Language Selection

“யாருங்க இந்தக் காலத்துல சாதி பாக்குறாங்க” என்ற கீறல் விழுந்த ரிக்கார்டை பலமுறை கேட்டிருக்கிறோம். கேவலம், கோவில் பிரசாதத்தை வழங்குவதில் கூட சாதியும், சாதித் திமிரும் கடைபிடிக்கப்படுகிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இந்தியாவின் சமூக வாழ்வில் பல்வேறு தளங்களில் சாதி கடைபிடிக்கப்படுகிறது என்பதற்கு இந்தப் பிரச்சினை ஒரு சான்று. அதுவும் இறைவன் சன்னிதியிலேயே நடக்கிறது என்றால் மற்ற இடங்களில் அதன் பரிமாணங்களை உணர முடியும்.

நாடெங்கிலும் இருக்கும் இந்து மத கோயில்களில் ‘பார்ப்பன சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் பூசாரி ஆக முடியும்‘ என்பதில் ஆரம்பித்து பிரசாதம் செய்வதற்கு கூட பார்ப்பனர்கள்தான் தகுதி உடையவர்கள் என்று சாதி முறை அமல் படுத்தப்படுவதை நாம் பார்க்கிறோம்.

நாட்டின் சட்டங்கள் சொல்வது என்ன?

தமிழ்நாடு கோவில் நுழைவு உரிமை சட்டம் 1947ன் 3வது பிரிவில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது.

Right of all classes of Hindus to enter and offer worship in temples – (1) Notwithstanding any law, custom or usage to the contrary, [every Hindu irrespective of the caste or sect to which he belongs] shall be entitled to enter any Hindu temple and offer worship therein in the same manner and to the same extent as [Hindus in general or any section of Hindus]; and [no Hindu] shall, by reason only of such entry or worship whether before or after the commencement of this Act, be deemed to have committed any actionable wrong or offence or be sued or prosecuted therefor.

கோயில்களில் நுழையவும் வழிபாடு நடத்தவும் இந்துக்களின் அனைத்து பிரிவினருக்கும் இருக்கும் உரிமை – (1) வேறு எந்த சட்டம், பழக்கம் அல்லது நடைமுறை இதற்கு மாறாக இருந்தாலும், எந்த சாதி அல்லது பிரிவைச் சேர்ந்த ஒவ்வொரு இந்துவுக்கும், எந்த இந்து கோவிலிலும் நுழையவும் இந்துக்களில் எந்த ஒரு பிரிவினரும் வழிபாடு செய்யும் அதே முறையில் வழிபாடு நடத்தவும் உரிமை உண்டு. இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாகவோ, நடைமுறைக்கு வந்த பிறகோ அப்படிப்பட்ட ஆலய நுழைவு அல்லது வழிபாடு செய்வது தண்டிக்கப்பட வேண்டிய குற்றச் செயலாக கருதப்படக் கூடாது. அவர்கள் மீது வழக்கு தொடுக்கவோ, வழக்கு போடவோ கூடாது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சட்டம் பிரிவு 106ல் இப்படி சொல்லியிருக்கிறார்கள்.

Removal of discrimination in the distribution of prasadams and theerthams

106. Notwithstanding anything in this Act or in any text, rule or interpretation of Hindu law, or any custom or usage as part of that law or any other law or in any degree of Court, there shall be no discrimination in the distribution of any prasadam or theertham in any religious institution on grounds only of caste, sex, place of birth or any of them.

பிரசாதம் அல்லது தீர்த்தம் வழங்குவதில் பாகுபாட்டை நீக்குதல்

106. இந்த சட்டம் அல்லது வேறு எந்த உரை, விதி அல்லது இந்து சட்டத்தின் புரிதல், அல்லது அந்த சட்டத்தின் ஒரு பகுதியான வேறு எந்த பழக்கம், நடைமுறை அல்லது நீதிமன்றத்தின் உத்தரவு இவை மாறுபட்டிருந்தாலும், எந்த ஒரு மதத் தலத்திலும் பிரசாதம் அல்லது தீர்த்தம் வினியோகம் செய்வதில் சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் அல்லது மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு பாகுபாடு காட்டப்படக் கூடாது.

