Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் டௌ கெமிக்கல்ஸுக்கு சி.பி.எம்.இன் ஆராதனை!

டௌ கெமிக்கல்ஸுக்கு சி.பி.எம்.இன் ஆராதனை!

  • PDF

போபாலில், அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனத்தின் நச்சு வாயுத் தாக்குதலால் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கதனோர் இன்றும் நடைபிணமாக வாழ்கிறார்கள். நீர், நிலம் அனைத்தும் நச்சுவாயுக் கழிவால் நஞ்சாக்கப்பட்டு பலரைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று வருகிறது. 2001இல் யூனியன் கார்பைடை விலைக்கு வாங்கிய டௌகமிக்கல்ஸ் எனும் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனம், போபால் ஆலையில் 26 ஆண்டுகளாகக் குவிந்து கிடக்கும் நச்சு இரசாயனக்கழிவுகளை அகற்றுவதற்கும், நச்சு வாயுவால் நடைபிணமாகிவிட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிக்கும் போபால் மருத்துவமனையை நடத்துவதற்கான செலவுகளுக்குப் பொறுப்பேற்பதற்கும் மறுத்து வருகிறது. நட்டஈடு கேட்டும், நச்சுக் கழிவுகளை அகற்றக் கோரியும் பல வழிகளில் போராடி வரும் போபால் மக்களை  போலீசின் லத்தி கம்புகளும், சிறைக் கொட்டடிகளுமே எதிர்கொள்கின்றன.

 

 

இந்நிலையில், சி.பி.எம். கட்சியின் அர சியல் தலைமைக் குழு உறுப்பினரும், மேற்கு வங்க முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா டௌ கெமிக்கல்ஸ் நிறுவனம் மே.வங்கத்தில் முதலீடு செய்ய சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறார். "டௌ கெமிக்கல்சுக்கு போபால் விவகாரத்தில் சட்ட ரீதியாகப் பொறுப்பேற்க வேண்டிய தார்மீகக் கடமை உள்ளது. அதேசமயம், மே.வங்கத்தைத் தொழில்மயமாக்க டௌ நிறுவனத்தின் முதலீடுகளை வரவேற்கிறேன்' என்று அமெரிக்கக் கருவூலச் செயலர் ஹென்ரி பால்சனிடம் கடந்த 2007 ஆம் ஆண்டில் அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். உலகமயமாக்கலையும் தாராளமயத்தையும் நாங்கள் வரவேற்கிறோம் என்றும், இன்றைய நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மாறிக் கொண்டிருக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளதை ஹென்ரி பால்சன் அமெரிக்க அரசுக்கு செய்திக் குறிப்பாக அனுப்பியுள்ளார். இந்து நாளேட்டில் அண்மையில் வெளியிடப்பட்ட, விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்திய அமெரிக்கத் தூதரக செய்திக் குறிப்புகளில் இந்த உண்மை வெளிவந்துள்ளது. இது மட்டுமல்ல் நச்சு இரசாயனப் பொருட்களையும், ஆயுதங்களையும் உற்பத்தி செய்துவரும் டௌ கெமிக்கல்ஸ் இந்தியாவின் அரசியல்  அதிகா  ரத் தாழ்வா  ரங்களில் செல்லப் பிள்ளைபோல வலம் வருவதும் அம்பலமாகியுள்ளது.

டௌ கெமிக்கல்ஸ் தொடங்க முயற்சிக்கும் இரசாயன ஆலைத் திட்டங்களுக்கு உள்ளூர் மக்களின் எதிர்ப்பு தொடர்வதால் இத்தகைய சிக்கல்களிலிருந்தும், போபால் படுகொலைக்கு நட்ட ஈடு வழங்கக் கோரும் வழக்கிலிருந் தும் விடுவிக்கக் கோரி இந்திய அரசைப் பல வழிகளில் அமெரிக்க தூதரகம் மூலமாக டௌ  நிர்பந்தித்து வந்துள்ளதும், டௌவுக்கு ஆதரவாக எல்லா ஓட்டுக் கட்சிகளும் அதிகார வர்க்கமும் விசுவாசமாக வேலை செய்துள்ளதும் விக் கிலீக்ஸ்  செய்திக் குறிப்புகளில் அம்பலமாகியுள்ளன.

