டிராட்ஸ்கிகள் தமது சொந்த அரசியலையே, ஸ்டாலினின் அவதூறுகளில் இருந்துதான் கட்டியமைக்கின்றனர். அவர்களுக்கு இதைவிட வேறு வழியிருப்பதில்லை. இதை மூடிமறைக்க சொற்களில் “ஸ்டாலினை வரலாற்றுப் போக்குகள், அதிகார அமைப்பின் இயக்கத்துக்குள் வைத்து புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, தனித்தனித் சம்பவங்களைப் பிரித்தெடுத்து நோக்குவதும் அதனடிப்படையில் விளக்கவதும் மார்க்சியமல்ல” என்ற கூறியே, அவதூறுகளை தொகுத்து வெளியிடுகின்றனர். இந்த தொகுப்பு என்பது அரசியலற்ற வெற்று வேட்டுகளின், எதிர்புரட்சியில் கொல்லப்பட்டவர்களின் பட்டியலைக் கொண்டு தூற்றப்படுகிறது. இங்கு தனிதனிச் சம்பவங்களை அல்ல என்ற கூறிய போதும், தனி தனி சம்பவங்களையே அவதூறின் தொகுப்பாக முன்வைக்கிறார்கள். அதிகாரம் என்றால் என்ன என்ற அடிப்படை அரசியலைக் கூட விவாதிக்க வக்கற்றவர்கள், அவதூறுகளின் தொகுப்பே மார்க்சியம் என்கின்றனர். எந்தவிதமான அரசியல் அடிப்படையுமற்ற பட்டியலைக் கொண்டு ஏகாதிபத்தியம் எதைச் செய்கின்றதோ, அதை அப்படியே டிராட்ஸ்கிகளும் காவடி எடுக்கின்றனர். இதைத் தான் நாம் மேலே டிட்டோவின் முதலாளித்துவ மீட்சி சார்ந்த போக்குக்கு எதிரான ஸ்டாலின் நிலையையும், முதலாளித்துவ மீட்சிக்கு சார்பான டிராட்ஸ்கிகள் நிலையையும் ஓப்பிட்டு ஆராய்ந்தோம். “ஸ்டாலினை வரலாற்றுப் போக்குகள், அதிகார அமைப்பின் இயக்கத்துக்குள் வைத்து புரிந்து கொள்ளவேண்டுமே தவிர” என்று கூறி, தனிச் தனி சம்பவகளால் தொகுக்கப்பட்டு, அவை அவதூற்றல் நிரப்பபட்டுள்ளது. ஈராக் ஆக்கிரமிப்பை அமெரிக்கா நியாயப்படுத்த எதை எல்லாம் செய்ததோ, அதுபோன்றே டிராட்ஸ்கிகள் சமகாலம் வரை செய்கின்றனர்.
ஸ்டாலினை அதிகார அமைப்பின் இயக்கத்துக்குள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுவதன் மூலம் அடிப்படை, மார்க்சியம் மறுக்கப்படுகிறது. அராஜகவாத கோட்பாட்டு அடிப்படையில் நின்று, டிராட்ஸ்கிகளால் ஸ்டாலின் தூற்றப்படுகின்றார். பாட்டாளி வர்க்கம் ஒரு வர்க்கப் புரட்சியில் அரசை கைப்பற்றம் போது எதைச் சாதிக்கின்றது? முதலில் அதிகாரத்தை பெறுகின்றது. முதலாளித்துவ வர்க்க அதிகாரத்துக்கு பதில், பாட்டாளி வர்க்க அதிகாரத்தை பெறுகின்றது. ஆனால் டிராட்ஸ்கிகள் அதிகாரத்தையே கொச்சைப்படுத்தி அதற்கு எதிராக இருக்கும் போதே, அவர்களின் இறுதி இலட்சியம் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதை மறுப்பதை ஆதாரமாக கொள்கின்றது. ஏகாதிபத்தியம் போல் ஸ்டாலினை விமர்சிப்பவர்கள், மார்க்சியத்தின் அடிப்படையை ஏற்றுக் கொள்வதில்லை. அதைப் பற்றி வாய் திறப்பதில்லை. மாறாக தனிமனித உரிமை பற்றியும், ஜனநாயகம் பற்றியும் மட்டுமே ஒருதலைபட்சமாக விளக்கும் அவர்கள், இதில் மட்டும் சிறிய இடைவெளிகளில் தமக்கிடையில் வேறுபடுகின்றனர். இதனால் முரண்பாடு உள்ளது போல் தம்மைத் தாம் வேறுபடுத்துகின்றனர். மார்க்சியம் இவற்றில் நேர் எதிர்த் தன்மையை கொண்டே செயல்படுகின்றது.
