கனடாவில் வசிக்கிறேன்.
புளொட்டில் இருந்திருந்தால் புதியதோர் உலகம் என்ற நாவலில் நான் ஒரு கதா பாத்திரமாக்கப்பட்டிருக்கலாம். புலிகளில் இருந்திருந்தால் மாவீரர் என்றோ துரோகிகள் என்றோ ஏதாவது ஒரு பட்டத்தில் நான் அடக்கப்பட்டிருக்கலாம். அந்த விடயத்தில் நான் வாசிப்பதற்கும் சிந்திப்பதற்கும் வசதிகள் செய்த ரெலோவிற்கு எனது நன்றிகள். எமது மண்ணைப் பறித்து தமிழர்களைக் கொன்று குவித்து வரும் சிங்கள இனவெறிப் போராட்டத்தில் பங்குபற்றிய பலரைப் போராட உரிமை இல்லை என எமக்கு நாடே இல்லை எனவும் விரட்டி அடித்துள்ளனர்.
இதை எழுதுவதன் நோக்கம் என்னைப் போன்ற பலரும் தமக்குத் தெரிந்த தம்முடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை தம் மனதுடன் சாகவிடாமல் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே. வரலாற்று ஆவணமாகப் பதிவு செய்யவும் பட வேண்டும் என்பதற்காகவே. நான் கூறிய இந்த விடயங்கள் பெரியளவில் எமது போராட்ட வளர்ச்சியில் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தாவிட்டாலும் எமது போராட்ட வரலாற்றில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களாகும். இவை இன்று மறக்கப்பட்டும் மறுக்கப்;பட்டும் எல்லாமே திரிபுபடுத்தப்பட்டும் புலிகளின் வரலாறு மட்டுமே தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறாக எம்மீது திணிக்கப்பட்டும் வந்திருக்கின்றது.
உதாரணமாக, அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் போன்றவர்கள் துரோகிகளாகவும் அவர்களின் பங்களிப்பில் ஒரு வீதத்தினையும் செய்யாத குமார் பொன்னம்பலம் புலிகளுக்குத் துதிபாடியதற்காக மட்டுமே மாமனிதராகவும் புதிய வரலாறு எழுதப்பட்டு வருகின்றது. அவர்களுக்கே இந்த நிலைமை என்றால் ஆயுதம் தூக்கிப் போராடிய அன்றைய இளைஞர் பேரவை உறுப்பினரிலிருந்து இன்று பல விடுதலை இயக்கங்களில் தம்மை அர்ப்பணித்து சிங்கள இனவாத அரச இயந்திரங்களுக்கு எதிராக எதிர்த்துப் போராடி உயிர்நீத்த ஆயிரக்கணக்கான போராளிகளின் நிலைமை என்னவாகும்? அதைவிட தமது தலைமைகளைக் காப்பாற்றுவதற்காக பல இயக்கங்களின் தலைமைகள் தமக்குள் நடத்திய படுகொலைகள் புலிகளினால் மற்ற இயக்களின் மீது நடத்தப்பட்ட வெறித்தனமான தாக்குதலில் உயிர்நீத்த போராளிகள் என்று பலரும் மறக்கப்பட்டு வருகின்றனர். எமது விடுதலைப் போராட்டத்தில் கறைபட்ட சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன. அவை வரலாற்றுப் பதிவுகளாக எழுதப்பட வேண்டும். குறைந்தளவு எந்தளவு போராளிகள் உயிர் நீத்தார்கள் என்று கூடத் தெரியாத நிலை தான் உள்ளது. அதில் கூட மற்றைய இயக்கங்களில் எந்த விதமான பதிவுகளும் இல்லாத நிலையில் இயக்கம் நடத்துகின்றார்கள். அதற்கு முன்னோடியாகத் தான் இதைப் பதிவு செய்கின்றேன். இதன் மூலம் என்னைப் போல பலரையும் எழுத வைக்கும் என்ற நம்பிக்கையில் இதை முடிக்கின்றேன்.
பின்னிணைப்பு
எமது வாழ்க்கையில் நான் சந்தித்த போராட்டப் பங்காளிகள்
பாலசிங்கம் எனப் பெயர் கொண்ட பலசிங்கம்
தமிழன் குரல் என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்த பாலசிங்கம் என்பவர் எனது வீட்டுக்கு அருகில் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தார். எனது கிராமத்தில் இவர் தன்னை பத்திரிகை ஆசியராக அறிமுகப்படுத்திக் கொண்டார். அந்த 1979-80 காலப் பகுதியில் தன்னை இயக்கத்திற்காக பத்திரிகை நடத்துகின்றவர் போல வெளிப்படையாக காட்டிக் கொண்ட அந்தப் பாலசிங்கத்தை எமது நண்பர்கள் ஒருவித சந்தேகத்துடன்தான் பார்த்தனர். ஏனெனில் அவருடன் கதைக்கும்போது அவர் பத்திரிகை நடத்தக் கூடிய வல்லமை படைத்தவராக தெரியவில்லை. ஆனால் வெளிவந்த தமிழன் குரல் பத்திரிகையில் அவருடைய பெயர் ஆசிரியராகவும் பொறுப்பாசிரியராகவும் எழுதப்பட்டிருந்தது. எனவே நாம் நம்பவேண்டிய நிலையில் தான் இருந்தோம்.