தூதரகச் செய்திக் குறிப்பின்படி, போபல் படுகொலைகளுக்கு நட்ட ஈடு கோரும் வழக்கால்  இந்தியாவில் அமெரிக்கா செய்ய இருக்கும் முதலீடுகள் பாதிக்கும் என்று அமெரிக்கத் தூதர் எச்சரித்ததும், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா, "போபால் விசவாயுப் படுகொலை போல வேறெதற்காவது எதிர் காலங்களில் டௌ பொறுப்பேற்க வேண்டியிருக்குமோ என்று  அஞ்சத் தேவையில்லை, நட்ட ஈடு வழக்கை இந்திய அரசு நடத்துவதன் நோக்கம் போபால் நச்சுக் கழிவுகளை டௌ சுத்தப்படுத்த வேண்டும் என்ற பொருளில் அல்ல' என்று சமாதானப்படுத்தியுள்ளார். மேலும், அக்டோபர் 2006 இல் நடந்த கார்ப்பரேட் முதலாளிகளுடனான ஒரு சந்திப்பில் அன்றைய வர்த்தகத்துறை அமைச்சர் கமல் நாத்தும், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியாவும், போபால் நச்சுக் கழிவுகளை அகற்றும் பொறுப்பு டௌ கெமிக்கல்சுக்கு இல்லை என்று உறுதியளித்துள்ளதும் தூதரக செய்திக் குறிப்பில் அம்பலமாகியுள்ளது.

இவை மட்டுமின்றி, டௌ கெமிக்கல்ஸின் புதிய முதலீடுகளுக்காக ஓட்டுக்கட்சிகள் செய்துள்ள பித்தலாட்டங்களும் விக்கிலீக்ஸ் மூலம் அம்பலமாகியுள்ளன. மகாராஷ்டிராவின் புனேவில் 100  ஏக்கர் நிலப்பரப்பில் புதிய இரசாயன ஆலைக்கான திட்டத்தை டௌ செயல்படுத்த முற்பட்டது. இப்பகுதியைச் சேர்ந்த வர்க்காரி இன மக்கள்,  நிலத்தடி நீரை யும் ஆற்று நீரையும் பாழாக்கும் இத்திட்டத்தை 2008இல் எதிர்த்துப் போராடினர். இப்போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்ட இப்பகுதியின் சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிராவ் பாட்டீல், ஒரு பக்கம் டௌவை எதிர்த்துப் போராடுவது போல மக்களிடம் வேடம் போட்டுக் கொண்டு, திரைமறைவில் டௌ கெமிக்கல்ஸிடம் பேரம் பேசியுள்ளதுடன், டௌவின் திட்டத்தை நிறைவேற்றிட பல ஆலோசனைகளும் வழங்கியிருப்பது விக்கிலீக்ஸ் மூலம் அம்லமாகியுள்ளது.

2009இல் வர்க்காரி இன மக்கள், மகாராஷ்டிராவைச் சேர்ந்த மத்திய விவசாய அமைச்சர் சரத்பவாரைச் சந்தித்து டௌ கெமிக்கல்ஸ் பற்றி முறையிட்ட பிறகு, ஓட்டு வங்கியைத் தக்கவைத்துக் கொள்ள பவாரின் ஆலோசனைப்படி புனே திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார், மகாராஷ்டிர முதலமைச்சர் விலாஸ் ராவ் தேஷ்முக். அத்திட்டத்தை ஆய்வு செய்து விசாரிக்க கண்துடைப்பு கமிஷன் ஒன்றையும் நிறுவினார். திட்டம் தள்ளிப் போவது கண்டு பொறுமையிழந்த டௌ கெமிக்கல்ஸின் சர்வதேசத் தலைவர்  ஆண்டிரிவ் லிவெரிஸிடம் இரண்டே மாதத்தில் விசாரணைக் கமிஷனை முடித்துவிட்டு, திட்டத்தை மீண்டும் தொடங்கிவிட

லாம் என்று அவர் உறுதியளித்துள்ளார். இதற்கு முன்பு அமைக்கப்பட்ட முதல் விசாரணைக் கமிஷனைப் போலவே இந்தக் கமிஷனும் டௌவின் புனே திட்டம் சரியானதுதான் என்று முடிவை அறிவித்தது. இருப்பினும், வர்க்காரி மக்களின் தொடர்ச்சியான போராட்டம் காரணமாக, 2010இல் வேறுவழியின்றி புனேவிலிருந்து பின்வாங்கியது டௌ கெமிக்கல்ஸ்.

