Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் எகிப்து மக்கள் எழுச்சி: விழலுக்கு இறைத்த நீரானதேன்?

எகிப்து மக்கள் எழுச்சி: விழலுக்கு இறைத்த நீரானதேன்?

  • PDF

துனிசியாவிற்கு அடுத்து எகிப்திலும் தன்னெழுச்சியாக நடந்த மக்கள் போராட்டங்களையடுத்து, கடந்த 30 ஆண்டுகளாக அந்நாட்டின் அதிபராக இருந்துவந்த ஹோஸ்னி முபாரக் பதவியிலிருந்து விலகி, தலைநகர் கெய்ரோவிலிருந்து வெளியேறிவிட்டார். எகிப்தையடுத்து, சர்வாதிகார ஆட்சி நடத்திவரும் அதிபர்கள் - மன்னர்களைப் பதவி விலகக் கோரும் போராட்டம் இப்பொழுது அல்ஜீரியா, மொராக்கோ, வடக்கு சூடான், ஏமன், லிபியா, ஜோர்டான், பஹ்ரைன் ஆகிய நாடுகளிலும் பரவியிருக்கிறது.

 

முதலாளித்துவ ஊடகங்கள் எகிப்திலும் துனிசியாவிலும் நடைபெற்ற போராட்டங்களைப் புரட்சியெனச் சித்திரிக்கின்றன. "காந்தியின் அஹிம்சை ஆயுதம் உலகம் முழுவதிலும் வெற்றி பெற்று வருவதாகவும், இனி தலைவன், கட்சி எதுவுமே தேவையில்லாமல், மக்களே சமூக மாற்றத்தைக் கொண்டு வந்துவிடுவார்கள்' என்றும் தினமணி நாளிதழ் இப்போராட்டங்களைக் காட்டி வாதிடுகிறது. ஆனால், எகிப்திலும், துனிசியாவிலும் நடைபெற்ற இந்த "அஹிம்சைப் புரட்சி' தமது கோரிக்கைகளுள் ஒன்றைக்கூட முழுமையாக நிறைவேற்ற முடியாமல் தோல்வியில் முடிந்துவிட்டது என்பதுதான் உண்மை. கிளர்ச்சிகாரர்களுள் ஒருவர் சொன்னபடி, "சர்வாதிகாரி வெளியேறிவிட்டார்; ஆனால், சர்வாதிகார ஆட்சி தொடர்கிறது' என்பதுதான் இப்போராட்டங்களின் பின்கிடைத்துள்ள பலன்.

 

துனிசியாவில் அதிபர் அபிடைன் பென் அலி அதிபர் பதவியில் இருந்து இறங்கிய பிறகு, கிளர்ச்சி நடத்திய மக்களின் தலைவர்களைக் கொண்ட இடைக்கால அரசு அமையவில்லை. மாறாக, அவரது ஆட்சியில் அவருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த முகம்மது கன்னோசி அதிபராகவும், பென் அலியின் வேறு சில கூட்டாளிகள் அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுள்ளனர். அமெரிக்காவிற்கு நெருக்கமான துனிசிய இராணுவம் இப்புதிய அரசைத்தாங்கிப் பிடித்து நிற்கிறது.

 

எகிப்தில், ஆட்சி அதிகாரத்தை இராணுவக் கவுன்சிலிடம் ஒப்படைத்துவிட்டுப் பதவி விலகினார், ஹோஸ்னி முபாரக். போராட்டத்தின் பொழுது ஹோஸ்னி முபாரக்கால் துணை அதிபராக நிய மிக்கப்பட்ட உமர் சுலைமான், இராணுவத் தளபதி {ஹசைன் தந்தவி, லெப்டினன்ட் ஜெனரல ஸாமி ஹஃபேஸ் ஆகிய மூவரும்தான் தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசின் முக்கியப்புள்ளிகள். இவர்களுள் உமர் சுலைமான் எகிப்திய மக்களால் மிகவும் வெறுக்கப்பட்ட உளவுத் துறையின்தலைவராக இருந்தவர்; அமெரிக்காவிற்கும், இசுரேலுக்கும் மிகவும் நெருக்கமானவர். இராணுவத் தளபதி {ஹசைன் தந்தவி எகிப்தில் எவ்விதமான அரசியல் சீர்திருத்தமும் செய்யத் தேவையில்லை என்ற கொள்கையைக் கொண்டவர்.

