இந்தியப் பயணமும் தொல்லைகளும்
இந்த நிலையில் அவரிடம் இந்தியா சென்று எப்போது வேறு நாட்டிற்குப் பயிற்சிக்குச் செல்வது என்று கேட்டேன். அவர் சொன்னார் இந்தியாவை விட வேறு நாடு இல்லை என்று. எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் பலர் எம்மைக் கேட்ட கேள்வி நீங்கள் இந்தியாவை நம்புகிறீர்களா என்பதே. இந்தியா ஒரு போதும் எமது பிரச்சினைக்குத் தீர்வாக அமையப் போவதில்லை. பிரச்சினையாகத் தான் இருக்கும் என்றும் சொன்னார்கள். அதற்கு நமது பொறுப்பாளர் சொன்னார். நாங்கள் சோசலிசத்தை அணுகிக் கொண்டிருக்கின்ற ஒரு நாட்டில் தான் பயிற்சி எடுக்கின்றோம். இந்தியாவைத் தளமாகத் தான் பயன்படுத்துகின்றோம் என்று. நான் எனக்குள் நினைத்தேன், சோசலிசத்தை அணுகுகின்ற நாடு என்றால் ரஷ்யாவாகத்தான் இருக்கும் என்று. எனக்குத் தெரியும் இந்தியா சோசலிசத்தை அணுகவில்லை என்று. எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நாம் சொன்னது என்னவோ, ஆனால் செய்கிறதோ வேறொன்றாக இருந்தது. எனினும் எனது பாதுகாப்பற்ற நிலைமை என்னை இந்தியா போக வைத்தது. அந்த நேரத்தில் வெளிநாட்டிற்குப் புலம்பெயரும் எனது பயணம் தயாரான நிலையில் இருந்தது. எனினும் நான் என்னை முழுமையாக இயக்கத்திற்கு அர்ப்பணித்து இந்தியா போக முடிவு செய்தேன்.
இந்தியாவிற்கான எனது பயணம் எதிர்பார்த்தது போலச் சுலபமாக அமையவில்லை. கடற்படையினரின் கெடுபிடிகள், இராணுவத்தின் சோதனைகள் பலவற்றிலும் பார்க்க மிகவும் கொடுமையானது இயக்கத்தின் பயண நடவடிக்கை. எந்தவிதமான தலைமையுமற்று, சுமார் நாற்பது பேர்கள் பயணத்தைத் தொடங்கினோம். குறிப்பிட்ட தொகை பணத்திற்காக எம்மைக் கொண்டு போய்ச் சேர்க்கும் அந்த நபர்களுக்கும் இயக்கத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. சிறிய வள்ளத்தில் புறப்பட்ட நாம் அதில் தான் இந்தியா போகப் போகிறோம் என்று நினைத்தவுடனே பிரச்சினைப் பட்டோம். வள்ளத்தின் ஓட்டிகள் சொன்னார்கள், இன்றிலிருந்து இது உங்களுக்கு பயிற்சி. இதற்கே பயப்பட்டீர்கள் என்றால் என்னென்று தமிழீழம் காணப் போகிறீர்கள் என்று. அத்துடன் நாம் எல்லோரும் அமைதியாகி விட்டோம்.
நடுக்கடலில் நின்ற றோளருக்குப் போய் றோளரில் ஏறி மிகுதிப் பயணத்தைத் தொடர்ந்தோம். பலருக்கு றோளரின் வேகம் இவ்வளவு குறைவானது என்று தெரியாது. பல மணி நேரமாகப் பிரயாணம் செய்த போதும் மண்டைதீவு றேடியோ ஒலிபரப்பு நிலையத்தின் வெளிச்சம் தெரிந்து கொண்டே இருந்தது. றோளரின் வேகத்தைப் பற்றிக் கேட்டபோது வேகமாகப் போனால் சத்தம் கேட்கும். சத்தம் கேட்டால் நேவி வரும். ஆகவே தான் நாம் குறைவான வேகத்தில் செல்லுகின்றோம் என்றனர். அது பற்றி ஏன் முதலில் சொல்லவில்லை என்று கேட்டபோது உங்களுடைய இயக்கத்தைக் கேட்காதது உங்கள் பிழை என்றனர். நீங்கள் இயக்கம் இல்லையோ என்று அவர்களைக் கேட்டபோது தாம் பணத்திற்காக ஓடுவதாகக் கூறினார்கள். எமக்குள் இருந்த பலர் கோபப்பட்டாலும் எதுவுமே செய்யமுடியாத நிலையில் தூங்கி விட்டனர்.
