Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் உயிர் வெந்து சாகும்

உயிர் வெந்து சாகும்

  • PDF

சிறுநண்டு மணல் மீது
படம் ஒன்று கீறும்
சிலவேளை இதை வந்து
கடல் கொண்டு போகும்.

கறிசோறு பொதியோடு
தருகின்ற போதும்
கடல் மீதில் இவள் கொண்ட
பயம் ஒன்று காணும்.

வெறுவான வெளி மீது

மழை வந்து சீறும்
வெறி கொண்ட புயல் நின்று
கரகங்கள் ஆடும்.

நெறி மாறுபட நூறு
சுழி வந்து சூழும்
நிலையான தரை நீரில்
இலை போல் ஈடாடும்.

இருளோடு வெளியேறி
வலை வீசினாலும்
இயலாது தர வென்று
கடல் கூறல் ஆகும்.

ஒரு வேளை முகில் கீறி
ஒளி வந்து வீழும்
ஒரு வேளை துயர் நீள
உயிர் வெந்து சாகும் -     மகாகவி உருத்திரமூர்த்தி

சிங்கம் அண்ணன் ஒரு கடல்தொழிலாளி. அவர் வேறு ஊர்களிற்கு போனால் தான் ஒரு  கமக்காரன் அல்லது  வியாபாரி என்று தான் சொல்லுவார். சொல்ல வேண்டும். மீன்பிடிப்பவன் என்று சொன்னால் மதிக்க மாட்டார்கள். முகத்திற்கு நேரே சொல்லமாட்டார்கள். சொன்னால் முன்பல்லு முழுக்க கழண்டு விழும்.   முதுகிற்கு பின்னால் சிரிப்பார்கள். கடிக்க ஒன்றும் இல்லையென்றாலும் ஒரு கருவாட்டுத்துண்டாவது சோற்றில் இருக்க வேண்டும். இல்லையென்றால் தொண்டைக்குழிக்குள்ளாலே சோறு இறங்காது தவிப்பார்கள் இலங்கைத்தமிழர்கள். மீன் நல்லது, ஆனால் மீன்பிடிகாரன் நல்ல சாதி இல்லை என்பது மீன் இன்றி அமையாது உணவு என்று வாழும்  உயர்சாதி பெருமக்களின் தத்துவங்களில் ஒன்று.  இதற்கு சமாந்தரமாக இன்னொரு தத்துவமுத்தை சொல்லலாம். ஆழி சூழ் உலகில், இலங்கைத்தீவில் வாழும் யாழ்ப்பாணத்தவர் யாழ்ப்பாணத்தை சுற்றியுள்ள சிறுதீவுகளில் வாழும் சகதமிழரை "தீவார்" என்று  படங்கள் கீறி, செய்முறை விளக்கம் அளித்து விஞ்ஞான ரீதியாக நிறுவுதலைச் சொல்லலாம்.


சிங்கம் அண்ணனின் கூட்டாளி  சுந்தரம் அண்ணன் படித்து முடித்து கொழும்பில் அலுவலகம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார். அந்த நாட்களில் கொழும்பிற்கு போவதென்பது சாதாரண சனங்களிற்கு சந்திரமண்டலம் போவது மாதிரி புதினமான விசயம். சுந்தரம் அண்ணனிற்கு கொழும்பில் வேலை கிடைத்த போது அவரை விட ஊரில் இருந்த அவரது நண்பர்களே அதிகம் சந்தோசப்பட்டனர்.  தாங்களும் கொழும்பிற்கு போய் தங்குவதற்கு ஒரு சினேகிதன் இருக்கிறான் என்ற சந்தோசம். சிங்கம் அண்ணனும் ஒருநாள் யாழ்தேவியில் ஏறி கொழும்பு போய்ச்சேர்ந்தார். கோட்டை புகையிரத நிலையத்தில் வைத்து பெட்டியை கையில் வாங்கும் போதே சுந்தரம் அண்ணன் சொல்லி விட்டார் மறந்துங்கூட சாதிக்கதை, தொழில்கதை ஒருத்தரிடமும் கதைக்காதே, பிறகு ஒருத்தனும் மதிக்க மாட்டான்கள்.