அவர் தங்கியிருந்த வீட்டில் அவருடன் இன்னுமொருவர் சிலவேளைகளில் வந்து தங்குவதுண்டு. அவர்கள் வாடகைக்கு இருந்த வீடு எனது பக்கத்து வீடு. அதேவேளை அது உறவினர் வீடும். அதனால் அவர்களைச் சிலவேளைகளில் சந்தித்துப் பேசியதும் உண்டு. அவ்வாறு தங்கியிருந்த மற்றவர் சித்திரா அச்சகத்தில் வைத்து புலிகளினால் கொலை செய்யப்பட்ட சுந்தரம் என்பவர் ஆகும். சுந்தரம் கொலை செய்யப்பட்ட பின் தமிழன் குரல் பத்திரிகையும் நின்று விட்டது. அந்தப் பாலசிங்கம் பின்னர் தன்னை அடக்கி வாசிக்க வெளிக்கிட்டார்.
அவர் அங்கு பத்திரிகை ஆசிரியர் என்ற முறையில் முதலில் அறிமுகமானாலும் பின்னர் அந்தப் பத்திரிகையின் எழுத்திற்கு அவர் சொந்தக்காரனல்ல அவர் பெயர் மட்டும் தான் அந்தப் பத்திரிகைக்குச் சொந்தம் என்பதையும் நாம் தெரிந்து கொண்டோம். அவர் தன் பெயரை ஒருமுறை பலசிங்கம் என்று எழுதினார். அதன் பிறகு நாம் அவரை பலசிங்கம் என அழைத்ததும் உண்டு. அவர் இன்று உயிருடன் உள்ளாரா இல்லையா எனத் தெரியாது. ஆனால் அவர் தன் பெயரைப் பத்திரிகைக்கு ஆசிரியராகக் கொடுத்ததால் பொலிஸ் இராணுவக் கெடுபிடிகளை எதிர்கொண்ட போராளி என்பது மட்டும் எங்களுக்குத் தெரியும்.
சந்திரன்
எனது ஊரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முகாமையாளராக கடமையாற்றிய சந்திரன் என்பவர் 1985 இல் ரெலோ இயக்கத்தினரால் கொல்லப்பட்டதாக அறிந்தேன். அந்த எரிபொருள் நிலையம் நான் வழமையாக 83-84 களில் நண்பர்களைச் சந்திக்கும் இடம், பொழுது போக்குக்காக நான் அங்குபோய் நிற்பது வழக்கம். அந்தக் காலகட்டத்தில்தான் சந்திரனுடன் நிறையப் பழகினேன், பேசினேன். அவற்றுள் எனது போராட்ட சம்பந்தமான முடிவுகள், இந்தியா செல்ல எடுத்த முடிவு போன்றவையும் அடக்கம். அதனால் அவர் என்மீது நல்ல மதிப்பு வைத்திருந்தார்.
இந்தியாவிலிருந்து 1984 ஓகஸ்டில் நான் திரும்பி வந்தபோது அவரைச் சந்தித்து சில மணித்தியாலங்கள் உரையாடினேன். அந்த உரையாடல் பொதுவாக இந்தியாவில் உள்ள இயக்கங்களின் நிலைமை பற்றியதாகவே இருந்தது. ரெலோவிற்குள் நடந்த எமது உட்போராட்டங்கள், எனது நிலைப்பாடு, அவர்களால் தேடப்படுகின்ற நிலை, அன்று ரெலொ சம்பந்தமான பார்வை போன்றவற்றை மிகவும் குறுகிய நேரத்திற்குள் அவருக்கு விளங்கப்படுத்தினேன். இரண்டு நாட்களில் நான் இந்தியா திரும்பியும் விட்டேன்.
ஆனால் அவர் 1985 இல் ரெலொவினர் செய்த அராஜகங்களை எதிர்த்து அவர் கேள்வி கேட்டிருக்கிறார். அதனால் அவர்;கள் அவரைக் கொன்று போட்டதாகவும் அறிந்தேன். என் மீது வைத்த மதிப்பினாலும், எனது கருத்துக்களையும் கேட்டதினாலும், ரெலொவினரின் நடவடிக்கைகள் நான் சொன்னதுபோல் இருந்ததாலும் மிகவும் ஆத்திரமடைந்திருக்கிறார். அவர்களை எதிர்த்தும் கதைத்திருக்கிறார். அதுவும் ரெலொவின் பிரதேசமான கட்டப்பிராய் பகுதியில். அவர் அங்கேதான் வாழ்ந்தும் வந்தவர். அங்கே தான் ரெலொவினை எதிர்த்துப் பேசியும் இருக்கிறார். அதனால் அவர் தன் உயிரை இழக்க நேர்ந்தது என்று அறிந்தேன்.
அவ்வாறு எமது போராட்டத்தில் முகம் தெரியாத எத்தனை பொது மக்கள் எமது இயக்கத்தினராலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அப்படியாக குடும்பத் தலைவனையோ தலைவியையோ இழந்த குடும்பங்களின் நிலை என்ன? அவ்வாறு கொலை செய்தவர்களுக்கு எந்த நீதிமன்றம் தண்டனை கொடுக்கும்? பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவகையான நட்டஈடு கொடுக்கப்பட்டது? அவற்றைச் செய்த தலைமைப் பீடங்களுக்கு உள்ள தண்டனை என்ன? எவ்வகையான தீர்வுகள் எம்மிடம் உள்ளன?
