Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் தேசத் துரோகிகளின் தேசபக்தி!

தேசத் துரோகிகளின் தேசபக்தி!

  • PDF

ஆடையின்றி வெற்று உடம்போடு நிற்கும் சிறுவனின் மார்பிலே மூவர்ணக் கொடி குத்தியிருக்கும் காட்சி அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிடக் கூடியதல்ல. அது சுதந்திரத்துக்கும் வறுமைக்கும் இடையே நிலவும் முரண்நிலையை மட்டும் சொல்லவில்லை. பெற்ற குழந்தைக்கு உணவளிக்கவும் இயலாமல் போன மக்கள் ஒருவேளை உணவுக்காக, அங்கன்வாடிகள் அல்லது சத்துணவுக் கூடங்களுக்கு அனுப்பினால் அங்கும் கூடத் தேசிய அடையாளங்கள் திணிக்கப்படுவதையும் குறிக்கிறது.   பால்குடி மறந்தவுடன்  நம் பிள்ளை களுக்குப் போதிக்கப்படும் கருத்து, தேசம், தேசபக்தி அல்லது தேசப்பற்று, தேசிய உணர்வு, தேசியப் பாதுகாப்பு, தேசிய ஒருமைப்பாடு  இவை போன்றவை.

 

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள், பத்திரிக்கைகள்  சின்னத்திரை  பெரியதிரை ஊடகங்கள் எல்லாம் இதைத்தான் போதிக்கின்றன. அரசுத்துறைத் தொழில் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், போலீசு, இராணுவம், நீதிமன்றங்கள், அரசு, அமைச்சகங்கள் எல்லாவற்றிலும் இந்தக் கருத்தைப் பிரதிபலிக்கும் அடையாளச் சின்னங்கள்தாம் உள்ளன. தேசம் குறித்த இந்தக் கருத்தாக்கம் புனிதமாக்கப்பட்டிருக்கிறது. யாருக்கும் சுயபுத்தி வந்து அதைக் கேள்வி கேட்கவோ, விமர்சிக்கவோ கூடாது என்பதற்காகத் தேசிய சின்னங்களைக் கூட மதிக்கத் தவறினால் தண்டனை விதிக்கவும், மொத்தத்தில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் யாரையும் விசாரணயின் இன்றிச்   சிறையில் அடைக்கவும், தண்டிக்கவும்கூட

கிரிமினல் தண்டனைச்  சட்டம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயக் காலனி ஆட்சியாளர்கள் ராஜதூரகக் குற்றஞ் சாட்டி விடுதலைப் போராளிகளைத் தண்டித்தார்கள். தற்போது தேசத்தைக் காப்பது என்ற பெயரில் ஆட்சியாளர்களை விமர்சித்துக் கேள்வி கேட்பவர்களை அதே ராஜதுரோகக் குற்றஞ்சாட்டி தண்டிக்கவும்முடியும்.

 

அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்தும் கொள்ளையிலிருந்தும் நாட்டையும் மக்களையும் காத்துக் கொள்வதற்கும் அந்த உணர்வோடு, அதற்காகப் போராடித் தியாகம் செய்யவும் தேசம், தேசபக்தி அல்லது தேசப்பற்று, தேசிய ஒருமைப்பாடு முதலியன அவசியந்தான். ஆனால்,   பாசிச ஆட்சியாளர்கள் தமது  கொடுங்கோலாட்சியையும் பகற்கொள்ளைகளையும், ஏகாதிபத்தியவாதிகள் தமது ஆக்கிரமிப்புப் போர்களையும் கைப்பற்றிய நாடுகளின் செல்வங்களைச் சூறையாடுவதையும் நியாயப்படுத்துவதற்கு அணிந்து கொள்ளும் தயார் நிலைக் கவசங்களாகத் தேசம் குறித்த கருத்துக் கட்டுமானங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

 