காஞ்சிபுரம் கோயில்கள் – சாதி கட்டுமானத்திற்கு ஒரு உதாரணம்

காஞ்சிபுரத்தை சேர்ந்த வைணவ கோவில்களில் பிரசாதம் வழங்குவதிலும், நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடி வழிபடுவதிலும் கடைபிடிக்கப்படும் சாதி அடிப்படையிலான ஒதுக்குமுறை பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள அந்நகரைச் சேர்ந்த திரு D மாதவன் என்பவரிடம் பேசினோம். இந்த சாதிய முறையை எதிர்த்து கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகிறார் வைணவ அடியாரான திரு மாதவன்.

2003-ம் ஆண்டுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் இருக்கும் சுமார் 14 வைணவ கோயில்களில் பிரசாதம் (புளியோதரை, பொங்கல், சுண்டல், இட்லி, வடை, பாதுஷா, லட்டு, அக்கார வடிசல்) வழங்கும் போது பார்ப்பன சாதியைச் சேர்ந்தவர்களை உட்கார வைத்து பரிமாறும் அதே நேரத்தில் மற்ற சாதியினரை உட்கார விடாமல் மிரட்டி எழுப்பி நிற்க வைத்துதான் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

கோயிலில் வழிபாடு, உற்சவ நேரத்தில் பாடல்களை பாடும் பார்ப்பன சாதியைச் சேர்ந்த ஊழியர்கள் வழிபாட்டு பாடல்களை பாடுவார்கள். கடைசி 2 பாடல்களை பாடும்போது எல்லோரும் எழுந்து நிற்கும் படி மணியக்காரர் (கோவில் மேலாளர்) உரத்த குரலில் உத்தரவு போடுவார். அப்போது யாரும் உட்கார்ந்திருக்க முடியாது. பாடல்களை பாடி முடித்து பிரசாதம் வந்தவுடன் மேனேஜர் ‘எழுந்தருளி இருங்கோ’ என்று அழைப்பார். உடனேயே பார்ப்பன சாதியினர் அனைவரும் உட்கார்ந்து விடுவார்கள். மற்றவர்கள் உட்கார அனுமதி கிடையாது. யாராவது உட்கார்ந்தால் மிரட்டி எழுந்திருக்க சொல்வார்கள்.

வரதராஜபெருமாள் கோவில் என்று மக்களால் அழைக்கப்படும் தேவராஜ சுவாமி திருக்கோவிலில் தீர்த்தம் வழங்கும் போது பார்ப்பனர்களுக்கு முறையாக வரிசையாக கொடுத்து விட்டு மற்ற சாதியினரை அடித்துப் பிடித்து தீர்த்தம் பெற்றுக் கொள்ள வைப்பார்கள்.

சாதி பாகுபாட்டை எதிர்த்து அடியார்கள் போராட்டம்

பஞ்ச சமஸ்காரம் என்ற முறையில் வைணவ அடியார்களாக தீட்சை பெற்றுக் கொண்ட பக்தர்கள் பலர் இராமானுஜரை பின்பற்றி பக்தி மார்க்கத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான திரு மாதவன் மற்றும் உடன் சேர்ந்த அடியார்கள் பலர் இந்த நடைமுறையை கண்டித்து அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று கோரினார்கள். கோயிலில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற நாட்டின் சட்டத்தையும், பொதுவான மனித உரிமையையும் அடிப்படையாகக் கொண்டு பிரசாதம் வழங்கும் முறையில் பாகுபாடு, தீர்த்தம் வழங்குவதில் அலட்சியம் போன்றவற்றை தட்டிக் கேட்டார்கள்.

தமது உரிமையை நிலைநாட்ட வலுக்கட்டாயமாக உட்கார்ந்து பிரசாதம் வாங்க காத்திருக்க முயற்சி செய்தபோது, நின்று கொண்டிருப்பவர்களுக்கு மட்டும் பிரசாதம் கொடுத்து விட்டு உட்கார்ந்திருப்பவர்களை புறக்கணித்து விட்டு போய் விட்டார்கள் கோவில் ஊழியர்கள்.