மார்க்சியம் என்பது தெளிவாகவும் துல்லியமாகவும் அனைத்து துறையிலும் வர்க்க அடிப்படையில் பகுத்தாய்வு செய்கிறது. வர்க்கப் போராட்டம் என்பது இடைவிடாத தொடர்ச்சியான ஒரு நீடித்த இயக்கமாகும். வர்க்கங்கள் நீடிக்கும் வரை வர்க்கப் போராட்டம் என்பது புரட்சிக்கு முன்பு பின்புமாக தொடரும். இது ஒரு வர்க்க அடிப்படையாகும். இந்த வர்க்கப் போராட்டம் அமைதியாகவும், வன்முறை சார்ந்தும் நீடிக்கும் ஒரு தொடர் நிகழ்ச்சியாகும். இங்கு ஜனநாயகம் அனைத்து வர்க்கத்துக்கும் கிடையாது. பாட்டாளி வர்க்கத்துக்கு மட்டும் தான் ஜனநாயகம் உண்டு. இது எந்த தனிமனிதனுக்கு விதிவிலக்கல்லாதது. சமூக எல்லைக்குள் வெளியில் தனிமனிதனுக்கு ஜனநாயகம் கிடையாது. சமூகத்துக்குத் தான் ஜனநாயகம். இதைத் தாண்டி இங்கு தனிமனிதனுக்கு இருப்பதாக கூறுவது, சமூகத்தை விட அதிகமாக கோருவதைக் கடந்து வேறு விளக்கம் பெறாது. புரட்சியின் எற்ற இறக்கத்துக்கு இணங்க, இடைப்பட்ட வர்க்க பிரிவுகளுக்கு ஜனநாயகம் வழங்கப்படுவது உண்டு. அது பாட்டாளி வர்க்க நலனுக்கு இசைவாக மட்டும் தான். இது பாட்டாளி வாக்கப் போராட்டத்தை பலப்படுத்தவும், பாதுகாக்கவும் தான் வழங்கப்படுகின்றது. ஜனநாயகம் எல்லா வர்க்கத்துக்கும் இல்லை என்கின்ற போதே, அது மற்றைய வர்க்கங்கள் மேலான சர்வாதிகார அமைப்பாக கட்டமைக்கப்படுகின்றது. இவை மார்க்சியத்தின் அடிப்படையான அரசியல் உள்ளடகமாகும். இதை ஏகாதிபத்தியம் எற்றுக் கொள்வதில்லை. அதே போல் டிராட்ஸ்கிய வாதிகளும், அனைத்து வகை பினாமிகளும் கூட எற்றுக் கொள்வதில்லை. இதில் இவர்கள் அனைவரும் கோட்பாட்டு ரீதியில் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை கையாளுகின்றனர். அனைத்து வர்க்கத்துக்கும் ஜனநாயகம் என்ற உள்ளடகத்தில் இருந்தே, ஸ்டாலின் அவதூறுகள் கட்டப்படுகின்றன. அவதூறுகள் தேடப்பட்டு, அவை முன்வைக்கப்படுகின்றன. ஸ்டாலின் பற்றிய பிரச்சனையில், இதைப் பற்றி பேச மறுத்து மார்க்சியத்தை புதைகுழிக்குள் திட்மிட்டே தள்ளி மூடுகின்றனர்.
