Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் அணுஉலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!

அணுஉலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!

  • PDF

 

கூடங்குளம் அணு உலை தொடர்பான விவாதம், "அணுசக்தி பாதுகாப்பானதா, இல்லையா?' என்ற சட்டகத்துக்குள்ளேதான் பெரும்பாலும் நடந்து வருகிறது. கூடங்குளம் அணு உலையை நிறுவுவதாக இருக்கட்டும், அணு மின்சாரம்தான் ஒரே மாற்று என்று மன்மோகன் சிங்  தற்போது எழுப்பும் கூக்குரலாக இருக்கட்டும், இவை மறுகாலனியாக்க கொள்கைக்கும், பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளைக்கும் ஏற்ப நமது நாட்டின் மீதும் மக்களின் மீதும் திணிக்கப்பட்ட முடிவுகள். இந்த உண்மையை மறைத்துவிட்டு, தேசத்தின் மீதும் அறிவியலின் மீதும் உள்ள மாளாக் காதலின் காரணமாகத்தான் இம்முடிவுகள் எடுக்கப்பட்டதைப் போல அரசும் அதிகார வர்க்கமும் நடிக்கின்றன. இதனை அம்பலப்படுத்துவதுதான் இப்பிரச்சினையில் கேந்திரமானது.

"ஏன் கூடாது கூடங்குளம் அணுஉலை' என்ற தலைப்பில் சுவராத் ராஜு, எம்.வி.ரமணா என்ற இரு இயற்பியலாளர்கள் இந்து நாளேட்டில் (12, நவ.) ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றனர். அறிவியல் தொழில்நுட்ப ரீதியான கேள்விகளுக்குப் பின், அறிவியல் தெரியாத பாமர மக்களின் சார்பில் இறுதியாக அவர்கள் எழுப்பியிருக்கும் ஒரு கேள்வி முக்கியமானது.  "கூடங்குளம் உலை அத்தனை பாதுகாப்பானதென்றால், "கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதனைத் தயாரித்த ரசிய நிறுவனம் சல்லிக்காசு கூட இழப்பீடு தரவேண்டாம்' என்று இந்தியரசிய ஒப்பந்தத்தின் 13ஆவது ஷரத்து கூறுகிறதே, அது ஏன்?' என்று அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

 

 

விற்பனை செய்யப்பட்ட ஒரு பொருளில் உற்பத்தி சார்ந்த குறைபாடு இருந்து அதனால் பாதிப்பு ஏற்பட்டால், உற்பத்தி செய்த நிறுவனத்திடம் இழப்பீடு கோருவதென்பது மிகச் சாதாரணமான நுகர்வோர் உரிமை. மின்விசிறி முதல் விமானம் வரை எல்லாப் பொருட்கள் விசயத்திலும் உள்ள இந்த உரிமை அணு உலைக்கு மட்டும் கிடையாதாம். "உற்பத்திக் குறைபாட்டினால் விபத்து நேர்ந்தாலும் கம்பெனி பொறுப்பல்ல' என்ற சட்டத் திருத்தத்தை ஏற்கெனவே நிறை வேற்றப்பட்டிருக்கும் அணு உலை பாதுகாப்பு சட்டத்தில் செய்ய வேண்டும் என்று அமெரிக்க, பிரெஞ்சு கம்பெனிகள் நிர்ப்பந்திக்கின்றன. இதனை ஏற்று அச்சட்டத்திற்கு திருத்தமும் கொண்டு வந்திருக்கிறார் மன்மோகன் சிங். (தி இந்து, நவ.12)

"விபத்துக்கு வாய்ப்பே இல்லை'  என்று கூறும் பன்னாட்டு முதலாளிகள் இழப்பீடு பற்றி ஏன் அஞ்ச வேண்டும்? ஏனென்றால், அணுஉலை விபத்து சிறியதாக இருந்தாலும் அழிவு போபாலைக் காட்டிலும் பெரியதாக இருக்கும். இழப்பீடு பெரும் தொகையாக இருக்கும். பன்னாட்டு முதலா ளிகள் தங்களது இலாபத்தைப் பணயம் வைக்க மாட்டார்களாம். ஆனால், கூடங்குளம் மக்களை உயிரைப் பணயம் வைக்கச் சொல்கிறது, அரசு.

