Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் விவசாயிகள் மீது தடியடி: பேயாட்சி!

விவசாயிகள் மீது தடியடி: பேயாட்சி!

  • PDF

திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் விளையும் நெல்லை விற்பனை செய்யப் போதுமான அளவிற்கு நேரடி நெல் கொள்முதல் விற்பனை நிலையங்கள் அம்மாவட்டங்களில் திறக்கப்படுவதில்லை.  இதனால், அம்மாவட்டங்களைச்  சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் வேறு வழியின்றி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாகத்தான் நெல்லை விற்று வருகின்றனர். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நெல்லுக்குஅரசு நிர்ணயித்திருக்கும் கொள்முதல் விலை கிடைக்காது. வியாபாரிகள் கூட்டணி கட்டிக் கொண்டு தீர்மானித்துச் சொல்லும் விலையில்தான் நெல் மூட்டைகளை விற்க முடியும்.  சட்டபூர்வமாக நடந்துவரும் இந்தக் கொள்ளையை விவசாயிகள் தட்டிக் கேட்க முயன்றால், போலீசின் குண்டாந்தடியும் பொய் வழக்கும்தான் அவர்கள் மீது பாயும்.  இந்த அநியாயம்தான் கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி விழுப்புரத்திலும் நடந்தது.

 

 

விழுப்புரம் நகரில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தினமும் ஏறத்தாழ 2,000 நெல் மூட்டைகள் விற்பனைக்கு வருவது வழக்கம். கடந்த ஜூன் 2 அன்று வழக்கத்தைவிட அதிகமாக நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன. 75 கிலோ கொண்ட ஒரு மூட்டை நெல் 750 ரூபாயிலிருந்து 825 ரூபாய் வரை  விற்பனையாகும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர்.  ஆனால், அன்று 75 கிலோ மூட்டைக்கு ரக வாரியாக 360 ரூபாய் முதல் 639 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் அறிவித்தனர்.

தவிட்டின் விலையைவிட நெல்லின் விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதைக் கேட்ட விவசாயிகள் கொதித்துப் போனார்கள். நெல் மூட்டைகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்திருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, அதிகாரிகளும் வியாபாரிகளும் கூட்டணி கட்டிக் கொண்டு தம்மிடம் பகற்கொள்ளை அடிக்க முயலுவதைப் புரிந்து கொண்ட விவசாயிகள், நெல்லுக்கு நியாயமான விலை நிர்ணயிக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.  உள்ளூர் போலீசு துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் வந்திறங்கிய போலீசு பட்டாளம், பிரச்சினையைப் பேசித் தீர்ப்பதற்கு முயலாமல், விவசாயிகளை அடித்துத் துரத்தியது.

விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கப்படும் நெல்லை, வியாபாரிகள் அதிகாரிகள் துணையோடு நேரடி கொள்முதல் விற்பனை நிலையங்களில் அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு விற்றுக் கொள்ளை இலாபம் அடிக்கும் மோசடித்தனத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார், விவசாயிகள் விழிப்பு உணர்வு சங்கத்தின் தலைவர் சந்திரசேகரன். "திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் ஏறத்தாழ 30 இலட்சம் டன் நெல்லை வியாபாரிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் கொள்முதல் செய்கின்றனர். சராசரியாக ஒரு குவிண்டாலுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையைவிட 200 ரூபாய் குறைவாக விலை வைத்தாலே, விவசாயிகளுக்கு 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக''க் கூறுகிறார், அவர். விவசாயிகளுக்கு ஏற்படும் இந்த இழப்பு வியாபாரிகளுக்குக் கொள்ளை இலாபமாக, அதிகாரிகளுக்கு இலஞ்சமாகப் போய்ச் சேருகிறது.

ஜெயா பதவியேற்றவுடனேயே, "விவசாய உற்பத்தியைப் பெருக்கி, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்து, விவசாயத்தில் மகத்தான மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக' அறிவித்தார்.  ஆனால், விழுப்புரத்தில் நெல்லுக்கு நியாயமான விலை கோரி போராடிய "குற்றத்திற்காக' ஆறு விவசாயிகள் மீது பொய்வழக்குப் போட்டு சிறையில் தள்ளியிருக்கிறது, அவரது அரசு.

விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தடியடி நடத்த உத்தரவிட்ட போலீசு துணைக் கண்காணிப்பாளர், "இது ஒன்னும் பழைய காலம் இல்லடா'' எனச் சொல்லி அடித்தாராம். ஆம், இது இருண்ட காலம் அத்தியாயம்3 அல்லவா!