ஜனநாயகம் என்றால் என்ன? ஜனநாயகம் எப்போதும் எங்கும் ஒரு வர்க்க சர்வாதிகாரம் தான். இதற்கு வெளியில் ஜனநாயகம் இருப்பதில்லை. மற்றைய வர்க்கங்கள் ஜனநாயத்தின் ஒரு கூறைப் பயன்படுத்துகின்றது எனின், அது வெறுமனே ஒரு சலுகை மட்டும் தான். நிலவும் வர்க்க சர்வாதிகாரத்தை மூடிமறைக்கவும், சர்வாதிகாரத்தை நீடித்து பாதுகாக்கவும் வழங்கும் ஒரு இடைநிலை வடிவம் தான். இது பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துகும், முதலாளித்துவ வர்க்க ஜனநாயகத்துக்கும் பொருந்தும். ஜனநாயகம் என்பது நிச்சயமாக, ஒன்றுக்கு மறுக்கப்படுகின்ற வரை தான் அது உயிர் வாழ்கின்றது. இது அடிப்படையான மார்க்சிய விதியும் கூட. அனைவருக்கும் ஜனநாயகம் உள்ள போது, ஜனநாயகம் என்ற உள்ளடக்கம் சமுதாயத்தில் இருந்தே இல்லாமல் போய்விடுகின்றது. இது வர்க்கங்கள் அற்ற சமுதாயத்தில் மட்டும் தான் சாத்தியம். மறுக்கப்படும் ஜனநயாகம் உள்ளவரை, ஜனநாயகம் எப்போதும் எங்கும் விதிவிலக்கின்றி ஒரு வர்க்கத்துக்கு மட்டுமே சேவை செய்கின்றது. இந்த அடிப்படை உள்ளடகத்ததை ஏகாதிபத்தியம் மூடிமறைக்கின்றது. அதே போல் டிராட்ஸ்கிய ஏகாதிபத்திய கோட்பாட்டு எடுபிடிகள் கூட திட்டமிட்டே அதைப் பூசிமொழுகுகின்றனர். இதையே டிட்டோ – குருச்சேவ் கும்பல் தனது முதலாளித்துவ மீட்சிக்கான செங்கம்பளமாக பயன்படுத்த டிராட்ஸ்கிகள் அதை விரித்தனர்.
ஜனநாயகத்தின் உட்கூறுகளையும், அதன் பண்புகளையும் தெளிவாகவே, எதிர் எதிரான இரண்டு சமுதாயப் போக்கிலும்; துல்லியமாக வெளிப்படுத்தி நிற்கின்றது. பாட்டாளி வர்க்க சமுதாயத்தில், சுரண்டல் வர்க்கத்துக்கு சுரண்டும் ஜனநாயகம் மறுக்கப்படுகின்றது. இதுபோல் முதலாளித்துவமும், அதில் இருந்து உருவாகும் பாசிசமும், சுரண்டப்படும் வர்க்கத்தின் ஜனநாயகத்தை மறுக்கின்றது. இந்த இரண்டு போக்கிலும் அதன் பண்பியல் கூறுகளை எதார்த்தத்தில் இலகுவாக புரிந்து கொள்ளவைக்கின்றது. வர்க்கப் போராட்டம் கூர்மையடைந்து, சுரண்டும் வர்க்க பாசிசம் மூலம் மட்டுமே பாட்டாளி வர்க்கத்தை ஒடுக்கி சுரண்ட முடியும் என்கின்ற ஒரு நிலை கொண்டிராத எல்லா நிலையிலும், சுரண்டும் சர்வாதிகார ஜனநாயகம் எப்போதும் நிர்வாணமாக இருப்பதில்லை. அது தன்னை மூடிமறைத்து கொள்கின்றது. அது