Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் சாலை கேட்டால் கொலை: இதுதான் நிதிஷ்குமாரின் சிறந்த ‘அரசாளுமை’!

சாலை கேட்டால் கொலை: இதுதான் நிதிஷ்குமாரின் சிறந்த ‘அரசாளுமை’!

  • PDF

டெல்லி ராம்லீலா மைதானத்தில் பாபா ராம் தேவின் ஊழல் எதிர்ப்பு சர்க்கஸ் தொடங்குவதற்கு ஒருநாள் முன்னதாக, அதாவது ஜூன் 3ஆம் தேதியன்று, பீகாரின் ஆராரியா மாவட்டத்தின் பர்பஸ்கன்ஜ் வட்டத்திலுள்ள ராம்பூர் மற்றும் பஜன்பூர் ஆகிய கிராமங்களில் போலீசு நடத்திய காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் ஆறுமாதக் கைக்குழந்தையும் உள்ளிட்டு 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ராம்தேவையும் அவரது பரிவாரங்களையும் போலீசு விரட்டியடித்ததை மிகக் கொடிய வன்முறைத் தாக்குதலாகச் சித்தரித்த முதலாளித்துவ ஊடகங்கள், ஏழை முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசு கொலைவெறியாட்டத்தைப் பற்றி எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை.

 

 

பீகார் அரசு தொழிற்பேட்டை வளர்ச்சி ஆணையத்தின் மூலம் ஆரோ சுந்த்ராம் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்துக்காக இக்கிராமங்களை ஒட்டியுள்ள புறம்போக்கு நிலத்தைப் பறித்துக் கொள்ள கடந்த ஆண்டு ஜூன் 24ஆம் தேதியன்று மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த நிலத்தின் வழியாகச் செல்லும் மண்சாலை இவ்விரு கிராமங்களையும் இணைப்பதோடு, என்.எச்57 அதிவிரைவு நால்வழி நெடுஞ்சாலையையும் இணைக்கிறது. தற்போது நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள நிலப்பகுதியில் தொழிற்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதோடு, கிராமத்தை இணைக்கும் மண்சாலையும் அரசால் பறிக்கப்பட்டுள்ளது.

கூலி விவசாயிகளாகவும் கூலித் தொழிலாளர்களாகவும் உள்ள, ஏறத்தாழ ஆயிரம் ஏழை முஸ்லிம் குடும்பங்கள் இக்கிராமங்களில் உள்ளன. வேலை தேடி வெளியில் செல்வதற்கும் மருத்துவமனை, சந்தைக்குச் செல்வதற்குமான இணைப்புப் பாதையையும் அரசு அபகரித்துக் கொள்வதால், இனி நெடுஞ்சாலையை அடைய இக்கிராம மக்கள் நிர்ப்பந்தமாக 5,6 கி.மீ. சுற்றிக்கொண்டு செல்ல வேண்டும். எனவே, இந்த இணைப்புப் பாதையை அபகரிக்க வேண்டாமென்று பலமுறை மனு கொடுத்து இக்கிராம மக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் பேச்சு வார்த்தைக்கு வந்த ஆலை நிர்வாகம், பறித்துக் கொள்ளப்படும் மண்பாதைக்குப் பதிலாக, ஆலையை ஒட்டிப் புதிய பாதையை அமைத்துக் கொடுத்த பிறகு கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதாக கடந்த ஜூன் முதல் நாளன்று கிராம மக்களிடம் வாக்குறுதி அளித்தது. ஆனால், இது ஒரு மோசடி நாடகம் என்பது அடுத்த நாளே அம்பலமானது.

ஐக்கிய ஜனதா தளம்  பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில், பா.ஜ.க. சட்டமேலவை உறுப்பினரான அசோக் அகர்வாலின் மகனாகிய சௌரவ் அகர்வால், ரூ.130 கோடி திட்டத்துடன் தொடங்கப்படும் இந்த ஆலையின் இயக்குனர்களில் ஒருவராவார். பா.ஜ.க.வைச் சேர்ந்த பீகார் துணை முதல்வரான சுஷில் குமார் மோடி, தனது கூட்டாளியான அகர் வாலுக்காக பர்பஸ்கன்ஜ் வட்ட அரசு அதிகாரிகளையும் போலீசையும் ஏவி, விரைவில் பாதையைப் பறிக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படியே ஜூன் 2ஆம் தேதியன்று இப்பகுதியில் பெரும்படையாக போலீசு குவிக்கப்பட்டு, கிராமத்தின் மண்சாலையை மறித்தும் சாலையின் நடுவே இருந்த சிறிய பாலத்தைத் தகர்த்தும், அசோக் அகர்வால் முன்னிலையில் ஆலை நிர்வாகத்தால் சுற்றுச் சுவர் எழுப்புவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த அநியாயத்தை எதிர்த்து ஜூன் 3 அன்று வெள்ளிக் கிழமை தொழுகை முடித்துவிட்டு வந்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆலைக்கான நிலத்தில் குவிக்கப்பட்டிருந்த போலீசுப் படை, அமைதியான முறையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த மக்களைச் சுற்றிவளைத்து, மிருகத்தனமாகத் தடியடித் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இதைக் கண்டு வெகுண்ட கிராம மக்களில் ஒரு பிரிவினர் அரைகுறையாகக் கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை இடித்தனர். உடனே, போலீசு கண்மூடித்தனமாக ஏறத்தாழ 100 ரவுண்டுகளுக்கு மேல் துப்பாக்கிச் சூடு நடத்தியது. படுகாயமடைந்து கீழே விழுந்து துடிதுடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது பாய்ந்து பூட்ஸ் காலால் எட்டி உதைத்தும் மிதித்தும் துப்பாக்கிக் கட்டையால் அடித்தும் எஞ்சியிருந்த உயிரையும் பறித்துள்ளது. போலீசு மற்றும் அரசு அதிகாரிகளுடன் இருந்த அசோக் அகர்வால், போலீசாரிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்கி ஆத்திரம் தீர உழைக்கும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான்.

