Sat04202024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் ஓட்ட்டுப் பொறுக்குவதில் எதிரெதிர் அணி! கார்ப்பரேட் சேவையில் ஓரணி!

ஓட்ட்டுப் பொறுக்குவதில் எதிரெதிர் அணி! கார்ப்பரேட் சேவையில் ஓரணி!

  • PDF

கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி நாடாளுமன்றத்தில் எதிர்பாராதவிதமாகத் திடீர்க் கூட்டணியொன்று உருவானது. அன்று, ஓய்வூதிய நிதி ஒழுங்கு மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதாவை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறுவதற்காக அவையின் முன் வைத்தது, காங்கிரசு கூட்டணி அரசு. இம்மசோதா தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதையும் அதனை நிர்வகிக்கும் பொறுப்பைத் தனியார்மயமாக்குவதையும் நோக்கமாகக் கொண்டது.

 

 

அன்று காங்கிரசு கூட்டணியைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை. அன்று அவைக்கு வந்திருந்த 159 உறுப்பினர்களுள் பெரும்பாலோர் பா.ஜ.க., மற்றும் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள். இம்மசோதாவை எதிர்த்து வரும் இடதுசாரிக் கட்சிகள் மசோதாவை வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்று கோரினார்கள். ஆனாலும், அம்மசோதா அன்று 115 உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் ஓய்வூதிய மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்து, காங்கிரசுக்குக் கைகொடுத்தனர்.

ஓட்டுப் பொறுக்குவதற்காகத் தங்களை எலியும் பூனையும் போலக் காட்டிக் கொள்ளும் காங்கிரசும் பா.ஜ.க.வும், தனியார்மயம்  தாராளமயத்தை நடைமுறைப்படுத்துவதிலும், அமெரிக்காவிற்கு விசுவாசமாக நடந்து கொண்டு நாட்டை அடகு வைப்பதிலும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் போலத்தான் செயல்பட்டுவருகின்றன. தனியார்மயம்  தாராளமயம் தீவிரமாக அமலுக்கு வந்த 1990களுக்குப் பின், மத்தியில் ஆறு முறை ஆட்சிகள் மாறியிருக்கின்றன. இதில், இரண்டு ஆட்சிகள் இடதுசாரிகளின் ஆதரவோடு நடந்தன. எனினும், தனியார்மயம்  தாராளமயத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்த ஆறு அரசாங்கங்களிடையே எந்தவிதமான வேறுபாடும் இருந்ததில்லை. இதனைத் தனியார்மயத்தின் தீவிர விசுவாசியான பிரதமர் மன்மோகன் சிங் பெருமையாகப் பேசிவருகிறார்.

ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படும் பொழுதும், மத்தியில் புதிதாகப் பதவியேற்கும் கூட்டணி ஆட்சி தமக்கு முன்பிருந்த அரசாங்கம் பின்பற்றிய தனியார்மயக் கொள்கைகளையே நடைமுறைப்படுத்துவதோடு, அதனை முன்பைவிடத் தீவிரமாக அமல்படுத்தவும் முயலுகின்றன. உதாரணத்திற்குச் சொன்னால், தற்பொழுது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் ஓய்வூதிய நிதி மசோதா தற்பொழுது பதவியில் இருக்கும் காங்கிரசு கூட்டணி அரசால் தயாரிக்கப்பட்டதல்ல. இம்மசோதா அதற்கு முன்பிருந்த பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் 2003ஆம்

ஆண்டு தயாரிக்கப்பட்டது. இப்படியாக பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் தயாரிக்கப்பட்ட மசோதா, அதன் எதிரியான காங்கிரசு கூட்டணி ஆட்சியில், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வின் ஆதரவோடு நிறைவேறியிருக்கிறது. இந்தியா  அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மன்மோகன் சிங்கின் ஆட்சியில் கையெழுத்தாகியிருந்தாலும், அவ்வொப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் வாஜ்பாயி பிரதமராக இருந்த காலத்திலேயே இரகசியமாக நடந்துவந்தன என்பதுதான் உண்மை.