அன்றைய இத்தாலியின் முசோலினி, ஜெர்மனியின் இட்லர், ஸ்பெயினின் ஃபிராங்கோ முதல் இன்றைய அமெரிக்காவின் புஷ், ஒபாமா வரை தேசத்தின் பெயரால்தான் எல்லா அக்கிரமங்கள், அட்டூயழியங்களை அரங்கேற்றினார்கள். மன்னராட்சிக் காலத்தில் "ராஜ விசுவாச''த்தைக் காட்டித்தான் கொடுங்கோலாட்சிகள் நடந்தன. பல இஸ்லாமிய நாடுகளில் மத நம்பிக்கையையும் ராஜ விசுவாசத்தையும் காட்டி, "ஷரியத்' ஆட்சி நடக்கிறது. ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகள் பலவற்றிலும் தேசத்தின் பெயரால், இராணுவபாசிச காட்டுமிராண்டித்தன ஆட்சி நடக்கிறது. இப்போது தேசத்துக்குப் பயங்கரவாதிகளால் ஆபத்து என்கிற பெயரில் ஜனநாயக நாடுகள் எனப்படும் மேற்கத்திய பாணி அமைப்புகளில்கூடத் தேசிய வெறியும் தேசிய போதையும் மக்களுக்கு ஊட்டப்பட்டு, பாசிச அடக்குமுறைகளும், இலஞ்ச ஊழல் முறைகேடுகளும் தடையின்றி நடக்கின்றன.

•••

 

கடந்த ஆண்டு பிற்பாதியில் நடந்த காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாட்டில் 70,000 கோடி ரூபாய் அளவுக்கு ஏராளமான அற்பத்தனமான ஊழல்கள், மோசடிகள் நடந்திருப்பது அம்பலமாகின. அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், விளையாட்டுப் போட்டிகள் நின்று போய், "தேசிய கௌரவம் பறிபோய் விடும்', "தேசிய அவமானம் நேர்ந்துவிடும்' என்று கூறி காங்கிரசு கூட்டணி அரசு நடவடிக்கை எடுக்க மறுத்தது. ஆனால், விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் எல்லாம் தரங்கெட்டுப்போய் நாறி, காமன்வெல்த் நாடுகள் கேலிபேசி, புறக்கணிப்பதாக மிரட்டிய பிறகு, பொறுப்பாளர்களை மாற்றி அரைகுறை, அவசர ஏற்பாடுகள் செய்துஒரு வழியாக நடத்தி முடித்தது.

 

தேசியப் பாதுகாப்புக்காக கார்கிலில் போரிட்டு, தியாகிகளான இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கூறி தென்மும்பை கடற்கரையில் இராணுவத்துக்குச் சொந்தமான நிலத்தை வாங்கி, விதிமுறைகளை மீறி அடுக்குமாடி வீடுகளைக் கட்டி அமைச்சர்கள், அதிகாரிகள், இராணுவத் தளபதிகள் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்டார்கள்.

 

நாட்டின் பல பகுதிகளில் உள்ள இராணுவத்துக்குச் சொந்தமான நிலங்கள் தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்படுகிறது. இராணுவத்துக்கு உடுப்பு வாங்குவது,  உணவு விடுதிகளுக்குப் பொருட்கள் (இராணுவத்தினர் குடும்பத்துக்கு மலிவு விலையில் நுகர்பொருட்கள்) வாங்கித் தருவதில் ஊழல், மோசடிகள் நடந்துள்ளன. முப்படைகளுக்கும் விமானங்கள், போர்க்கப்பல்கள், பீரங்கிகள் முதலியன வாங்குவதிலும், பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்கள் நடக்கின்றன. எடுத்துக்காட்டாக, போபர்ஸ் பீரங்கி, ஜெர்மனி நீர்மூழ்கி கப்பல்கள் வாங்கிய ஊழல் விவகாரத்தில் ராஜீவ் காந்தி, சோனியாவின் குடும்ப நண்பர் குட்ரோச்சி சிக்கி அம்பலப்பட்டபோதும், தேசிய நலன் கருதித்தான் அவை வாங்கப்பட்டன என்று காங்கிரசு வாதாடியது.

