Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் “எண்டோசல்பானை விரட்டியடிப்போம்! விவசாய்த்தில் தரகுப் பெருமுதலாளிகள் – பன்னாட்டுக் கம்பெனிகள் ஆதிக்கத்தை முறியடிப்போம்!” – தமிழகமெங்கும் வி.வி.முவின் பிரச்சார இயக்கம்.

“எண்டோசல்பானை விரட்டியடிப்போம்! விவசாய்த்தில் தரகுப் பெருமுதலாளிகள் – பன்னாட்டுக் கம்பெனிகள் ஆதிக்கத்தை முறியடிப்போம்!” – தமிழகமெங்கும் வி.வி.முவின் பிரச்சார இயக்கம்.

  • PDF

எண்டோசல்பான் என்ற பூச்சிக் கொல்லி மருந்துக்கு எதிராக கேரளாவில் மக்கள் போராட்டங்கள் வலுப்பெற்றதைத் தொடர்ந்து, இக்கொலைகார பூச்சி மருந்துக்கு எதிராக அண்மைக்காலமாக நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பும் விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழலாளர்களின் போராட்டங்களும் பெருகி வருகின்றன. அதைத் தொடர்ந்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமையிலான குழுவின் முடிவுக்குப் பின்னரே முழுமையான தடை விதிக்கப்படும் என்று அறிவித்து, எட்டு வாரங்களுக்கு தற்காலிகத் தடை எனும் கண்துடைப்பு நாடகமாடியது, உச்ச நீதிமன்றம்.

 

 

அண்டை மாநிலமான கேரளத்தில் முந்தைய போலி கம்யூனிஸ்டு ஆட்சி அந்தப் பூச்சி மருந்தைத் தடை செய்து, அதை உற்பத்தி செய்யும் ஹெச்.ஐ.எல். ஆலையையும் மூடியுள்ளது. ஆனால், மே.வங்கத்தில் முந்தைய போலி கம்யூனிஸ்டு ஆட்சி இப்பூச்சி மருந்தைத் தடைசெய்ய முன்வரவில்லை. பா.ஜ.க. ஆளும் கர்நாடகத்தில் விவசாயிகளின் எதிர்ப்பால் எண்டோசல்பான் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், குஜராத்தின் மோடி அரசு வெளிப்படையாகவே தடையை எதிர்த்து நிற்கிறது. தமிழகத்தில் முந்தைய கருணாநிதி அரசே ஒரு நிபுணர் குழுவை நியமித்து ஆராயப் போவதாக அறிவித்தது.

தாயை மட்டுமின்றி, தாய்ப்பாலையும் நஞ்சாக்கித் தலைமுறை தலைமுறையாகக் கொடிய பாதிப்பை ஏற்படுத்துவதால், பிறக்கும் குழந்தைகள் வளர்ச்சியின்றி நடைபிணமாகி வருவதால், ஏற்கெனவே 81 நாடுகள் இப்பூச்சிக் கொல்லி மருந்தைத் தடை செய்துள்ளன. இருப்பினும், ரூ.1000 கோடி அளவுக்கு வர்த்தகம் நடப்பதால், தரகுப் பெருமுதலாளிகளின்  அந்நிய ஏகபோக முதலாளிகளின் நலனுக்காகவே இக்கொடிய பூச்சி மருந்தை இந்தியா அனுமதித்து வருகிறது. இன்று உலகில் அதிக அளவில் எண்டோசல்பானைப் பயன்படுத்தும் நாடாகவும், அதிக அளவில் ஏற்றுமதி செய்து வரும் நாடாகவும் இந்தியா மாறியுள்ளது.

இந்நிலையில், விவசாயத்தையும் சுற்றுச் ய்ழலையும் நஞ்சாக்கும் எண்டோசல்பானின் கொடிய விளைவுகளை விளக்கி, அதை முற்றாகத் தடைசெய்ய வலியுறுத்தியும்; இந்திய விவசாயம் தரகுப் பெருமுதலாளிகள் மற்றும் பன்னாட்டு ஏகபோக கம்பெனிகளின் இரும்புப் பிடியில் சிக்கியுள்ளதை உணர்த்தி, பி.டி. கத்தரி  பி.டி. பருத்தி முதலானவற்றைத் தடைசெய்யக் கோரியும், கடந்த மே மாதத்திலிருந்து தமிழகமெங்கும் விவசாயிகள் விடுதலை முன்னணி தாங்கள் செயல்படும் பகுதிகளில் தொடர் பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகிறது.

மே 30 அன்று உசிலம்பட்டியில், வத்தலகுண்டு சாலை மெயின்பஜார் அருகே காட்சி விளக்கப் படங்களுடன் வி.வி.மு. நடத்திய தெருமுனைக் கூட்டம் விவசாயிகளிடம் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது. "எண்டோசல்பானை விரட்டியடி!' என்ற தலைப்பிலான பிரசரத்தை வெளியிட்டு, கிராமங்கள்தோறும் பிரச்சாரத்தை நடத்தி வரும் தருமபுரி  கிருஷ்ணகிரி மாவட்ட வி.வி.மு., கடந்த 31.5.2011 அன்று தேன்கனிக் கோட்டை வட்டம் அஞ்செட்டியில் தெருமுனைக் கூட்டத்தை நடத்தியது. பொதுக்கூட்டம் போல நூற்றுக்கணக்கில் விவசாயிகள் திரண்ட இக்கூட்டத்தில், எண்டோசல்பானின் கொடூரத்தை உணர்ந்து பார்வையாளர்களாக இருந்த விவசாயிகள் தோழர்களுடன் சேர்ந்து முழக்கமிட்டதோடு, தங்களையும் அமைப்பில் இணைத்துக் கொள்ள முன்வந்தனர். எண்டோசல்பானுக்கு எதிரான இப்பிரச்சார இயக்கம், இந்திய விவசாயத்தின் மீதான பன்னாட்டு கம்பெனிகளின் ஆதிக்கத்துக்கு எதிரான பிரச்சார இயக்கமாக முன்னேறி வருகிறது.

புதிய ஜனநாயகம செய்தியாளர்கள்