இந்து மதவெறிக் கட்சியான பா.ஜ.க., ஓட்டுப் பொறுக்குவதற்காகச் சுதேசி சவடால் அடித்துக் கொண்டிருந்த பொழுதுகூட, தனியார்மயம்  தாராளமயத்திற்கு ஆதரவாகத்தான் செயல்பட்டுவந்தது. காங்கிரசு ஆட்சியாளர்களால் அனுமதிக்கப்பட்ட அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான என்ரானை அரபிக்கடலில் தூக்கியெறிவோம் எனச் சவடால் அடித்த பா.ஜ.க., 1998இல் மத்திய ஆட்சியைப் பிடித்ததும் என்ரானுக்கு இலாப உத்தரவாதம் அளிக்கும் உத்தரவில்தான் முதல் கையெழுத்தைப் போட்டது; காங்கிரசு அரசு காட் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டதை எதிர்ப்பதாகச் சவடால் அடித்து வந்த பா.ஜ.க., அவ்வொப்பந்தத்தில் விதித்த நிபந்தனைகளின்படி 400க்கும் மேற்பட்ட பொருட்களின் மீதான சுங்க வரியைக் குறைத்து, அவற்றின் தாராள இறக்குமதிக்கு அனுமதி அளித்தது; காப்பீடு துறையில் அந்நிய நிறுவனங்களை அனுமதிக்கக்கூடாது என நரசிம்ம ராவ் ஆட்சியின்பொழுது எதிர்ப்பு தெரிவித்து வந்த பா.ஜ.க., தான் ஆட்சியில் அமர்ந்தவுடன் அத்துறையை இந்தியத் தரகு முதலாளிகளுக்கு மட்டுமின்றி, அந்நிய ஏகபோக நிறுவனங்கள் 40 சதவீதம் அளவிற்கு மூலதனம் போடும் வண்ணம் அத்துறையில் தனியார்மயத்தை அனுமதித்தது. காட் ஒப்பந்தப்படி உருவாக்கப்பட்ட உலக வர்த்தகக் கழகத்தின் நிபந்தனைப்படி, இந்தியக் காப்புரிமைச் சட்டத்தில் காங்கிரசின் ஆதரவோடு திருத்தங்களைக் கொண்டு வந்தது. பா.ஜ.க. ஆட்சியில்தான் பல்வேறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீது ஆன்லைன் வர்த்தகம் என்ற சூதாட்டத்தை நடத்துவதற்கு முதன்முறையாக அனுமதி தரப்பட்டது.

முந்தைய நரசிம்மராவ் ஆட்சியின் வழியில், மாடர்ன் பிரட், பால்கோ, வீ.எஸ்.என்.எல்., உள்ளிட்டபல பொதுத்துறை நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு பா.ஜ.க. ஆட்சியில் தனியாருக்கு விற்கப்பட்டன. தொலைதொடர்புத் துறையில் நுழைந்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களும், இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனங்களும் அரசுக்குச் செலுத்த வேண்டிய உரிமக் கட்டணத்தைக் குறைக்கும் வண்ணம் புதிய தொலைதொடர்புக் கொள்கை

பா.ஜ.க. ஆட்சியில்தான் அறிவிக்கப்பட்டது. இந்தக் கொள்கையின்படிதான் 2 ஜி அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததாக, அவ்வூழல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருக்கும் ராஜா கூறிவருகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, தனியார்மயம் என்பதுதான் தனது கட்சியின் பொருளாதாரக் கொள்கை என்றும், அதனை காங்கிரசு திருடிக் கொண்டுவிட்டதாகவும் கூறியது, பா.ஜ.க.

2009ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களின் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக, பா.ஜ.க. கூட்டணியின் பிரதம மந்திரி வேட்பாளரான அத்வானியைச் சந்தித்த அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம், அவர், "ஏற்கெனவே பின்பற்றப்படும் வெளிநாட்டுக் கொள்கையும், கையெழுத்திடப்பட்ட சர்வதேச ஒப்பந்தங்களும் நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் தொடரும்' என உத்தரவாதம் அளித்ததாக வீக்கி லீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியிருக்கிறது. ஆக, இவையனைத்தும் தனியார்மயம்  தாராளமயம் என்ற மறுகாலனியாதிக்கக் கொள்கைகளைப் பின்பற்றுவதில் மட்டுமல்ல, அமெரிக்காவுக்குச் சேவை செய்வதிலும் பா.ஜ.க.விற்கும் காங்கிரசிற்கும் எந்தவிதமான வேறுபாடும் கிடையாது என்பதைத்தான் நிரூபிக்கின்றன.

பா.ஜ.க. தற்பொழுது எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும், அதனின் தனியார்மய விசுவாசம் எள்ளளவும் குறைந்துவிடவில்லை என்பதைத்தான் ஓய்வூதிய மசோதாவுக்கு அக்கட்சி அளித்த ஆதரவு நிரூபிக்கிறது. மேலும், அக்கட்சியைச் சேர்ந்த குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி, சில்லறை விற்பனையில் அந்நிய நிறுவனங்களை அனுமதிப்பதற்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

காங்கிரசு, பா.ஜ.க.. மட்டுமல்ல, இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து ஓட்டுக்கட்சிகளிடமும் தனியார்மயம்  தாராளமயம் என்ற மறுகாலனியாதிக்கக் கொள்கைக்கு மாற்றாக வேறு கொள்கைகள் கிடையாது. வறுமை, விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயம் நசிவு ஆகியவை காரணமாக மக்களிடம் எழுந்துள்ள வெறுப்பையும் கோபத்தையும் ஓட்டுக்களாக அறுவடை செய்துகொள்ளத்தான் எதிர்த்தரப்பு முயலுகிறதேயன்றி, அப்பிரச்சினைகளுக்குக் காரணமான தனியார்மயத்தை அம்பலப்படுத்துவதுமில்லை தாக்கிப் பேசுவதுமில்லை.

தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாடு பற்றிப் பேசும் அ.தி.மு.க. தலைவி ஜெயா, தமிழகத்தில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை அம்பலப்படுத்துவது கிடையாது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதி குடும்பம் அடைந்த ஆதாயத்தை அம்பலப்படுத்தும் ஜெயா, அவ்வூழலின் முக்கிய புள்ளிகளான டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகளை அம்பலப்படுத்துவது கிடையாது. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டதாகக் கூறி, விலைவாசி உயர்வை நியாயப்படுத்தினார், மன்மோகன் சிங்கின் கூட்டாளி கருணாநிதி. ஜெயாவோ தனது முந்தைய ஆட்சியின் பொழுது விலைவாசி உயர்வை மக்கள் விழுங்கித் தீரவேண்டிய கசப்பு மருந்தாக வருணித்தார்.

இடதுசாரிக் கூட்டணி, குறிப்பாக சி.பி.எம்., தாம் ஆளும் மேற்கு வங்க மாநிலத்தில் டாடாவிற்காக சிங்கூரிலும், சலீம் குழுமத்திற்காக நந்திகிராமத்திலும் நிலப்பறிப்பில் இறங்கியதைத் தொழில் வளர்ச்சி என்ற பெயரில்தான் நியாயப்படுத்தியது. அமெரிக்க மூலதனத்தின் நலன்களுக்காக, தகவல்  தொழில்நுட்பம் தொடர்பான தொழில்களில் வேலைநிறுத்தம் செய்வது மேற்கு வங்க மாநிலத்திலும் தடை செய்யப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் சில்லறை விற்பனையில் நுழைவதை எதிர்ப்பதாகக் கூறும் இடதுசாரிக் கூட்டணி, கேரளாவில் இத்தாராளமயத்தை அனுமதித்துள்ளது. அம்மாநிலத்தில் சில்லறை விற்பனையில் இறங்கியிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது கூடுதல் வரி விதித்திருப்பதைக் காட்டி, இத்துரோகத்தை நியாயப்படுத்துகிறது, இடதுசாரிக் கூட்டணி ஆட்சி. அமெரிக்காவுடன் மன்மோகன் சிங் அரசு போட்டுக் கொண்ட இராணுவ மற்றும் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அடையாள எதிர்ப்புக் காட்டி வந்த இடதுசாரிக் கூட்டணி. தாம் ஆளும் மேற்கு வங்க மாநிலத்தில் அமெரிக்க இராணுவ விமானப் பயிற்சி நடத்த அனுமதித்தது. எனவே, இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளின் தனியார்மய  தாராளமய எதிர்ப்பு, மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பது போன்ற பித்தலாட்டத்தனம் நிறைந்ததுதான்.

அமெரிக்காவின் கருவூலச் செயலர் ஹென்றி பால்சனை அக்டோபர் 2007இல் சந்தித்த புத்ததேவ், "உலக மயத்திற்கு ஏற்ப கம்யூனிஸ்டுகள் மாறிக் கொள்ளவேண்டும்; இல்லையென்றால், அழிய வேண்டியதுதான்' எனக் கூறியதாக விக்கி லீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியிருக்கிறது. இது மட்டுமின்றி, அச்சந்திப்பின்பொழுது, போபால் விஷவாயுப் படு

கொலைக்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியுள்ள அமெரிக்காவின் டௌ கெமிக்கல்ஸ் நிறுவனம், தமது மாநிலத்தின் இரசாயனத் தொழில்களில் முதலீடு செய்வதற்கு எந்தவித்தடையும் கிடையாது எனக் கூறியதாகவும் அவ்விணைய தளம் அம்பலப்படுத்தியிருக்கிறது. இதனால் தான், "புத்ததேவிடமிருந்து இடதுசாரிகள் கற்றுக்கொள்ள வேண்டும்' என மன்மோகன் சிங் பாராட்டுத் தெரிவித்தார் போலும்.