2003-ம் ஆண்டு திருக்கச்சி நம்பி திருமால் அடியார் சேவை சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி சின்ன காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். காவல் துறையின் விசாரணை முடிந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் கட்டத்தில் அதிகார மையங்களில் இருக்கும் பார்ப்பனர்களின் தலையீட்டால் குற்றச்சாட்டு முதல் அறிக்கை தாக்கல் செய்யப்படாமலேயே கைவிடப்பட்டது.

அறநிலையத் துறை ஆணையும் பின் நிகழ்வுகளும்

அதைத் தொடர்ந்து இந்து அறநிலையத்துறைக்கு இந்த விவகாரத்தைப் பற்றி புகார் அனுப்பினார்கள் வைணவ அடியார்கள் குழுவினர். அந்த புகாரின் அடிப்படையில் காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத் துறையின் உதவி ஆணையர் கையொப்பமிட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டது.

“காஞ்சீபுரம் நகரில் உள்ள வைணவ திருக்கோயில்களில் சாதிபேதமற்ற வழிபாடு அமைதியும், பிரசாதம் தீர்த்தம் விநியோகம் நடைபெறுவதிலும் இந்து அறநிலைய ஆட்சித் துறை சட்டம் பிரிவு 106 மற்றும் அதன் விதிகளின் கீழ்ப்படியும் கண்டிப்பாக உறுதி செய்யப்படுதல் வேண்டும். குறிப்பாக வைதிகர் அல்லாத பாகவதர் என்னும் பிரிவினரையும் மற்றும் பல சமூகத்தைச் சேர்ந்த பக்தர்கள் அனைவரையும் பிரசாதம் வழங்குதலின் போது தாங்கள் பிராமண சமூகத்தார் அல்ல என்பதற்காக கண்டிப்பாக எழுந்து நின்று பிரசாதம் பெறுமாறும் தனியாக மற்றொரு பகுதிக்கு செல்லுமாறும் வற்புறுத்துவதாக புகார்கள் வரப்பெறுகிறது. யதோத்தகாரி பெருமாள் திருக்கோயிலில் எழுந்த புகார் குறித்து தல விசாரணை செய்த உதவி ஆணையர் நேரடியாக திருக்கோயில் நிர்வாகியருக்கும் வேத பிரபந்த கோஷ்டியினருக்கும் திருக்கோயில் சம்பிரதாயப்படி முன்னுரிமை அளித்து பிரசாதம் தீர்த்தம் வினியோகம் செய்யலாமே தவிர

1. வழங்கும் விதத்திலும்

2. வழங்கும் இடத்திலும்

3. வழங்கும் முறையிலும்

எந்த வித பாகுபாடும் காட்டலாகாது என்ற தற்போதைய சட்ட நிலை எடுத்து கூறப்பட்டது. ஆனால், மேற்படி வழிபாடு மற்றும் பிரசாத விநியோகங்களில் ஆலய பழக்க வழக்கம் என்ற பெயரால் பிராமணர் அல்லாத இந்து சமூகத்தினருக்கும் பாகுபாடு பாராட்டப்படுமெனில் அந்தந்த திருக்கோயில் நிர்வாகி மற்றும் மேற்படி குற்றத்திற்கு பொறுப்பான தனியார் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை முகவரியில் காணும் திருக்கோயில் நிர்வாகியருக்கு உறுதியாக சுட்டிக் காட்டி இச்சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது.”

இந்த அறநிலையத் துறை அதிகாரியாக இருந்த திரு ஞானசம்பந்தன் சுற்றறிக்கையை கீழ்க்கண்ட கோயில்களுக்கு அனுப்பினார்.

யதோத்தகாரி பெருமாள் திருக்கோயில்

கூரத்தாழ்வார் திருக்கோயில்

பிரவான வண்ணர் திருக்கோயில்

அஷ்டபுஜப் பெருமாள் திருக்கோயில்

விளக்கொளி பெருமாள் திருக்கோயில்

தேவராஜ ஸ்வாமி திருக்கோயில் (வரதராஜ பெருமாள் கோவில் என்று மக்களால் அழைக்கப்படுகிறது)

பெரும்பாலான கோவில்களில் உட்கார்ந்து பிரசாதம் வாங்குபவர்களை விரட்டுவதை நிறுத்தி விட்டார்கள்.  தீர்த்தம் கொடுப்பதிலும் பாகுபாட்டை சரி செய்து விட்டார்கள். நாட்டின் சட்டம் சுமார் 55 ஆண்டுகளுக்கு பிறகு நடைமுறைக்கு வந்திருக்கிறது.

