இந்தோனேஷிய போலீசின் ஆணவத்திற்கும், நீதித்துறையின் திமிருக்கும் எதிராகத் தேய்ந்துபோன ரப்பர் செருப்புகளை ஆயுதமாக உயர்த்தியிருக்கிறார்கள், அந்நாட்டு மக்கள். குப்பைத் தொட்டிக்குப் போகவேண்டிய தேய்ந்துபோன ரப்பர் செருப்புகள், போலீசு நீதிமன்றங்களின் மீதான ஏழை மக்களின் வெறுப்பைக் காட்டும் சின்னமாக இந்தோனேஷியாவில் மாறிப் போயிருப்பதன் பின்னே, ஒரு பதினைந்து வயது சிறுவனின் வலியும் வேதனையும் அடங்கியிருக்கிறது.
14 மாதங்களுக்கு முன்பு, நவம்பர் 2010-இல், இந்தோனேஷியாவின் மத்திய சுலாவேஸி மாகாணத் தலைநகர் பாலு நகரைச் சேர்ந்த ஒரு போலீசு அதிகாரியின் ரப்பர் செருப்புகள் காணாமல் போயின. தனது செருப்பு திருடு போனதாக வழக்குத் தொடுத்தார், அப்போலீசு அதிகாரி. இவ்வழக்கை விசாரித்து வந்த பாலு நகர நீதிமன்றம், போலீசாரால் குற்றவாளியாக நிறுத்தப்பட்ட “ஏ.ஏ.எல்.” (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பள்ளிச் சிறுவனைத் திருடன் என்று தீர்ப்பளித்தது. திருடு போனதாகக் கூறப்படுவது நூறு ரூபாய்கூடப் பெறாத பழைய செருப்புதான் என்றாலும், இக்குற்றத்திற்கு நீதிமன்றம் சட்டப்படி விதிக்கக்கூடிய தண்டனை ஐந்தாண்டு சிறைவாசமாகும்.
இத்திருட்டு வழக்கை போலீசார் புனைந்த விதமும், அதனை நீதிமன்றம் விசாரித்த விதமும் ஒருபுறம் கேலிக்குரியதாகவும் இன்னொருபுறம் அதிகார வர்க்கக் கும்பலின் எதேச்சதிகாரப் போக்கையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. தனது செருப்பு காணாமல் போனவுடனேயே, அப்போலீசு அதிகாரி திருட்டு வழக்கைத் தொடுக்கவில்லை. செருப்பு காணாமல் போய் ஆறு மாதங்கள் கழித்து, தனது செருப்பைத் திருடியதாக ஒரு பள்ளிச் சிறுவனைத் திடீரெனப் பிடித்துக் கொண்ட அப்போலீசு அதிகாரி, அச்சிறுவனை போலீசு நிலையத்திற்கு இழுத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் மிருகத்தனமாகத் தாக்கினார். அச்சிறுவனின் பெற்றோர் போலீசின் இந்த அத்துமீறலுக்கு எதிராக புகார் கொடுத்தவுடனே, அச்சிறுவனின் மீது போலீசாரால் திருட்டு வழக்கு தொடுக்கப்பட்டது. அதாவது, போலீசார் தங்கள் குற்றத்தை மூடிமறைக்கப் பாதிக்கப்பட்ட சிறுவனையே குற்றவாளியாக்கினார்கள்.
இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தவுடனேயே, அச்சிறுவனை விடுதலை செய்யக் கோரி இந்தோனேஷியாவெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறத் தொடங்கின. பழைய தேய்ந்து போன, அறுந்து போன ரப்பர் செருப்புகளைப் பொதுமக்களிடமிருந்து பெற்று, அவற்றை அந்நாட்டிலுள்ள போலீசு நிலைய வாயில்களிலும், அரசு வழக்குரைஞர்களின் அலுவலக வாயில்களிலும் கொண்டு வந்து கொட்டிப் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது ஓர் இயக்கமாகவே மாறியது. பள்ளி மாணவர்கள் தமது எதிர்ப்பைக் காட்டும் விதமாக, ஷூக்களுக்குப் பதிலாக, அறுந்து போன ரப்பர் செருப்புகளை அணிந்துகொண்டு பள்ளிக்கூடத்திற்குச் சென்றார்கள்.
இத்திருட்டு வழக்கு பாலு நகர நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபொழுது, சிறுவன் திருடியதாகக் கூறப்பட்ட ரப்பர் செருப்புகள், முக்கிய சாட்சியமாக நீதிபதியின் முன் வைக்கப்பட்டன. ஆனால், செருப்பைப் பறிகொடுத்த போலீசு அதிகாரியோ, நீதிமன்றத்தில் காட்டப்பட்ட செருப்புகள் தனது செருப்புகள் அல்ல என அச்சாட்சியத்தை மறுத்தார். எனினும், பாலு நகர நீதிமன்றம், போதிய சாட்சியம் எதுவுமின்றியும், பொதுக்கருத்தை மீறியும், அச்சிறுவனைத் திருட்டுக் குற்றவாளியென அதிகாரத்திமிரோடு தீர்ப்பளித்தது.
இலஞ்ச ஊழல், அதிகாரமுறைகேடுகளில் ஊறித் திளைக்கும் போலீசையும், பொதுச்சொத்துக்களைக் கொள்ளையிடும் முதலாளி வர்க்கத்தையும் தண்டிக்க முன்வராத நீதிமன்றம், காணாமல் போன பழைய செருப்புக்காக, ஒரு பள்ளிச் சிறுவனை ஈவிரக்கமின்றித் தண்டித்திருப்பதால், இத்தீர்ப்புக்கு எதிரான கண்டனங்கள் இந்தோனேசியாவெங்கும் வெடித்து வருகின்றன.
இக்கண்டனங்கள் இந்தோனேஷிய அரசமைப்பின் மீது விழுகின்ற செருப்படியைத் தவிர, வேறென்ன!
_______________________________________________
- புதிய ஜனநாயகம், பிப்ரவரி-2012