Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் “இப்படிப் போராடு!” – தமிழக அரசின் தீவட்டிக் கொள்ளைக்கு எதிராகப் புரட்சிகர அமைப்புகள் நடத்திய போராட்டங்கள்!

“இப்படிப் போராடு!” – தமிழக அரசின் தீவட்டிக் கொள்ளைக்கு எதிராகப் புரட்சிகர அமைப்புகள் நடத்திய போராட்டங்கள்!

  • PDF

பகற்கொள்ளையடிக்கும் பாசிச ஜெயாவின் பேயாட்சிக்கு எதிராகத் தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகள் உழைக்கும் மக்களிடம் விரிவாகப் பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டங்களையும்   மறியல் போராட்டங்களையும்  நடத்தி வருகின்றன.

 

 

திருச்சியில் நவம்பர் 22ஆம் தேதியன்று புரட்சிகர அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், ஒரு காட்சி விளக்க நாடகம் நடத்தப்பட்டது. பச்சைப் புடவையுடன் ஜெயலலிதா வேடமணிந்து வந்த ஒரு பெண் தோழர், "நான்தான் தமிழகத்தின் முதல்வர், புரட்சித் தலைவி ஜெயலலிதா. விலையேற்றம் கடுமையாகத்தான் இருக்கும். பழகிக் கொள்ளுங்கள்' என்று கூறியதும், அவரை நோக்கி, "உனக்கு ஓட்டுப் போட்டதுக்கு இதுவும் சொல்லுவே, இதுக்கு மேலேயும் சொல்லுவே' என்று துடப்பக் கட்டை, செருப்புடன் தாக்கி ஒரு கொடும்பாவிக்குச் செய்வதையெல்லாம் பிற தோழர்கள் செய்தார்கள். அதிருப்தியும் ஆத்திரமும் கொண்டுள்ள உழைக்கும் மக்களின் குமுறலை வெளிப்படுத்தி நடத்தப்பட்ட இச்சிறு நாடகம் பெருத்த வரவேற்பைப் பெற்றது. கொடும்பாவிக்கு மாற்றாக, முதல்வரின் வேடத்துடன் உள்ள உயிருள்ள இக்கொடும்பாவி மீது தாக்குதல் நடத்தும் இந்நிகழ்ச்சியைக் கண்டு பீதியடைந்த போலீசு, ஆர்ப்பாட்டத்தை தடுத்து பெண்கள்  குழந்தைகள் உள்ளிட்டு 70 பேரைக் கைது செய்துள்ளது.

பாசிச ஜெயா கும்பலின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக, நவம்பர் 24ஆம் தேதி சென்னைஆவடி பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் செய்த பு.மா.இ.மு. தோழர்கள் அனைவரும் சிவப்பு உடையணிந்திருக்க, இருவர் மட்டும் ஜெயலலிதா மற்றும் சசிகலாவைப் போல முகமூடியணிந்துவர, ஜெயலலிதா வேடமணிந்தவர், "தவிர்க்கவியலாத காரணத்தால் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படுகிறது' என்று திமிராகக் கூற, உடனே தோழர்கள் ஜெயலலிதாவைச் சுற்றிவளைத்து கேள்விமேல் கேள்வி கேட்டுத் திணறடித்தனர். பின்னர், உழைக்கும் மக்களிடம் "பாசிச ஜெயா அரசின் வழிப்பறிக் கொள்ளையை முறியடிப்போம்! அதன் முதற்படியாக டிக்கெட் வாங்காமல் பயணம் செய்வோம்!' என்று அறைகூவி,தொடர்ந்து பல பேருந்துகளில் பிரச்சாரம் செய்தனர்.

அடுத்தநாள் இதே குழுவினர், சென்னை  அண்ணாநகர் வளைவிலிருந்து சென்ட்ரல் நோக்கிச் செல்லும் பேருந்தில் ஏறி, "நாங்கள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யப் போகிறோம். எங்களுடன் இந்தப் போராட்டத்தில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்' என அறிவித்தனர். இதை வரவேற்று பேருந்தில் பலரும் டிக்கெட் வாங்கவில்லை. பின்னர் சென்ட்ரலிலிருந்து தேனாம்பேட்டை செல்லும் பேருந்திலும், அங்கிருந்து சேத்துப்பட்டு செல்லும் பேருந்திலும் பிரச்சாரம் தொடர்ந்தபோது, பேருந்தின் நடத்துனர்  தேனாம்பேட்டை போலீசு நிலைய வாயிலில் பேருந்தை நிறுத்தி புகார் கொடுக்க முயன்றார். ஆனால் பொலீசு அதிகாரியோ, இப்போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து, "போக்குவரத்துக்கழக டிப்போவில் வைத்து பஞ்சாயத்து பண்ணிக்கொள். இங்கே வராதே!' என்று நடத்துனரை pரட்டிவிட்டு, "அண்ணா மேம்பாலத்துக்கு அந்தப் பக்கமாகப் பாய் போராட்டம் நடத்துங்க. இந்தப் பக்கம் எங்க லிமிட்ல வருது' என்று பு.மா.இ.மு. தோழர்களை அனுப்பி வைத்தார்.

புரட்சிகர அமைப்புகள் நடத்திய இப்போராட்டங்கள் முன்னுதாரணமிக்கதாகவும், குமுறிக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்களுக்குப் எப்படிப் போராட வேண்டுமென வழிகாட்டுவதாகவும் அமைந்தன.

. பு.ஜ. செய்தியாளர்கள்