சுரண்டலை தொடர்ந்தும் அமைதியாக நடத்துவதற்காக மற்றைய வர்க்கத்துக்கு சலுகை வழங்குவதன் மூலம், ஜனநாயகத்தை அழகு படுத்துகின்றது. இந்த ஜனநாயகம் ஒரு முதலாளித்துவ சர்வாதிகாரமாக இருப்பதை இலகுவாக கண்டு கொள்ளமுடியாதபடி, அதை மூடிமறைக்கின்றது. சமுதாயத்தில் இந்த போலித்தனத்தை யார் யாரெலாம் அடையாளம் காணவில்லையோ, அவர்கள் தான் தனிமனித உரிமை பற்றியும், தனிமனித சுதந்திரம் பற்றியும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு எதிராக கூச்சல் எழுப்புகின்றனர். தன்னை மூடிமறைத்து அழகுபடுத்தி நிற்கும் முதலாளித்துவ சர்வாதிகாரத்தில் நிலவும் வர்க்கப் போராட்டம் கூர்மையாகின்ற போதே, சுரண்டலை தொடர்வதற்காக பாசிசத்தை அடிப்படையாக கொண்ட சர்வாதிகாரமாக தன்னை நிர்வாணப்படுத்துகின்றது. பாட்டாளி வர்க்கம் ஒட்டு மொத்தமாகவே இந்தக் கபடத்தை அம்பலம் செய்தே வர்க்கப் போராட்டத்துக்கு தயார் செய்கின்றது.
மனிதனைச் சுரண்டுவது சுதந்திரமான ஜனநாயக உரிமையாகிய போது, இந்த ஜனநாயகத்துடன் ஒட்டிப் பிறந்த தனிமனித உரிமை, தனிமனித சுதந்திரம் கூட, இந்த வர்க்க அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதற்கு வெளியில் அல்ல. எல்லோருக்கும் தனிமனித சுதந்திரம், தனிமனித உரிமை இருக்குமாயின், இது விவாத்துக்குரிய பொருளாகவே இருப்பதில்லை. இந்தப் பிரச்சனை சமுதாயத்தில் இருந்தே மறைந்து விடுகின்றது. தனிமனித உரிமை என்பதும், தனிமனித சுதந்திரம் என்பதும் வர்க்க சமுதாயத்தில் மறுக்கப்படும் போதே, அது நீடிக்கின்றது. இது எப்போதும் வர்க்க சமுதாயத்தில் ஒருவருக்கு இல்லாத போது மட்டும் தான், மற்றொருவருக்கு இருக்கின்றது. இதை புரிந்து கொள்ளாத வரை, புரிந்து கொள்ள மறுக்கும் வரை, பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக வைக்கும் கூச்சல்கள், பாட்டாளி வர்க்கத்துக்கு இந்த உரிமைகள் இருக்க கூடாது என்பதைத் தாண்டி விளக்கம் பெறாது. தனிமனித உரிமை, தனிமனித ஜனநாயகம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திலும், முதலாளித்துவ ஜனநாயக அமைப்பிலும் ஒரேவிதமாகவே எதிர்தரப்புக்கு மறுப்பதாகவே உள்ளது. ஆனால் வெவ்வேறு வர்க்கங்கள் இந்த உரிமையை பெறுகின்றது. இதனால் இது சர்வாதிகார அமைப்பாக உள்ளது.
