Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் செந்திலுக்கு வீரவணக்கம்!

ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் செந்திலுக்கு வீரவணக்கம்!

  • PDF

மதுரை மாவட்டம், யா.ஒத்தக்கடையைச் சேர்ந்த சில்வர் பாத்திர வியாபாரியும் புதியஜனநாயகத் தொழிலாளர்  முன்னணியின் செயல்வீரருமான 27 வயதான தோழர் செந்தில், கடந்த அக்டோபர் 26ஆம் தேதியன்று ரவுடிகளால் கொல்லப்பட்டுள்ளார்.

 

 

தோழர் செந்தில் வசித்துவரும் குறுகலான தெருவில் 17,18 வயதான கார்த்திக், நாகேந்திரன் எனுமிரு இளவயது ரவுடிகள் மது அருந்திவிட்டு இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்வது, அதிவேகமாக அத்தெருவில் வந்து பீதியூட்டுவது என்பதாக அட்டகாசம் செய்த போது, குடியிருப்போரும் தோழரும் அவர்களைக் கண்டித்து எச்சரித்துள்ளனர். தோழரின் எச்சரிக்கையைத் தங்களுக்கு விடப்பட்ட சவாலாகக் கருதிய அந்த ரவுடிகள், தங்களது கூட்டாளிகளைச் சேர்த்துக் கொண்டு, அன்று இரவு 10.30 மணியளவில் தனது வீட்டுவாசலில் நின்று கொண்டிருந்த தோழரைச் சுற்றி வளைத்து வயிற்றில் கத்தியால் குத்திச் சாய்த்துவிட்டுத் தப்பியோடிவிட்டனர். உதிரம் பெருக் கெடுத்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தோழர், மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள் மரணமடைந்துவிட்டார்.

தோழர் செந்தில் ரவுடிகளால் கொல்லப்பட்டதைக் கண்டு வெகுண்டெழுந்த  இப்பகுதிவாழ் மக்கள் போலீசு நிலையத்தை முற்றுகையிட்டுப் போராடிய பின்னர், தோழரைக் கொன்ற குற்றவாளிகளில் இருவரை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ள போலீசு, சாட்சியங்கள் இல்லை என்று எஞ்சிய இரு குற்றவாளிகளைக் கைது செய்யாமல் மழுப்பி வருகிறது.

ஈராண்டுகளுக்கு முன்பு பு.ஜ.தொ .மு.வின்  சரியான அரசியல் மற்றும் செயல்பாட்டினால் ஈர்க்கப்பட்டு அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டவர் தான், தோழர் செந்தில். அமைப்பில் இணைந்த பிறகு அவரது பங்களிப்பு இல்லாமல் எந்தப் பணியும் நடந்ததில்லை எனுமளவுக்கு உற்சாகத்தோடும், முனைப்போடும் முன்னணி ஊழியராகச் செயல்பட்டார். அவசரத் தேவைக்கு இரத்ததானம் செய்வது, குருதிக் கொடையாளர்களை ஏற்பாடு செய்து தருவது என எல்லையற்ற மனிதநேயராக வாழ்ந்த அவர், பாட்டாளி வர்க்கப் பண்பாட்டை வழுவாமல் பின்பற்றியதோடு,  அமைப்பின் நிகழ்ச்சிகள் அனைத்திலும் குடும்பத்தோடு பங்கேற்று வந்தார்.

தோழர் கொல்லப்படுவதற்கு சற்று முன்னர் கூட, அத்வானியின் ரத யாத்திரையை அம்பலப்படுத்தி அமைப்பின் சார்பில் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை மறுநாள் அதிகாலை ஒட்டுவதற்குத் தேவையான பசையைத் தயார்செய்து வைத்திருந்தார். அவர் தயாரித்த பசையைக் கொண்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தும் சுவரொட்டியை ஒட்டநேர்ந்த வேதனையால் தோழர்கள் விம்மிக் கதறினர். 3 வயதான ஆண் குழந்தை, பிறந்து 7 நாட்களேயான ஆண் குழந்தை, மனைவி கலைவாணி மற்றும் அமைப்புத் தோழர்களைப் பரிதவிக்க விட்டுள்ள தோழரின் மரணம் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அக்டோபர் 27ஆம் தேதியன்று யா.ஒத்தக்கடையில் அமைப்பின் சார்பில் தோழர் செந்திலுக்குச்  சிவப்பஞ்சலி செலுத்தி நடத்தப்பட்ட இரங்கல் கூட்டத்திலும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதி ஊர்வலத்திலும் நூற்றுக்கணக்கான பகுதிவாழ் மக்களும் சில்வர் பட்டறைத் தொழிலாளர்களும் பங்கேற்றுத் தோழரின் தியாகத்தைப் போற்றியும் ரவுடியிசத்துக்கு எதிராகவும் விண்ணதிரமுழக்கமிட்டனர்.

வாழ்க்கையைப் பற்றிய எந்த மதிப்பீடும் இல்லாமல், எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற கேடுகெட்ட பண்பாட்டைத் திணிக்கும் மறுகாலனியாதிக்கமும், மனிதப் பண்புகளை வேரறுக்கும் சாராய போதையும், ரவுடியி சத்தைக் கொண்டாடும் சினிமாக்களும் எவ்வாறு இளம் ரவுடிகளை உருவாக்குகின்றன என்பதற்கும், இது எவ்வாறு சமுதாயத்துக்குப் பெருத்த அபாயமாகியுள்ளது என்பதற்கும் தோழரின் படுகொலை இன்னுமொரு சான்றாக அமைந்துள்ளது. இக்கேடுகெட்ட அழுகி நாறும் சமுதாய அரசியலமைப்பு முறையை வெட்டி வீழ்த்த, தோழர் செந்திலின் இலட்சியக் கனவுகளையும் புரட்சிகர உணர்வையும் போர்க்குணத்தையும் நெஞ்சிலேந்திப் போராட உறுதியேற்போம்!

தியாகத் தோழர் செந்திலுக்கு வீரவணக்கம்!

புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணி, மதுரை.6