Language Selection

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், நேபாள ஜனநாயகக் குடியரக்கான புதிய நகல் அரசியல் சட்டமியற்றும் பணி, தீர்மானிக்கப்பட்ட காலக்கெடுவாகிய மே 27ஆம் தேதிக்குள் நிறைவுறாமல் போனது. அதனால், அச்சபை கலைக்கப்படுவதாகவும் புதிய அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் மீண்டும் நடைபெறும் என்றும் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமரான பாபுராம் பட்டாராய் அறிவித்துள்ளார். நேபாள மக்கள் எழுச்சிக்குப் பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் பதவிக்காலம் கடந்த 2010ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி முடிவடைந்திருக்க வேண்டும். இந்தக் காலத்திற்குள் இந்த அவை அரசியல் சட்டத்தை எழுதி முடித்திருக்க வேண்டும். ஆனால் அரசியல் நிர்ணய சபையில் அங்கம் வகிக்கும் நேபாள காங்கிர, போலி கம்யூனிஸ்டு கட்சியான ஐக்கிய மாலெ கட்சி மற்றும் பிற கட்சிகள் நேபாளத்தின் எதிர்கால அரசியல் சட்டம் எத்தகையதாக இருக்கவேண்டும் என்பதில், இச்சபையில் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ள பெரிய கட்சியான மாவோயிஸ்டுகளுடன் தொடர்ந்து முரண்பட்டதால், அரசியல் சட்டத்தை இயற்றும் பணி கடந்த நான்காண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இப்போது அந்த சபையைக் கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்தும் நிலைக்கு நேபாளம் பின்னோக்கிச் சென்றுள்ளது.

நான்காண்டுகளுக்கு முன்பு அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடந்தபோது,நேபாள மாவோயிஸ்டு கட்சியிடம் செம்படை இருந்தது. அது இப்போது கலைக்கப்பட்டு, அப்படையின் ஒரு சிறுபிரிவு நேபாள இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. கடைசியில், இருப்பதையும் இழந்து புதிதாக எதையும் பெறாத நிலைக்கு நேபாள மாவோயிஸ்டு கட்சி தள்ளப்பட்டுள்ளது. புரட்சியை முன்னெடுத்துச் செல்ல விழையும் தோழர் கிரண் தலைமையிலான சிறுபான்மைக் குழுவாகவும், பிரசந்தா பட்டாராய் தலைமையிலான சட்டவாதசமரசவாதப் பெரும்பான்மைக் குழுவாகவும் மாவோயிஸ்டு கட்சி பிளவுபட்டுள்ளது.

நேபாளத்தில் மாவோயிஸ்டு கட்சியின் அரசியல் செல்வாக்கையும், மக்கள் ஆதரவையும் வற்றச் செய்து, அதன் புரட்சிகர ஆற்றலை வலுவிழக்கச் செய்ய உலக ஏகாதிபத்தியமும், இந்திய மேலாதிக்க அர ம் நேபாள பிற்போக்கு அரசியல் கட்சிகளும் மேற்கொண்ட சதிகளும் சூழ்ச்சிகளும் இறுதியில் வெற்றி பெற்றுள்ளன. தற்போதைய அரசியல் நெருக்கடியைப் புரட்சிக்கான வாய்ப்பாகப் பயன்படுத்தி முன்னெடுத்துச் செல்லக்கூட முடியாமல், மாவோயிஸ்டு கட்சி பிளவுபட்டு நிற்கிறது. நேபாளத்தின் கிராமப்புறங்களில் மாவோயிஸ்டுகளின் மக்கள் யுத்தம் குறிப்பிட்ட கட்டத்துக்கு முன்னேறியிருந்த நிலையில், மன்னராட்சிக்கு எதிராக நகர்புறங்களில் இலட்சக்கணக்கில் மக்கள் திரண்டு போராடினர். மன்னராட்சியின் கீழிருந்த நாடாளுமன்றத்தின் அரசியல் கட்சிகள் என்னசெய்வது என்று புரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்த நிலையில், மன்னராட்சியை வீழ்த்தும் போராட்டத்துக்கு மாவோயிஸ்டுகளைத் தலைமை தாங்குமாறு மக்கள் கோரியதைத் தொடர்ந்து, மக்கள் சக்தியின் முன்னேமண்டியிட்ட நேபாள அரசியல் கட்சிகள் மன்னராட்சியை வீழ்த்தவும் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை நடத்தவும் முன்வந்து, மாவோயிஸ்டுகளுடன் ஒப்பந்தம் போட்டன. இந்தச் சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, நேபாளத்தில் மன்னராட்சியைத் தூக்கியேறிந்து ஒரு ஜனநாயகக் குடியரசை நிறுவுவது என்ற முக்கியத்துவம் வாய்ந்த செயல்தந் திரத்தை வகுத்து நேபாள மாவோயிஸ்டு கட்சி செயல்படுத்தியது. அன்றைய பருண்மையான நிலைமையை ஒட்டி மாவோயிஸ்டு கட்சி வகுத்துக் கொண்ட அச்செயல்தந்திரம் சரியானதும், அவசியமானதுமாகும்.

அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலில் போட்டியிட்டு, இடைக்கால அரசில் பங்கேற்று, அரசியல் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாவோயிஸ்டுகள், மறுபுறம் கூட்டுத்துவ ஜனநாயகக் குடியரக்கான அரசியல் சட்டத்தை இயற்றவிடாமல் சதிகளில் இறங்கிய நேபாள ஆளும் வர்க்க அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் எஜமானரான இந்தியமேலாதிக்கவாதிகள் ஆகியோரை எதிர்த்து மக்களைத் திரட்டித் தொடர்ந்து போராடி வந்தனர். நேபாள மன்னர் ஞானேந்திராவை அரண்மனையை விட்டு வெளியேறக் கோரி இலட்சக்கணக்கில் மக்கள் திரண்டு நடத்திய மிகப்பெரிய போராட்டம், போலி கம்யூனிஸ்டு ஐக்கிய மாலெகட்சியைச் சேர்ந்த நேபாள அதிபர் ராம்பரண் யாதவும், முன்னாள் மன்னாராட்சியின் ராயல் நேபாள இராணுவத்தின் தலைமைத் தளபதி ருக்மாங்கத் கடுவாலும் இந்திய மேலாதிக்கவாதிகளின் ஆசியுடன் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டபோது, அதற்கெதிரான மாவோயிஸ்டு கட்சியின் இளைஞர் அமைப்பினர் நடத்திய தொடர் ஆர்ப்பாட்டங்கள், இந்திய மேலாதிக்கச் சதிகளுக்கு எதிராகவும் குடியாட்சியின் உயரதிகாரத்தை நிலைநாட்டவும் மாவோயிஸ்டு கட்சியினர் நடத்திய கடையடைப்பு ஆர்ப்பாட்டங்கள்  எனத் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்தன.

""கூட்டுத்துவ மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவுவதை உடனடி செயல்தந்திரத் திட்டமாகக் கொள்ளவேண்டும். அமைதி ஒப்பந்தத்தைச் சீர்குலைப்பது, அரசியல் நிர்ணய சபையைக் கலைப்பது, மக்கள் மீது சர்வாதிகாரத்தைத் திணிப்பது, மக்கள் யுத்தத்தின் சாதனைகளைப் பறித்துக் கொள்வது என்ற ஏகாதிபத்தியவாதிகள், இந்திய விரிவாக்கவாதிகள் மற்றும் அவர்களது விசுவாச பிற்போக்கு அரசியல் கட்சிகளின் சதிகளுக்கு எதிராக மக்களின் போராட்ட எழுச்சிகளை உறுதிப்படுத்த வேண்டும்'' என்று கோர்க்கா மாவட்டத்திலுள்ள பலுங்டார் கிராமத்தில் கடந்த நவம்பர் 2010இல் நடந்த நேபாள மாவோயிஸ்டு கட்சி மத்தியக் கமிட்டியின் 6வது விரிவாக்கப்பட்ட பிளீனத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அம்முடிவுகளுக்கு மாறாகவும் எதிராகவும் மாவோயிஸ்டு கட்சித் தலைவர் பிரசந்தாவும் துணைத்தலைவர் பட்டாராயும் செயல்படத் தொடங்கினர்.