 

காஷ்மீரிலும், வடகிழக்கு இந்தியாவிலும், தீவிரவாதிகளுடன் மோதல், தேசிய ஒருமைப்பாடு காப்பது என்கிற பெயரில் அப்பாவி இளைஞர்கள் போலிமோதல்கள் மூலம் இராணுவத்தால் படுகொலை செய்யப்படுகின்றனர். பெண்கள் கடத்தப்பட்டுப் பாலியல் வன்முறை செய்து கொல்லப்பட்டு, கால்வாய்களிலும், சாலைகளிலும் வீசப்படுகின்றனர். இராணுவத்தின் அட்டூழியங்களைச்   சகிக்கமுடியா மல் கல்லெறிப் போராட்டங்கள் நடத்தும் சிறுவர்கள் "காக்கைகுருவி' போல சுட்டுத் தள்ளப்படுகின்றனர். "ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம்' என்ற கவச மணிந்த இராணுவ அட்டூழியங்கள் எல்லாம் தேசியப் பாதுகாப்பு, தேசிய ஒருமைப்பாடு என்கிற பெயரால் நியாயப்படுத்தப்படுகின்றன. இராணுவப் போர்த்தந்திரங்கள், செயல்பாடுகள் மட்டுமல்ல் அதன் நிர்வாகம், நிதி முதலிய அனைத்தும் இரகசியமாக வைக்கப்படுவதோடு, அவற்றை அறிந்திருப்பதும், அறிய முயற்சிப்ப தும்கூடத் தேசியத் துரோகமாகச் சித்தரிக்கப்படுகிறது. இதை எதிர்ப்பவர்கள் மீது ராஜ துரோகம் மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டங்கள் பாய்கின்றன. "புனிதமானது' என்று தேச மக்கள் பார்வையிலிருந்து ஒதுக்கிவைக்  க ப்  பட்டிருப்  பது இர õ ணுவம் மட்டுமல்ல போலீசு, நீதித்துறை, அதிகார வர்க்கத்தினர் பற்றிய விவரங்களில்கூடத் (இலஞ்சஊழலில் சிக்கிய போலீசு அதிகாரிகள், நீதிபதிகளின் சொத்து விவகாரங்கள் போன்றவை )  தகவல் அறியும் உரிமை மறுக்கப்பட்டு, தேசியப் பாதுகாப்பு என்ற இரும்புத் திரரக்குப் பின்னே மறைத்து வை க்கப்படுகிறது.

 

இந்தியத் தமிழ் மீனவர் கள் சிங்களக் கடற்படையினரால் படுகொலை செய்யப்படுவதற்கு  எதிராகப் பேசினார்  என்பதற்காக இயக்குநர் சீமான் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டார். ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த குற்றத்துக்காக தமிழினவாதத் தலைவர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்டதாக பொய் வழக்குப் போட்டுச் சிறையிலடைக்கப்பட்டனர். சிங்கள இராணுவத் தாக்குதல்களுக்கு எதிராகப் போராடுவது இந்திய தேசியத்தையும் இறையாண்மையையும் எப்படிப் பாதிப்பதாகும்?

 

தேசியத்துக்கு இந்துத்துவ மதவெறிசாதிவெறிசாயம் பூசி, இஸ்லாமியகிறித்துவ சிறுபான்மையினரின் உரிமைகள் எல்லாம் இந்து தேசியத்துக்குஇந்திய தேசியத்துக்கு எதிரானவை என்று சித்தரித்துக் கொலைவெறியாட்டம் போடுகின்றன, ஆர்.எஸ்.எஸ்.  பா.ஜ.க.,

வி.இ.ப. ஆகிய மதவெறி பாசிச கும்பல்கள். நரேந்திரமோடியின் இந்துத்துவ பயங்கரவாதப் படுகொலைகளை எதிர்ப்போரையெல்லாம் இந்திய தேசியத்துக்கும் குஜராத்தி இனத்துக்கும் எதிரானவர்கள் என்கிறது, மோடி தலைமையிலான இந்துத்துவ பாசிஸ்டுகள் கும்பல். கர்நாடகாவில் எடியூரப்பாவின் இலஞ்சஊழல் முறைகேடுகளை எதிர்ப்பவர்களைக் கன்னட இனத்துக்கு எதிரானவர்கள் என்கிறார் எடியூரப்பா.