இதற்காக விஞ்ஞானிகள், வல்லுநர்கள் என்ற பட்டங்களைச் சுமந்து திரியும் அயோக்கியர்களை அமர்த்தி அணுஉலைக்கு ஆதரவாகக் கூவச் சொல்கிறது. இந்த "வல்லுநர்கள்' தான் நாட்டைக் கெடுப்பதில் முன்னோடிகள். சாதாரண பாட்டரி கம்பெனி என்று மக்கள் நம்பிக் கொண்டிருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்திற்குள் நச்சு வாயுவை உற்பத்தி செய்யத் திட்டம் வகுத்துத் தந்த விஞ்ஞானி, அதற்கு ஒப்புதல் தந்த அதிகாரி, மூச்சுத் திணறி இறந்த மக்களின் சவப்பரிசோதனை அறிக்கையில்கூட தில்லு முல்லு செய்த மருத்துவர்களென எல்லா அயோக்கியர்களும் "வல்லுநர்கள்'தான்.

ஆபத்தான இரசாயன ஆலைகளுக்கு அனுமதி வழங்குவது முதல் காடுகளை அழித்துச் சுரங்கம் தோண்டச் சுற்றுச் சூழல் அனுமதி தருவது வரை எல்லாப் பித்தலாட்டங்களையும் முதலாளிகளுக்கு செய்து கொடுப்பவர்களும், விவசாயிகளுக்கே தெரியாமல் மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகளைப் புகுத்தி,  விவசாயப் பல்கலைக்கழகங்களைப் பன்னாட்டு நிறுவனங்களின் அடியாள்  கழகங்களகை மாற்றி விவசாயிகளின் குடியைக் கெடுப்பதும் விஞ்ஞானிகளும் வல்லுநர்களும்தான்.

விஞ்ஞானத்தை நம்புவது வேறு, விஞ்ஞானிகளை நம்புவதென்பது வேறு. கூடங்குளத்தில் போராடும் மக்களையெல்லாம் பகுத்தறிவற்ற மூடர்கள் போல தனது (தினமணி) கட்டுரையில் சித்தரித்து, "கெக்கெக்கே' என்று சிரிக்கிறார் நெல்லை சு.முத்து என்ற எழுத்தாளர். ஸ்ரீஹரி கோட்டாவில் சூடம் கொளுத்தி ஏவுகணை பத்தவைக்கும் கோமாளிகளுக்கு இவ்வளவு கொழுப்பு தேவையில்லை.

அணுகுண்டுக்கே அல்லேலுயா பாடியவரும், இந்தியஅமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் எனும் அடிமை ஒப்பந்தத்தின் ஆதரவாளரும், தினமலரால் நேர்மையின் இருப்பிடம் என்று போற்றப்படுபவருமான அப்துல்கலாம் கூடங்குளம் மின் நிலையத்துக்குள் இரவு 1.30க்கு நுழைந்து அதிகாலை 4 மணி வரை ஆய்வு நடத்தி விட்டு, "கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது' என்று 40 பக்க அறிக்கையை உடனே வெளியிட்டிருக்கிறார்.

"கலாம்தான் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி' என்று நம்பும் பழ.நெடுமாறனால் கூட, அக்னி ஏவுகணையை விஞ்சும் வேகத்தில் கலாம் தயாரித்திருக்கும் இந்த அறிக்கையை நம்ப முடியவில்லை. ரசிய நிறுவனமான "ஆட்டம் ஸ்ட்ராய் எக்ஸ்போர்ட்' டின் இணையதளத்தில் கம்பெனி விளம்பரத்துக்காக அவர்கள் வெளியிட்டுள்ள விவரங்களையே சுட்டுத் தயாரிக்கப்பட்டிருப்பதுதான் கலாமின் அறிக்கை.

