Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயக மக்கள் முன்னணி அரசியல் எதிர்வினைக்கு பதிலான அவதூறு அரசியலின் விளைவு என்ன?

அரசியல் எதிர்வினைக்கு பதிலான அவதூறு அரசியலின் விளைவு என்ன?

  • PDF

அமைப்புக் குறித்தும், அதில் உள்ள தனிநபர்கள் குறித்துமான, அவதூறுகள் அடிக்கடி வெளிவருகின்றது. அரசியல் அடிப்படையும், ஆதாரமுமற்ற இந்த அவதூறுகள், கடந்தகால இயக்கப் பாணியிலானது. "துரோகி", "தியாகி" என்று எப்படி மொட்டையாக முத்திரை குத்தி அரசியலை நடத்தினரோ, அதையே மீள இன்று தொடர்ந்து செய்கின்றனர். எம்மை "மாபியாக் கும்பல்" "லும்பன்கள்" "ஏகாதிபத்திய ஏஜண்டுகள்" "அரசு சார்புக் கும்பல்;" "புலி சார்புக் கும்பல்" "கும்பல்" … என்று தொடங்கி தனிநபர்கள் பற்றி தங்கள் கற்பனைக்கு ஏற்ப இட்டுக்கட்டிய அவதூறுகளை தங்கள் அரசியலாக்கி முன்னெடுக்கின்றனர்.

அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாத போது, குறுகிய அவர்கள் வக்கிரங்களே எதிர்வினையாக மாறுகின்றது. இதுவரை காலமும் தாங்கள் கொண்டிருந்ததாகக் கூறி வந்த "இடதுசாரிய அரசியலையே" மறுக்கின்றதன் விளைவு இது. இன்று மக்கள் அரசியலை முன்வைத்துள்ள எமது அமைப்பையும், அதில் உள்ள தனிநபர்களுக்கும் எதிரான அவதூறுகளே, இன்று அவர்களின் அரசியலாக மாறுகின்றது. கடந்தகாலத்தில் தனிநபரைக் கொன்று ஒழிக்கும் அரசியலின் அதே தொடர்ச்சி. இன்று அமைப்புப் பற்றிய அதில் உள்ள தனிநபர்கள் பற்றிய அவதூறுகளாக, இட்டுக்கட்டலாக மாறிவிடுகின்றது. இறுதியில் இதுவே அவர்களின்; முழு அரசியலாக மாறிவிடுகின்றது. சாராம்சத்தில் இது ஆட்காட்டி அரசியலாக மாறி இருப்பதுடன், சீரழிவுடன் கூடிய இந்த வளர்ச்சி என்பது இறுதியில் நேரடியாகக் காட்டிக் கொடுக்கும் அரசியலாக மாறும். இதைவிட எமக்கு எதிரான வேறு அரசியல் தெரிவு இவர்கள் முன்னில்லை.

தாங்கள் கொண்டிருந்த "அரசியலைக்" கைவிட்டு வரும் அரசியல் பின்னணியில், அதை மற்றவர்கள் முன்னெடுப்பதற்கு எதிராக தங்கள் எதிர்வினையாக அதை மாற்றுகின்றனர். இது அமைப்பு பற்றியும், தனிநபர் பற்றியுமான அவதூறாக இட்டுக்கட்டலாக வெளிப்படுகின்றது.

இந்த வகையில் எமது அரசியலுக்கு மாற்றான அரசியலைக் கொண்டிராத வரை, காட்டிக் கொடுப்பது தான் அதன் இறுதி அரசியல் விளைவாக இருக்கும். அரசியலுக்கு அரசியல் ரீதியாக எதிர்வினையாற்றுவதும், அதை முன்னெடுப்பதும், சரியான அரசியல் முன்னெடுப்புக்கு உதவக் கூடியது தான். இல்லாது அமைப்பையும், தனிநபர்களையும் இட்டுக்கட்டி முன்னெடுக்கும் அவதூறு அரசியல், அதையே அரசியல் காழ்ப்பாகக் கொண்டு முன் நகர்த்துவதன் மூலம், அது ஒரு மாற்று அரசியலாக மாறிவிடாது. இதன் விளைவு என்பது மறைமுகமாக காட்டிக் கொடுப்பதில் தொடங்கி இறுதியில் நேரடியாக காட்டிக்கொடுக்கும் அரசியலாகவே மாறும். இதுதான் அதற்கு இடப்பட்ட விதி.

இன்று எமக்கு எதிரான அரசியல் எதிர்வினைகள், இப்படி அரசியல் ரீதியாக தொடர்ந்து சீரழிந்து வருகின்றது. எமக்கு எதிரான ஒரு அரசியலையோ, சமாந்தரமான அரசியலையோ நாம் இன்று காண முடியவில்லை. இதன் ஒரு அங்கமாக அவதூறுகளாகவே அவை பிரதிபலிக்கின்றது. இதேபோல் திரைமறைவு சதிகளும் அவதூறுகளும் தொடர்ந்து அரங்கேறுகின்றது. இதுதான் எதார்த்தம். இன்று குறுந்தேசியவாதமாக, பேரினவாதமாக இருக்கின்ற பொது அரசியல் ஓட்டத்தில் இதுதான் நடந்தேறுகின்றது. எமக்கு எதிரானவர்கள்; அரசியல் ரீதியாக சீரழிந்து வருவதன் வெளிப்பாடுதான், அரசியலற்ற அவதூறுகளாக மாறி இருக்கின்றது. இங்கு வெளிப்படையாகச் சிலரும், இரகசியமாக பலரும் இதன்பின் இயங்குகின்றனர். அலுக்கோசுகள் பின்னால் மன்னர்கள் செயல்படுகின்றனர்.

