Tue04162024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் பாட்டில் தண்ணீர் மகாத்மியம்!

பாட்டில் தண்ணீர் மகாத்மியம்!

  • PDF

09_2005.jpg

பாட்டில் நீரும், கேன் தண்ணீரும் வாங்கிக் குடிக்கும் படித்த வர்க்கத்தினர், காசு கொடுத்து வாங்குவதன் காரணமாகவே அது தரமான நீர் என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

 

ஐரோப்பாவில் குடிநீரின் தரநிர்ணயத்துக்கு 56 காரணிகளை வைத்துள்ளனர். உலக சுகாதார நிறுவனம் கூறுவது 40 காரணிகள். நம் நாட்டுக்கு பன்னாட்டு பாட்டில் கம்பெனிகள் நிர்ணயித்துள்ளவை வெறும் 16 காரணிகள். ""குடிக்கத்தக்க நீரெல்லாம் குடிநீரே'' என்கிறது நம் அரசு.

 

அதாவது இதற்கு சட்டரீதியான தரநிர்ணயம், கட்டுப்பாடு எதுவும் இதுவரை கிடையாது. அதாவது, பாட்டில் தண்ணீரைக் கொண்டு போய் அரசின் ஆய்வு நிலையத்தில் கொடுத்தால், ""இதில் பூச்சி மருந்தும், இரசாயனப் பொருட்களும் எவ்வளவு உள்ளது'' என்பதைக் கூறுவார்கள். ஆனால் ""இன்ன அளவுக்கு மேல் இரசாயனப் பொருள் கலந்த நீரை விற்கக் கூடாது'' என்றும் கூறும் சட்டம் எதுவும் கிடையாது என்பதே நிலை.

 

தங்களுடைய தண்ணீர் ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் முறையில் சுத்திகரிக்கப்படுவதாக பல நிறுவனங்கள் கூறுகின்றன. இம்முறையில் குளோரினை அகற்ற முடியாது. மைக்ரோ மற்றும் அல்ட்ரா சுத்திகரிப்பு முறைகளில் தண்ணீரில் உள்ள கிருமிகளுடன் சேர்ந்து நன்மை செய்யும் பாக்டீரியாக்களும் செத்து விடுவதால் அந்தத் தண்ணீர் சவத்துக்குச் சமம். செலவு அதிகம் பிடிக்கும் "நேனோ' சுத்திகரிப்பு முறையை யாரும் செய்வதில்லை.

 

வேதியல் முறைகளில் சுத்திகரிப்பு செய்யாமல், திறந்த தூய்மையான நீர்நிலைகளிலிருந்து தண்ணீரை எடுத்து, அதை லாரியில் ஏற்றாமல், அங்கேயே அப்படியே பாட்டிலில் அடைத்து கொண்டு வருவதாகச் சொல்கிறது ஏவியான் எனும் நிறுவனம். ஒரு லிட்டர் தண்ணீரின் விலை 750 ரூபாய். நம்மூர் நட்சத்திர விடுதிகளில் மட்டுமே இது புழங்குகிறது.

 

மற்ற கின்லே, அக்வாஃபினா முதலான தண்ணீர் அனைத்தும் 500 அடி 1000 அடி போர் போட்டு எடுக்கப்படுபவைதான். ""உங்கள் ஊர் தண்ணீரில் பூச்சி மருந்தும் இரசாயனமும் இருந்தால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?'' என்று உச்சநீதி மன்றத்தில் கோக்கும் பெப்சியும் வாதாடி வருகின்றன. எனவே, "ஐளு 14543:1998" என்று எண்களை அச்சிட்டு அவர்கள் காட்டுவது வெறும் ஜிகினா வேலை. அவ்வளவுதான்.

 

அக்வாஃபினாவில் மரபணுக்களை பாதிக்கும் டைமெத்தோ பேட் உலகளவில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 13 மடங்கு அதிகமாக உள்ளது; ஞாபகமறதி நோயைத் தோற்றுவிக்கும் "குளோரோபைரோபஸ்' வோல்கா மற்றும் மெக்டோவல் தண்ணீரில் (தண்ணியிலல்ல) உள்ளது.

 

புற்று நோய் மனச்சிதைவு மற்றும் கண் பார்வையைப் பாதிக்கும் "மாலதியான்' பிஸ்லரியில் 400 மடங்கு உள்ளது. கல்லீரல் பாதிப்பு, மார்பக, இரத்த புற்றுநோயை உருவாக்கும் "லிண்டேன்', 45 மடங்கு அதிகமாக "ஹலோ' தண்ணீரில் உள்ளது. லிண்டேனுக்குரிய அத்தனை பாதிப்புகளையும் உருவாக்கும் டி.டி.டி. மற்றும் மேனோகுரோட்டோபாஸ் போன்றவை 70மூ பாட்டில் தண்ணீர்களில் நிறைந்துள்ளது.

 

இவையனைத்தும் சூழலியல் அமைப்புகள் நடத்திய சோதனைச் சாலை ஆய்வுகளின் முடிவுகள். இலவசமாகக் கிடைக்கும் நீரை காசுக்கு விற்கும் இந்தக் கயவர்கள், குறைந்தபட்சம் அதைச் சுத்திகரித்துத் தருவதற்குக் கூடப் பொறுப்பேற்பதில்லை. மாறாக, கார்ப்பரேசன் தண்ணீரையே பாட்டிலில் அடைத்து "தசானி' என்று பெயரிட்டு விற்ற கோக் பிரிட்டனில் பிடிபட்டு விற்பனையையே நிறுத்தியது. அமெரிக்காவிலும் இதே கதைதான்.

 

இங்கேயோ கேட்கவே வேண்டாம். ""300மூ அதிகமான ஆக்ஸிஜன் கலந்த நீர்'' என்று தனது தண்ணீருக்கு விளம்பரம் செய்கிறது மாணிக்சந்த் குட்கா கம்பெனி. ஆனால், ""தண்ணீரின் இயல்பான அளவைவிட அதிக ஆக்ஸிஜனை கரைக்கும் முயற்சி தோல்வியடைந்து விட்டதாக'' ஒப்புக் கொள்கிறது, தண்ணீர் வியாபாரிகளின் இணையத்தளம்.

 

பழுத்துப் போன வெள்ளைச் சட்டைக்கு சொட்டு நீலம் போடுவது போல, பாட்டிலுக்கு நீல நிறம் ஏற்றி தண்ணீரைப் "பளிச்சிட' வைத்து படித்த வர்க்கத்தின் பாக்கெட்டை சூறையாடுகிறார்கள் இந்த எத்தர்கள்.


""அப்புறம் பானைத் தண்ணீருக்கும் பாட்டில் தண்ணீருக்கும் என்னதான் வித்தியாசம்?'' என்று கேட்கிறீர்களா? வித்தியாசம் 13 ரூபாய்!