 

இவர்களின் அமெரிக்க, இங்கிலாந்து முதலிய ஏகாதிபத்திய எஜமானர்களும் இதே உத்தியைத்தான் உலகமெல்லாம் கடைப்பிடிக்கிறார்கள். தமது தேசிய நலன்களுக்காக, பயங்கரவாதத்துக்கு எதிரான உலகப் போர் என்ற பெயரில் ஈராக், ஆப்கான், பாகிஸ்தானில் ஆளில்லா விமானங்களை ஏவிக் குண்டுமாரிப் பொழிந்து, அந்நாட்டு மக்களைக் கொன்று போடுகிறார்கள். இவர்களின் தேசியம் எப்படிக் கேலிக்குரியது என்பதற்கு சமீபத்தில் ஒரு எடுத்துக்காட்டு வெளிவந்திருக்கிறது. டேனிஸ் மாண்ட்கோமரி என்ற ஒரு அமெரிக்க மோசடிப் பேர்வழி, அல்கொய்தா பயங்கரவாதிகளின் பயங்கரவாதத் தாக்குதல்களை முன்னறிந்து எச்சரிக்கும் ஒரு தொழில்நுட்பத்தைத் தான் கண்டுபிடித்திருப்பதாகக் கூறி, அமெரிக்க இராணுவ (பெண்டகன்) அதிகாரிகளையும் புஷ் நிர்வாகத்தையும் நம்ப வைத்து 2,00,00,000 (இரண்டு கோடி) டாலர்களைக் கறந்து விட்டான். பின்னர், அது வெறும் மோசடி என்று தெரிய வந்தது. திருடனுக்குத் தேள்கொட்டியதைப் போல வாய்மூடிக் கொண்டது புஷ் நிர்வாகமும் அமெரிக்க நீதித்துறையும். வேறொரு மோசடி வழக்கில் மாண்ட்கோமரி சிக்கிய விவகாரம் வெளியே வந்தபோதும், முன்பு நாட்டின் பாதுகாப்பு இரகசியம் என்று கூறிச் சமாளித்த அமெரிக்க நிர்வாகம், இப்போது தேசியப் பாதுகாப்பு என்று இந்த மோசடியை மூடி மறைக்கிறது.

•••

 

தேசிய விசுவாசம், தேச பக்தி அல்லது தேசப் பற்று, தேசிய ஒருமைப்பாடு, தேசிய நலன் காக்க தியாகம் ஆகியவை நிபந்தனையற்ற முறையில் குடிமக்கள் கடைப்பிடிக்க வேண்டியவையா? தேசம் என்பது நாட்டையும் மக்களையும் மட்டும் குறிக்கிறதா? ஆளும்கட்சி அல்லது கூட்டணி அது நடத்தும் அரசாங்கத்தையும், நிரந்தர உறுப்புகளாகிய அர” நிர்வாகத்தையும் குறிக்கிறதா? தேச விசுவாசம் என்பது இவற்றின் மீது காட்ட வேண்டிய விசுவாசத்தைக் குறிக்கிறதா? அதாவது, அரசாங்க நிர்வாகமும் அர” நிர்வாகமும் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரித்து விசுவாசமாக நடப்பதுதான் குடிமக்களின் கடமையும் பொறுப்புமா? அல்லது இவற்றின் நடவடிக்கைகளில் உடன்படாத குடிமக்கள் இவற்றை எதிர்த்துப் போராடவும், அவசியமாகக் கருதும்போது தேசிய அரசாங்கத்தையும் அரசையும் வீழ்த்த முயலுவது தேசத் துரோகமா?