அற்புதராஜா நடராஜா
அப்பிள் எனவும் பின்னர் ரமேஸ் எனவும் அழைக்கப்பட்ட அற்புதராஜா 1978 ஆம் ஆண்டு 9 ஆம் வகுப்பில் எனது பாடசாலையில் சேர்ந்தார். எமக்குள் இருந்த அரசியல் ஈடுபாடும் தேடலும் காரணமாக நாம் நெருங்கிய நண்பர்கள் ஆனோம். ஏ.எல். படிப்பதற்கு நான் மத்திய கல்லூரிக்கும் அவர் வைத்தீஸ்வராக் கல்லூரிக்கும் சென்றாலும் வார விடுமுறையில் குறைந்தது மாதம் ஒருமுறையாவது சந்தித்துக் கொள்வோம்.
GUES அமைப்பில் என்னைச் சேர்ந்து வேலை செய்யுமாறு கேட்டார். பின்னர் மத்திய கல்லூரியில் ஈழ மாணவர் பொது மன்றத்தை உருவாக்குகின்ற வேலையிலும் என்னை ஈடுபடச் செய்தார். எமது நட்பு வெறுமனே பாடசாலை நட்பாக அல்லாமல் அரசியலும் சேர்ந்து மரியாதைக்குரிய நட்பாகத் தொடர்ந்தது. அவர் EPRLF வை விட்டுப் பிரிந்து இந்திய சிறையில் இருந்து பின்னர் EPDP ஆக மாறிய பின்னரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னுடன் தன் தொடர்புகளை வைத்திருந்தார்.
1995 ஆம் ஆண்டில் நான் கொழும்பு செல்வதற்கு முன்னர் ரமேஸ் உடன் தொடர்பு கொண்டு, ‘நான் நாட்டிற்கு வர இருக்கின்றேன், உனக்கு ஏதாவது வேணுமா?’ எனக் கேட்டேன். அதற்கு அவரின் பதில் ‘நாங்கள் இங்கே சில வருடங்களாக இருக்கின்றோம், நாங்களே இன்னும் ‘எம் நாட்டிற்குப்’ போகவில்லை. நீ கொழும்பிற்கு வருகின்றாய் என்று சொல்லு. எமது நாட்டை வென்ற பிறகு நாம் எல்லோரும் நாட்டிற்குச் செல்வோம்’ என்றார்.
1978 ஆம் ஆண்டில் சந்தித்த அதே அப்பிளை பல வருடங்களுக்குப் பின்னர் சந்திக்கும் நாளை எதிர்பார்த்து இருந்தேன். எனது கொழும்பு பயணத்தின்போது இரு தடவைகள் அவருடைய தினமுரசு பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தேன். அப்போது எங்கள் பாடசாலை நாட்கள் வாழ்க்கை தொடங்கி மற்றும் அரசியல் வாழ்க்கை அனுபவங்களையும் நாங்கள் இருவரும் அவ்வாறு பகிர்ந்த ஒரு சுவையான அனுபவத்தினை உங்களுடன் பகிர விரும்புகின்றேன்.
பாடசாலை நாட்களில் பெண்களின் பின்னால் சுற்றுவது ரசிப்பது எவ்வளவு இனிமையான விஷயம். ‘இப்போது ஒருத்தி என்னை நோக்கி அல்லது என் வாகனத்தை நோக்கி வருகின்றாள் என்றால் நான் கவனமாக பாதுகாப்பாக இருக்க வேண்டியவனாக மாறி விட்டேன். வருகின்ற பெண் வெடித்து விட்டாள் என்றால் என்ன விளைவுகள் ஏற்படும்? வெடிகுண்டைக் கொண்டு வருகின்றவள் சுய புத்தி இல்லாதவள். அதைச் செய்விக்கின்ற தலைவன் மனநிலை பாதிக்கப்பட்டவர். எனவே நாம் தான் மிகக் கவனமாக இருக்க வேண்டும்’ என்றார்.
அவ்வாறு தனது பாதுகாப்பில் கரிசனையாக இருந்த ஒருவர், ஒரு சில கணம் அதைக் கவனத்தில் கொள்ளாதபோது, கொலை செய்யப்பட்டிருக்கிறார். ரமேஸ் போன்ற பல போராளிகளை எதிரி அழிக்கவில்லை. எங்கள் துரோகிகள் தான் அழித்தார்கள். அவர்களைப் போல் கொலை செய்யப்பட்டவர்களுக்கு வரலாற்றில் என்ன இடம் உள்ளது? கொலை செய்தவர்களுக்கு வரலாறு என்ன தண்டனை கொடுக்க இருக்கின்றது? எனப் பல கேள்விகளுக்கு விடை தேட வேண்டியுள்ளது.
ரவீந்திரகுமார் இராஜட்னம்
எனது பாடசாலையில் படித்து, எனது கிராமத்தில் EPRLF ஐ வளர்த்த ராஜன் தோழர் இனியவன் என அழைக்கப்பட்ட ரவீந்திரகுமார் பின்னர் ஈபிஆர்எல்ஃப் இன் மோட்டார் விபத்தில் பலியானார். நாம் இருவரும் வேறுவேறு இயக்கங்களில் 1983 களில் வேலை செய்தாலும் ஒருவர்மீது ஒருவர் தோழமையுடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் மரியாதையுடனும் பாசத்துடனும் பழகினோம்.
1970 கடைசியிலும் 1980 ஆரம்ப பகுதியிலும் பத்துப் பேரைக் கூட்டி அரசியல் வேலைகள் செய்வதோ போராட்டம் சம்பந்தமாக கூடிப் பேசுவதோ மிகவும் கடினம். பத்துப் பேரைக் கூப்பிட்டால் ஐந்து பேர் வருவார்கள். அடுத்த முறை அந்த ஐந்து பேரும் வருவார்களா என்று தெரியாது. ஒருவரை முழுநேரமாக போராட்டத்திற்குள் உள்வாங்குவதற்குக் குறைந்தது 50 பேருடன் ஆவது பேசினால் தான் முடியும். அது அத்தனை சுலபமான காரியமல்ல. கோப்பாய் கிராமத்தில் இருந்து கொண்டு வீட்டிற்குத் தெரியாமல் அல்லது வீட்டிலிருந்து கொண்டு பிரச்சார வேலைகளில் ஈடுபடுவது அதைவிடக் கடினமானது.