இந்த ஆணைக்குப் பிறகும் தனியார் நிர்வாகத்தில் இருக்கும் யதோத்தகாரி கோவிலில் நடைமுறையை மாற்றிக் கொள்ளவில்லை. வரதராஜபெருமாள் கோவிலில் தென்கலை பிரிவினருக்குச் சொந்தமான இரண்டு துணைக் கோயில்களில் முறையை மாற்றாமல், பார்ப்பனர்களுக்கு கோயிலின் உட்பிரகாரத்தில் வைத்தும், மற்றவர்களுக்கு வெளியில் திண்ணையில் வைத்தும் பிரசாதம் வழங்கும் பழக்கத்தை தொடர்ந்தார்கள்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் தனது ஆணையை அமல்படுத்த அரசு நிர்வாகத்தால் முடியவில்லை. ‘அரசு ஆணை மதிக்கப்படா விட்டால் அதை தட்டிக் கேட்கத்தான் நீதிமன்றங்கள் இருக்கின்றன’ என்று நீதிமன்றத்தை அணுகினார் திரு மாதவன்.

நீதிமன்ற உத்தரவும் அதற்கான மரியாதையும்

2008-ல் விமலநாதன் என்ற வக்கீலை அணுகி அவர் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஐப்பசி மாதம் தீபாவளி நேரத்தில் அக்டோபர் 30, 2008 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ கே கங்குலி மற்றும் நீதிபதி பி ஜோதிமணி ஆகியோரின் பெஞ்சுக்கு விசாரணைக்கு வந்தது. புகைப்படங்கள் மூலம் கோவிலில் நடக்கும் ஒதுக்குமுறையைய விளக்கியதும் அறநிலையத் துறையின் ஆணையை அங்கீகரித்து அதை உறுதியாக செயல்படுத்தும்படி நீதிபதிகள் உடனடியாக உத்தரவு பிறப்பித்தனர். கலெக்டருக்கும், கோயில் நிர்வாக அதிகாரிகளுக்கும் வக்கீலே கடிதம் எழுதி அனுப்பினார்.

காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை ஆணையர் மட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடு செய்து கொடுத்து கடைசி நாள் பண்டிகையில் அனைத்து சாதியினரும் வரதராஜ பெருமாள் கோவிலைச் சேர்ந்த உப கோவிலான மணவாளமுனி சன்னதியின் உள் மண்டபத்தில் நுழைந்து வழிபாட்டில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ‘சூத்திரால்லாம் கோயிலுக்குள் வந்து விட்டார்கள்’ என்று பார்ப்பன சாதியினர் தகராறு செய்தனர் (வீடியோ). 1959 கோயில் நுழைவு உரிமை சட்டம் அந்த கோயிலில் 50 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அமலுக்கு வந்தது.

24.1.2008 குமுதம் ரிப்போர்ட்டர் இதழிலும், அதே மாதத்தில் நக்கீரன் இதழிலும் இது பற்றிய விபரங்கள் வெளியாகின.

இவ்வளவுக்கும் பிறகும் யதோத்தகாரி கோவிலிலும், வரதராஜ பெருமாள் கோவிலைச் சேர்ந்த உப கோவிலான மணவாள முனி சன்னதியிலும் பிரசாதம் வழங்கும் முறையிலும், கோயிலில் நுழைந்து வழிபாடு செய்வதிலும் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுகிறார்கள். நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல்களை கற்றுத் தேர்ந்து வைணவ பஞ்ச சமஸ்காரங்களை தவறாமல் கடைப்பிடிப்பவர்களாக இருந்தாலும், வழிபாட்டு பாடல்களை பாடும் ஊழியராக மற்ற சாதியினரை சேர்த்துக் கொள்வதில்லை. அத்தகைய தேர்ச்சி இல்லாதவர்களாக இருந்தாலும் பார்ப்பன சாதியினரை சேர்த்துக் கொள்கிறார்கள். அந்த குழுவினர் மட்டும்தான் வழிபாடு நடக்கும் போது உள் மண்டபத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த நேரத்தில் மற்றவர்கள் உள்ளே நுழையவோ பாடல்களை பாடவோ அனுமதிப்பதில்லை. ‘நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை மற்றவர்கள் பாடுவது சட்டப்படி தவறு’ என்ற அவதூறையும் சொல்லி வருகிறார்கள் பார்ப்பனர்கள்.

