Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் “கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூடு!” – மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கருத்தரங்கம்

“கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூடு!” – மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கருத்தரங்கம்

  • PDF

கூடங்குளம் போராட்டத்துக்கு எதிரான அவதூறுகள், டக்குமுறைகளை அரசு முடுக்கி விட்டிருக்கும் சூழலில் "பன்னாட்டு முதலாளிகளின் இலாப வெறிக்கான கூடங்குளம் அணு உலையை மூடுவோம்!' என்ற முழக்கத்தை முன்வைத்து மனித உரிமைப் பாதுகாப்பு மையம் கன்னியாகுமரி மாவட்ட  கிளை சார்பாக 26.11.11 அன்று நாகர்கோயில் ஜெபமாலை திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. கருத்தரங்கிற்கு முன், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்களும் தோழமை அமைப்புகளின் செயல்வீரர்களும் கடற்கரை கிராமங்களிலும் நாகர்கோயில் நகரிலும் அணுசக்திக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர். நாகர்கோயில் நகரத்திலும், சுற்றுவட்டார நகரங்களிலும், மீனவ கிராமங்களிலும் சுமார் ஒரு வாரகாலம் மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

 

 

கூடங்குளம் போராட்டத்துக்கு எதிராகக் கொச்சையான முறையில் அரசு மேற்கொண்டு வரும் அவதூறு பிரச்சாரங்கள் மற்றும் அணு உலைக்கு ஆதரவான பொய்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு நகர்ப்புற மக்கள் மீது தாக்கம் ஏற்படுத்தியிருப்பதை பிரச்சாரத்தின்போது பார்க்க முடிந்தது. "மின்சாரம் வேண்டும், அணு உலை கூடாதா?' என்ற குதர்க்கமான கேள்வி, "அணுசக்தி இருந்தால்தான் அணுகுண்டு தயாரிக்க முடியும், வல்லரசாக முடியும்?' என்ற தேசவெறி, "கலாம் போன்ற விஞ்ஞானிகளே சொல்லும்போது அது எப்படித் தவறாக இருக்க முடியும்' என்று கேட்கும் பாமரத்தனம், "இது இந்தியா வல்லரசாவதை விரும்பாத வெளிநாட்டு சக்திகள், கிறித்தவ நிறுவனங்களின் சதி' என்ற ஆர்.எஸ்.எஸ்காங்கிரசு கூட்டுப் பிரச்சாரம் போன்ற வாதங்களை பிரச்சாரம் செய்த தோழர்கள் எதிர்கொண்டு பதிலளித்தனர். நாகர்கோயில் சுற்றுவட்டாரம் முழுவதும்பிரச்சாரம் செய்ததன் விளைவாகக் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் உள்ளூர் மக்கள் பெருமளவில் வந்து கலந்து கொண்டனர்.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சார்பாக கருத்தரங்கில் கலந்து கொண்ட மனோ தங்கராஜ், போராட்டத்திற்கு எதிராகப் பரப்பப்படும் அரசின் பொய்யுரைகளுக்கு ஆணித்தரமாக பதில் கூறினார். நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடும் மக்களின் பிரச்சினைகளைப் பரிசீலிக்க வேண்டிய அரசு, அவதூறுகளை பரப்புவதும், போலீசை வைத்து மிரட்டுவதும், பொய் வழக்குப் போடுவதும் நியாயமற்றது என்றும்; எப்படிப்பட்ட அடக்குமுறைகளைக் கையாண்டாலும் இடிந்தகரை மக்கள் இறுதிவரை எதிர்த்துப் போராடுவரென்றும், அதற்கு எல்லாத்தரப்பு மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன், செர்னோபில் தொடங்கி ஜப்பானின் புகுஷிமா வரையிலான விபத்துகள் பற்றி புள்ளிவிபரத்துடன் விளக்கினார். அணுஉலைகளில் விபத்து ஏற்பட்டால் மட்டுமே ஆபத்து என்பது பொய். அதன் இயல்பான இயக்கத்திலிருந்தே கதிர்வீச்சு ஏற்படுகிறது என்பதற்கு தாராபூர், கல்பாக்கம், கைகா ஆகிய அணு உலை பகுதிகளில் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள புள்ளி விவரங்களிலிருந்து அதை அவர் நிறுவினார். அணு மின்சார உற்பத்தி செலவுமிக்கது, ஆபத்தானது, அதன் கழிவுகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பாதுகாக்கப்பட வேண்டியது. அதற்கு பதில் மாற்று சக்திகள் மூலமாக மின்சாரம் தயாரிக்க முடியும். குறிப்பாக, தார்பாலைவனத்தில் 5 ஆயிரம் கிலோமீட்டர் சுற்றளவில் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யலாம். முதலீடும், பராமரிப்பு செலவும் குறைவானவை என்பதை சிறப்பாக விளக்கிப் பேசினார். கூடவே அப்துல் கலாமின் கோமாளித்தனங்களைக் கோடிட்டுக் காட்டவும் அவர் மறக்கவில்லை.