கூடங்குளம் பகுதி நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் பாதிக்கப்படாது என்றும், நாகப்பட்டினத்தை 2004இல் தாக்கிய சுனாமி கன்னியாகுமரி மாவட்டத்தைத் தாக்கவில்லை என்றும் கலாம் கூறுகிறார். அரசு புள்ளிவிவரப்படியே கன்னியாகுமரியைத் தாக்கிய சுனாமியால் மாண்டவர்களின் எண்ணிக்கை 808. இப்பகுதியில் இதுகாறும் ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்கள் குறித்த விவரங்களையும் கூடங்குளம் போராட்டக் குழுவினர் பட்டியலிட்டுள்ளனர். சுனாமியின் போது, குமரிமுனை திருவள்ளுவர் சிலையின் உயரத்துக்கு133 அடிக்கு  அலைகள் எழும்பின. ஆனால், கூடங்குளம் உலை 13.5 மீட்டர் (சுமார் 42 அடி) உயரத்தில் இருப்பதால், சுனாமி அலைகள் இதனைத் தாக்காது என்கிறார் கலாம். 133ஐ விட 42 பெரிது என்பது கலாமின் கண்டுபிடிப்பு போலும்!

உலகம் முழுவதும் நடந்துள்ள அணுஉலை விபத்துக்கள் இதுவரை ஆறே ஆறுதான் எனவும், இந்தியாவில் இதுவரை ஒன்றுகூட  நடைபெறவில்லை என்றும் கூறுகிறார் கலாம். ஆனால், 1947இலிருந்து 2008 வரை உலகெங்கிலும் 76 விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 56 விபத்துகள் 1986 இல் சேர்நோபில் விபத்துக்குப் பிறகு நடந்தவை.

4, மே 1987இல் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உலைத்தண்டு சிதைந்து 2 ஆண்டுகள் மூடல். செலவு 300 மில்லியன் டாலர். 10, செப். 1989தாராப்பூர் அயோடின் கசிவு  கதிர்வீச்சு 700 மடங்கு. செலவு 78 மில்லியன் டாலர். 3, பிப். 1995 கோட்டா ராஜஸ்தான்  ஹீலியம்ஃகனநீர் கசிவு 2 ஆண்டு மூடல். செலவு 280 மில்லியன் டாலர். 22, அக். 2002  கல்பாக்கம்100 கிலோ சோடியம் (கதிர் வீச்சு) கசிவு. செலவு 30 மில்லியன் டாலர். (பொன்.ஏழுமலை, தினமணி, 24 நவ.) இவை இந்தியாவில் நடந்த சில விபத்துகள். இவற்றில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர்; இறந்தவர்கள் பலர்.

மிகப்பெரும் விபத்துகளாக மாறியிருக்க வேண்டியவை, தொழில்நுட்ப வல்லுநர்களின் சமயோசிதத்தால் தடுக்கப்பட்டிருக்கின்றன என்பதே உண்மை. கல்பாக்கம் உள்ளிட்ட எல்லா அணுஉலைகளைச் சுற்றியும் வாழும் மக்கள் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். காற்றில் கலந்துள்ள கதிரியக்கத்தின் அளவு என்ன என்பதை வேறு யாரும் அளவிடுவதை அரசு அனுமதிப்பதே இல்லை. தேசத்தின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை என்று இவை தடை செய்யப்படுகின்றன.

செர்னோபில் விபத்தில் இறந்தவர்கள் வெறும் 57பேர் மட்டும்தான் எனப் புளுகுகிறார் கலாம். புற்றுநோய் வந்து 70,000 பேர் உயிரிழந்ததாகவும், இன்றும் பல்லாயிரம் பேர் அதன் பாதிப்பினால் புற்றுநோய்க்கு ஆளாகியிருப்பதாகவும் அமெரிக்காவின் நியுயார்க் அகாடமி ஆஃப் சயின்ஸ் கூறுகி ற து.  உலகெங்கும் உள்ள 136 அணு உலைகளைச் சுற்றி வாழும் மக்கள் மத்தியில் செய்யப்பட்ட மருத்துவ ஆய்வில், அவர்களிடேயே புற்றுநோயும், ஊனமும் மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