அந்த விலகலை எதிர்த்து, 2010 டிசம்பரில் பாரிஸ்தண்டாவில் நடந்த மத்தியக் கமிட்டி கூட்டத்தில், முந்தைய பிளீன முடிவுப்படி மக்கள்திரள் புரட்சிப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லாமல் கட்சித் தலைமை திசை விலகிச் செல்வதாகக் குற்றம் சாட்டி, கட்சியின் துணைத்தலைவர்களுள் ஒருவரான தோழர் கிரண், மக்களின் எழுச்சியை முன்னெடுத்துச் சென்று அரசியல் சட்டத்தை நிறைவேற்றுவது என்ற திட்டத்தைச் செயல்படுத்தக் கோரி அறிக்கை வைத்தார். ""சமூக  அரசியல் மாற்றங்களை உறுதி செய்யாமல், பிற்போக்கு அரசியல் கட்சிகளுடன் சமரசம் செய்து கொண்டு அரசியல் சட்டத்தை நிறைவேற்றத் துடிப்பது, மக்களின் புரட்சிகரப்போராட்டத்தையும் தியாகத்தையும் கொச்சைப்படுத்துவதாகும். இன்றைய இடைக்கால அரசாங்கத்தின் கையாலாகாத்தனத்தைக் கண்டு மக்கள் வெறுப்புற்றிருக்கிறார்கள். பிற்போக்கு அரசியல் கட்சிகள் தீராத நெருக்கடியில் சிக்கியுள்ளன. மக்கள் எழுச்சிக்கு உகந்த நேரம் கனிந்துள்ள போதிலும், கட்சியானது அதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவில்லை'' என்று அந்த அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.

கட்சியின் மற்றொரு துணைத்தலைவரான பாபுராம் பட்டாராய் அரசியல் சட்டத்தை நிறைவேற்றுவதையே முதன்மைப் பணியாகக் கொள்ள வேண்டும் என்று அறிக்கை வைத்தார். நேரேதிரான இவ்விரு பாதைகளைக் கொண்ட அறிக்கைகளை இணைத்து, அரசியல் சட்ட மியற்றுவதை முதன்மையாகவும், அதற்குத் துணையாக மக்கள் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று சமரசப்படுத்தி, கட்சித் தலைவர் பிரசந்தா முன்வைத்த அறிக்கை அந்த மத்தியக் கமிட்டி கூட்டத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

பின்னர், கடந்த ஏப்ரல் 20,2011இல் நடந்த கட்சியின் அரசியல் தலைமைக் குழுவில் ""உடனடி அரசியல் உத்தேசத் திட்டம்'' எனும் சமரசவாத ஆவணத்தை பிரசந்தா முன்வைத்து நிறைவேற்றினார். மக்கள்திரள் எழுச்சிகளைக் கட்டியமைக்கும் கட்சியின் முடிவுக்கு மாறாக, சட்டவாதசமரசவாத நடவடிக்கைகள் மூலம் அரசியல் சட்டத்தை எப்படியாவது நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை பிரசந்தாவும் பட்டாராயும் முனைப்புடன் செயல்படுத்தத் தொடங்கினர். ""செம்படையை நேபாள இராணுவத்துடன் இணைப்பதும், அரசியல் நகல் சட்டத்தை இயற்றுவதுமே முதன்மையான பணி என்றும், அரசியல் சட்டம்தான் பிற்போக்குவாதிகளின் சதிகளை முறியடிக்கும் என்றும் அவர்கள் வாதிட்டனர். மக்கள் போராட்டங்கள் பெருகினால், அதைக் காட்டி அரசியல் நிர்ணய சபையிலுள்ள இதர அரசியல் கட்சிகள் முரண்பட்டு இழுபறி நீடிக்கும்; இதனால் அரசியல் சட்டத்தை நிறைவடையச் செய்ய முடியாமல் போய்விடும் என்று பிரசந்தா வாதிட்டார். இதற்கெதிரான கருத்துக்களைப் புறக்கணித்து, இருவழிப் போராட்டத்தை நிராகரித்து, ஒரு குடைக் கவிழ்ப்பு நடவடிக்கையை நடத்தி பிரசந்தாவும் பட்டாராயும் கட்சித் தலைமையைக் கைப்பற்றிக் கொண்டனர். யாருடனும் கலந்தாலோசிக்காமல் இந்தியாவுடன் இருதரப்பு முதலீடு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் பிரதமர் பட்டாராய் தன்னிச்சையாக கையெழுத்திட்டுள்ளார்'' என்று குற்றம் சாட்டுகிறார், தோழர் கிரண்.