 

"முப்பதாண்டுகளாக எகிப்தில் நிலவி வரும் நெருக்கடி நிலைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும்; போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட இடைக்கால அரசை அமைக்கவேண்டும்; 20,000க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்' என்ற கோரிக்கைகளுள் ஒன்றைக்கூட புதிய அரசு ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. மாறாக, பெயரளவில் நிலவிவந்த நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்ட@தாடு, அரசியலமைப்புச் சட்டத்தையும் தற்காலிகமாக ரத்து செய்துவிட்டது, இராணுவ கவுன்சில். ஹோஸ்னி முபாரக் இராணுவத்தின் பக்கபலத்தோடு கடந்த முப்பதாண்டுகளாக சர்வாதிகார ஆட்சியை நடத்தினார் என்றால், தற்பொழுது நேரடி இராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் எகிப்து தள்ளப்பட்டுள்ளது.

 

எகிப்திலும், துனிசியாவிலும் நடந்த போராட்டங்களின்பொழுது சர்வாதிகார அதிபர் வெளியேற வேண்டும்; ஊழல் ஆட்சி ஒழிய வேண்டும்; மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும்; பல கட்சி

நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறைவேண்டும் என்ற சாதாரண முதலாளித்துவ சீர்திருத்தக் கோரிக்கைகள்தான் எழுப்பப்பட்டனவே தவிர, வேறேந்த புரட்சிகரமான கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை. குறிப்பாக, அந்நாடுகளில் நிலவும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டத்துக்குக் காரணமான தனியார்மயம்தாராளமயத்துக்கு எதிராக எவ்விதக் கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை.

 

இக்கிளர்ச்சியைத் தலைமையேற்று நடத்திய படித்த நகர்ப்புறத்தைச் சேர்ந்த, மேல்தட்டுநடுத்தர வர்க்கம், சர்வாதிகாரத்தையும், ஊழலையும், மனித உரிமை மீறல்களையும் ஆட்சியாளர்களின் தனிப்பட்ட குணங்களாகவும், ஒழுக்கம் சார்ந்த பிரச்சினையாகவும்தான் பார்த்ததேயொழிய, அவற்றுக்கும் நாட்டின் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்புக்கும் இடையிலான உறவில் வைத்துப் பார்க்கவில்லை.

 

துனிசியாவில் 1980களில் அதிபராக இருந்த ஹபிப் பூர்கைபா, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைப்படி அந்நாட்டுப் பொருளாதாரத்தைத் தனியார்மயமாக்க முழு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தார். இதனையடுத்துதான் அந்நாட்டில் மேற்குலக ஏகாதிபத்தியங்களின் ஆதரவோடு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்பட்டு, அப்பொழுது இராணுவத் தளபதியாக இருந்த பென் அலி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

 

நாட்டின் பொதுச் சொத்துக்களைத் தனியார்மயமாக்குவது, இறக்குமதிக்கு இருந்த கட்டுப்பாடுகளை நீக்குவது, மிகவும் மலிவான கூலியில் துனிசிய மக்களின் உழைப்பைப் பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்ட அனுமதிப்பது  என ஏகாதிபத்தியங்கள் திணித்த பல சீர்திருத்தங்களை எவ்விதத் தடையுமின்றி அமுல்படுத்திய பென் அலி, அதற்கு எதிரான போராட்டங்களை இரும்புக் கரம்கொண்டு ஒடுக்கினார். பென் அலியின் சர்வாதிகார ஆட்சியை இந்தப் பின்னணியில் இருந்து துண்டித்துப் பார்க்க முடியாது.

 

எகிப்தில் தேசியவாதியான நாசருக்குப் பின் பதவிக்கு வந்த அன்வர் சதாத், பாலஸ்தீனப் போராட்டத்துக்கு அளித்து வந்த ஆதரவைக் கைவிட்டு, அமெரிக்காவோடும், இசுரேலோடும் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொண்டார். இதன் பின், மேற்காசியாவில் இசுரேலுக்கு அடுத்து எகிப்துதான் அமெரிக்காவின் நம்பகமான கூட்டாளியாக மாறியது.

 