ஃபுகுஷிமா விபத்துக்குப்  பின்  ரசிய அணுஉலைகளைச் சோதித்த அந்நாட்டு விஞ்ஞானிகள், "நிலநடுக்கம், தீ, வெள்ளத்தை எதிர்கொள்ளும் திறன் நமது உலைகளுக்கு இல்லை' என்று அந்நாட்டு அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர். கலாமோ கூடங்குளம் உலை 100 சதவீதம் பாதுகாப்பானது என்று கூறுகிறார். இந்த விசயத்தில் அணுசக்தித் துறை தலைவர் முகர்ஜியை, கலாமுக்கே அண்ணன் என்று சொல்லலாம். ஃபுகுஷிமா விபத்து பற்றி தொலைக்காட்சியில் செய்தி வந்த மறுகணமே, "இது விபத்தல்ல, ஜப்பானிய விஞ்ஞானிகள் சோதனை செய்கிறார்கள்' என்று இவர் இந்தியாவிலிருந்து அறிக்கை விட்டார். இதனைக் கேட்டு ஜப்பானிய விஞ்ஞானிகளே வெலவெலத்து விட்டனர்.

கலாம், முகர்ஜி போன்ற வல்லுநர்களின் பொய்களுக்கு மறுப்பெழுத பக்கங்கள் போதாது. கலாமின் பொய்களைக் காட்டிலும் கீழ்த்தரமானது, அவர் கூடங்குளம் மக்களுக்கு சிபாரிசு செய்திருக்கும் பத்து அம்சத்திட்டம். "கூடங்குளத்தில் மருத்துவமனை, சாலை, தொழிற்சாலை, பள்ளி, விளையாட்டு மைதானம், 200 கோடிக்கு வளர்ச்சித் திட்டம்' என்று பயாஸ்கோப் காட்டுகிறார் கலாம். ஓட்டை விலை பேசுவதையும், ஒரு பெண்ணின் மானத்தை விலை பேசுவதையும் விடக் கேவலமாக மக்களின் உயிரை விலை பேசுகிறார் இந்த "விஞ்ஞானி'. கூடவே, கூடங்குளம் உலைக்கு தண்ணீர் கொண்டுவரும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக, பேச்சிப்பாறை அணையிலிருந்து குடிநீர் கொண்டுவர வேண்டும் என்று கூறி இரு மாவட்ட மக்களுக்கும் சிண்டு முடிகிறார்.

அணுசக்தியை ஆதரிக்கும் அனைவரும் இதன் உற்பத்தி செலவு மற்றெல்லாவற்றையும் விடக் குறைவானது, சுற்றுச் சூழலை மாசுபடுத்தாதது என்றும் கூறுகின்றனர். ஆடு கால்பணம், சுமை கூலி முக்கால்பணம் என்பதுதான் அணுசக்தி. உற்பத்திச்செலவு குறைவு. அணுக்கழிவைப் பராமரிக்கும் செலவு  அதிகம். அணு உலை 30 ஆண்டுகளில் மூடப்பட்டு விடும். அது தோற்றுவித்த கழிவின் கதிர்வீச்சு 25,000 ஆண்டுகள் நீடிக்கும். அதனைப் பாதுகாக்க பல்லாயிரம் கோடி செலவு. இதுதான் சுற்றுச் சூழலுக்கும் எதிர்கால சந்ததிக்கும் அணுஉலை விட்டுச் செல்லும் பரிசு.