தீராத அரசியல் நெருக்கடிகள்  இழுத்தடிப்புகளால் நேபாள மக்களை, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தைச் சோர்வடையச் செய்து நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்திய மேலாதிக்கவாதிகள் காய்களை நகர்த்தினர். அதற்கேற்ப ஊடகங்களும் ஒத்தூதின. இந்திய மேலாதிக்கவாதிகளின் திட்டப்படி, நாடாளுமன்ற முட்டுக்கட்டைகள் மூலம் நாட்டை தீராத அரசியல் நெருக்கடியில் தள்ளும் நோக்கத்துடன் நேபாளத்தின் பிற அரசியல் கட்சிகள் செயல்பட்டன. அந்தச் சதிவலையில் சிக்கி, அக்கட்சிகளின் இழுத்த இழுப்புக்கெல்லாம் பிரசந்தாவும் பட்டாராயும் வளைந்து கொடுத்துச் செல்லத் தொடங்கினர். மக்கள் சமாதானத்தையே விரும்புகிறார்கள், போராட்டத்தை அல்ல  என்ற ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரத்தை நம்பிக் கொண்டு, அமைதி நடவடிக்கைதான் முதன்மையானது என்ற திசையில் இவர்கள் கட்சியை இழுத்துச் சென்றனர். எப்படியாவது அரசியல் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக அக்கட்சிகளின் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்து சந்தர்ப்பவாதமாக நடந்து கொண்டு துரோகமிழைப்பதாக கட்சித் தலைமை சீரழிந்துபோனது. எதிர்க்கட்சிகளின் நிர்ப்பந்தங்களுக்கு விட்டுக் கொடுப்பதன் மூலம் அவர்கள் அரசியல் சட்டத்தை இயற்ற ஒத்துழைப்பார்கள் என்று பிரசந்தாவும் பட்டாராயும் பெரிதும் நம்பினர். மேலும்;மேலும் இறங்கிவந்து சமரசமாகப் போவதும், அக்கட்சிகளுடன் பேரங்கள்பேச்வார்த்தைகள் நடத்துவதும் இரகசிய ஒப்பந்தங்கள் போடுவதுமாக பிரசந்தாபட்டாராய் தலைமை துரோகத்தில் இறங்கியது.

கட்சியின் அரசியல் தலைமைக்குழு தோழர்களையோ, ஏன் கட்சியின் செயலாளரும், கட்சியின் பாதுகாப்புத் துறை பொறுப்பாளருமான பாதலையோ கலந்தாலோசிக்காமல் பிரசந்தாவும் பட்டாராயும் கடந்த ஆண்டு செப்டம்பரில் செம்படை முகாம்களிலுள்ள ஆயுதப் பெட்டகங்களின் சாவியை ராயல் நேபாள இராணுவத்திடம் ஒப்படைத்தனர். கடந்த ஏப்ரல் 10ஆம் தேதியன்று நடந்த ராயல் நேபாள இராணுவத்துடன் செம்படை இணைப்பு என்பது அப்பட்டமான சரணாகதியாகவே நடந்துள்ளது. ஏறத்தாழ 19,000 பேர் கொண்ட செம்படையில் வெறும் 6500 பேரை மட்டும் நேபாள இராணுவத்தில் சேர்க்கலாம் என்று பிற அரசியல் கட்சிகள் நிர்ப்பந்தித்ததை அப்படியே பிரசந்தாவும் பட்டாராயும் ஏற்றுக் கொண்டனர். எஞ்சியோரைக் கட்டாயமாக விருப்ப ஓய்வுபெறச் செய்து செம்படையிலிருந்து வெளியேற்றியுள்ளனர். இச்சரணடைவை ஆதரிப்போருக்கும் எதிர்ப்போருக்குமிடையே சக்திகோர் செம்படை முகாமில் மோதல்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து, ராயல் நேபாள இராணுவத்தை 15 செம்படை முகாம்களுக்கும் அனுப்பி ஆயுதங்களைக் கைப்பற்றி நடவடிக்கை எடுக்குமாறு பட்டாராய் உத்தரவிட்டார். இதை எதிர்த்து, ""நீங்களும் சரி, நாங்களும் சரி; இப்போது பாதுகாப்பற்ற அபாய நிலையில் உள்ளோம்'' என்று செம்படையின் ஏழு டிவிஷனல் தளபதிகள் நேபாள மாவோயிஸ்டுக்கட்சித் தலைவர் பிரசந்தாவுக்கு வெளிப்படையாகவே எச்சரிக்க விடுத்தனர். ஆனால், பிரசந்தா இதனை ஒரு பொருட்டாக மதிக்காமல், ""அமைதி நடவடிக்கையை முழுமைப்படுத்துவதற்காகவே நான் தைரியமான சில முடிவுகளை எடுத்தேன்'' என்று இந்தச் சரணாகதி நடவடிக்கையைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார்.