எனக்கும் மண்டைதீவு வெளிச்சத்தைப் பல மணித்தியாலங்களாக பார்த்துக் கொண்டிருந்ததால் தூக்கம் வந்து விட்டது. எது நடந்தாலும் பரவாயில்லை. ஊரில் நிற்க முடியாத சூழ்நிலை. எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்துவிட்டு நானும் தூங்கி விட்டேன். சுமார் நாலு மணியளவில் எம்மை எழுப்பி இறங்கச் சொன்னார்கள். நாம் எழும்பிப் பார்த்த போது சுற்றிவரக் கடல். அவர்கள் சொன்னார்கள், அதற்கு மேலாக றோளர் போகாது, நீங்கள் நீந்தித்தான் கரைக்குக் போக வேண்டும் என்று. பலருக்கு நீந்தத் தெரியாததால் எல்லோரும் இறங்க மறுத்தனர். எது கரை, எந்த இடம், எங்கே காம்ப் என்று பல கேள்விகள். எதற்கும் பதில் கிடைக்கவில்லை. எவரும் இறங்க மறுத்தபடியால் ஓட்டி நீரில் குதித்துக் காட்டி கடல் ஆழம் இல்லை. கழுத்து வரை தான் தண்ணீர் என்று சொல்லிக் கரையைக் காட்டினார். எமக்கு இருட்டுக்குள் கரை எதுவுமே தெரியவில்லை. ஓட்டியை நம்பி எமது உடுதுணிகளுடன் கடலில் குதித்தோம். குதித்த பிறகு தான் தெரிந்தது ஆழம் எங்களின் உயரங்களை விட இரண்டு அடியாவது கூட இருக்கும் என்று. எதுவுமே செய்யமுடியாத நிலையில் கைகளையும் கால்களையும் அடித்துத் தள்ளி உயரம் குறைந்தவர்களையும் இழுத்துக் கொண்டு கரைக்கு வந்தோம். பலரும் கடல் தண்ணீர் குடித்து களைப்பாய் இருந்தனர். பலரும் சொன்ன வார்த்தை ரெயினிங் எடுத்தவுடன் முதல் வேலை இந்த ஓட்டிமார்களைப் போட வேண்டும் என்பது தான். எனினும் இயக்கம் என்னும் பெயரில் எல்லாவற்றையும் மறந்து ஒருவரை ஒருவர் உற்சாகமாக அறிமுகப்படுத்திக் கொண்டோம்.
எமக்குள் அடுத்த பிரச்சினையாக இருந்த விடயம், இங்கிருந்து எங்கு செல்வது? எங்கு எமது இயக்க முகாம்? யாரைக் கேட்பது? இடம் மாறி வேறு இயக்கத்துடன் போய்ச் சேர்ந்து விட்டால் என்ன செய்வது? அவற்றிற்கு ஒருவரிடமும் பதில் இல்லை. லைற் வெளிச்சத்தை நோக்கின பக்கமாக கடற்கரையினூடாக நடப்பது என்றும், யாராவது சந்தித்தால் அவர்களிடம் கேட்பது எனவும் முடிவு செய்து விட்டு கரையோரமாக நடந்தோம். கடற்கரையோரமாக மலம் கழிக்க வந்த இருவரை நடுவில் சந்தித்து நிலைமைகளை விளக்கினோம். அவர்களில் ஒருவர் எம்மைக் கேட்டார், உங்களிடம் பாஸ்போட் இருக்கா என்று. இல்லை என்றவுடன் மற்றவர் கேட்டார், நீங்கள் கள்ளத்தோணிகளா என்று. இவ்விரு கேள்விகளும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கெனக் கேட்கப்பட்டது போல இருந்தன. பதில் கூறமுடியாத நிலையில் சமாளித்து விட்டு அவர்களிடமிருந்து தப்பித்துக் கொண்டோம்.
