Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் வெள்ளப் பகுதிகளில் நிவாரணப் பணிகள் போராட்டங்கள்!

வெள்ளப் பகுதிகளில் நிவாரணப் பணிகள் போராட்டங்கள்!

  • PDF

12_2005PK.jpg

வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பகுதியிலும், திருச்சி நகரைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், சென்னை மதுரவாயல் பகுதியிலும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. அமைப்புகளைச் சேர்ந்த எமது தோழர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளிலும், பாதிக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்துப் போராடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். நவம்பர் 28ஆம் தேதியன்று தொடங்கிய இந்தப் பணி இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருச்சி அரவானூர் கிராமத்து மக்களை அணிதிரட்டி நகரில் சாலை மறியல் செய்த பிறகுதான் இவ்வூருக்கு நிவாரண முகாம் அமைக்கப்பட்டதுடன் ரூ. 2000 நிவாரணமும் வழங்கப்பட்டது. மாவட்டத்திலேயே நிவாரண உதவி முதன்முதலில் வழங்கப்பட்டது இந்த கிராமத்திற்குத்தான். ஏகிறிமங்கலம், கல்நாயக்கன் தெரு, நாடார் தெரு, திருவெறும்பூர் அரசங்குடி போன்ற எல்லாப் பகுதி மக்களின் போராட்டங்களையும் எமது தோழர்கள் முன்நின்று நடத்தினர்.

 

மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள தலித் மக்கள் பகுதிகளில், நிவாரணப் பொருட்களையும், தொகையையும் அபகரித்துக் கொள்ளும் ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர்கள் அதிகாரிகள் கூட்டணியைத் தட்டிக் கேட்க வேண்டுமானால் ""ம.க.இ.க., பு.மா.இ.மு. காரர்களால்தான் முடியும்'' என்பது திருச்சியில் நிலைநாட்டப்பட்டுள்ளது. உள்ளூர் கட்சிப் பிரமுகர்களின் வேடம் கலைந்துள்ளது.

 

கடலூர் காரைமேடு கிராமத்தில் வெள்ளாறு உடைந்து வெள்ளம் புகுந்தவுடன் தோழர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டதுடன், உடனே நிவாரணப் பொருட்களையும் கொணர்ந்து விநியோகித்தனர். ""பெரிதும் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்குத்தான் நிவாரணப் பொருட்களை முன்னுரிமை தந்து விநியோகிக்க வேண்டும்'' என்று பிற சாதியினரை ஏற்கச் செய்தனர். அரசு நிவாரணத்தை விநியோகிக்கும் பொறுப்பை பஞ்சாயத்துத் தலைவர் தோழர்களிடமே விட்டிருக்கிறார். சேத்தியாதோப்பு சுற்று வட்டாரத்திலுள்ள பின்னலூர், அம்பாள்புரம், மஞ்சக்கொல்லை போன்ற பல கிராமங்களில் பணிகள் தொடர்கின்றன.

 

சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள ஏ.சி.சண்முகத்துக்கு (முதலியார் சங்கம்) சொந்தமான எம்ஜியார் பொறியியல் கல்லூரியை வெள்ளம் சூழ்ந்ததை தொலைக்காட்சிகள் காட்டின. மாவட்ட ஆட்சியரும் நேரில் வந்தார். ஆனால் அருகிலுள்ள குடிசைப் பகுதி மூழ்கியதை அரசு கண்டு கொள்ளவில்லை. அங்குள்ள சுமார் 2000 மக்களை மண்டபத்தில் தங்க வைத்து சென்னை பு.மா.இ.மு. தோழர்கள் 4 நாட்களாக உணவு வழங்கி வருகின்றனர். கல்லூரியைக் காணவந்த ஆட்சியரை மக்கள் முற்றுகையிட்டனர். ""தாழ்வான பகுதியில் ஏன் வீடு கட்டினீர்கள்?'' என்று ஆட்சியர் கேட்டவுடன் ""ஆற்றை மறித்து காலேஜ் கட்டியிருக்கிறானே, அவனை முதலில் கேள்'' என்று பதிலடி கொடுத்தனர் மக்கள்.

 

நிவாரண உதவி வழங்குவதுடன் திருச்சி, கடலூர் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் கோரிக்கைகளுக்கு வடிவம் கொடுக்கும் விதத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் கையெழுத்தியக்கம் நடத்துவதுடன் போராடுவதற்கு அணிதிரட்டியும் வருகின்றனர் எமது தோழர்கள்.