1984 இல் சென்னையில் உள்ள EPIC அலுவலகக்தில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எனது இருப்பிடத்திற்கு வந்து என்னுடன் பல மணி நேரம் பேசினார். சில தினங்களுக்குள் நாட்டிற்கு திரும்பிச் செல்வதாகவும் எனது வீட்டிற்குச் சென்று என்னை இங்கு சந்தித்ததாகவும் எனது நிலைமைகளை எனது வீட்டுடன் பகிர்வதாகவும் சொல்லிவிட்டு என்னிடமிருந்து பிரிந்து சென்றார். இரு தினங்களில் ராஜன் தோழர் விபத்தில் பலியானதாக எபிக் அலுவலகத்தில் எனக்குத் தகவல் தரப்பட்டது.
இன்றுவரை அந்தத் தோழருடன் நடந்த சந்திப்பு மறக்க முடியாது. ஏனெனில் நான் வேறு இயக்கம். அவர் வேறு இயக்கம். இருந்தும் எங்கள் உறவு போல் ஏன் இயக்கத் தலைமைகளில் இல்லாமல் இருந்தது? உயிருடன் சகோதர இயக்கப் போராளிகளை எரித்துக் கொன்றதும், கந்தன் கருணை வீட்டில் நடந்த படுகொலைகளும் தான் நந்திக்கடலில் கோவணத்துடன் இருந்த நிலைமைக்குக் கொண்டு போய் அவர்களைத் தள்ளி விட்டது.
இதுவரை தாங்கள் செய்த கொலைகளுக்கு யாராவது மன்னிப்பு கேட்டார்களா? அவர்களுக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்? அவர்களின் போர்க்குற்றங்களையும் மனித உரிமை அத்துமீறல்களையும் விசாரிப்பதற்கு யார் முன் வருவார்கள்? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
இயக்கங்களின் ஆரம்பமும் வளர்ச்சியும்
நான் 1984 இல் இயக்கத்தினை விட்டு வெளியேறிய பின் பல முன்னாள் போராளிகள், ஆரம்ப காலத் தலைவர்கள் எனக் கருதப்பட்டவர்கள் போன்றவர்களின் அனுபவங்களையும் ஆரம்பகால போராட்ட வரலாற்றினையும் தகவல்களை அடிப்படையாக வைத்து தொகுக்க முற்பட்டேன்.
1972 ஆம் ஆண்டில் இலங்கை குடியரசாக்கப்பட்டது. அதன் பின்னர் சிறிலங்கா அரசின் அட்டூழியங்கள் அதிகரிக்கத் தொடங்கின. 1974 இல் தமிழாராய்ச்சி மகாநாட்டில் பொலிஸ்காரர்கள் தாக்குதல் நடத்தினர். தரப்படுத்தலினால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். 1979 இல் அவசரகால சட்டத்தைப் பிரகடனப்படுத்தி, இன்பம் போன்ற இளைஞர்களைப் படுகொலை செய்தனர். 1981 இல் பொலிஸாரால் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது. கூட்டணிக் கட்சிக் காரியாலயம் எரிக்கப்பட்டது. யாழ் எம்பி யோகேஸ்வரன் வீடு தீக்கிரையாக்கப் பட்டது. ஈழநாடு பத்திரிகை எரிக்கப்பட்டது. அவற்றுடன் பொலிஸ் அடக்குமுறையும் தமிழ் இளைஞர்கள் மீது அதிகரிக்கத் தொடங்கியது.
பதிலுக்கு இளைஞர்கள் தனியாகப் பொலிஸ் செல்லும்போது பொலிசைத் தாக்கினர். அது பொலிஸ் அடித்தால் திருப்பி அடிக்கலாம் என்ற உணர்வினை தமிழ் இளைஞர்கள் மீது ஏற்படுத்தியது. அந்த நிறுவனப்படுத்தப்படாத தாக்குதல்கள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாயிற்று.
அதேநேரம் கிழக்கு மாகாணத்தில் விசேடமாக திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் இலங்கை அரசினால் தொடர்ந்தும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தமிழ் முஸ்லீம் மக்களின் இடங்களில் நடந்து கொண்டிருந்தன. அங்கே எத்தகைய போராட்டங்கள் நடந்தன என்பது பற்றி என்னால் தகவல்கள் எடுக்க முடியவில்லை.
1977 ஆம் ஆண்டில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரங்களில் கவரப்பட்டு அநேகர் TULF இன் பின்னால் சென்றாலும் தேர்தல் கூட்டங்களில் சொன்னதைப் போல் விடிந்தால் தமிழீழம் மலரவில்லை. எம் பி க்கள் பாராளுமன்றம் சென்றார்கள். சில விசுவாசிகளுக்கும் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்புக் கொடுத்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த தமிழீழம் கிடைக்கவில்லை.