இறுதியில், பிரசந்தாவும் பட்டாராயும் கட்சியின், புரட்சியின் து÷ராகிகளாக அம்பலப்பட்டுப் போனார்கள். செம்படை கலைக்கப்பட்டு ஆயுதங்களும் பறிக்கப்பட்ட பிறகு, பிரசந்தாவும் பட்டாராயும் இதர கட்சிகளுடன் பேரம் பேசுவதற்கான ஆற்றலையே இழந்து விட்டனர். இதர கட்சிகளின் நிர்ப்பந்தங்களுக்குப் பணிந்து அவர்கள் முன்வைக்கும் முடிவுகளை ஏற்றுக் கொள்வதைத் தவிர, பிரசந்தா  பட்டாராயிடம் வேறு அரசியல் பலமோ, ஆயுத பலமோ இல்லாமல் போய்விட்டது. இதனால்தான், இந்தியாவும் அமெரிக்காவும் இச்சரணாகதியை வாழ்த்தி வரவேற்கின்றன. ""மாவோயிஸ்டு கட்சியைச் சட்டவாதக் கட்சியாக மாற்றும் நடவடிக்கையில் இது முக்கியமான நடவடிக்கையாகும்'' என்று நேபாள காங்கிர க் கட்சியின் தலைவரான ராமச்சந்திர பவுதேல் வாழ்த்துகிறார்.

மன்னராட்சிக்கு எதிரான மக்களின் பேரேழுச்சியையும், அதைத் தொடர்ந்து உருவான அரசியல் ஆதரவையும், ஒரு உந்துவிசையாகக் கொண்டு, அடுத்த கட்டத்துக்குப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான அடிப்படைகளைக் கொண்டதாக, அதற்கான தயாரிப்பாக நேபாள மாவோயிஸ்டுகளின் செயல்தந்திரத் திட்டமும் அரசியல் நடத்தை வழியும் இருந்திருக்க வேண்டும். ""தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தில் பாட்டாளி வர்க்கக் கட்சி பங்கேற்றாலோ, இல்லாவிட்டாலோ, எப்படியிருந்த போதிலும் தற்காலிக புரட்சி அரசாங்கத்தின் மீது நாம் கீழிருந்து நிர்ப்பந்தம் கொண்டுவர வேண்டும். கீழிருந்து இந்த நிர்ப்பந்தத்தைச் செயல் படுத்துவதற்குப் பாட்டாளி வர்க்கம் ஆயுதமேந்தியிருக்க வேண்டும் — ஏனெனில், புரட்சிகரமான நிலைமைகளில் விவகாரங்கள் அசாதரணமான வேகத்துடன் பகிரங்க உள்நாட்டுப் போர் கட்டத்துக்கு வளர்கின்றன — மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி பாட்டாளிவர்க்கத்துக்குத் தலைமை வகித்திருக்கவும் வேண்டும். அது ஆயுதமேந்திச் செலுத்தும் நிர்ப்பந்தத்தின் நோக்கம் "புரட்சியின் ஆதாயங்களைப் பாதுகாப்பது, கெட்டிப்படுத்துவது, விரிவாக்குவது' அதாவது, பாட்டாளி வர்க்க நலன் நிலையிலிருந்து பார்க்கும் போது அந்த ஆதாயங்கள் நம்குறைந்தபட்ச வேலைத் திட்டம் முழுவதையும் நிறைவேற்றுவதாக அமைந்திருக்க வேண்டும்'' (ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரு செயல்தந்திரங்கள்) என்றார் லெனின். பாட்டாளி வர்க்கத் தலைமையும் ஆயுதப்படை பலமும் எனும் இரு மையமான நிபந்தனைகளை மாவோயிஸ்டு கட்சித் தலைவர்களான பிரசந்தாவும் பட்டாராயும் கைவிட்டதன் விளைவாக, இன்று நேபாளப் புரட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது.

மேலும், தொழிலாளர்  விவசாயி இயக்கங்களையும் கட்சியின் தலைமையிலான ஆயுதப்படை சக்திகளையும் விரிவுபடுத்த முயற்சி எடுக்காமல், ஒரு தற்காலிகக் கூட்டாளியாகிய கோமிங்டாங்கையே முற்றும் முழுதாகச் சார்ந்திருக்கும்படியான சந்தர்ப்பவாதப் பாதை கட்சியில் ஆதிக்கம் செலுத்தியதால், 1927 புரட்சியில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியைத் தழுவியது என்று (ஜப்பானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான செயல்தந்திரம் பற்றி எனும் நூலில்) மாவோ குறிப்பிடுகிறார்.