இந்த வகையில் அடிப்படையும் ஆதாரமுமற்ற இட்டுக்கட்டிய புலம்பல்கள். குடித்துவிட்டு உளறுவது போல், அவதூறுகளை உளறிக்கொட்ட வைக்கின்றது. அதையே தங்கள் "புரட்சிகர" அரசியலாக கற்பனை செய்து கொண்டு, காட்டிக்கொடுப்பதையே தங்கள் அரசியலாக முன்நகர்த்துகின்றனர்.

எமது அரசியல் தவறு என்றால் அதை மறுத்து சரியான அரசியலை முன்வைக்கவும், செயல்படுத்தவும் முடியும். அது மட்டும் தான் சரியானது கூட. இல்லை எமது அரசியல் சரி என்றால், அதை முன்னெடுக்கும் நபர்கள் தான் பிரச்சனை என்றால், அந்த அரசியலை முன்வைத்து சுயாதீனமாக அவர்கள் இயங்க வேண்டும்.

இவ்விரண்டையும் செய்யாது சரியான அரசியலை எதிர்ப்பது இன்று வெளிப்படையானது. தாங்கள் கைவிட்டுவிட்ட இந்த அரசியலை, அழித்தொழிக்க அமைப்பைப் பற்றியும் தனிநபர்கள் பற்றியும் இட்டுகட்டும் அவதூறுகளின் முடிவு என்ன? காட்டிக்கொடுப்புதான். கடந்த காலத்தில் அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத போது, அமைப்பு பற்றியும் தனிநபர்கள் பற்றியுமான அவதூறுகளைச் செய்தனர். இறுதியில் தனிநபர்களைக் கொன்றும் அமைப்பை அழித்தும் விடுவதையுமே அரசியல் நடைமுறையாக மாற்றினர்.

இன்று அதை நோக்கி பயணிப்பதையே, எமக்கு எதிரான அரசியல் எதிர்வினைகளாக வெளிப்படுத்துகின்றனர். இதை வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் செய்கின்ற ஒரு சதி கும்பலான, மூடிமறைத்த பல அடுக்குகளில் இது அங்குமிங்குமாக அரங்கேறுகின்றது.

ஒற்றைவரியில் முத்திரை குத்தி "துரோகி" "தியாகி" ஆக்கிய அரசியல் பாரம்பரியத்தில் வந்த அரசியல் இது. இன்று எமக்கு எதிராகத் தொடருகின்றது. எமது அரசியலை "ஏகாதிபத்தியத்தனம் என்றும் " "மாபியாத்தனம் என்றும் " "புலி அரசியல் என்றும்" "அரசு ஏஜண்டுகள்" "லும்பன் தனம் என்றும்" இப்படி எம்மை பற்றி பலவாக முரண்பட்ட வகையில் கூறும் இவர்கள், இதே பாணியில் இந்த அமைப்பில் உள்ள தனிநபர்கள் பற்றி முன்னுக்கு பின் முரணாக இட்டுக்கட்டியும் அவதூறுகளை முன்வைக்கின்றனர்.

எமது அரசியல் பற்றியும், தனிநபர்கள் பற்றியும் எதுவாக இருந்தாலும், அதற்கு அடிப்படையும் ஆதாரமுமற்ற அவதூறாக புனைந்து முன்வைக்கின்றனர். அரசியல் ரீதியாக அவர்கள் இழிந்து சீரழிந்து வருவதன் அரசியல் வெளிப்பாடு இது. இப்படி தங்களைத் தாங்களே அம்பலப்படுத்திக்கொள்ளும் அரசியல் கோமாளித்தனத்தை விட, எம் அரசியல் வளர்ச்சிக்கு உதவ எதிர் அரசியல் விவாதத்தை எமக்கு எதிராக நடத்த முடியும். அதுதான் அவர்களைப் பொறுத்தவரையில் சரியான அரசியலாக இருந்தால், அவர்களை அரசியல் ரீதியாக முன்னுக்கு கொண்டுவரும்.

அப்படி ஒரு மாற்று அரசியல் அவர்களிடம் இல்லை என்பதுதான், அமைப்பு மற்றும் அதில் உள்ள தனிநபர்கள் பற்றிய அவதூறுகள். இது மறைமுகமான காட்டிகொடுப்பை அரசியலாக தேர்ந்தெடுக்கின்றது. இந்த அரசியல் சீரழிவு இறுதியில் நேரடியாக காட்டிக்கொடுப்பதையே அவர் தம் அரசியலாக்கிவிடும். இது தான் இதன் இறுதி இலக்காக மாறிவிடும்.

 

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

31.12.2012

Last Updated on Monday, 31 December 2012 20:44