பாடல் வழிபாடு முடிந்து பிரசாதம் வழங்கும் போதும் உள் மண்டபத்துக்கு அனைத்து பக்தர்களையும் அழைத்து தீர்த்தமும் பிரசாதமும் வழங்காமல் பெரும்பகுதி பிறசாதி பக்தர்களை வெளியிலேயே நிற்க வைத்து வெளியில் வந்து பிரசாதம் வழங்குகிறார்கள். உள்ளே வரத் துணியும் மற்ற சாதியினரை ‘சாமிக்கு அபச்சாரம்’ என்று உளவியல் ரீதியாக மிரட்டி சட்டத்தை கடைப்பிடிக்காமல் போக்கு காட்ட முயற்சிக்கிறார்கள். 2011 அக்டோபர் 30ம் தேதி மணவாளர் மாமுனி சன்னிதி கோயிலில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதற்கு சாட்சியாக உள்ளன்.

‘பிராமணாளுக்கு’ உள்ளே – ‘சூத்ராளுக்கு’ வெளியே

மக்கள் போராட்டம்தான் ஒரே வழி

சட்டத்திலும், அறநிலையத் துறை ஆணையிலும், நீதிமன்ற உத்தரவிலும் தெளிவாக சொல்லியிருப்பது போல ‘சாதி, பாலினம், பிறந்த இடம் இவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கோவியில் வழிபாடு நடத்த அல்லது கோவிலில் நுழைய அனுமதி மறுக்கப்படக் கூடாது’. அவற்றை எல்லாம் துச்சமாக மதித்து தமது வருணாசிரம சாதீய அடக்குமுறையை இன்னமும் கைப்பிடிக்கும், இந்து மத கோயில்களை தமது பிடிக்குள் வைத்திருக்கும் சிறுபான்மை பார்ப்பனர்களை எப்படி வழிக்கு கொண்டு வருவது?

இந்தியாவின் சாதி பிரிவினை வெளிப்படையாக தெரிவதில்லை. யாரையும் பார்த்தவுடன் வன்னியர் யார்? ஆதிதிராவிடர் யார்? கவுண்டர் யார்? பள்ளர் யார்? என்று நிறம் பிரிக்க முடியாது. முகத்தைப் பார்த்து யாரையும் ஜாதி சொல்ல முடியாது. அமெரிக்காவின் இனப் பிரிவினை வெளிப்படையாக தெரியும் தோலின் நிறத்தை அடிப்படையாகக் கொண்டது.  ‘இந்த ஒடுக்கலைக் காட்டிலும் எங்கள் நாட்டில் இருக்கிற ஜாதிய ஒடுக்குமுறை கொடுமையானது. ஆனால் இதைச் சொல்லாமல் பார்த்துக்கொள்கிற வேலையை பார்ப்பனீயம் இன்றும் இங்கே செய்து கொண்டிருக்கிறது’ என்று அம்பேத்கர் சொல்லுகிறார்.

அமெரிக்காவின் கறுப்பு இன மக்கள் சிறுபான்மையினராக இருந்த போதும் இனவெறியை கடைப்பிடித்த பெரும்பான்மை வெள்ளை இனத்தவருக்கு எதிராக தமது குடியுரிமைகளை நிலைநாட்ட 1960களில் மேற்கொண்ட போராட்டங்கள் புகழ் பெற்றவை. ஆனால் நாமோ இன்னும் இத்தகைய இழிவுகளை கண்டும் காணாமலும் சகித்துக் கொள்வது சரியா?