இத்தகைய நிலைமையில்தான் பிரசந்தாபட்டாராய் தலைமையும் உள்ளது. மன்னராட்சிக்கு எதிரான தற்காலிகக் கூட்டாளிகளான இதர பிற்போக்கு அரசியல் கட்சிகளைச் சார்ந்திருக்கும் சந்தர்ப்பவாதப் பாதைக்கு அப்பால், கட்சி தனது சொந்த திட்டத்தை முன்வைத்து உழைக்கும் மக்களை அணிதிரட்டவோ, செம்படையைக் கட்டியமைத்து விரிவாக்கவோ அத்தலைமையிடம் திட்டம் ஏதுமில்லை. நேபாள மாவோயிஸ்டு கட்சி இதர 7 கட்சிகளுடன் போட்டுகொண்ட ஒப்பந்தம் மன்னராட்சியை வீழ்த்துவதற்கும் ஒரு ஜனநாயகக் குடியரசை நிறுவுவதற்குமான ஒரு தற்காலிக ஐக்கிய முன்னணி செயல்தந்திரம்தான். ஒருவேளை, இந்த ஐக்கிய முன்னணி நாளை முறிந்து போகலாம் என்ற எதிர்பார்ப்பில் கட்சியைத் தயார் நிலையில் வைப்பதும், மக்களைத் திரட்டுவதும் வேண்டும். ஆனால் அத்தகைய திட்டம் ஏதுமில்லாமல், முழுக்கவும் சட்டவாத நடவடிக்கைகளில் பிரசந்தாபட்டாராய் தலைமை மூழ்கிப் போனது.

""ராயல் நேபாள இராணுவத்தின் போர்வீரர்களைப் போலமுறைப்படி போர்ப்பயிற்சி பெற்றிராத, தகுதியில்லாத செம்படை வீரர்களை நேபாள ராணுவத்தில் இணைத்தால் ராணுவத்தின் ஆற்றல் குறைந்துபோகும். என்றும், ""செம்படையின் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்; மாவோயிஸ்டுகளின் தலைமையிலான வன்முறைக் கும்பலான கம்யூனிஸ்டு இளைஞர் கழகத்தைக் கலைக்க வேண்டும்''என்றும் எதிர்க்கட்சிகள் நிர்ப்பந்தங்களைக் கொடுத்து, அரசியல் சட்டத்தை இயற்றவிடாமல் சதிகளில் இறங்கிய நிலையில், பிரசந்தாபட்டாராய் தலைமை இக்கட்சிகளின் சதிகளை அம்பலப்படுத்தி, இக்கட்சிகளின் நிர்பந்தங்களை ஏற்க மறுத்து, எதிர் நிர்ப்பந்தங்களை முன்வைக்கவில்லை. ""செம்படையின் ஆயுதங்களைக் கையளிக்க மாட்டோம்; நாட்டுப் பற்றும் அர்ப்பணிப்பும் கொண்ட, மக்களுக்கும் புரட்சிக்கும் சேவை செய்யும் செம்படை வீரர்களின் தகுதியானது, மக்களை ஒடுக்கும் ராயல் நேபாள ராணுவத்தின் படைவீரர்களை விட மிக உயர்வானது; மக்களுக்கும் புரட்சிக்கும் சேவை செய்யும் போர்க்குணமிக்க இளைஞர் கழகத்தைக் கலைக்க மாட்டோம்; நிலப்பிரபுக்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களைத் திருப்பி ஒப்படைக்கமாட்டோம்;. நாடு முழுவதும் நிலச்சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம்'' என எதிர்நிர்ப்பந்தங்களை முன்வைத்து, மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்முயற்சியுடன் கட்சி செயல்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், புரட்சியின் பலன்கள் மக்களைச் சென்றடைவதை கண்கூடாகக் காணும் மக்கள், புரட்சியையும் கட்சியையும் காக்கும் போரில் மாவோயிஸ்டுகளுடன் கைகோர்த்திருப்பார்கள்.