1970-77 காலப் பகுதியில் SLFP யின் ஆட்சிக் காலத்தில் இருந்த பொருளாதார நெருக்கடி பல இளைஞர்களை வேலை தேடியும் விவசாயம் செய்யும் நோக்குடனும் வன்னிப் பகுதிகளுக்குச் செல்ல வைத்தது. அதேநேரம் பலரை இந்தியா-இலங்கைக் கள்ளக் கடத்தல் தொழிலும் ஈடுபட வைத்தது. வல்வெட்டித்துறைப் பகுதியில் பலரும் இத்தகைய தொழிலில் ஈடுபட்டிருந்த காலம் அது.
இந்தியாவிற்குச் செல்வது என்பது மிகவும் இலகுவாக யாழ்ப்பாணத்தின் பல கரையோரப் பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டு வந்த ஒன்றுதான். அவர்களைப் பொலிஸ் தேடுவதும் பிடிப்பதும், நீதிமன்றம் சென்று விடுதலையாகுவதும் வழமையாகவே நடந்தன. அவர்களைக் கைது செய்த பொலிஸார் அவர்களைத் தாக்குவதும் தாக்கப்படுவதும் பின்னர் கொலைகளாக மாறத் தொடங்கியது.
இவ்வாறுதான் குட்டிமணி போன்றவர்கள் ஆரம்பத்தில் கடத்தல் வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் பின்னர் போராளிகளாக மாறினார்கள். கைது செய்யப்பட்ட பல இளைஞர்களுக்கு சிறையில் ஏற்பட்ட தொடர்புகள் சிறையிலிருந்து வெளியேறிய பின்னரும் தொடர்ந்தது. பொலிஸ் கெடுபிடிகள் இவ்வாறு தமிழ் இளைஞர்கள் மீது அதிகரிக்க தம் பாதுகாப்பிற்காக பொலிசைத் தாக்குவதும் ஆரம்பிக்கிறது. சிவகுமாரன் முதல் தங்கத்துரை வரை ‘எங்கட பெடியள்’ என மக்கள் மத்தியில் அழைக்கப்பட்டனர். அவர்கள் ஸ்தாபனமயப்படுத்தப் பட்டவர்களோ இயக்கப் பெயர் வைத்து வேலை செய்தவர்களோ அல்ல.
1976 இல் புதிய புலிகள் அமைப்பு உருவாக்கப்பட்டாலும் அவர்கள் உரிமைகோரி வெளியிட்ட பிரசுரத்தில் சொல்லப்பட்ட சில நடவடிக்கைகள் புலிகள் ஆரம்பிக்கப்படு முன்னர் நடந்தவையாகும். அவ்வாறு பல இளைஞர்கள் 10-30 வரையில் தான் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலை இயக்கப் போராளிகளாக கண்டு கொள்ளப்பட்டார்கள். TELO என்று ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்பு ஆரம்பத்தில் இருக்கவில்லை. பின்னர் தான் அது இயக்கமாக மாறியது.
நீர்வேலி வங்கிக் கொள்ளையின் பின்னர் இந்தியாவிற்கு செல்வதற்கு தயாரான நிலையில் குட்டிமணியும் தங்கத்துரை போன்றோர் இருந்த நிலையிலேயே அவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்தது. nர்லோ என்ற அமைப்பின் மூத்த தலைவர்களான தங்கத்துரை, குட்டிமணி போன்றோர் கைது செய்யப்பட இந்தியாவிலிருந்த சிறி சபாரெத்தினம், ராசுப்பிள்ளை, பிரபாகரன் மூவரும் தலைமைப் பொறுப்பை எடுக்க வேண்டியவர்களாக மாறினர். சிறி சபாரத்தினம் யாழ்ப்பாணம் கட்டப்பிராயைச் சேர்ந்தவர். மற்றைய இருவரும் வல்வெட்டித்துறையினைச் சேர்ந்தவர்கள். ராசுப்பிள்ளை திருமணம் செய்து கொண்டு ஒதுங்கி விடுகிறார். பிரபாகரன் மீண்டும் புலிகள் இயக்கத்தினை ஆரம்பிக்கிறார். சிறி சபாரத்தினம் ரெலோவின் தலைவராகிறார்.
சிறை உடைப்பை மேற்கொண்டு குட்டிமணி, தங்கத்துரை போன்றவர்களை காப்பாற்றும் முயற்சிகளில் ரெலொ ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதேநேரம் தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட படுகொலைகளை நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கமும் தயாரான நிலையில் இருந்தது. அந்த நிலையைப் புரிந்து கொண்ட ரெலொ இயக்கத்தினர் சிறை உடைப்பு நடத்தும் மட்டும் எந்தவிதமான தாக்குதல்களையும் அரசபடைகள் மீது நடத்த வேண்டாம் என்று புலிகளிடம் கோரிக்கை விட்டனர்.
அதற்கு மாறாக 1983 யூலை 23 இல் திருநெல்வேலிச் சந்தியில் இராணுவத்தின்மீது புலிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தியதும் அதன் பின்னர் சிறையிலுள்ள போராளிகள் கொல்லப்பட்டதும் வரலாறாக மாறி விட்டது.
1983 யூலை இனப் படுகொலை நடக்கும்வரை விரல்விட்டு எண்ணக்கூடிய போராளிகளே இயக்கங்களில் இருந்தனர். ஆனால் பல நூற்றுக்கணக்கில் இருந்ததாக யாழ்ப்பாண மக்கள் மத்தியில் மாயை ஒன்றிருந்தது.
ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு விதமான முறையில் போராளிகளை அதுவரை உள்வாங்கிக் கொண்டிருந்தது. புலிகள் விளையாட்டு வீரர்களையும் வல்வெட்டித்துறைப் பகுதியைச் சேர்ந்தவர்களையும் மட்டும் மிகவும் கவனமாகத் தெரிவுசெய்து உள்வாங்கினர்.