 

மேற்கு வங்க மாநில முதல்வர் புத்ததேவ் மட்டும் உலகமயத்திற்கு ஆதரவாகப் பேசவில்லை. சி.பி.எம். கட்சியின் 18  ஆவது காங்கிரசிலேயே அந்நிய நிதி மூலதனத்திற்கு ஆதரவாகத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. "இன்றைய தாராளமய  உலகமய சூழலின் யதார்த்த நிலைமையை உணராமல், அதிலிருந்து தப்பித்துவிட முயற்சிப்பது நமது அகநிலை விருப்பமாகவே இருக்கும். வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய தொழில்களில் அந்நிய நேரடி முதலீட்டை நாம் அனுமதிக்கலாம்' எனத் தனியார்மயம்  தாராளமயத்திற்கு ஏற்ப தமது கொள்கையை மறுவார்ப்பு செய்துள்ளனர்.

சி.பி.எம். மட்டுமல்ல, மன்மோகன் சிங், கருணாநிதி வகையறாக்கள்கூட, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி எனக் கூறித்தான் அந்நிய மூலதனத்திற்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வருகிறார்கள். தனியார்மயம்  தாராளமயம் கொண்டு வரும் வளர்ச்சி என்பது வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி என்று முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களே அம்பலப்படுத்தி வரும் வேளையில், அந்நிய மூலதனத்தைக் கொண்டு வேலைவாய்ப்பை அதிகரிக்கப் போவதாக சி.பி.எம். கூறுவது கடைந்தெடுத்த பித்தலாட்டத்தனம் தவிர, வேறல்ல.

"அந்நிய மூலதனத்திற்குத் தாராள சலுகைகள் வழங்குவதன் மூலம்தான் நாட்டின் தொழில் வளர்ச்சியைச் சாதிக்க முடியும்' என்பதில் மட்டும் இந்த ஓட்டுக்கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு நிற்கவில்லை. இந்தக் கொள்கையை எதிர்ப்பவர்களை, அதன் மக்கள் விரோதத் தன்மை உட்பட அக்கொள்கை ஏற்படுத்தும் அனைத்துக் கேடுகளையும் அம்பலப்படுத்துபவர்களை, வளர்ச்சிக்கு எதிரானவர்கள், மாவோயிச ஆதரவாளர்கள், பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி ஒடுக்குவதிலும் இந்தக் கட்சிகளுக்கு இடையே எவ்வித வேறுபாடும் இல்லை.

ஓரிசாவில் போஸ்கோவிற்கு எதிராகப் போராடுபவர்களை பா.ஜ.க.  பிஜூ ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அரசு பயங்கரவாதத்தை ஏவி ஒடுக்கி வருகிறது. சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளையும், அவர்களை ஆதரிக்கும் பழங்குடியின மக்களையும் ஒடுக்க அரசுப்படைகளும், சல்வா ஜுடும் என்ற கூலிப்படையும் இறக்கிவிடப்பட்டுள்ளன. இம்மாநிலத்தில் இவர்களை ஒடுக்குவதில் காங்கிரசும், பா.ஜ.க.வும் கைகோர்த்துக் கொண்டுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் லால்கார் பகுதியில் மாவோயிஸ்டுகளோடு இணைந்து போராடி வரும் பழங்குடியின மக்களை ஒடுக்க காங்கிரசுடன் இணைந்து காட்டு வேட்டையை நடத்தி வருகிறது, சி.பி.எம்.

பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் போன்று திராவிடம், தலித்தியம் பேசும் உதிரி ஓட்டுக்கட்சிகள்கூட தமது சுயநல, பிழைப்புவாதத்திற்காக இம்மறுகாலனியாதிக்கக் கொள்கைகளோடு சமரசம் செய்து கொண்டுவிட்டன. குறிப்பாக, தலித்தியவாதிகள் தனியார்மயத்தைத் தாழ்த்தப்பட்டோரை விடுவிக்க வந்த பொருளாதாரக் கொள்கையாகச் சித்தரித்து வருகின்றனர்.

சுருக்கமாகச் சொன்னால், ஓட்டுக்கட்சிகளிடையே தனியார்மயம்  தாராளமயம் என்ற பெயரில்நாட்டை அமெரிக்காவின் மறுகாலனியாக்குவதில் எவ்விதக்கொள்கை வேறுபாடும் கிடையாது. அதை யார் தலைமையில் செய்வது, எப்படிச் செய்வது என்பது மட்டும்தான் அவர்களுக்கு இடையேயான வேறுபாடு. தனியார்மயம் என்ற பெயரில் நடந்துவரும் கார்ப்பரேட் பகற்கொள்ளையில் தாமும் பங்கு போட்டுக் கொள்வது குறித்துத்தான் அவர்கள் முரண்பட்டு மோதிக் கொள்கிறார்கள். இதற்காகத்தான், அக்கட்சிகள் இரண்டு அணியாகவோ, மூன்று அணியாகவோ பிரிந்து நின்று தேர்தல்களைச் சந்திக்கிறார்களேயொழிய, கொள்கை வேறுபாடுகளால் அல்ல.

குப்பன்