ஜனநாயகம், சுதந்திரம், தனிமனித உரிமைகள் என அனைத்தும் வர்க்க எல்லைக்கு அப்பால் நீடிக்க முடியாது. இதை எற்க மறுப்பவர்கள் தனிமனித நிகழ்வுகளை காட்டி அதை அரசியலாக்கும் போது, முதலாளித்துவ ஜனநாயகத்தின் கடைக் கோடியில் நின்று கோசம் போட்டு சோரம் போவதைத் தாண்டிவிடுவதில்லை. சுரண்டும் ஜனநாயகம் உருவாக்கியுள்ள மூலதனத்தின் அதிகாரத்தை தகர்க்க போராடும் போது, பாட்டாளி வர்க்கத்தின் ஜனநாயகம், தனிமனித உரிமை எதையும் முதலாளித்துவ ஜனநாயகம் அனுமதிப்பதில்லை. இதுபோல் பாட்டாளி வர்க்க ஆட்சியில் சுரண்டலைக் கோரும் ஜனநாயகம் மற்றும் மக்களை பிளவுபடுத்தும் ஜனநாயகம் உள்ளிட்ட தனிமனித உரிமைகள் எதையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அனுமதிப்பதில்லை. இந்த எதிர்தெதிரான வர்க்கப் போராட்டத்தின் நீடித்த நிகழ்ச்சி நிரலை நிராகரித்தபடி தான், ஸ்டாலின் பற்றிய அவதூறுகள் கட்டப்படுகின்றன. ஸ்டாலின் அவதூறுகளை கட்டமைக்கும் போது, அரசியல் உள்ளடக்கம் குறித்த கருத்தை முன்வைக்கவோ விமர்சிக்கவோ மறுக்கின்றனர். கூர்மையாக நிதானமாக அவதானிக்கும் யாரும், ஸ்டாலின் அவாதூறுகளில் இந்த அடிப்படையில் நின்று விவதிப்பதில்லை என்பதைக் கண்டு கொள்ள முடியும். மார்க்சிய அடிப்படைக்குள் தவறுகள் நிகழும் போது, விமர்சனம் சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்கி அதை திருத்துவதில் மார்க்சியவாதிகளாகிய நாங்கள் அவற்றை என்றும் புறம் தள்ளியது கிடையாது.
அதேநேரம் நாம் அதிகாரத்தை கைப்பற்றவும், அதை உயிரிலும் மேலானதாக பாதுகாக்கவும் போராடுவோம். இதை மார்க்சிய எதிரிகள் அதை “ஸ்டாலினிசம்” என்றால் அதற்காகவும் நாம் போராடுவோம். சுரண்டு வர்க்கத்தின் மேல் அதிகாரத்தை கையாள மறுக்கின்ற, முதலாளித்துவ எடுபிடிகளின் எல்லா சொற்புனைவுகளுக்கும் நாம் நேரடியான எதிரிகள் ஆவோம். “ஸ்டாலினிசம்” என்று யார் இதைச் சொல்லுகின்றார்கள். கூர்மையாக அவதானிக்கும் யாரும் ஏகாதிபத்திய மதிப்பீடுகளிலும் சரி, டிராட்ஸ்கிய மதிப்பீடுகளில சரி, இது போன்று குலைக்கின்ற பலரும் ஒரே விதமாக மதிப்பிடவும், ஒன்றுபட்டு நிற்பதை அவதானிக்க முடியும். இதை கூர்மையாக வேறுபடுத்த முயலும் யாரும், கோட்பாட்டு ரீதியாக வேறுபாடு இருப்பதில்லை என்ற உண்மையைக் நிதர்சனமாக காணமுடியும். இவர்கள் அனைவரும் தனிமனித உரிமை, தனிமனித சுதந்திரம், ஜனநாயகம் என்ற நெம்புகோலை பிடித்துக் கொண்டு, பாதிக்கப்பட்டவர்களின் பெயரில் ஒரே விதமாக குரைக்கின்றனர். பாதிக்கப்பட்டவர் பட்டியலை ஏகாதிபத்தியம் எப்படி வெளியிட்டதோ அதை அப்படியே வாந்தி எடுத்தவர்கள், அவை இன்று பொய்யாகும் போது மௌனமாக அதை காலால் புதைத்தபடி தான் புதிதாக அவதூறுகளை அப்புகின்றனர். புதிய அவதூறுகளை ஏகாதிபத்திய வாந்திகளை மெண்டு மீளக் கக்குவதை கடந்து எதுவும் நகரவில்லை. கூர்மையாக இரண்டையும் அவதானிக்கும் யாராலும், இதை துல்லியமாக இனம் காணமுடியும்.