கறுப்பர் இன போராட்டக் குறிப்பு

காஞ்சிபுரம் கோயில்களில் கடைபிடிக்கப்படும் ஒதுக்குமுறையை போன்ற அடக்குமுறைக்கு ஆளான கறுப்பு இன மாணவர்கள் நடத்திய போராட்ட விபரம், இந்து மதத்தைப் பின்பற்றும் மக்களுக்கு போராடுவதற்கான வழிமுறையை காட்டுகிறது.

1960ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி மாலை 4.30 மணிக்கு வடக்கு கரோலினாவின் கிரீன்ஸ்பரோ நகரில் இருக்கும் வுல்ஸ்வோர்த் என்ற உணவு விடுதியில் நான்கு கறுப்பு இன கல்லூரி மாணவர்கள் மதிய உணவு மேசையில் உட்கார்ந்தார்கள். கறுப்பு இன மாணவர்களுக்கு மதிய உணவு பரிமாற மறுத்து விட்டார்கள் விடுதியினர். L வடிவத்தில் அமைந்த 66 பேர் உட்காரக் கூடிய நீண்ட மதிய உணவு மேசையின் இருக்கைகள் வெளளை இனத்தவர்களுக்கு மட்டும் என்று ஒதுக்கப்பட்டிருந்தன. கறுப்பு இனத்தவர் நின்று கொண்டேதான் சாப்பிட வேண்டும்.

மாணவர்கள் மாலை 5.30 மணிக்கு கடை மூடப்படுவது வரை உட்கார்ந்திருந்தார்கள். அடுத்த நாள் காலையிலும் கடைக்கு வந்து உள்ளிருப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர். 27 ஆண்களும் 4 பெண்களும் உணவு மேசைகளில் உட்கார்ந்து கொண்டு தமது கல்லூரி பாடங்களை படித்துக் கொண்டிருந்தார்கள். புதன் கிழமை போராட்டக் காரர்களின் எண்ணிக்கை 80ஆக உயர்ந்தது, வியாழக்கிழமை 300ஆக பெருகியது. சனிக்கிழமை இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் 600 பேர் சேர்ந்திருந்தார்கள்.

அடுத்த திங்கள் கிழமை போராட்டம் பக்கத்து நகரங்களுக்கும் பரவியது. வியாழக் கிழமையும் வெள்ளிக் கிழமையும் போராட்டம் விர்ஜினியா, தெற்கு கரலினா, டென்னஸ்ஸி மாநிலங்களுக்கும் பரவியது. மாத இறுதிக்குள் தெற்கு மாநிலங்கள் இந்த உள்ளிருப்பு போராட்டம் அனைத்திலும் பரவி சுமார் 70,000 மாணவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். ஆயிரக்கணக்கான பேர் கைது செய்யப்பட்டார்கள். இன்னும் பல ஆயிரக் கணக்கானவர்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அடுத்த பத்து ஆண்டுகளில் அமெரிக்கா முழுவதும் பரவிய குடியுரிமை இயக்கத்தின் ஆரம்பமாக இந்த உள்ளிருப்பு போராட்டம் அமைந்தது.

இந்து மத கோவில்களில் இந்து மதத்தை பின்பற்றும் மக்கள் இத்தகைய உள்ளிருப்பு போராட்டங்களை நடத்துவது மிகவும் தேவையான ஒன்று. சட்டத்தை பொறுத்தவரை ஆகம விதிகள், இறை நம்பிக்கையாளர்களின் மத உரிமை என்ற பெயரில் பார்ப்பனியத்தின் தீண்டாமையை சட்டப் பூர்வமாகவே வழங்குகிறது. இன்னொரு புறம் அப்படி பாகுபாடு காட்டக் கூடாது என்ற பிரிவுகளை மேலே பார்த்தோம். இந்த முரணை ஒழித்து அனைவருக்கும் அனைத்து உரிமை என்பதை இந்து மதத்தில் கொண்டு வரவேண்டுமானால் பல சமத்துவ போராட்டங்கள் நடத்தியாக வேண்டும். நடத்துவோம்.

______________________________________________________

- வினவு செய்தியாளர்.

இக்கட்டுரையின் சுருக்கம் புதிய கலாச்சாரம் மே 2012ல் வெளிவந்துள்ளது


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