Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் தேர்வாய் கண்டிகை – காகரப்பள்ளி: அரசின் நிலப்பறிப்புக்கு எதிராக ஆர்த்தெழுந்த உழைக்கும் மக்கள்!

தேர்வாய் கண்டிகை – காகரப்பள்ளி: அரசின் நிலப்பறிப்புக்கு எதிராக ஆர்த்தெழுந்த உழைக்கும் மக்கள்!

  • PDF

கடந்த பிப்ரவரி 28 அன்று ஆந்திராவின் சிறீகாகுளம் மாவட்டம், சாந்த பொம்மலி வட்டத்திலுள்ள காகரப் பள்ளியில் போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எர்ரய்யா, கிரி ராஜேஸ்வர ராவ் எனுமிரு விவசாயிகள் மாண்டு போயுள்ளனர். படுகாயமடைந்த 5 பேர் மரணப் படுக்கையில் கிடக்க, 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலப்பறிப்புக்கு எதிராகவும் தமது வாழ்வுரிமைக்காகவும் போராடியதுதான் காகரப்பள்ளி மக்கள் செய்த குற்றம்!

 

காகரபள்ளி வட்டாரம் நீர்க்குட்டைகளும் புதர்களும் இயற்கையாக அமைந்த சதுப்பு நிலப்பகுதியாகும். இங்கு வளர்ந்து நிற்கும் கோரைப் புற்கள் வேண்டாத கழிவுகளை உறிஞ்சிக் கொண்டு நல்ல நீரை அப்படியே அரணாகப் பாதுகாப்பதால் இயற்கையின் கொடையாக இப்பகுதி கருதப்படுகிறது. பறவைகள் இக்கோரைகளின் நடுவில்தான் கூடுகட்டி வாழும். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் வடிகாலாக இருப்பது இந்தச் சதுப்பு நிலம்தான். உள்ளான், வாத்து, குருவி, கொக்கு, நாரை, நீர்க்கோழிகள் எனப் பல அரியவகை பறவையினங்கள் வாழும் பகுதியாகவும், பல வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கிச் செல்லும் பகுதியாகவும், பல வகையான மீன்கள், ஆமைகள், பாம்புகள், தவளைகள், பட்டாம் பூச்சிகள் என வளமான பல்லுயிர் சூழ்ந்த பகுதியாகவும் காகரப்பள்ளி வட்டாரம் விளங்குகிறது. தெலிநீலபுரம் பறவைகள் சரணாலயம் இப்பகுதிக்கு அருகில்தான் உள்ளது.

 

இப்பகுதியிலுள்ள சதுப்புநில நீர் நிலைகளிலும் கடலை ஒட்டிய முகத்துவாரப் பகுதியிலும் மீன் பிடிப்பதைத் தொழிலாகக் கொண்டுள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள் நிறைந்துள்ளனர். சதுப்புநிலப் பகுதியின் உப்பு நீரிலிருந்து உப்பு காய்ச்சும் தொழிலில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர். இச்சதுப்பு நிலப்பகுதியை ஒட்டியுள்ள பாசனப் பகுதியில் பாரம்பரிய விவசாயிகளும் நிறைந்துள்ளனர். சிங்கப்பூரில் பதிவு பெற்றுள்ள ஏசியன் ஜென்கோ பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனம், ஈஸ்ட் கோஸ்ட் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் எனும் தனது துணை நிறுவனத்தின் மூலம் காகரப்பள்ளியில் அனல் மின்நிலையத்தை நிறுவி, இவர்கள் அனைவரையும் அவர்களது மண்ணிலிருந்து வெளியேற்றத் துடிக்கிறது.

 

2640 மெகாவாட் திறன் கொண்ட, ரூ.12,000 கோடி மதிப்பிலான இம்மின் நிலையம், முதற்கட்டமாக 1320 மெகாவாட் திறனுடன் வரும் டிசம்பர் மாதத்தில் இயங்கத் தொடங்கும் என்றும், 2012 மார்ச் மாதத்தில் அடுத்த கட்டம் நிறைவேறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்கன் ஸ்டேன்லி எனும் ஏகபோக நிதி நிறுவனமும் பல தரகு முதலாளித்துவ நிதி நிறுவனங்களும் கோடிகோடியாய் முதலீடு செய்துள்ளதால், காகரப்பள்ளி வட்டாரம் வெறும் புறம்போக்கு பாழானநிலம் என்று மாவட்ட ஆட்சியரால் சான்றிதழ் அளிக்கப்பட்டு, இத்திட்டத்திற்காக ஏறத்தாழ 800 ஹெக்டேர் நிலத்தைக் கையளித்து 2008இல் ஆந்திர மாநில

அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து இம்மின் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிபுணர்கள் அளித்த மதிப்பீட்டை ஏற்று, கடந்த 2009ஆம் ஆண்டு மைய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த அனல்மின் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. அதன் தொடர்ச்சியாக காகரபள்ளி உள்ளிட்ட ஐந்து கிராமங்களின் பாசன நிலப் பகுதியும் காகர  பள்ளியின் சதுப்புநிலப் பகுதியும் இக்கார்பரேட் நிறுவனத்துக்குத் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

 

இதன் விளைவாக இப்பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளும் மீனவர்களும் உப்பளத் தொழிலாளர்களும் தங்களது மண்ணையும் வாழ்வையும் இழந்து அகதிகளாக்கப்படும் நிலையில் உள்ளனர். காகரப்பள்ளியின் சதுப்பு நிலப் பகுதியில் மின் நிலையக் கட்டுமானத்திற்காக ஒரு அடி அளவுக்கு நிலத்தை உயர்த்தினால்கூட, வடிகால்கள் பாதிக்கப்பட்டு இப்பகுதியின் நீரானது அருகிலுள்ள 29 கிராமங்களின் 30,000 ஏக்கர் பாசன நிலங்களை மூழ்கடித்துவிடும். இந்த அபாயத்தை அறிந்த அக்கிராமங்களின் விவசாயிகளும் மீனவர்களும் உப்பளத் தொழிலாளர்களும் ஒன்றிணைந்து கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்தே போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நிவாரண உதவியும் 700 பேருக்கு வேலையும் தரப் போவதாக அரசு ஆசை வார்த்தை காட்டிய போதிலும் இப்பகுதிவாழ் மக்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை.

 

தங்களது வாழ்வுரிமை பறிக்கப்படுவதை எதிர்த்து விவசாயிகள் பலமுறை போராடிய போதிலும் மைய அரசோ, மாநில அரசோ அசைந்து கொடுக்காததால், அனல் மின் நிறுவனத்தின் வாகனங்கள் இப்பகுதியில் நுழைய முடியாதபடி விவசாயிகள் தடுப்பு அரண்களை அமைத்துப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். ஈஸ்ட் கோஸ்ட் நிறுவனமோ, அரசிடம் முறையிட்டு கட்டுமானப்பணிகள் பாதிக்கப்படுவதால் தடையரண்களை அகற்றுமாறு கோரியது. அதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் ஆயிரக்கணக்கான அதிரடி போலீசார் காகரப்பள்ளியிலும் சுற்றுப்புறக் கிராமங்களிலும் குவிக்கப்பட்டனர்.

 

கடந்த பிப்ரவரி 25 அன்று அதிகாலையில் வட்டிதண்டரா கிராமத்தில் புகுந்த போலீசார், கிராம மக்களை அவர்களது வீடுகளிலிருந்து அடித்து இழுத்துச் சென்று சிறையிலடைத்தனர். கிராம மக்கள் அணிதிரண்டு இக்கொடுமையை எதிர்க்கத் தொடங்கியதும், கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டு 30 பேர் காயமடைந்தனர். கிராம மக்கள் வெளியில் செல்ல முடியாதபடி தடை விதிக்கப்பட்டது.

 

வட்டிதண்டரா கிராமத்தில் அடக்குமுறையை ஏவி முன்னோட்டம் பார்த்த போலீசு, அடுத்த கட்டமாக பிப்ரவரி 28 அன்று காகரபள்ளி கிராமத்தினுள் புகுந்து கண்மூடித்தனமாகக் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியது. கண்ணீர் புகைக் குண்டு என்ற பெயரில் எரிகுண்டுகள் வீசப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளும் வைக்கோல் போர்களும் எரிந்து சாம்பலாகின. ஊரைப் பற்றியெரிய வைத்து மக்களை ஆத்திரமூட்டித் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடுவது என்பதே போலீசின் நோக்கம். ஊரைக் கொளுத்திய போலீசை எதிர்த்து 700க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அணிதிரண்டு போர்க்குணத்தோடுப் போராடத் தொடங்கியதும், தங்களது வாகனங்களைத் தீயிட்டுக் கொண்டு, போராடும் மக்கள் வன்முறையில் ஈடுபட்டதாகச் சித்தரித்து கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியது போலீசு. அதில் இருவர் கோரமாகக் கொல்லப்பட்டு, பலர் படுகாயமடைந்தனர்.