இரண்டரை மணித்தியாலத்தின் பின் இராமேஸ்வரத்திற்கு வந்து சேர்ந்தோம். வந்து சேர்ந்தாலும் கூட எம்மைக் கூட்டிச் செல்வதற்கு எவருமே இல்லை. ஒரு மணித்தியாலம் இராமேஸ்வரத் தெருக்களில் ஊர்வலமாகச் சென்றபோது இருவர் வந்து எம்மைக் கூட்டிச் சென்று தங்குவதற்கு வசதி செய்தார். எம்மில் பலரும் நாட்டில் இயக்கங்களுக்கு வேலை செய்ததினாலும் மற்றைய இயக்கங்களின் கபடத்தனங்களை அறிந்தமையாலும் கூட்டிச் சென்ற இருவரிடமும் நீங்கள் ரெலோ தான் என்பதற்கு என்ன அத்தாட்சி, நீங்கள் உங்களை அடையாளம் காட்டாவிட்டால் நாங்கள் உங்களுடன் சேரமுடியாது என்றும் கூறினோம். தம்மிடம் அடையாள அட்டை எதுவுமில்லை. விரும்பினால் இருங்கள் அல்லது திரும்பிப் போகலாம். நம்பினால் எங்களுடன் வரலாம் என்றனர். வேறு வழியின்றி அவர்களுடன் சென்றோம்.
சென்னையில் ஒரு கொட்டிலில் இயக்க வாழ்வின் ஆரம்பம்
ஒருநாள் இடைவெளியின் பின் சென்னையை நோக்கிய எமது பயணம் தொடர்ந்தது. மறுநாள் மாலை சென்னையில் உள்ள ஒரு கொட்டிலுக்கு வந்து சேர்ந்தோம். நான் பழையவற்றை எல்லாம் மறந்துவிட்டு ஒரு புதிய வாழ்க்கைக்கு என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டேன். எல்லோர் மனதிலும் உற்சாகமும், புதிய உத்வேகமும், புத்துணர்ச்சியும் ததும்பிய நாள் என்று சொன்னால் அது அன்று தான்.
அன்றைய நாள் ஏப்பிரல் முதலாம் திகதி 1984 ஆம் ஆண்டு. உலகத்தைப் பொறுத்தவரையில் முட்டாள் தினம். என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் அர்த்தமுள்ள உள்ள நாளாகவே அதைக் கருதினேன். புதியதாக வந்த எம்மை அறிமுகப்படுத்தும் நேரமும் பெயர் சூட்டும் வைபமும் நடந்தது. அவ்வாறான புதிய பெயர்களில் சில அதிர்ச்சியூட்டக் கூடியவையும் இருந்தன. உதாரணமாக, காளி, வெள்ளை போன்றவை. றீகன், காள்மாக்ஸ், ஸ்டாலின், லெனின், போன்ற பெயர்கள் ஆச்சரியமானவை. எனக்கு ரஞ்சித் என பெயரிடப்பட்டது.
அடுத்ததாக, அங்குள்ள விதிமுறைகள் சொல்லப்பட்டன. அங்கிருந்து யாரும் தப்பிப் போகமுடியாது என்றார்கள். அத்துடன், தப்ப முயற்சித்தவர்கள் சிலரையும் கூட்டிக்கொண்டு வந்து காட்டினார்கள். அவர்களில் பலரும் கை, கால்கள், முறிக்கப்பட்டவர்களாக தடிகளின் உதவியினால் நடந்து வந்தனர். அவர்களைப் பார்த்தவுடன் எவ்வளவு கஸ்ரப்பட்டு இயக்கம் இங்கு கூட்டிக்கொண்டு வந்து பயிற்சி கொடுக்க அவர்கள் தப்பி ஓடுவது என்பது பிழையான காரியமாகப்பட்டது. அதாவது ஓட வெளிக்கிட்டவர்களைக் கை கால் முறித்து வைப்பது எனக்குச் சரியாகப் பட்டது. ஆரம்பத்தில் எனக்கு இது சரியாகப்பட்டாலும் சில நாட்களின் பின் பல கேள்விகளை எனக்குள் அது எழுப்பியது.
என்னைப் பொறுத்தவரையில் புதுநாடு, புது ஊர், புது வாழ்க்கை, முதன்முதலில் ஊரைவிட்டு தனியாக வந்திருக்கிறேன். புது நண்பர்கள். எல்லாமே குழப்பமாக இருந்தன. எனது ஊரைச் சேர்ந்த எவரையும் காணவில்லை. அவர்கள் வேறு இடத்தில் இருந்தனர். என்னுடன் கல்லூரியில் படித்தவர்களையும் காணவில்லை. அனைத்தும் ஆச்சரியமாகவே இருந்தன.