அன்வர் சதாத் படுகொலை செய்யப்பட்ட பின் பதவிக்கு வந்த ஹோஸ்னி முபாரக், அமெரிக்க ஆதரவுக் கொள்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றியதோடு, நாட்டின் பொருளாதாரத்தில் தனியார்மயம் தாராளமயத்தைப் புகுத்தினார். "மிகச் சிறந்த பொருளாதார சீர்திருத்தவாதி' என உலக வங்கி பட்டம் வழங்கி கௌரவிக்கும் அளவிற்கு, ஹோஸ்னி முபாரக் பொருளாதாரச் சீர்திருத்தங்களை அமுல்படுத்தினார். எகிப்தின் இசுரேல் ஆதரவுக் கொள்கை காரணமாக உருவான முசுலீம் அடிப்படைவாத அமைப்புகளை ஒடுக்குவது என்ற பெயரில் அவசர காலச் சட்டங்களை அமுல்படுத்தினார், முபாரக். எகிப்தின் இந்த அடிவருடித்தனத்திற்குப் பரிசாக அமெரிக்கா ஆண்டுதோறும் எகிப்து அரசிற்கு 200 கோடி அமெரிக்க டாலர்களை உதவியாக வழங்கியது. இதைப் பயன்படுத்திக் கொண்டு, மேற்காசியாவில் இசுரேலுக்கு அடுத்து மிகப் பெரிய இராணுவத்தையும், போலீசு படைகளையும், உளவுத் துறையையும் உருவாக்கினார், முபாரக். இதன் விளைவாக, இராணுவம் நாட்டின் அதிகார மையமாக உருவெடுத்தது.

 

முபாரக் குடும்பம், இராணுவ உயர் அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு சிறு கும்பல், ஊழல் மற்றும் கார்ப்பரேட் பகற்கொள்ளையின் மூலம் நாட்டின் வளங்கள் அனைத்தையும் சுருட்டிக் கொண்டது. இத்தனியார்மயக் கொள்ளையின் காரணமாக எகிப்தில் வேலையில்லாத் திண்டாட்டம் 20 சதவீதத்தைத் தொட்டது. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் 50 சதவீதமாக அதிகரித்தது. முபாரக்கின் ஆட்சியில் 44 சதவீத எகிப்திய மக்கள் வெறும் இரண்டு டாலர் தினக்கூலியில் வாழ வேண்டிய வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

 

இப்பொருளாதாரத் தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாளர் போராட்டம் 2006ஆம் ஆண்டிலிருந்து தீவிரமடையத் தொடங்கியது. குறிப்பாக, ஏப்ரல் 6, 2008 இல் மஹல்லா அல் குப்ரா என்ற தொழில் நகரில் நடந்த வேலைநிறுத்தப் போராட்டம் மிக முக்கியமானதாகும். 28,000 தொழிலாளர்கள் பங்கேற்ற இப்போராட்டம் இரத்த வெள்ளத்தில் முழ்கடிக்கப்பட்டாலும்,

மஹல்லாவைத் தொடர்ந்து எகிப்தின் பல பகுதிகளில் தனியார்மயக் கொள்கைக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்கள் அலைஅலையாக எழத்தொடங்கின. இந்தப் போராட்டங்கள் அரசுக்கு எதிரான கலகமாக உருவெடுத்தால், எகிப்தின் இசுரேல் ஆதரவுக் கொள்கை, தனியார்மய ஆதரவுக் கொள்கைகளைப் பாதிக்காத வகையில் ஆட்சி மாற்றம் சுமுகமான முறையில் நடைபெற வேண்டும் என்பதில் அமெரிக்கா குறியாக இருந்தது.

 

நகர்ப்புற நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளால் தொடங்கப்பட்ட ஏப்ரல்6 இயக்கம் இத்தொழிலாளர் போராட்டங்களை ஆதரித்து வந்தாலும், அவர்கள் இப்போராட்டத்தை ஏகாதிபத்தியங்கள் திணிக்கும் மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான போராக வளர்த்துச் செல்லவில்லை. ஜனநாயகம், மனித உரிமை பற்றிய முதலாளித்துவ பிரமைகளுக்கு ஆட்பட்டுள்ள அவ்வர்க்கம் முபராக்கை வெளியேற்றுவது, பல கட்சி நாடாளுமன்ற ஆட்சி முறையைக் கோருவது என்பதாக அப்போராட்டத்தைச் சுருக்கிவிட்டது.

 

முசுலீம் சகோதரத்துவம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும்; ஃப்ரீடம் ஹவுஸ், ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை போன்ற அமெரிக்க நிறுவனங்களால் பயிற்றுவிக்கப்பட்ட அறிவு ஜீவிகளும், 'முபாரக்கே வெளியேறு' என்ற வரம்பைத் தாண்டி போராட்டம் சென்றுவிடாமல் தடுப்பதில் வெற்றி பெற்றனர். இதற்கு ஏற்பவே, சர்வதேச அணுசக்தி கமிசனின் தலைவராக இருந்த, அமெரிக்காவின் தலையாட்டி பொம்மையாக இருந்துவந்த முகம்மது எல் பராதி, இவர்களால் கிளர்ச்சியின் தலைவராக முன்னிறுத்தப்பட்டார்.

