Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

புரட்சிக்குப் பிந்தைய தீர்வைக் கொண்டு புரட்சிக்கு முந்தைய பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 04

  • PDF

புரட்சிக்குப் பிந்தைய தீர்வைக் கொண்டு புரட்சிக்கு முந்தைய முரண்பாடுகளை தீர்க்கலாம் என்று கூறுவது, புரட்சிகரமான அரசியல் நடைமுறையை நிராகரிப்பதாகும். குறிப்பாக இனப்பிரச்சனையில் இதை முன்னிறுத்துகின்ற அரசியல் போக்கைக் காண்கின்றோம். இனப்பிரச்சனை அல்லாத மற்றைய முரண்பாடுகள் மேல், இந்த அணுகுமுறையை இவர்கள் கையாள்வதில்லை. இது எதை எடுத்துக் காட்டுகின்றது என்றால், இனவாதத்தைக் கடந்து பாட்டாளி வர்க்கமாக சிந்திக்கவில்லை என்பதைத்தான். பெரும்பான்மை சார்ந்த இடதுசாரிகள், பாட்டாளிவர்க்க சக்திகள் மத்தியில் இக் கருத்துப்போக்கு செல்வாக்குச் செலுத்துகின்றது. வர்க்க அரசியல் கூறுக்கு பதில், இந்த இனவாதக் கூறு பொதுவில் காணப்படுகின்றது.

புரட்சிக்குப் பிந்தைய தீர்வை வந்தடைய முன், புரட்சி நடத்த வேண்டும். புரட்சியை நடத்துவதற்கு தடையான முரண்பாடுகளை பாட்டாளி வாக்கம் களைய வேண்டும். இதைச் செய்யாது புரட்சி நடத்த முடியாது. முரண்பாடுகளும் அது சார்ந்த ஒடுக்குமுறைகளும் நிலவும் வரை, பல்வேறு வர்க்கங்கள் தத்தம் வழிகளில் போராடுகின்றன. புரட்சிகர சக்திகள் இதற்கு எதிராகப் போராடியாக வேண்டும். இந்த வகையில் தேசிய இனப் பிரச்சனையை லெனினிய சுயநிர்ணய வழியில் முன்வைத்து போராடுவதைத் தவிர வேறு மாற்று வடிவம் எதுவும் கிடையாது.

இங்கு லெனினியவாதியாகக் காட்டிக்கொண்டு லெனினை மறுக்க முனைபவர்கள், தேசிய இனமாக இலங்கையில் இனங்கள் இல்லை என்ற தர்க்கத்தை சிலர் முன்வைக்கின்றனர். ஒரு இனம் குறைந்தபட்சம் பொதுப் பொருளாதாரம், பொது நிலத் தொடர், பொதுப் பண்பாடு, பொது மொழியை அடிப்படையாகக் கொண்டது. இந்த வகையில் இலங்கையில் ஒரு இனம், ஒரு இனமாக மாறிவிடவில்லை என்ற வாதம் இங்கு அர்த்தமற்றது. இதை அழிக்கின்ற வேலையை பேரினவாதம் செய்கின்றது. ஒரு இனம் தன்னை இனமாக கோரிப் போராடுவதே, இதை பாதுகாக்கும் அடிப்படையில் தான். இதை நிராகரிப்பது, ஒரு இனமல்ல என்பது, பேரினவாத செயல்பாட்டை சார்ந்தது. இது லெனினிய வழிமுறைகள் அல்ல.

இலங்கையில் இன முரண்பாடு பற்றிய சரியான கொள்கைதான், பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான அரசியல் அடிப்படையாகும். இலங்கையின் பிரதான முரண்பாடாக இன்னமும் இனமுரண்பாடு தான் நீடிக்கின்றது. இதை முரணற்ற வகையில் அணுகாது, பாட்டாளி வர்க்கம் புரட்சியை ஒருநாளும் நடந்த முடியாது. இது இலங்கையின் அரசியல் எதார்த்தம். இதை பாட்டாளி வர்க்கம் கவனத்தில் கொள்ளாது அணுகுகின்ற அரசியல் போக்கு என்பது புரட்சிக்கு எதிரானது.