 

வீடுகள் தீயிடப்பட்டதால், வீட்டிலிருந்த பல பெண்களும் குழந்தைகளும் தீக்காயங்களுடன் தப்பிப் பிழைத்துள்ளனர். வீடுகள் எரிந்து போன நிலையில், பச்சிளம் குழந்தைகளுக்கு பால் பவுடர் கொடுக்கக்கூட விடாமலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவும் மருத்துவ உதவிகளும் கிடைக்கவிடாமலும் தடையரண் அமைத்துக் கொண்டு அனைவரையும் விரட்டியடித்தது, போலீசு. இக்கிராமப் பகுதிக்குள் இன்றுவரை பத்திரிகையாளர்களோ, மருத்துவர்களோ, மனிதஉரிமை அமைப்பினரோ நுழைய முடியாதபடி 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. 80 வயது மூதாட்டி உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடிய சித்திரவதையோடு, அரசு பயங்கரவாத அட்டூழியங்கள் இப்பகுதியில் கேள்வி முறையின்றித் தொடர்கின்றன.

 

போலீசு பயங்கரவாதத்தை எதிர்த்து மனித உரிமை அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் மாநிலமெங்கும் கண்டனப் பேரணிகளையும் கடையடைப்புப் போராட்டங்களையும் கொடும்பாவி எரிப்புப் போராட்டங்களையும் நடத்தின. இருப்பினும், மாநில அரசோ துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்துவதோடு, இப்பகுதி சதுப்பு நிலமல்ல என்றே சாதிக்கிறது. எதிர்க்கட்சிகளின் கூச்சலுக்குப் பிறகு பாதிக்கப்படும் மக்களும் மறுவாழ்வுக்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர, அனல் மின் திட்டம் நிறுத்தப்படவில்லை. நாடாளுமன்றத்தில் ஆந்திரப் படுகொலை பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது, விசாரணை நடப்பதாகக் கூறிச் சுற்றுச்சூழல் அமைச்சர் பசப்பியதைத் தவிர, வேறெந்த நடவடிக்கையும் இல்லை.

 

இப்படித்தான், கடந்த ஆண்டில் ஜூலை 14ஆம் தேதியன்று ஆந்திராவின் சோமபேட்டை கிராமத்தில், நாகார்ஜுனா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தின் கொள்ளையை எதிர்த்து, தமது வாழ்வுரிமைக்காக அக்கிராம மக்கள் கண்டன ஊர்வலம் நடத்தியபோது, போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தி பலரைப் படுகாயப்படுத்தியது. மாநிலத்தின் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் கார்பரேட் நிறுவனங்களின் கொள்ளைக்காக உழைக்கும் மக்களின் மண்ணையும் வாழ்வுரிமையையும் பறித்து நரவேட்டையாடுவதே அரசின் கொள்கையாகிவிட்டது. சட்டிஸ்கர், மே.வங்கம், ஒரிசா எனத்தொடங்கிய இக்கொடூர அரசு பயங்கரவாத அடக்குமுறை இப்போது ஆந்திராவிலும் தொடர்கிறது.

 

1930ஆம் ஆண்டு தண்டியில் உப்பு சத்தியாகிரகத்தை காந்தி தொடங்கிய போது, அதேபோல கிழக்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள காகரபள்ளியிலும் உப்பு சத்தியாகிரகம் தொடங்கப்பட்டது. அன்றைய காலனிய ஆட்சியில் இப்போராட்டம் சட்டவிரோதமானதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அன்றைய போலீசு அதிகாரிகள் இப்போராட்டத்தைத் தடுக்கவோ, தாக்குதல் நடத்தவோ இல்லை. ஆனால், இன்றைய "சுதந்திர' இந்தியாவில் அந்நிய கார்பரேட் கொள்ளைக்காக சொந்த நாட்டு மக்கள் மீதே போலீசு பயங்கரவாத வெறியாட்டம் கேள்விமுறையின்றித் தொடர்கிறது. காலனியாதிக்கத்தைவிட, மறுகாலனியாதிக்கம் எவ்வளவு கொடூரமானது என்பதை காகரபள்ளியில் நடந்த பயங்கரவாதக் கொலைவெறியாட்டமே நிரூபித்துக் காட்டுகிறது.