இக்கொடிய கொலைவெறித் தாக்குதலில் நௌஷத் அன்சாரி என்ற ஆறு மாதக் கைக்குழந்தை கொல்லப்பட்டதோடு, அக்குழந்தையின் தாயான ரஹீனா காட்டூன் என்ற இளம்பெண்ணின் கையில் குண்டு பாய்ந்து எலும்பு முறிந்து போயுள்ளது. ஆறு மாத கர்ப்பிணியான ஷாமின் காடூணின் உடலில் 6 குண்டுகள் பாய்ந்து கொல்லப்பட்டுள்ளார்.

இது திட்டமிட்டே படுகொலை செய்யும் நோக்கத்துடன் கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுதான் என்பதை, கொல்லப்பட்டவர்கள் அனைவரது தலை, முகம், கழுத்து, நெஞ்சு, வயிறுப் பகுதிகளில் குண்டு பாய்ந்திருப்பதும், தோட்டாக்கள் துளைத்துள்ள பல வீடுகளின் கதவுகள், ஜன்னல்களும் நிரூபித்துக் காட்டுகின்றன. இத்தனையும் போதாதென்று, போலீசு வெறியர்கள் தங்களது ஜீப்புக்குத் தாங்களே தீவைத்துக் கொண்டு, போராடிய மக்கள் மீது பழி போட்டுள்ளனர். அடுத்த நாளே, தனியார் நிறுவனத்தை நாசப்படுத்தி கலவரத்தில் ஈடுபட்டதாகவும், போலீசு ஜீப்பைக் கொளுத்தி போலீசார் மீது கொடிய ஆயுதங்கடன் தாக்குதல் நடத்தியதாகவும் குற்றம்சாட்டி, போராடிய 4000 கிராம மக்கள் மீது பொய்க்குற்றம் சாட்டி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசின் வெறியாட்டம் பீகார் மாநிலமெங்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள போதிலும், ஐக்கிய ஜனதா தளத்தின் முதல்வரான நிதிஷ் குமார், போலீசார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் கிடத்தப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. இக்கொடுமையைப் பல்வேறு அமைப்புகளும் ஊடகங்களும் அம்பலப்படுத்திய பின்னரே, சுகாதாரத் துறை மெதுவாகச் செயல்பட்டது.

பர்பஸ்கன்ஜ் படுகொலை மட்டுமல்ல் கடந்த ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதியன்று குணாகந்தா அருகிலுள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பாம்ராகா கிராம மக்கள் துணை இராணுவப் படையினரின் பாலியல் வன்முறையை எதிர்த்து போராடிய போது, எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிப்பாய்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி நான்கு பேரைக் கொன்றொழித்தனர்.

பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ.வான ராஜ் கிஷோர் கேசரி, தன் மீது பாலியல் வன்முறை ஏவியதாக வழக்கு தொடுத்த பள்ளித் தலைமையாசிரியையான ரூபம் பதாக் என்ற பெண்ணை, பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொன்றுள்ளான். கொல்லப்பட்ட ரூபம் பதக் மிரட்டிப் பணம் பறிக்கும் மோசக்காரி என்று கூசாமல் புளுகி இந்த வழக்கை நீர்த்துப் போக வைக்கச் செய்தார், துணை முதல்வரான சுஷில்குமார் மோடி.

தேசியக் கவியாகப் போற்றப்படும் ராம்தாரி சிங் தின்கர் என்பவரின் மருமகள், தனது மூதாதையர்களின் வீட்டை துணை முதல்வரான சுஷில் குமாரின் மருமகன் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ளதை எதிர்த்து டெல்லி ராஜ்காட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். விதவையான அவர் தனது மகனுடன் நடத்திய இப்போராட்டம் பீகார் அரசின் யோக்கியதையை நாடெங்கும் படம் பிடித்துக் காட்டியது.

அன்னா ஹசாரேக்களாலும், பாபா ராம்தேவ்களாலும், இந்துவெறி பரிவாரங்களாலும், கார்ப்பரேட் முதலாளிகளாலும், முதலாளித்துவ ஊடகங்களாலும் "சிறந்த அரசாளுமை' என்று ஏற்றிப் போற்றப்படும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆட்சியின் யோக்கியதை இதுதான்! மாநிலத்தின் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் அரசு பயங்கரவாதத்தை ஏவுவதும், தனியார் மயச்சேவையில் புதிய அத்தியாயம் படைப்பதும்தான் இவர்களால் சித்தரிக்கப்படும் சிறந்த அரசாளுமை என்பதை பீகாரில் நடந்துள்ள படுகொலைகளே நிரூபித்துக் காட்டுகின்றன.

. முத்து