அன்றிரவு சுந்தரம் அண்ணன் தன்னுடன் வேலைபார்க்கும் இருமரபும் துய்ய வந்த பெருமகன் ஒருவர் சாப்பிடக் கூப்பிட்டதால், சிங்கம் அண்ணனையும் கூட்டிக்கொண்டு போனார். சாப்பாட்டுக்கொண்டு இருக்கும் போது இறால் பொரியல் வர, வாழ்க்கையில் இறாலை கண்ணாலேயே காணாதவரைப்போல முகத்தை வைத்துக்கொண்டு "இது என்ன பூச்சி" என்று கேட்டார் சிங்கம் அண்ணன். ஓவர் நடிப்பில் சிவாஜியையே மிஞ்சி விட்டார் அண்ணன்.

சிங்கம் அண்ணன் தண்ணி அடிச்சாரென்றால் அவரைக் கட்டுப்படுத்த முடியாது. அவருடைய பெரியப்பா செத்துப்போன முப்பத்தொராம் நாள் அந்திரட்டிக் கிரியைகள் செய்ய விஸ்வம் அய்யர் வந்தார். பாய், தலகணி, மரக்கறி, பழங்கள், வேட்டி, சால்வை, செருப்பு என்று வரிசையாக தட்சணை வைத்தார்கள். மந்திரம் ஓதி, தட்சணை வாங்கி களைச்சுப் போன அய்யருக்கு யானை மார்க் சோடா கொடுத்தார்கள். சோடாப் போத்தல் சொண்டிலே படாமல் தூக்கிப்பிடிச்சு குடிச்சார் அய்யர். "அய்யாவுக்கு பசிக்கும் சாப்பாட்டைக் குடுங்கோ" என்றார் சிங்கமண்ணன். சபையே கலங்கிப் போச்சு. அய்யர் காதிலே விழாத மாதிரி சிரிச்சுக் கொண்டு வெளிக்கிட்டார். கனகுமாமா பல்லைக்கடிச்சுக் கொண்டு உனக்கென்னடா விசர் பிடிச்சுப்போட்டுதோ என்று அண்ணனைக் கேட்டார். யாரோ செய்த சோடாவைக் குடிக்கிறார். நாங்கள் செய்த சாப்பாட்டை சாப்பிட முடியாதோ? வேணுமென்டால் சோடாவை சொண்டிலே படாமல் குடிச்சமாதிரி, சோற்றை வாயிற்குள்ளே உருட்டி எறியிறேன் சாப்பிடச் சொல்லுங்கோ என்றார் அண்ணன்.

ஆடிக்கலவரத்திற்கு பிறகு கடல் முழுதும் கடல்படை. மீனைப் பறித்தார்கள். மீனவன் உயிர் பறித்தார்கள். அலைகடல் துரும்பாச்சு வாழ்க்கை. யாழ்ப்பாணத்தை விட்டு தென்மராட்சி, தென்மராட்சியை விட்டு வன்னி என்று போர் துரத்தியது. தோணி, வலை எல்லாவற்றையும் அந்தந்த இடத்திலேயே போட்டு விட்டு போனதில் ஒன்றுமில்லாமல் போனது. தொழிலாளிகள் சோர்ந்து போகவில்லை. பள்ளிக்குடா, பூநகரி என்று வன்னிக்கரைகளில் மறுபடி தொழில் தொடங்கினார்கள். கொஞ்சக்காலம் நிம்மதியாகப் போன சீவியத்தில் மறுபடி சோளகக்காத்து அடித்தது. சண்டை, உக்கிரமான சண்டை. குஞ்சு குருமன்களை கூட விடாமல் பலியெடுத்த சண்டை. மூத்தமகனிற்கு கால் போச்சு. மனிசியிற்கு கண் போச்சு. எதற்கும் கலங்காத தொழிலாளி கதறி அழுதான். கட்டிப்பிடிச்சு ஆறுதல் சொல்ல ஆருமேயில்லை. ஊரே அழும் போது யாரிற்கு, யார் ஆறுதல் சொல்வது.