கூடங்குளம் உலையின் அணுக்கழிவுகள் ரசியாவுக்குக் கொண்டு செல்லப்படும் என்று முதலில் ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர், அது கூடங்குளத்திலேயே மறுசுழற்சி செய்யப்படும் என்றார் கூடங்குளம் உலையின் இயக்குநர் காசிநாத் பாலாஜி. கழிவைப் பாதுகாப்பாக ரயில் மூலம் வேறு இடத்துக்கு கொண்டு போய் விடுவோம் என்றது அணுசக்தித் துறை. அக். 7 அன்று பிரதமரைச் சந்தித்தபோது அணுக்கழிவை ஒரு சிறிய கண்ணாடிப் பந்துக்குள் உருக்கி அடைத்து விடுவோம் என்று சொல்லியிருக்கிறார் எஸ்.கே.ஜெயின். பயன்படுத்தப்படும் யுரேனியத்தில் 25மூ கழிவாகத் தங்கும் என்கிறார் அப்துல் கலாம். இரண்டு வாரங்களுக்குள் இத்தனை முரண்பட்ட பதில்கள் தரப்பட்டதாக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க  ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் அம்பலப்படுத்துகிறார்.

இந்த அணுக்கழிவிலிருந்துதான் அணு ஆயுதம் தயாரிக்கப்படுகிறது என்பதால், இது தேசப் பாதுகாப்பு இரகசியமாகிவிட்டது. இது பற்றி நம் நாட்டு மக்களுக்கு கூற மறுக்கும் அரசு, இதே விவரத்தை ஆண்டுதோறும் அமெரிக்காவுக்கு எழுதிக் கொடுக்கவும், அமெரிக்காவின் அடியாளான சர்வதேச அணுசக்தி முகமை இந்திய அணுஉலைகளைச் சோதனையிடவும் அனுமதிப்பதாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.

கூடங்குளம் மக்களுக்கு விளக்கமளிப்பதற்காக மத்திய அரசு அனுப்பி வைத்த வல்லுநர் குழுவிடம் 49 கேள்விகளைப் போராட்டக் குழுவினர் கொடுத்திருக்கின்றனர். அவற்றுக்கு வெளிப்படையாக பதிலளிக்காமல், "இந்தக் கேள்விகளை யெல்லாம் உங்களுக்கு யார் தயாரித்துக் கொடுத்தார்கள்?' என்று எதிர்க்கேள்வி எழுப்பியிருக்கிறது வல்லுநர் குழு. (ட வ வ ணீ : ஃ ஃதீ தீ தீ . ஞீ டி ச் ண த டு ழூ . ணி ணூ ஞ் ஃ டு ணி ணி ஞீ ச் ணடுதடூச்ட்தஞீச்தூச்டுதட்ச்ணூ)

இந்திய அரசின் இந்த அணுஉலைக் காதல் எப்போது உருவானது? இரான்இந்தியா எரிவாயுக்  குழாய்திட்டம் கையெழுத்தாக விருந்த சூழ்நிலையில், 2005 இல் இந்தியாவுக்கு வந்த அமெரிக்க வெளியுறவு செயலர் கண்டலிசா ரைஸ், "இரானுடன் சகவாசம் வேண்டாம். அமெரிக்காவிலிருந்து அணுஉலை தருகிறோம், அணுசக்திதான் சுற்றுச்சூழலுக்கு நல்லது' என்று அறிவுரை கூறினார்."அப்படியிருக்கும்போது 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் ஏன் ஒரு அணுஉலை கூட அமைக்கவில்லை?' என்று அந்த அம்மையாரை மன் மோகன் கேட்கவில்லை.

2050ஆம் ஆண்டுக்குள் ஆயிரம் மெகாவாட் திறனுள்ள 208 உலைகளை நாம் சுயசார்பாக அமைக்க முடியும் என்றும் யாரையும் சார்ந்திருக்கத் தேவையில்லை என்றும் 2004இல் இந்திய அணுசக்தி துறை கூறியது. 2005 இல் அமெரிக்காவின் உபதேசத்தைக் கேட்டபின், "அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடாவிட்டால் ஒரு அணு உலைகூட இயங்க முடியாது' என்று பல்டியடித்தார் மன்மோகன். இப்போது, 2050க்குள் 1000 மெகாவாட் திறனுள்ள 655 உலைகளை அமைத்து, 6.5 லட்சம் மெகா வாட் அணுமின்சாரத்தை உற்பத்தி செய்யப்போவதாகப் பேசியிருக்கிறார் மன்மோகன். அதாவது இந்தியாவின் 3000 கி.மீ. நீளக் கடற்கரையில் 55 கி.மீட்டருக்கு ஒரு அணுஉலை! (டாக்டர். கோபாலகிருஷ்ணன்,  முன்னாள் தலைவர், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், ஈச்டிடூதூ Nழூதீண் ச்ணஞீ அணச்டூதூண்டிண், அணீணூடிடூ 4, 2011)  பேரழிவுக்கு இதைக் காட்டிலும் குறுக்கு வழி உண்டா?