ஏகாதிபத்திய எலும்புகளை வாயில் கவ்வியபடி குலைக்கும் இவர்கள், கட்சி பற்றிய அடிப்படையான உள்ளடகத்தையே கொச்சையாக மாறுக்கின்றனர். கட்சியின் வர்க்க உள்ளடகத்தை மறுத்து தனிமனிதர்கள் சார்ந்த அவதூறுகளை கட்டமைக்கும் போது, இயங்கியல் அடிப்படை விதியையே மறுப்பது அவசியமாகிவிடுகின்றது.
1. ஒருவன் கட்சியில் சேர்ந்தால் ஆயுள் பூராவும் அவனை கம்யூனிஸ்டாகவே இருப்பான் என்ற இயங்கியல் மறுப்பை முன்னெடுத்து அவதுறை மேலும் மெருகுட்டுகின்றனர்.
2. கட்சியில் உள்ள கருத்துச் சுதந்திரம் என்பது கோட்பாடு கடந்த முதலாளித்துவ உரிமைவரை உள்ளதாக காட்டி, அதை பாட்டாளி வர்க்கம் மறுப்பது ஜனநாயக விரோதம் என்ற காட்டுகின்றனர். இதை வன்முறை சார்ந்த, சாராத இரு நிலைலும் அதிகாரத்தை கைப்பற்றும் உரிமை வரை நீட்டி, பாட்டாளி வர்க்க அதிகாரத்தை கைப்பற்றும் முதலாளித்துவ உரிமை வரை கட்சி கண்ணோட்த்தைச் சிதைத்து பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக அவதூறுகளை கட்டமைக்கின்றனர்.
3. கட்சியின் ஜனநாயக மத்தியத்துவம் என்பது இரகசிய சதிக் குழுக்களை கட்டவும், கட்சிக்குள் கட்சியை கட்டும் உரிமையை உள்ளடக்கியது என்ற எல்லை வரை காட்டி அவதூறுகளை கட்டமைக்கின்றனர்.
இப்படி பல. உதாரணமாக டிராட்ஸ்கியம் இதை எப்படி நியாயப்படுத்துகின்றது எனப் பார்ப்போம். 1950 களின் பின் “… கட்சியுள் சியோனிசக் குழுக்களை தேடுதல் என்ற தந்திரம், ஸ்டாலின் யூதர்களை கட்சியில் இருந்து துடைக்கும் நடவடிக்கையாகும். யூத அடியைச் சேர்ந்த தோழர்கள் என்ற கௌவுரவப் பெயர்களில் யூதக் கம்யூனிஸ்டுகள் கண்காணிக்கப்பட்ட கேவலங்கள் நடந்தன. யூதர்களின் அமைப்பான வவ்வன் மீதும் தாக்குதல் நடந்தது” என்று தூற்றும் போது, கட்சியில் யூத அடையளங்களுடன், யூத அமைப்பின் பெயரிலும் இருப்பதை அங்கிகாரிப்பதே சர்வதேசியம் என்கின்றனர் டிராட்ஸ்கியவாதிகள். யூதம் ஒரு படுபிற்போக்கான பார்ப்பனியம் போன்ற அடிப்படைவாத மதவாதமாகும். இதற்கு வெளியில் யூத கோட்பாடுகள் கிடையாது. வேறு விளக்கம் இதற்கு வெளியில் கிடையாது. பார்ப்பனியம் எப்படி தனக்கொரு மொழியையும், தனக்கொரு மதத்தையும் கொண்டு மக்களை அடக்கி செயல்படுகின்றதோ, அப்படித்தான் யூதமும். 1948 இல் பலஸ்தீனப் பிரதேசத்தில் பிரிட்டிஸ் மற்றும் அமெரிக்கா ஏகாதிபத்தியத் துணையுடன், மத்திய கிழக்கில் ஒரு பேட்டி ரவுடியாக இஸ்ரேல் என்ற நாட்டை பலாத்காரமாக யூத முதலாளிகளும் எகாதிபத்தியமும் சேர்ந்து உருவாக்கிய போது அதை சோவியத்யூனியன் எதிர்த்தது. இதன் போது யூத மத அடையாளங்களுடன் சோவியத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதையும், கட்சியில் இருக்கும் யூதர் அடையாளத்துடன் இஸ்ரேலை ஆதாரிப்பதையும் கட்சி ஒருக்காலும் அனுமதிக்க முடியாது.