பசி, பட்டினி, சித்திரவதை என்று முகாம் வாழ்க்கை போனது. ஊருக்கு போங்கோ என்று ஒருநாள் அனுப்பி வைத்தார்கள். அத்தனை வருடத்தில் ஊர் தலைகீழாக மாறியிருந்தது. எத்தனையோ தோணிகள் இருந்த இடத்தில் ஒன்றிரண்டு வள்ளங்களில் நாலைந்து கிழவர்கள் மட்டும் தொழில் செய்து கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் கட்டிடவேலை, தச்சுவேலை, வயலில் கூலி வேலை என்று போய்க்கொண்டிருந்தார்கள். சிங்கம் அண்ணன் கட்டிடவேலைக்குப் போனார். வள்ளத்திற்கும், வலைக்கும் ஒருபங்கு போக மிச்சத்தை சமபங்காக பிரித்து எடுத்த கடல்தொழிலாளியாக இருந்தவர் கைநீட்டி கூலி வாங்கிய போது மனம் உடைந்து போனார். எப்போதாவது குடித்தவர், கல்லுடைத்த களைப்பு தீர ஒவ்வொரு நாளும் கந்தசாமியிடம் கள்ளு வாங்கி குடிக்க தொடங்கினார்.

எத்தனையோ வருசத்திற்கு பிறகு வாசிகசாலையில் ஆண்டுவிழா நடந்தது. ஊரே கூடி சந்தோசமாக இருந்தது. பழைய கூட்டாளிகள் எல்லாம் சேர்ந்து தண்ணி அடித்தார்கள். கலவரத்திற்கு முந்தைய பழைய வாழ்க்கைக்கு போன மாதிரி இருந்தது. பிரதம விருந்த்தினராக மந்திரி வாறார் என்றார்கள். பாதுகாப்புபடை, வால்பிடிப்பு கூட்டம் புடைசூழ மந்திரி பளபளத்த காரிலே இறங்கி வந்தார். ஜனாதிபதி பயங்கரவாதத்தை ஒழித்து விட்டார். இரத்த ஆறு இனி ஓடாது. பாலாறும், தேனாறும் தான் பாய்ஞ்சு ஓடும் என்றார். ஈழம், ஈழம் எண்டு சொல்லி அண்டைக்கு கத்தினவன் இவன், இண்டைக்கு ஜனாதிபதி மயிர்புடுங்குவான் எண்டு கதைக்கிறான் என்று சிங்கம் அண்ணனின் காதிலே கிசுகிசுத்தான் தேவன்.

தொலந்து போன வாழ்க்கையும், இறந்து போன சனங்களும் சிங்கம் அண்ணனின் கண் முன்னே வந்து போனார்கள். "இவ்வளவு சனத்தையும் கொன்றுபோட்டு விட்டு ஜனாதிபதியும், நீயும் புடுங்குவோம் எண்டு கதைக்கிறீயே, நீயெல்லாம் ஒரு மனிசனா?" என்று மண் அள்ளி எறிந்து தூற்றினார். தேவன் கையை பிடிச்சு அடக்கப்பார்த்தான். சுந்தரம் அண்னன் வாயைப்பொத்த முயன்றார். மீசையை முறுக்கின படி சூரன் மாதிரி மார்பை விரிச்சுக்கொண்டு நின்றார் அண்ணன்.

அடுத்தநாள் காலையில் வயலடியில் சிங்கம் அண்ணனின் குண்டு பாய்ந்த உடல் விழுந்து கிடந்தது.

-1/9/2012

Last Updated on Saturday, 24 November 2012 20:10