ஜெர்மனி அணு உலைகளை மூடுகிறது. பிரான்சும் ஜப்பானும் குறைக்கின்றன. இந்தியா அதிகரிக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் உலைகளைப் போல 4 மடங்கு விலையில் இவை அமெரிக்க, பிரெஞ்சு கம்பெனிகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படுவதாகச் சொல்கிறார், கோபாலகிருஷ்ணன்.

வால்மார்ட்டுக்காக சிறுவணிகர்களை அழிப்பாதயும், போஸ்கோவுக்காக காடுகளை அழிப்பதையும் முன்னேற்றம் என்று சொல்வதைப் போலத்தான், அணு உலைக்காக மக்களை அழிப்பதையும், அணுஉலைகளை இறக்குமதி செய்து உள்நாட்டு அணுஅறிவியலை அழிப்பதையும் முன்னேற்றம் என்கிறார் மன்மோகன் சிங். "அணு உலை வேண்டாமென்பவர்கள் மின்சாரம் வேண்டாமென்று  சொல்வார்களா?' என்று மிரட்டுகிறார்கள் கலாம் ரசிகர்கள். மின்சாரத்தைப் போற்றுவதற்காக உயர் அழுத்த மின்கம்பியை முத்தமிடவா முடியும்?

மக்களை மரணத்தின் விளிம்பில் நிறுத்தியாவது உற்பத்தி செய்தே ஆகவேண்டிய இந்த மின்சாரத்தால் பயனடைபவர்கள் யார்? "1995 இல் இந்தியாவின் மின் உற்பத்தித் திறன் 81,000 மெகாவாட். அப்போது 52சதவீதம்  கிராமங்களுக்கு மின்வசதி கிடையாது. இன்று உற்பத்தித்திறன் 1.82 லட்சம் மெகாவாட். இன்றும் 42மூ கிராமங்கள் இருட்டில்தான் உள்ளன' (இந்தியா டுடே, நவ.30, 2011) சிறு நகரங்களும் சிறு தொழில்களும் மின்வெட்டால் மடிந்து கொண்டிருக்கின்றன. பெருநகரங்களில் பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நுழைவாயில் முதல் கக்கூசு வரை குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ஷாப்பிங் மால்கள், நட்சத்திர விடுதிகள், பணக்காரர்களின் வீடுகள் ஆகியவற்றுக்குத்தான் தடையற்று மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. உன்னுடைய முன்னேற்றத்துக்காகவும், ஆதாயத்துக்காவும், சொகுசுக்காகவும் நாங்கள் ஏன் அழியவேண்டும் என்பதுதான் நம்முடைய கேள்வி.

கடைசியாக, "அறிவியலுக்காக மேரி க்யூரி தியாகம் செய்யவில்லையா?' என்று கேட்டிருக்கிறார் கலாம். அவருடைய வாதத்தின்படி போபாலில் கொல்லப்பட்ட மக்கள் வேதியியலின் முன்னேற்றத்துக்காகத் தியாகம் செய்தவர்கள். ஹிரோஷிமாவில் கொல்லப்பட்ட மக்கள் அணு விஞ்ஞா னத்தின் முன்னேற்றத்துக்காக உயிர் கொடுத்த தியாகிகள்!

அப்படியானால், குண்டு வீசியவர்கள்? அவர்களை விஞ்ஞானிகள் என்று யாரும் அழைத்ததில்லை. எனினும், அப்துல் கலாம் விஞ்ஞானி என்றுதான் அழைக்கப்படுகிறார். இடக்கரடக்கலாக இருக்கக்கூடும்!

• தொரட்டி