EPRLF பல அரசியல் வகுப்புக்கள், மாணவர் அமைப்பு, தொழிலாளர் அமைப்பு போன்றவற்றில் வேலைசெய்ய வைத்து பின்னர் அவர்களை உள் வாங்கினர்.
TELO வினரில் தமக்குத் தெரிந்த நண்பர்களும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒரு குறிப்பிட்ட பகுதியினரும் தான் இருந்தனர். அவர்களும் சிறைச்சாலையில் இருந்த தலைவர்கள் கொல்லப்பட்டவுடன் எவ்வாறு அடுத்த கட்டத்திற்கு செல்வது என்று தெரியாத நிலையிலையே இருந்தனர். தமக்குரிய கட்டமைப்பு முறையில் தமது பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில் தமக்குத் தெரிந்த முறையில் மிகவும் நிதானமாக வளர்ந்து வந்த இயக்கங்களை இந்தியா பயன்படுத்திக் கொண்டது.
தமது வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படையில் இந்தியாவில் தலைமறைவாகவும் பகிரங்கமாகவும் தங்கியிருந்த இயக்கங்களை தமது நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அது பயன்படுத்தியது. அதுவரை காலமும் வுநுடுழு போன்ற விடுதலை அமைப்புக்களுடன் தொடர்புகளை வைத்திருந்த ஈழ விடுதலை அமைப்புக்களே இராணுவப் பயிற்சிகள் எடுத்தவர்கள். அதே இயக்கங்கள் இந்தியாவைத் தாம் பயன்படுத்துவதாகக் கருதிக் கொண்டு இந்திய இராணுவத்தினரின் கொடுத்த பயிற்சிகளுக்காக போட்டி போட்டு ஆட்களை அனுப்ப தயாரானார்கள். இருபுறமும் ஒருவரை ஒருவர் பயன்படுத்தித் தொடங்கினர். எந்த அமைப்பு கூடுதலாக இராணுவப் பயிற்சி எடுக்கின்றதோ அது பலமான அமைப்பாக மாற்றப்பட்டது.
அதுவரையில் தமது சுய கொள்கையின் அடிப்படையில் வளர்ந்த இயக்கங்கள் இப்போது இந்தியாவின் திட்டப்படி வளர்க்கப்பட்டனர். அதில் ரெலொவில் மற்றைய அமைப்புக்களை விட இராணுவப் பயிற்சி பெற்றவர்கள் அதிகம்.
சிறி சபாரத்தினம் தலைவராக வந்தது சீனியோரிட்டியின் அடிப்படையில்தான்.
அரசியல் (தெளிவல்ல) தெரிந்தவர்கள் எனக் கூறப்பட்ட EPRLF, PLOT போன்றவர்களும் இந்தியாவில் பயிற்சி என்றவுடன், இப்பொழுது ஆட்களைப் பிடித்து படகில் ஏற்றி இந்தியாவிற்கு அனுப்புவோம், பின்னர் அவர்களை அரசியல் மயப்படுத்துவோம் என்ற கொள்கைக்கு வந்து விட்டனர். இந்தியா போட்ட வேலைத்திட்டங்களுக்கேற்ப அனைத்து இயக்கங்களும் படுவேகமாக வளர்ந்தன. அதற்கிடையில், இயக்கங்களிடையே பிரச்சினைகளும் உருவாகின.
ரெலொவில் நடந்த பிரச்சினைகளை நான் ஏற்கெனவே கூறியுள்ளேன். புலிகளுக்குள் பிரச்சினை என்று வரும்போது பிரச்சினைக்குரியவர்களைக் களத்திற்கு அனுப்பி மாவீரர்களாக்கி விடுவார்கள். நுPசுடுகுஇ நுசுழுளு போன்றவற்றிற்குள்ளும் படுகொலைகள் நடந்தன. ஆனால் குறைவு. அது மட்டுந்தான் வித்தியாசம்.
1984 களின் பின்னர் இந்தியாவின் விசுவாசித்தினை யார் பெறுகின்றார்கள் என்பதில் இயக்கங்களுக்கிடையே கடும் போட்டி நடந்தன. அதில் 1985 கடைசிப் பகுதியில் கூட்டணி எம்பி ஆலாலசுந்தரம், தருமலிங்கம் ஆகியவர்களை ரெலோ இயக்கம் கொன்றது. 1987 இல் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியவர்களைப்; புலிகள் இயக்கம் கொன்றது. அத்துடன் அநுராதபுரத்தில் சிங்கள மக்களையும் படுகொலை செய்தார்கள். அத்தகைய செயல்கள் இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்பவே செய்யப்பட்டன என்று கூறப்பட்டது.
1985 நவம்பரில் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் பட்டப்பகல் இரண்டு மணிக்கு ரெலோவின் போராளிகளின் தாக்குதலுக்கு உள்ளானது. அதில் தாஸ் தலைமையில் பொபி உட்பட பல முதன்மைப் போராளிகள் பங்கு கொண்டனர். அதன் முக்கியத்துவம் என்னவென்றால் பொலிஸ் நிலையம் மாத்திரமல்ல அதற்குத் துணையாகப் பாதுகாப்பிற்காக வந்த இராணுவத்தின் மீதும் கைதடியில் தாக்குதல் நடைபெற்றது. அதுவரை காலமும் புலிகள் கண்ணிவெடியை வைத்துவிட்டு தப்பிச் செல்வதும் இராணுவமோ பொலிசோ அதில் அகப்படுவதும்தான் வீரமாகப் பார்க்கப்பட்டது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் பொலிசார் பொதுமக்களைக் கொல்வதும் வீடுகளை உடைப்பதும் எரிப்பதும் நடைபெற்றன. அவ்வாறு எவ்வளவு பொதுமக்கள் பாதிக்கப்பட்டாலும் அதைப் பற்றிப் புலிகள் கவலைப்பட்டது கிடையாது.