 

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டிக்கருகே உள்ள கிராமம் தேர்வாய் கண்டிகை. ஏறத்தாழ ஐந்தாயிரம் பேர்களைக் கொண்ட இக்கிராமத்தில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினராவர். விவசாயமும், கால்நடை வளர்ப்புமே இம்மக்களின் முக்கியத் தொழில்களாகும். சுமார் 3500 ஏக்கருக்கு பாசன வசதி தரும் 3 ஏரிகள் இவ்வூருக்கருகே உள்ளன. இந்த ஏரிகளைச் சுற்றியுள்ள குறுங்காடுகளும் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களும்தான் இவற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியாகும். ஆந்திரப்பிரதேச எல்லையான வெள்ளவேடு மலைச்சரிவு வரை பச்சைப்பசேலென நெல்வயல்களும் குறுங்காடுகளும் இருக்கும் அப்பகுதியின் மிகை மழைநீர் தான் ஓடையாகத் திரண்டு சென்னைக்கு வடக்கே ஆரணியாறாக ஓடுகிறது. எலும்பு முறிவு, காய்ச்சல், தோல் நோய், பாம்புக்கடி போன்றவற்றிற்கு இக்காடுகள் வழங்கும் மூலிகைகளைத்தான் மருத்துவமனை ஏதுமற்ற தேர்வாய் கண்டிகை கிராம மக்கள் நம்பியுள்ளனர்.

 

இனி இவை எல்லாம் அம்மக்களுக்கு இல்லை. இந்த வனப்பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க 1127 ஏக்கர் நிலம் 2007ஆம் ஆண்டில் தமிழக அரசின் சிப்காட் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. இங்கு மெக்கெலின் எனும் பிரான்சுநாட்டு டயர் தொழிற்சாலை நிறுவப்படவுள்ளது. உலகெங்கும் 69 கிளைகளோடு ஆண்டுக்கு 1.9 கோடி பேருந்து, லாரி டயர்களை உற்பத்தி செய்யும் இப்பன்னாட்டு நிறுவனம் 2012இல் முதற்கட்ட உற்பத்தியைத் தொடங்கப் போவதாக அறிவித்துக் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

 

டயர் தொழிற்சாலை நிறுவப்பட்டால், பாசனத்துக்கான ஏரிகள் வறண்டு, ஆரணியாறு கழிவு நீரோடையாகக் குறுகிப் போய் விடும் என்று பாசனத்துறை அதிகாரிகளே தெரிவிக்கின்றனர். டயர் தொழிற்சாலையின் புகையாலும் கழிவுகளாலும் நிலத்தடி நீரும் சுற்றுச் சூழலும் கடுமையாகப் பாதிக்கப்படும். காடுகளும் மேய்ச்சல் நிலங்களும் அழிக்கப்படுவதால், கால்நடை வளர்ப்பை நம்பியுள்ள பின்தங்கிய நிலையிலுள்ள இப்பகுதிவாழ் மக்களின் வாழ்வாதாரங்கள் பிடுங்கப்பட்டு, அம்மக்கள் அகதிகளாக நேரிடும்.

 

இப்பேரபாயத்தை உணர்ந்து, தமது வாழ்வுரிமையைப் பறிக்கும் இச்சிறப்புப் பொருளாதார மண்டலத்தை எதிர்த்து தேர்வாய் கண்டிகை கிராம மக்கள் ஆர்ப்பாட்டம், மனு கொடுத்தல், கிராம சபையில் எதிர்ப்புத் தீர்மானம் எனப் பல வகைகளில் போராடியும் தமிழக அரசு அசைந்து கொடுக்கவில்லை. நிலத்தைக் கையகப்படுத்த 2009இல் புல்டோசர்களைக்கொண்டு தமிழக அரசு மேய்ச்சல் நிலத்தைச் சிதைக்க ஆரம்பித்தபோது, கொதித்தெழுந்த மக்கள் மீது அரசு அடக்குமுறையை ஏவியது. போராடியவர்களில் 61 பேரைக் கைது செய்து, பொய்வழக்கு போட்டுச் சிறையிலடைத்தது. இந்த அடக்கு முறையையும், தங்கள் வாழ்வுரிமையைப் பறிக்கும் இத்திட்டத்தையும் எதிர்த்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலை இக்கிராமத்தினர் புறக்கணித்தனர்.