மதுரை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் லஜபதிராய் அணு விபத்து இழப்பீட்டு சட்டம் எங்ஙனம் மோசடியானது என்பதை விளக்கியதுடன், கூடங்குளம் அணு உலைக்குத் தண்ணீர் எங்கிருந்து கிடைக்கும் என்ற வினாவை எழுப்பினார். "அணு உலை மூலம் வெப்பம் மட்டும் பெறப்படுகிறது. காந்தச்சட்டத்தைச் சுழற்றுவதற்கான ஆற்றல் நீராவி மூலமாக பெறப்படுகிறது. நீராவிக்குத் தேவையான தண்ணீர் குமரி மாவட்டத்தில் உள்ள கோதையாறு, பேச்சிபாறை, பெருஞ்சாணி, சித்தாறு1, சித்தாறு 2 ஆகிய அணைகளிலிருந்து எடுக்கின்ற திட்டம் உள்ளது. அந்த அணைகளில் இருந்து நீர் எடுக்கப்பட்டால் குமரி மாவட்ட விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள். அணு உலையால் ஏற்படும் பாதிப்புகள், அதை ஆதரிக்கின்ற பா.ஜ.க் ஆர்.எஸ்.எஸ்; காங்கிரஸ், சாதிச் சங்கங்கள் எல்லோரையும் தான் பாதிக்கும்' என எச்சரிக்கை விடுத்தார். குமரி மாவட்டப் பாசன விவசாயிகள் சங்க தலைவர் வின்சாண்டோவும் "நீர்ப் பங்கீட்டில் ஏற்கெனவே சிக்கல் உள்ள நேரத்தில் அணு உலைக்கு நீர் எடுக்கப்பட்டால், குமரி மாவட்டம் முழுவதும் பாலைவனமாக மாறிவிடும்' என்பதை அழுத்தம் திருத்தமாக கூறினார்.

அடுத்து, பன்னாட்டு அணு உலை அரசியலும் காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ்; பா.ஜ.க.வின் வல்லரசுக்கனவும் பற்றி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில இணைச் செயலாளர் காளியப்பன் பேசினார். "இந்தியாவில் 60 விழுக்காடு மக்கள் அன்றாடம் 20 ரூபாயில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. விவசாயம் சிறு வணிகம், எல்லாம் அழிக்கப்பட்டு வருகிறது. இந்த லட்சணத்தில் இவர்கள் வல்லரசுக்கனவு காண்கிறார்கள். வல்லரசுக் கனவு உழைக்கு மக்களுக்கு எதிரானது' என்பதை விளக்கினார்.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜு, "இடிந்தகரை மக்கள் போராட்டம் இந்தியா முழுவதும் பரவட்டும், என்று அறைகூவல் விடுத்தார். "சிங்கூரிலும் நந்திகிரா மத்திலும் மக்கள் போராடியதன் விளைவாக தங்களது மண்ணை அவர்களால் காப்பாற்ற முடிந்தது. கூடங்குளத்தில் அணு உலை வேண்டாம் என்று 1988 முதலே மக்கள் போராடி வருகின்றனர். ஏன் போராடவில்லை என்று கேட்பது நியாயமில்லை. மனித குலத்திற்கே எதிரான இப்படிப்பட்ட அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து அனைவரும் போராட வேண்டும். அப்துல்கலாம் பெரிய விஞ்ஞானி, மதிக்கத் தகுந்தவர் என்கிறார்கள். அவரை சட்டையைக் கழட்டி அவமதித்தாலும் அமெரிக்காவுக்குப் போகிறார். இங்கே இடிந்தகரை வந்து மக்களைச் சந்திக்க மறுக்கிறார். இடிந்தகரையில் உள்ள ஒரு மூதாட்டிக்கு பதில் சொல்ல அவரால் முடியாது.  மக்களுக்காகவும் தாய்நாட்டிற்காகவும் போராடி உயிர்நீத்த கட்ட பொம்மன், மருது, திப்பு, பகத்சிங் வாரிசுகளாக நின்று நாம் போராட வேண்டும். அவர்கள் தோற்றாலும் மக்களின் மனங்களை வென்றார்கள். அதுபோல் நம்முடையபோராட்டம் மகத்தான மக்களின் போராட்டமாக இருக்கவேண்டும்' என்று அறைகூவல் விடுத்தார்.

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரை கிளையின் துணைச் செயலாளர் உயர் நீதிமன்ற வழக்குரைஞர் வாஞ்சிநாதன் கருத்தரங்கத்திற்கு தலைமையேற்றார். குமரி மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் சிவராசபூபதி வரவேற்றார். அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இந்து மகா சபை என்றொரு இந்துவெறி அமைப்பு கருத்தரங்கிற்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்திருந்தது. கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கு சுப.உதயகுமார் குமரி மாவட்டத்துக்குள் நுழைந்தால் அவரை உளவுப்படை  கைது செய்யும் என்று தினமலர் செய்தி வெளியிட்டது. தினமலரை அம்பலப்படுத்தி நாகர் கோயில் நீதிமன்றம் மற்றும் நகரம் முழுவதும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சுவரொட்டி பிரச்சாரம் மேற்கொண்டது. திட்டமிட்ட இத்தகைய அவதூறு பிரச்சாரங்களை நிராகரித்து, திரளான மக்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

பு.ஜ.செய்தியாளர், நாகர்கோயில்