அத்தகைய கொள்கையினை தமது நடைமுறைத் தந்திரமாக புலிகள் கொண்டனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் ஆத்திரப்பட்டு இராணுவத்தினைக் கொல்ல வேண்டும் என்பதற்காக புலிகளுடன் இணைவார்கள் என்ற தலைவரின் சிந்தனையை போராளிகள் நடைமுறைப் படுத்தினர். எவ்வளவு அதிகமாக மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ அவ்வளவு அதிகமாக மக்கள் விடுதலைப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்துவார்கள் என்ற விடுதலைப் புலிகளின் தொலைநோக்குப் பார்வையுடன்தான் புலிகளின் தாக்குதல்கள் அமைந்தன. அதற்கு மாறாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் எந்தப் பொதுமக்களும் கொல்லப்படவில்லை. பொதுமக்களின் சொத்துக்களும் பாதிக்கப்படவில்லை. ஒரு ரெலோப் போராளியின் வீரமரணத்தில் 75க்கும் மேற்பட்ட பொலிசாரும் அதற்குப் பதிலடி கொடுக்க வந்த முப்பது இராணுவத்தினரும் பலியாகினர்.
எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த அந்தத் தாக்குதல் புலிகள் மீதுள்ள நாயக அந்தஸ்தை மக்களிடம் மாற்றத் தொடங்கியது.
அதன் பின் 1985 பெப்ரவரியில் கிளிநொச்சி கொக்காவிற்கிடையில் இராணுவத்துடன் வந்த இரயில் மீதான தாக்குதலில் 200 க்கு மேல் இராணுவத்தினர் பலியானார்கள்.
ரெலோ சார்பாக இரு கருத்துக்கள் 1983க்குப் பின்னர் பரவலாக வைக்கப்பட்டது. ஒன்று, குட்டிமணி, தங்கத்துரை போன்றோர்களைக் காட்டிக் கொடுத்தது பிரபாகரன் என்பது. இரண்டாவது, சிறையுடைப்பு தாம் மேற்கொள்ளத் திட்டம் தீட்டி இருந்ததாகவும் அதற்கு முன் ய+லை 23 இல் இராணுவத்தின் மீது கண்ணிவெடித் தாக்குதலை நடத்தியதும் அதற்குப் பதிலாக அரசினால் சிறையில் இருந்த போராளிகளை படுகொலை செய்யப்பட்டதும். மேற்கூறிய இரண்டும் உண்மையானதா அல்லது பொய்ப் பிரச்சாரமா எனத் தெரியாது.
எனது பார்வையில் குட்டிமணி தங்கத்துரை போன்றவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுக் காயப்பட்டபோது அவர்கள் மந்திகை வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பில்தான் சிகிச்சை பெற்றார்கள். பின்னர்தான் அவர்கள் குட்டிமணி, தங்கத்துரை என இராணுவம் அறிந்தது. அதன்பின் தான் இராணுவம் அவர்களின் மீது பாதுகாப்பினை மேற்கொண்டது. கடற்படை அவர்களைக் கைது செய்தபோது யாரோ கடத்தல்காரர்களைக் கைது செய்தது போல்தான் தாம் கைது செய்ததாக எண்ணியது.
இன்னும் இரண்டு விஷயங்கள். ஒன்று, குட்டிமணி, தங்கத்துரை போன்றோர் இந்தியாவிற்குப் போவதற்கு இருந்த இடம் நேரம் என்பன எல்லாம் பிரபாகரனிற்கு மாத்திரமே தெரியும் என்பதும் மற்றவர்களுக்குத் தெரியாது என்றும் சொல்லப்பட்டது.
இரண்டு, இவர்களை விடுதலை செய்வதற்கு ரெலோவின் சிறையுடைப்பு ஒன்றினைச் செய்வதற்குத் தயாரிப்பு நடவடிக்கைகளை செய்ததாகவும் அதற்கு முன்னர் புலிகளை இராணுவத்தின்மீது தாக்குதலை நடத்தி விட்டதாகவும் கூறப்பட்டது.
ரெலோவிடம் சொன்னதைப் போல அப்படிப் பெரிய திட்டம் எதுவும் இருக்கவில்லை. அதைச் செய்வதற்குரிய ஆயுதபலமோ போராளிகளோ அன்று அவர்களிடம் இருந்ததில்லை. சுமார் ஐந்து பேர் மட்டும் ஒரு சில ஆயுதங்களுடன்தான் இருந்தார்கள் என்பதுதான் உண்மை.
அதற்கிடையில் தாஸிற்கும் சிறி சபாரத்தினத்திற்கும் பிரச்சினைகள் வளர்ந்து வந்தன.