அந்தநேரத்தில் கொட்டிலில் உள்ள நடைமுறைகள் அனைத்துமே நாம் நாட்டில் பிரச்சாரம் செய்தவற்றுக்கும் அங்குள்ள நடைமுறைகளுக்கும் நேர் எதிராகவே இருந்தன. ஆனால் எவரையுமே எனக்குத் தெரியாததால் ஒன்றையும் பேச முடியவில்லை. அதைவிட உளவு பார்ப்பவர்கள் எனச் சிலர் இருப்பதாக எமக்கு அறிவிக்கப்பட்டதால் எவருடனும் கதைக்கும்போது அந்த நடைமுறைகளைப் பற்றி விமர்சிப்பதைத் தவிர்த்தேன். நாட்கள் சில நகர்ந்தன. எல்லாருமே உற்சாகமின்றிக் காணப்பட்டார்கள். எந்தவிதமான பயிற்சிகள், அரசியல் வகுப்புக்கள் எதுவுமேயற்று சாப்பிடுவதும் படுப்பதுமாக எமது வாழ்க்கை நடந்தது. அதனால் பலரும் விரக்தி அடைந்திருந்தனர். எமது தேவைகளைக் கூட கவனிக்கமுடியாத நிலையில் தான் ஸ்தாபனம் இருந்தது. தலைவரோ அல்லது அவரது சகாக்களோ கூட அங்கே வருவதில்லை.
நான் இவ்வாறு இயக்கத்தைப் பற்றிச் சொன்னாலும் போராளிகளான நாங்கள் எத்தகைய வாழ்க்கையை வாழ்ந்தோம் என்பது யாவரும் அறிய வேண்டிய விடயமாகும். அத்தகைய வாழ்வு ஆண் போராளிகளுக்கு மட்டும் தான். காலையில் எழுந்து தேநீர் அருந்தி விட்டு எமது இருப்பை வரிசையாக நின்று சொல்லிவிட்டுச் செல்ல வேண்டும். பின்னர் காலை உணவு. அது பொதுவாக சுண்டல் கடலை அல்லது பாண். விரும்பினால் சாப்பிடலாம் அல்லது விடலாம். மத்தியானம் சோறு, முட்டை, எருமை இறைச்சிக் கறி. அதற்குள் இரண்டு அல்லது மூன்று துண்டுகள் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஆறு அல்லது ஏழு துண்டுகள் விழும். பின்னேரம் தேநீர். இரவு எமது இருப்பைப் பதிவுசெய்தபின் பாண், வாழைப்பழம்.
எமது இருப்பிடத்தைப் பற்றி சொல்வதானால் மூன்று கொட்டில்கள். அவற்றுள் ஒன்றில் சமைப்பதும் சாப்பிடுவதும். இன்னொன்றில் நோயாளிகள் உறங்குவது. மூன்றாவதில் விரும்பினவர்கள் உறங்குவது. அதற்குள் தான் எமது உடுதுணி போன்றவற்றை வைப்பது. எந்தவிதமான பாதுகாப்புமற்ற பிரதேசம் அது. எவரும் வரலாம். போகலாம். சுமார் நூறு பேர் அளவிற்கென அமைக்கப்பட்ட அக்கொட்டில்களில் சுமார் 450 பேர் தங்கினோம். அது கடினமான காரியமாக இருந்தது. அதைவிட ஒரு சிறு வீடு போன்ற கொட்டில் ஒன்றும் இருந்தது. அதில் பிரச்சினைப்படுபவர்களை உள்ளே கூட்டிச் சென்று சித்திரவதை செய்வதும் அதற்குள் தான். ஏனெனில் அந்தச் சிறிய கொட்டில் மட்டுந்தான் சுற்றிவர அடைக்கப்பட்ட இடம். மற்றவை திறந்த வெளியில் நாலு தடிகள் வைத்து ஓலையால் பின்னப்பட்ட பிரதேசம். எனவே, நாம் தங்குவது அந்தக் குறிப்பிட்ட பிரதேசத்தில் இருக்கும் மரங்களின் கீழும், கைவிடப்பட்ட வீடுகள், கட்டிட வேலைகள் நடைபெறும் வீடுகளும் தான். எங்கு நிழல் கிடைக்கின்றதோ அங்கெல்லாம் தங்கினோம்.