மறுபுறம், நேபாளப் புரட்சியின் பின்னடைவைக்காட்டி, "மன்னராட்சிக்கு எதிரான மக்கள் எழுச்சிக்குப் பின்னர் மாவோயிஸ்டு கட்சி தனது செயல்தந்திரத்தை மாற்றிக் கொண்டு ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு அமைதி நடவடிக்கைக்குச் சென்றதுதான் தவறு. நீண்டகால மக்கள் யுத்தத்தை தொடர்வது என்ற பழைய செயல்தந்திரத்தை தொடர்ந்து பின்பற்றியிருந்தால், இத்தகைய சந்தர்ப்பவாதத் தவறுகள் நிகழாமல் தடுத்திருக்கலாம்' என்று சிலர் கருதுகின்றனர். நேபாள மக்கள் எழுச்சியும், அதைத் தொடர்ந்த புதிய அரசியல் நிலைமையும் கோரியபடி மாவோயிஸ்டுகள் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல புதிய செயல்தந்திரத்தை வகுத்துச் செயல்படுத்தியது அவசியமான, பருண்மையான நிலைமைக்கேற்ற சரியான வழிமுறையாகும். மாறிய நிலைமைகளைக் கணக்கில் கொள்ளாமல், தொடர்ந்து ஆயுதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று கருதுவதுதான் மார்க்சியலெனினியத்துக்கு எதிரான வறட்டுத்தனமாகும்.

நேபாள மாவோயிஸ்டு கட்சியின் மூத்த துணைத் தலைவர்களில் ஒருவரான கிரண் எனப்படும் மோகன் வைத்யா, ""நாங்கள் வகுத்துக் கொண்ட புதிய செயல்தந்திரம் சரியானது. ஆனால் கட்சித் தலைவர் பிரசந்தாவும், துணைத் தலைவர்களில் ஒருவரான பாபுராம் பட்டாராயும் அதைப் புறக்கணித்துவிட்டு, புரட்சிக்கும் நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகமிழைத்து, செம்படையை ராயல் நேபாள ராணுவத்திடம் சரணடைய வைத்துவிட்டனர். இந்திய மேலாதிக்கத்தின் கைக்கூலிகளாகிவிட்டனர். முதலாளித்துவ நாடாளுமன்ற சட்டவாதக் கட்சியாக, மாவோயிஸ்டு கட்சியை மாற்ற முயற்சிக்கின்றனர்'' என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறார்.

""இது, பிரசந்தா  பட்டாராய் துராhகக் கும்பல் நடத்தியுள்ள ஒருவகையான குடைக்கவிழ்ப்பு நடவடிக்கையாகும். கட்சியில் ஜனநாயக மத்தியத்துவம் என்பது செயலிழந்து போய்விட்டது. கட்சியின் அரசியல் சித்தாந்த சீரழிவுக்கும் பிளவுக்கும் பிரசந்தாவும் பட்டாராயும்தான் முதன்மைக் காரணம். நாங்கள் பிரசந்தா மீது பெரிதும் நம்பிக்கை வைத்திருந்தோம். இது எங்களின் பலவீனம். அவரது வலது விலகலைப் புரிந்து கொண்டு நாங்கள் விழிப்புற்று போராடுவதற்குள் மிகுந்த தாமதமாகிவிட்டது '' என்கிறார், அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான தோழர் பசந்தா. ""இந்தியாவின் தலையாட்டிப் பொம்மைகளாக பிரசந்தாவும் பட்டாராயும் மாறிவிட்டனர்'' என்று சாடுகிறார், கிரண் குழுவைச் சேர்ந்த கட்சியின் செயலர்களுள் ஒருவரான தோழர் கஜுரேல்.