இன முரண்பாடுகள் முற்றிய நிலையில், அவை தீர்வைக் கோருகின்றது. இந்த வகையில் இந்த முரண்பாட்டை தீர்க்கும் வண்ணம் சுரண்டும் வர்க்கங்கள் தமக்கு இடையில் ஒரு தீர்வுக்கு வருமாயின், இந்த நிலைமை முற்றிலும் வேறுவிதமாக மாறும். இந்த வகையில் இன்று ஆளும் வர்க்கங்கள் இதற்கு தீர்வாக முன்மொழியும் சுயாட்சி, மாகாணசபை … போன்ற தீர்வுகளைப் பற்றி குறைந்தபட்சம் அவர்கள் பேசுகின்றனர். ஆனால் பாட்டாளி வர்க்கமோ, எதையும் முன்வைக்கத் தவறுகின்ற அரசியல் எதார்த்தத்தைக் காண்கின்றோம். பேரினவாதத்தை தாண்டி எதையும் சிந்திக்கவில்லை என்பதைக் காண்கின்றோம். இது பச்சையான இனவாதமாகும். ஆளும் வர்க்கங்கள் கூட இனமுரண்பாட்டை கொள்கை அளவில் ஏற்றுகொண்டு தீர்வு பற்றிப் பேசுகின்ற போது, பாட்டாளி வர்க்கம் புரட்சிக்கு பிந்தைய இனமுரண்பாட்டு தீர்வு பற்றி மட்டும் பேசுகின்றது.

புரட்சிக்கு முந்தைய முரண்பாட்டை தீர்ப்பதன் மூலம் தான், இன ஜக்கியத்தை உருவாக்கி ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியை நடத்த முடியும். இந்த புரட்சியின் பின் தான், புரட்சிக்கு பிந்தைய தீர்வை வழங்க முடியும். புரட்சிக்கு முன் அதை வழங்க முடியாது. இப்படி இருக்க புரட்சிக்கு முந்தைய இன ஐக்கியத்தை எப்படி உருவாக்குவது என்பது பற்றி இவர்கள் பேசுவது கிடையாது.

புரட்சி முன், புரட்சிக்கு பின் என இரண்டு வேறுபட்ட புரட்சிகர காலகட்டம் உண்டு. இரண்டு வேறுபட்ட சூழலால் ஆனாது. இதை ஏற்றுக்கொள்வதும், இதன் அணுகுமுறையில் வேறுபாடு உண்டு என்பதை பாட்டாளி வர்க்கம் மறுக்குமாயின், அதனால் புரட்சியை ஒருநாளும் நடத்த முடியாது.

புரட்சிக்கு முன் இனங்களுக்கு இடையிலான, நிலவும் இனப் பிளவை, புரட்சிக்கு பிந்தைய தீர்வால் தீர்க்க முடியாது. எது அன்றைய எதார்த்தமோ, அதன் மீதான தீர்வை முன்வைக்காது இன ஐக்கியத்தை ஒருநாளும் உருவாக்க முடியாது.

இடதுசாரி சந்தர்ப்பவாதம் புரட்சிக்கு பிந்தைய தனது தீர்வு பற்றி மட்டும் பேசுகின்றது. புரட்சிக்கு முந்தைய பாட்டாளி வர்க்க ஐக்கியத்தை எப்படி உருவாக்குவது என்பது பற்றி அது பேசுவது கிடையாது. இந்த அரசியல் சந்தர்ப்பவாதம், பேரினவாதத்தை சார்ந்து இயங்குகின்றது.

இந்த சந்தர்ப்பவாத அரசியல் சிங்கள மக்களை இனவாதத்தில் இருந்து மீட்காது. அது போல் தமிழ் மக்களுடன் ஐக்கியத்தை உருவாக்காது.

இதுதான் சிங்கள இடதுசாரிய கட்சிகளின் கடந்தகால அரசியலாகும்;. இதனால் தான் சிங்கள பாட்டாளி வர்க்கம் ஒரு புரட்சிகர கட்சிக்குரிய அரசியல் கடமைகளை கூட முன்னெடுக்க முடியாமல் போய் இருக்கின்றது. நாட்டை இனவாத சேற்றில் இருந்து மீட்டு எடுக்கும் பாரிய பொறுப்பு பாட்டாளி வர்க்கத்தை சார்ந்தது. இது லெனினிய சுயநிர்ணய வழிகளில் மட்டும் தான் சாத்தியம். பாட்டாளி வர்க்கத்துக்கு வேறு குறுக்கு வழி எதுவும் கிடையாது.

 

பி.இரயாகரன்

08.05.2012

1. இனவொடுக்கு முறையையும், பிரிவினைவாதத்தையும் முறியடிப்பது எப்படி? - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 01

2. தமிழ் - சிங்கள முன்னேறிய சக்திகள் ஒன்றிணைவதற்கான அரசியல் எது?- சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 02

3. அரச பாசிசத்தை புரிந்துகொள்ள புலிப் பாசிசத்தை புரிந்து கொள்ளல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 03

Last Updated on Tuesday, 08 May 2012 07:19