 

நீதிமன்றத்தின் மூலம் இந்த நிலப் பறிப்பைத் தடுத்து விட முடியும் என நம்பி "தேர்வாய் கிராம முன்னேற்ற நல சங்கம்' மூலம் வழக்கு தொடுத்து கிராம மக்கள் வாதாடினர். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மரங்களை வெட்டவும் கட்டுமானப்

பணிகளை நிறுத்தவும் இடைக்காலத் தடை விதித்தது. இத்தடையை மீறி கட்டப்பட்டிருந்த வளாகச் சுவரை மக்கள் திரண்டு போய் 2010இல் உடைத்துப் போட்டனர். "தேர்வாய் கண்டிகையில் கையகப்படுத்தப் படும் நிலம் 500 ஹெக்டேருக்குக் குறைவென்பதால், மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதிச் சான்றைப் பெறத் தேவையில்லை' என்று கூறிய தமிழக அரசின் வாதத்தை ஏற்று, நீதிமன்றமும் இடைக்காலத் தடையை சென்ற ஆண்டு மே மாதம் நீக்கியது.

 

கையகப்படுத்தப்பட்ட பகுதியில் மக்கள் நுழையாமல் இருக்க வேலி அமைத்துக் கட்டுமான வேலையை சிப்காட் துரிதப்படுத்தியதும், கடந்த பிப்ரவரி 15 அன்று தேர்வாய் மக்கள் அணிதிரண்டு முற்றுகையிட்டு கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு கோரினர். அதிகாரவர்க்கமோ பிப்ரவரி 23 வரை இப்பணிகளை நிறுத்திவைக்க ஒப்பந்தம் போடுவதாகப் பேசிக் கொண்டே, போலீசை ஏவி முன்னணியாளர்களில் எட்டு பேரைக் கைது செய்து, பொய்வழக்குப் போட்டு சிறையில் அடைத்தது.

 

கட்டுமானப் பணிகளை நிறுத்தி, கைப்பற்றிய நிலத்தை தங்களுக்குத் திரும்பத் தரவேண்டும்; போடப்பட்டுள்ள பொய்வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கைகளுடன் தேர்வாய் கண்டிகை கிராமத்தின் 1200 பேர் கடந்த பிப்ரவரி இறுதி வாரத்தில் சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். 600 பேர் தங்களின் வாக்காளர் அடையாள அட்டைகளை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விடுவது என முடிவு செய்திருந்தனர். மாவட்ட ஆட்சியரின் வாக்குறுதிக்குப் பின்னர், தற்போது உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ள போதிலும், மக்களின் குமுறல் அடங்கிவிடவில்லை.

 

இதர மாநில அரசுகள் கண்மூடித்தனத்தனமான அடக்குமுறையின் மூலம் நிலப்பறிப்பை நடத்திவரும் அதேசமயம், தமிழக அரசோ போராடும் மக்களைக் கைது செய்வது, பொய்வழக்கு போட்டு போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வது, முன்னணியாளர்களை விலை பேசுவது முதலான நரித்தனமான உத்திகளின் மூலம் ஜனநாயக வேடமிட்டுக் கொண்டு, அதேவேலையைச் செய்து வருகிறது. உத்திகள் வேறாக இருந்தாலும் நோக்கம் ஒன்றுதான். நாட்டை வல்லரசாக்குவது, மாநிலத்தின் தொழில் வளர்ச்சி என்ற வாதங்களுடன் உழைக்கும் மக்களை சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கும் இக்கொடுஞ்செயலுக்கு எதிராகவும், ஏகாதிபத்திய கொள்ளைக்கும் மறுகாலனியாக்கத்திற்கும் எதிராகவும் நாடு தழுவிய போராட்டங்களைக் கட்டியமைப்பதே இன்றைய உடனடி அவசியமாகியுள்ளது.

அழகு