 

அதே சமயம் எகிப்து மக்களின் போராட்டத்தை இராணுவம் ஆதரிப்பதைப் போன்ற ஒரு நாடகம் அமெரிக்காவாலும் உயர் இராணுவ அதிகாரிகளாலும் சேர்ந்து நடத்தப்பட்டது. கிளர்ச்சிக்காரர்களை ஒடுக்க போலீசும் கூலிப்படைக் குண்டர்களும் இறக்கிவிடப்பட்டு, இராணுவம் நடுநிலை வகிப்பதைப் போலக்காட்டப்பட்டது. இந்தப் பின்னணியில் இருந்துதான் "போராடும் மக்களைச் சுடமாட்டோம்' என எகிப்து இராணுவம் அறிவித்தது. போராட்டத் தலைமை, தமது குட்டி முதலாளித்துவக் கண்ணோட்டம் காரணமாக, இராணுவம்தான் இச்சர்வாதிகார ஆட்சியின் குவிமையமாக இருக்கிறது என்பதைப் பார்க்கத் தவறி, இராணுவத்திலுள்ள சில கறுப்பு ஆடுகள்தான் சர்வாதிகாரி முபாரக்கை ஆதரிப்பதாக எண்ணி வந்ததை, அமெரிக்கா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது.

 

குறிப்பாக, முபராக் இராணுவத்திடம் அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு வெளியேறியவுடன், முதலாளித்துவ ஊடகங்களால் இப்போராட்டத்தின் நாயகனாக முன்னிறுத்தப்பட்ட வேல் கோனிம், "அனைவரும் வேலைக்குத் திரும்புங்கள்; முன்னெப்போதையும்விடக் கடினமாக உழைத்து, எகிப்து வளர்ந்த நாடாக மாற உதவுங்கள்' எனத் தனது இணைய தளத்தில் அறைகூவல் விடுத்துப் போராட்டத்தைப் பின்னுக்கு இழுக்க முயன்றார். கோனிமை ஆதரித்த கும்பல் ஆட்சியில் பங்கு பெற இராணுவ ஆட்சியாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்தவும் செய்தது. கோனிமின் துரோகத்துக்கு எதிரான போராட்டங்கள் இணைய தளத்தில் நடந்த அளவிற்கு தெருவில் நடைபெறவில்லை.

 

காங்கிரசுக்குப் பதிலாக பா.ஜ.க., கருணாநிதிக்குப் பதிலாக ஜெயா ஆட்சியைப் பிடித்தால் என்ன "மாற்றம்' வருமோ, அதைப் போன்றதொரு மாற்றம்தான் எகிப்திலும் துனிசியாவிலும் நடந்திருக்கிறது. பிற அரபு நாடுகளில் நடந்து வரும் போராட்டங்களும் இதே திசையில்தான் செல்கின்றன. இப்படிக் கூறுவது சர்வாதிகாரத்துக்கு எதிராகப் போராடத் துணிந்த அம்மக்களின் வீரத்தையோ, தியாகத்தையோ குறைத்து மதிப்பிடுவது ஆகாது. போராட்டத்திலிருந்து படிப்பினைகளைப் பெறுவதற்கு, அதன் பலவீனங்களையும் குறைபாடுகளையும் பரிசீலனை செய்வது தவிர்க்க முடியாதது.

 

வட ஆப்பிரிக்கா மற்றும் மேற்காசியாவைச் சேர்ந்த அரபு நாடுகளில் நடந்து வரும் ஜனநாயகத்திற்கான போராட்டங்கள், முசுலீம் மக்கள் மத அடிப்படைவாத அமைப்புகளையும் கருத்துக்களையும்தான் ஆதரிப்பார்கள் என மேற்குலக ஏகாதிபத்தியவாதிகளும், இந்தியாவின் பார்ப்பன பாசிஸ்டுகளும் பரப்பி வரும் அவதூறைச் சுக்கு நூறாக உடைத்துப் போட்டுவிட்டன. இப்போராட்ட அனுபவங்கள், அமெரிக்க மேலாதிக்கத்தை வீழ்த்தி நாட்டை விடுதலை செய்வது என்ற திட்டத்தின் கீழ் இம்மக்களை அணி திரட்ட வேண்டிய அவசியத்தையும், ஒரு புரட்சிகரக் கட்சி, அதன் கீழ் அணி திரட்டப்பட்ட மக்கள், மக்கள் இராணுவம் இவை எதுவுமின்றி சமூக மாற்றத்தையோ, உழைக்கும் மக்களுக்கான ஜனநாயகத்தையோ கொண்டு வந்துவிட முடியாது என்பதையும் உணர்த்தியுள்ளன.

 

• குப்பன்

Last Updated on Sunday, 11 December 2011 21:21