மலசலகூட வசதிகளுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மரங்கள் என்றிருந்தாலும் எவருமே பாவிக்காத இடமாக தேடிப்பிடிப்பது அப்படி அதைக் கண்டு பிடிப்பது கஷ்ரமான காரியமாக இருந்தது. மலசலகூடம் என்ற பெயரில் ஒரு அறை இருந்தாலும் எப்போதுமே கியூ வரிசை இருந்ததால் எவருமே அதைப் பாவிப்பதில்லை. அந்தப் பிரதேசம் முழுவதுமே எமது கைவரிசை தான். பொதுவாக சுகாதார வசதிகள் துப்புரவாக இல்லாத தன்மையாலும், உணவு, குடிநீர் ஆகிய விடயங்களில் கவனம் இல்லாததாலும் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட வீதத்தினர் வயிற்றுக் கோளாறினால் பீடிக்கப்பட்டவர்களாகவே இருந்தனர்.
இரவு படுக்கையை எடுத்துக் கொண்டால் இரண்டு பேருக்கு ஒரு கம்பளிப் போர்வை என்ற அடிப்படையில் இருக்கும். தலைக்கு செருப்பை அல்லது உடுப்பை வைத்து விட்டு போர்வையை நிலத்தில் போட்டுப் படுக்க வேண்டியது தான். படுக்கும் நிலத்தை விரும்பியவாறு எடுத்துக் கொள்ளலாம். புல்தரை அல்லது வெறும்தரை, கால்வாய்கள் பக்கமாகக் கூட இருக்கலாம். எதுவாக இருந்தாலும் நுளம்புகளின் தொல்லையும் மலசலங்களின் துர்நாற்றமும் தொடர்ந்த வண்ணம் இருக்கும். ஆரம்பத்தில் நித்திரை கொள்வது கஷ்ரமாயிருந்தாலும் பின்னர் பழகி விட்டோம். தப்பித்தவறி மழை வந்து விட்டால் எல்லாக் கழிவுகளும் கரைந்து ஓடும். அதற்குள் தான் நாம் நிற்க வேண்டும்.
அத்தகைய அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையிலும் நாம் மனம் தளராமல் அதை ஒரு பிரச்சினையாகக் கருதாமல் விடுதலையை நோக்கமாகவே கொண்டிருந்தோம். அந்த உணர்வினைத் தலைமைப்பீடமும் பாவித்து அத்தகைய அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்வதைத் தட்டிக் கழித்தனர்.
அரசியல் வகுப்புக்கள்
சில வாரங்களின் பின்பு அரசியல் வகுப்புக்கென வந்திருந்தவர்களை வேறு இடங்களுக்கு மாற்றினர். நானும் இன்னும் இருபது பேரும் ஒரு வீட்டிற்குச் சென்றோம். எமக்கெனச் சமைப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அதன் மூலம் பலரும் சமையற் கலையைக் கற்க ஆரம்பித்தனர். எமது இருப்பிட வசதி பூர்த்தி செய்யப்பட்டது. புத்தகங்கள் தந்தார்கள். விரும்பினவர்கள் படிக்க ஆரம்பித்தனர். வகுப்புக்கள் ஆரம்பிப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டன. எம்மைப் போல குறிப்பிட்ட நபர்களைத் தவிர மற்றவர்களின் நிலைமை கொட்டில்களில் தான் கழிய வேண்டி இருந்தது.
அப்போது தான் நான் ஒரு சிலருடன் நெருக்கமாகப் பழக ஆரம்பித்தேன். எமக்கு ஒழுங்கு செய்யப்பட்ட அரசியல் வகுப்புக்கள் பல இடைஞ்சல்கள் மத்தியில் ஆரம்பமாயின. முன்பு குறிப்பிட்டபடி உள்ள ஒரு கொட்டிலில் தான் வகுப்புக்கள் ஆரம்பமாயின. எமது வகுப்புக்கள் நடைபெறும்போது இராணுவப் பிரிவினர் விலக்கி வைக்கப்பட்டவர்களாகவும் அரசியலுக்கு அவர்கள் சம்பந்தப்படாதவர்களாகவும் இருந்தனர். அதேபோல எமக்கும் இராணுவப் பயிற்சிக்கும் சம்பந்தமில்லாததாகவும் இருந்தது. எனவே வகுப்பு நடைபெறத் தொடங்கும் போதே இரண்டும் இரண்டு பிரிவினருக்கும் தேவை என்ற கருத்து பரவலாக அங்கே பேசப்பட்டது.