ஒட்டுமொத்தத்தில் பாட்டாளி வர்க்கம் கைகட்டி மௌனமாக தனிமனித உரிமையின் பெயரிலும், தனிமனித ஜனநாயகத்தின் பெயரிலும் இவற்றை அனுமதிக்க வேண்டும் என்கின்றனர். இது இல்லாத வரை, இவற்றை மனித விரோதக் குற்றமாக காட்டுகின்றனர். இதை மறுத்த ஸ்டாலின் தூற்றப்பட்டார். பாட்டாளி வர்க்கம் ஸ்டாலின் பெயரால் இழிவாடப்படுகின்றது. உருக்கு போன்ற பாட்டாளி வர்க்க கட்சி உள்ளடக்கத்தை கோட்பாட்டு ரீதியாக சிதைப்பதில் இருந்தே, தமது முதலாளித்துவ சொந்த வர்க்க அவதூறுகளை பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக முன்வைத்து நியாயப்படுத்த முடிகிறது.
நுணுக்கமாக தொடரும் அவதூறுகளை அவதானித்தால், ஏகாதிபத்தியம் பாட்டாளி வர்க்க சர்வாதிகரத்தை எப்படி கொச்சைப்படுத்துகின்றதோ, அப்படியே இவர்களும் கொச்சைப்படுத்துகின்றனர். இதில் வேறுபாடுகள் இருப்பதில்லை. ஏகாதிபத்தியம் எப்படி எதை எதையெல்லாம் ஸ்டாலினுக்கு எதிராக ஏற்ற இறக்கத்துடன் அவதூறூக கட்டமைக்கின்றதோ, அதையே இந்த டிராட்ஸ்கிய கனவான்களும் மீள வாந்தி எடுக்கின்றனர். மற்றவர்களும் தான். ஸ்டாலினை தூற்றும் இவர்கள் அதற்கு பிந்திய குருச்சேவ், பிரஸ்னேவ் முதல் கொப்பச்சேவ் வரையான காலத்தை தூற்றுவதில்லை. சிற்சில முரண்பாட்டுடன் ஆதாரிப்பதும், கண்டும் காணமல் விடுவதுமே, இவர்களின் சிறப்பான ஒற்றுமையாக உள்ளது. ஸ்டாலின் கால கட்டமே, உலக மூலதனத்தின் மிக நெருக்கடியான காலகட்டமாகும். இதில் இருந்து ஏகாதிபத்தியத்தை மீட்ட குருச்சேவ், ஸ்டாலினை தூற்றினான். மார்க்சியத்தின் அடிப்படை உள்ளடகத்தையே மறுத்து, மார்க்சியத்தை சிதைத்து முதலாளித்துவ மீட்சியை நடத்தினான்.
இந்நூலின் முந்தைய பகுதிகள்
5.மார்க்சியத்தை தூற்றிய யூகோஸ்லாவியா எகாதிபத்தியத்தைப் போற்றியது - ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? பகுதி 5
4.யூகோஸ்லாவிய பொருளாதாரத்தில் முதலாளித்துவ மீட்சி -ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 4