தோழர் கிரண் தலைமையிலான சிறுபான்மையினர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க முன்வராமல், ""அமைதி நடவடிக்கையைத் திசை திருப்பி சீர்குலைக்கும் வகையில் கட்சியில் சிலர் அதிருப்தியைக் காட்டுகின்றனர்'' என்று அக்குழுவினர் மீது குற்றம் சாட்டும் பிரசந்தா, இச்சிறுபான்மைக் குழுவினர்தான் அமைதி நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகப் பொய்க்குற்றம் சாட்டி, தொடர்ந்து அவர்களை வறட்டுவாதிகள், கடுங்கோட்பாட்டுவாதிகள் என்று சாடி அலட்சியப்படுத்துகிறார். இன்னொரு புறம், பிரசந்தாபட்டாராய் பாதையை எதிர்க்கும் தோழர் கிரண் தலைமையிலான குழுவினரிடம் வெறும் விமர்சனங்கள்தான் இருக்கிறதே தவிர, மாற்றுத் திட்டம் இல்லை என்பதாக ஒரு கருத்து உள்ளது. ஆனால், தோழர் கிரண் தலைமையிலான குழுவினர், மக்கள்திரள் எழுச்சிகளின் மூலம் குடியாட்சியின் உயரதிகாரத்தை நிறுவி அரசியல் சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற பலுங்டார் பிளீனத் தீர்மானத்தை காட்டி, அதுதான் கட்சியின் செயல்தந்திரத் திட்டம் என்றும், அதை நிறைவேற்றக் கோருவதையே தங்களது நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தோழர் கிரண் தலைமையிலான குழுவினர், நீண்டகாலமாக பிரசந்தாபட்டாராய் குழுவினரின் சமரசசரணாகதிப் பாதைக்கு எதிராக கட்சிக்குள் போராடி வந்துள்ளனர். இருப்பினும், கட்சி ஐக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில், இருவழிப் போராட்டத்தை உறுதியாக முன்னெடுத்துச் செல்லாமல் இருந்துள்ளனர். இப்போது, பிரசந்தாபட்டாராய் குழுவினரின் து÷ராகம் மேலும்மேலும் அம்பலப்பட்டுள்ள நிலையில், அத்துரோகப் பாதையை எதிர்த்து தனியாக மேதினப் பேரணியும் பொதுக்கூட்டமும் நடத்தியுள்ளதோடு, பட்டாராய்க்கு எதிராகக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டமும், பிரசந்தாவின் கொடும்பாவி எரிப்புப்போராட்டமும் நடத்தியுள்ளனர். கிரண் குழுவினருக்கு ஆதரவாக மாவோயிஸ்டு கட்சியின் மாணவர் சங்க, தொழிற்சங்க அமைப்புகளும் பிளவுபட்டுள்ளன. இளங் கம்யூனிஸ்டு கழகத்திலிருந்து வெளியேறிய தோழர்களைக்கொண்டு ""மக்கள் சேவை கழகம்'' எனும் புதிய இளைஞர் அமைப்பை கிரண் குழுவினர் கட்டியமைத்துள்ளதாகவும், தோழர் கிரண் தலைமையிலான குழுவினர் தேர்தல் கமிஷனில் புதிய கட்சியாகத் தங்களைப் பதிவு செய்து கொள்ள முயற்சித்து வருவதாகவும், அரசியல் நிர்ணய சபையிலும் கட்சியின் மத்தியக் கமிட்டியிலும் மூன்றிலொரு பங்கினரும், செம்படை வீரர்களில் ஆகப் பெரும்பான்மையினரும் தோழர் கிரண் குழுவினரை ஆதரிப்பதாகவும் செய்திகள் வருகின்றன. தோழர் கிரண் தலைமையிலான குழுவினர் பிரசந்தாபட்டாராய் குழுவினரின் சரணடைவுப் பாதையை முறியடித்து, கட்சியை ஐக்கியப்படுத்திப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வார்கள் என நம்புவோமாக!

இடர்ப்பாடுகளால் சுற்றி வளைக்கப்பட்ட சவாலாகவும், அவற்றை முறியடித்து எழும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் தோன்றிய நேபாள புரட்சி இன்று பெரும் பின்னடைவில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. உலக முதலாளித்துவம் இதனைக் காட்டி, இனி கம்யூனிசப்புரட்சி சாத்தியமே இல்லை என்று எகத்தாளம் செய்வதற்கான நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆளும் வர்க்கங்களின் அரசியல் சமூகப் பொருளாதாரத் திட்டங்களுக்கு எதிரான மாற்றுத் திட்டங்களை முன்வைத்துப் போராடுவதன் மூலம்தான் கட்சியின் செல்வாக்கும் மேலாண்மையும் நிலைநாட்டப்பட்டு புரட்சி முன்னேறுகிறது; பாட்டாளி வர்க்கக் கட்சிக்கும் இதர முதலாளித்துவக் கட்சிகளுக்குமிடையே கொள்கை, சித்தாந்தம், வேலைத்திட்டம், நடைமுறை என அனைத்திலும் வேறுபாடு உள்ளதை அலட்சியம் செய்து, முதலாளித்துவக் கட்சிகளைப் போல நாமும் இருக்க வேண்டும் என்று கருதும் வலது விலகலை எதிர்த்துப் போரிடுவதுதன் மூலம்தான் புரட்சி முன்னேறுகிறது என்ற நேபாளப்புரட்சியின் அரிய படிப்பினையைப் பெற்று, உலகெங்குமுள்ள பாட்டாளி வர்க்கம் போராடுவதன் மூலம்தான், பிற்போக்கு முதலாளித்துவவாதிகளின் அவதூறுகளையும் பொய்ப்பிரச்சாரத்தையும் முறியடிக்க முடியும்.

• பாலன்


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