அந்தக் காலகட்டத்தில் பொபி-தாஸ் குழு பிரச்சினைகளும் எழுந்தன. தாஸின் தலைமையில் நடத்தப்பட்ட இரண்டு இராணுவத்தாக்குதல்களும் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டதானது தாசின் மேலான புகழை மக்கள் மத்தியிலும் போராளிகள் மத்தியிலும் செல்வாக்ககை அதிகரித்திருந்தது. தாஸ் வடமராட்சியைச் சேர்ந்தவர் அவருக்கு ரெலோ போராளிகளிடம் இருந்த செல்வாக்கு சிறிசபாரத்தினத்தின் தலைமைக்கு பிடிக்கவில்லை. சிறி சபாரத்தினம் பொபிக்கு ஆதரவு அளித்தார். யாழ் பொது மருத்துவ மனையில், நோயாளர்கள் பொது மக்கள் நடமாடும் இடத்தில் மருத்துவமனை பொது விதிகளுக்கு அமைய ஆயுதங்களை வைத்து விட்டு வந்த தாஸ் குழுவினர் மீது பொபி குழுவினர் கொலைத் தாக்குதல் செய்தனர்;. தாஸ் கொலை செய்யபட்டார்.
சிறி சபாரத்தினத்தைப் பொறுத்தவரை தாஸ் மீது சக போராளிகள் மரியாதை காட்டுவது அவருக்குத் தெரியும். தனக்குச் சவாலாக தாஸ் மாறலாம் என்ற நிலையில் அவரைக் கொல்வதற்கு பலமுறை முயற்சி செய்தார். எதுவும் சரிவராத நிலையில் கபடத்தனமாக யாழ் பெரியாஸ்பத்திரியில் தாஸ் குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தாஸ் ஒருபோதும் சிறி சபாரத்தினத்தின் தலைமைக்குத் தன்னைச் சவாலாகப் பார்த்ததில்லை.
பின்னர் EROS, PLOT, EPRLF தடைசெய்யப்பட்டு போராளிகள் கொல்லப்பட இந்தியா விரும்பியோ விரும்பாமலோ புலிகளை மட்டும் தான் அது நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 1987 இல் வடமராட்சிப் பகுதியில் சிறிலங்கா இராணுவம் முன்னேறியபோது இருக்கின்ற புலிகளும் அழிந்து விடாமல் பாதுகாக்கும் முயற்சியில் தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது. அத்துடன் ஐபிகேஎஃப் என்ற பெயரில் இந்திய இராணுவம் இலங்கைக்கு நேரடியாக வந்தது.
நான் மேற்கூறியவைகள் எனது தேடல்கள், எனது பார்வைகள், தகவல்கள் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்டவை. எனது நேரடி அனுபவங்களை முதல் பாகத்திலும் எனது போராட்டம், பார்வைகள் ஆகியவற்றை இரண்டாம் பாகத்திலும் பதிந்துள்ளேன். இன்று எம்முன் உள்ள பிரச்சினைகள் பல. பல்லாயிரம் பொது மக்களும் பல்லாயிரம் போராளிகளும் அழிக்கப்பட்ட நிலையில் உள்ளோம். உளம், உடல், உடைமை, நிலம், சுதந்திரம் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம். நாம் போராடி இருக்கத் தேவையில்லையா? இதற்கெல்லாம் இந்தியா தான் காரணம் என்பது உண்மையா? எமது குறைபாடுகள், அரசியல் வறுமைகள் என்பன பற்றி நாம் பேசாமல் சர்வதேசங்கள் மீதும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் மீதும் பழியைப் போட்டு விட்டு நாம் தப்பிக்க முயல்கிறோமா?
தலைவரின் வழியில் நாடு கடந்த அரசாங்கம் என்றும், பலர் தலைவர் வழியில் எமது கொடி புலிக்கொடி என்றும் பழைய தொழிலைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் தலைவனின் வழி மீண்டும் புது மாத்தளனில் தான் கொண்டு போய் விடும். அதற்காக சிறிலங்கா அரசு எமது தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வுத் திட்டத்தினை வைத்து தீர்த்து விடப் போவதில்லை. எமது போராட்டம் நியாயமானது. அதற்காக மீண்டும் வெளிநாடுகளில் பாதுகாப்பாக நாம் வாழ்ந்து கொண்டு எமது தாயகத்தில் உள்ள மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாகவும் இருக்க முடியாது. கொல்லப்படும்வரை பார்;த்துக் கொண்டிருக்கவும் முடியாது. எமது பாரம்பரிய பிரதேசங்கள் திட்டமிடப்பட்டு சூறையாடப்படுகின்றன.
இந்த நிலையில் என்னைப் போன்ற பலர் தமது அனுபவங்களை பகிர வேண்டும். எதிர்காலச் சந்ததி எமது போராட்ட அனுபவங்களை அறிய வேண்டும். நாம் விட்ட பிழைகளால் எவ்வாறு பல்லாயிரம் மக்களை அழிந்தனர் என்பதை அறிய வேண்டும். எமது தோல்விக்கான காரணங்கள் எவை என்பவற்றைக் கண்டறிய வேண்டும். அவற்றை அறியாமல் நாம் முன்னேற முடியாது.
1980 ஆரம்பத்தில் நாம் விரும்பி, தெரிவுசெய்து, போராட்டத்திற்குப் போன காலம். கடைசிக் காலம் பலவந்தமாக கடத்தப்பட்டு தலைமயிர் வெட்டப்பட்டு எதிரிக்கு அடையாளம் காட்டப்பட்டு பலவந்தமாக பயிற்சி அளிக்கப்பட்டு போர் முனையில் நிறுத்தப்பட்ட காலம். இந்த முப்பது வருட காலப்பகுதிக்குள் பலரும் பல அனுபவங்களைப் பெற்றிருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு வரலாறு உண்டு. அதைப் பகிர்ந்து கொள்வது தேவையாக உள்ளது.
முற்றும்
1. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 1
2. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 2
3. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 3
4. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 4
5. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 5
6. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 6
7. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 7
8. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 8
9. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 9