அதேவேளை வந்தவர்களை சும்மா வைத்திருக்க முடியாது என்ற நிலையில் மனோ மாஸ்ரர் போன்றவர்கள் இருந்தார்கள். வந்தவர்களை என்ன செய்வது, எப்படிப் பயன்படுத்துவது போன்ற நடைமுறை சார்ந்த அறிவு எதுவும் தலைமையைச் சார்ந்தவர்களிடம் இருக்கவில்லை. எமக்கு அரசியல் வகுப்பினை ஆரம்பித்து நடத்தியவர்களில் முதன்மையானவர் தோழர் வி.பி என்றழைக்கப்பட்ட வி.பொன்னம்பலம் அவர்கள்.
அதன் பின்னர் தமிழ் நாட்டின் மாக்சிச லெனினிசக் கட்சியைச் சேர்ந்த ஒரு தோழர் நடாத்தினார். அரசியல் வகுப்புக்கள் நடந்து கொண்டு இருந்த நாட்களில் நான் இருந்த வீட்டில் இருந்த ஒருவருக்கு கண்ணாடி வாங்குவதற்காக நானும் அவரும் வீட்டுப் பொறுப்பாளரின் அனுமதியுடன் வெளியில் சென்றோம். கண்ணாடி வாங்கிய பின் களவாக படம் பார்த்து விட்டு வீட்டிற்கு வரும்போது வீட்டின் பொறுப்பாளர் கண்ணாடி வாங்குவதற்கு இவ்வளவு நேரமா, நீங்கள் எங்கு போயிருந்தீர்கள் என்று கேட்டார். உண்மையில் படம் முடிந்த பின் உடனே வீட்டிற்கு வந்திருந்தால் அவர்கள் எங்களைத் தேடி இருக்க மாட்டார்கள். ஆனால், சென்னையில் உள்ள பஸ்களில் பஸ் புறப்படும் இடம் போகும் இடம் இரண்டுமே எழுதிய பலகையைத்தான் மாட்டி இருப்பார்கள். பஸ் எங்கிருந்து வருகின்றது எங்கே போகின்றது என்று சென்னையை பழகியவர்களுக்கு மாத்திரம் தெரியும். நாம் போக வேண்டிய திசையில் செல்லாமல் மற்றத் திசையில் சென்று விட்டோம். அதை உணர்ந்து நாம் திரும்பி வரவும் மற்றவர்கள் அரசியல் வகுப்புக்கள் முடிந்து வீட்டிற்கு வந்து விட்டார்கள். அந்தப் பிரச்சனையால் என்னை வேறு ஒரு வீட்டிற்கு மாற்றினார்கள். அந்த வீட்டின் கிழ் தளத்தில் போட்டோ எடுக்கும் ஸ்ருடியோ ஒன்று இருந்தது அதனால் பினனர் நாம் இயக்கத்தின் நடைமுறைகளுக்கு எதிராக குரல் எழுப்பிய போது ஸ்ருடியோ றூம் இல் இருந்தவர்கள் என்று அடையளப்படுத்தப்பட்டோம்.
அந்த வீட்டில் இயக்க முக்கிய பொறுப்புகளில் உள்ள சில தோழர்களின் கண்காணிப்பின் கீழ் நான் இருக்க வேண்டிய நிலைமை எனக்கு ஏற்பட்டது. என்னால் தனியாக வெளியே போக முடியாத நிலைக்கு ஆளானேன். துணையுடன் தான் போக வேண்டும். அந்த நிலையில் அந்த வீட்டில் எவருமே என்னுடன் கதைப்பதில்லை. கதைக்கும் போதும் தாங்கள் தலைவர்கள் போலத்தான் என்னை அணுகினார்கள். அதில் ஒருவர் மட்டும் தான் என்னுடன் தோழமையுடன் பழக ஆரம்பித்தார். அதற்குக் காரணம் அவருக்கும் அங்கு நடப்பவை எதுவும் பிடிக்கவில்லை. அதனால் நாம் இருவரும் நெருங்கிய நண்பர்களானோம். இவரே மனோ மாஸ்ரரின் தம்பியான ராஜன் என பின்னர் அறிந்துகொண்டேன்.
தொடரும்
1. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 1
2. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 2
3. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 3