இதேபோல, குஜராத்தில் சக்கான் எனுமிடத்தில் டௌ கெமிக்கல்ஸ் ஒரு திட்டத்தை ஆரம்பிக்க இருந்தது. இதனை அனுமதிப்பதற்கு 2008இல் மத்திய இரசாயன அமைச்சராக இருந்த ராம் விலாஸ் பாஸ்வான் பெருமளவு லஞ்சப் பணம் கேட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டதை தூதரகச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

டௌ கெமிக்கல்ஸ் விசயத்தில் மட்டுமா? 2005ஆம் வருடம் கையெழுத்திடப்பட்ட இந்தியஅமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு முன்பே இந்தியாவை அமெரிக்க ஆயுத வியாபாரிகளிடம் அடகு வைக்கும் வேலையை வாஜ்பேயி அரசு ஆரம்பித்து விட்டதையும், பின்னர் இதனை 2005  இல் மன்மோகன்சிங் அரசு முழுமையாக நிறைவு செய்ததையும் விக்கிலீக்ஸ் செய்திக் குறிப்புகள் வெளிப்படுத்தியுள்ளன. இச்செய்திக் குறிப்புகளின் படி, வாஜ்பேயி ஆட்சியின் போது இந்தியாவிற்கு விற்கப்படும் ஆயுதங்களின் பயன்பாட்டை சோதனையிடும் உரிமை அமெரிக்காவிற்கு கொடுக்கப்பட்டதுடன், பிற்பாடு வர இருந்த இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தத்துக்குத் தேவையான தயாரிப்பு வேலைகளும் தொடங்கின.

மக்களைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலையற்ற ஓட்டுக்கட்சித் தலைவர்களும், அதிகாரிகளும் அமெரிக்கத் தூதரகத்தின் வாயிலில் சேவகம் செய்ய நாக்கைத் தொங்க விட்டுக் கொண்டு காத்திருக்கும் தொகுப்புச் சித்திரத்தைத்தான் வெளிவந்துள்ள விக்கிலீக்ஸ் செய்திக் குறிப்புகள் காட்டுகின்றன. இவையெல்லாம் புதிய விசயங்கள் அல்ல. மார்க்சியலெனினியப் புரட்சியாளர்கள் அவ்வப்போது அம்பலப்படுத்தி வந்தவற்றைத்தான் இன்று அமெரிக்க, இந்திய ஆளும் கும்பலின் சுய வாக்குமூலங்களாக விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. ஆயினும், இவையெல்லாம் இப்போதுதான் தம் பார்வைக்கு வந்தது போல இந்து நாளேடு பரபரப்பாக செய்தி வெளியிடுகிறது. பிற இந்திய ஊடகங்களோ வாய்மூடி மௌனம் சாதித்து இந்த உண்மைகளை மூடிமறைக்கின்றன.

அனைத்து ஓட்டுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கையூட்டுக் கொடுத்துதான் 123 அணு ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்ற செய்தி வெளியானவுடன் பா.ஜ.க.வும், சி.பி.எம். கட்சியும் உத்தமர்கள் போல குதித்தனர். இந்துத்துவம் எமது அரசியல் பிழைப்பிற்கான சந்தர்ப்பவாத முழக்கமென்று பா.ஜ.க. கூறியிருப்பதும்,  அணு ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவை எதிர்ப்பது வெறும் வெளிப்பார்வைக்குத் தான் என்று அத்வானி கூறிய சுயவாக்குமூலமும், மன்மோகன் சிங் அரசை விட வாஜ்பேயி அரசுதான் சிறப்பாகச் சேவை செய்கிறது என்று அமெரிக்கத் தூதரகம் பா.ஜ.க.விற்கு நற்சான்றிதழ் வழங்கியதும் விக்கிலீக்ஸ் மூலம் வெளிவந்தன. இவற்றைப் பொய்ச் செய்திகள் என்று பா.ஜ.க. மறுப்பு தெரிவித்தது. கடைசியாய், இப்போது சி.பி.எம். கட்சியின் யோக்கியதையும் வெளியானவுடன், அவர்களும் தூதரக செய்திக் குறிப்புகள் திரிக்கப்பட்டவை என்று சாடுகிறார்கள்.  ஈயத்தைப் பார்த்து இளித்த பித்தளையின் கதையாக அனைவரும் அம்பலமா கிப்போயுள்ளதால், விக்கிலீக்ஸின் செய்திக் குறிப்புகள் கிளப்பிய பரபரப்பு அலை இப்போது ஓய்ந்துவிட்டது.

வாய்மூடி மவுனமாக இருப்பதன் மூலம் மக்களின் பார்வையிலிருந்து இந்தத் துரோகங்களை மறைத்துவிட எண்ணுகிறார்கள் ஓட்டுக் கட்சிகளும், அதிகாரிகளும், ஊடக முதலாளிகளும். இவர்களின் கூட்டுக் களவாணித்தனத்தை முறியடிக்க, இந்தச் செய்திகள் பரவலாக மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். அமெரிக்காவின் தொங்கு சதையாக அழுகி நாறும் இன்றைய அரசியலமைப்பு முறையின் தராதரம் என்னவென்பதை அனைவரையும் உணரச் செய்ய வேண்டும்.

அழகு