 

நாட்டின் வளர்ந்த முதிர்ந்த அறிவுஜீவிகளிலேயே கூடப் பலரும் தேசத்தையும் தேச விசுவாசத்தையும், தேசிய நலனையும் அரசாங்கத்துடனும் அரசுடனும் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள். ஈராக், ஆப்கான் மீது ஆக்கிரமிப்பு மற்றும் பேரழிவுப் போர் நடத்தும் அமெரிக்க அரசையும் இங்கிலாந்து அரசையும் ஆதரிப்பது எவ்வாறு அந்நாட்டு மக்களின் தேசியக் கடமையாகும்? அந்நாடுகள் ஆக்கிரமிப்புப் போரில் தோற்க வேண்டுமென்று கருதுவது அந்நாட்டு மக்களின் தேசத் துரோகமாகி விடுமா? ஆக்கிரமிப்பு அழிவு உலகப் போரை நடத்திய இட்லரும், முசோலினியும், ஃபிராங்கோவும் வீழ்த்தப்பட வேண்டும் என்பது தானே ஜெர்மன், இத்தாலிய, ஸ்பெயின் மக்களின் தேசிய உணர்வாக இருந்திருக்க முடியும்?

 

நரசிம்ம ராவ், வாஜ்பாய், மன்மோகன் போன்ற இந்திய, இந்துத்துவ தேசியவாதிகள் தலைமையிலான அரசாங்கமும் அரசும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு நாட்டை அடிமையாக்கவும் அடகு வைக்கவும், தொடர்ந்து பல இராணுவ, அரசியல், பொருளாதார ஒப்பந்தங்கள் போட்டுள்ளன. அமெரிக்க எஜமானர்களால் எவ்வளவுமுறை அவமானப்படுத்தப்பட்டாலும் விசுவாச நாய்களைப் போல அவர்களின் கால்களை நக்குகின்றன. இந்திய அமைச்சர்களும் அதிகாரிகளும் அங்கே நிர்வாணமாக்கிச் சோதனையிடப்படுகிறார்கள். பெண்களின் கன்னித்தன்மை சோதனையிடப்படுகிறது. பயங்கரவாதிகள் என்ற பேரில் விமான நிலையங்களில் சிறைவைக்கப்படுகிறார்கள். இந்திய மாணவர்களின் கால்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தி விலங்குகளைப் போல அலையவிடுகிறார்கள். புஷ், ஒபாமா போன்ற அமெரிக்க அதிபர்கள் வந்தால் பாதுகாப்பு என்ற பெயரில் அமெரிக்க உளவுப் படைகள் நமது நாட்டு போலீசு,  இரணுவத்துக்கு  மேலே  நிர்வாகத்தை எடுத்துக் கொள்கிறது. நமது நாட்டு முதல் மந்திரிகளே (அமைச்சர்களே) அடையாள அட்டை கேட்டு அவமானப்படுத்தப்படுகிறார்கள். போபால் படுகொலைகளுக்குக் காரணமானவர்கள் மீது கிரிமினல் சட்ட நடவடிக்கை எடுக்க முடியவில்லை. மேலும் இந்தியாவை அடிமையாக்கும் அரசியல், பொருளாதார, இராணுவ, அணுசக்தி ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன. நமது நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைகளை அவர்களது உத்தரவுக்கு ஏற்பத்தான் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. தேசிய நலன், தேசிய மரியாதை, தேசியப்பாதுகாப்புகளை எல்லாம் இவ்வளவு தூரம் அந்நியருக்கு அடிமையாக்கும், அடகு வைக்கும் ஆட்சியாளர்கள்தாம் உண்மையில் தேசத் துரோகிகள்.  ஆனால்,  இவை அனைத்தையும் எதிர்த்துப் போராடுபவர்கள் மீது பயங்கரவாதிகள், உள்நாட்டுப் பாதுகாப்புக்கு ஆபத்தானவர்கள் என்று முத்திரை குத்தி ஒடுக்குகிறார்கள்.

 

நாட்டுக்கும் மக்களுக்கும் எதிராக கார்ப்பரேட் தரகு அதிகார முதலாளிகளுக்கும் ஏகாதிபத்தியப் பன்னாட்டு ஏகபோக முதலாளிகளுக்கும் விசுவாச ஊழியம் செய்யும் அரசாங்க நிர்வாகமும் அரசு நிர்வாகமும் தேசத்தின் பெயரால் மோசடி செய்கின்றன. இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமலும் அல்லது புரிந்து கொண்டும் அதை மூடி மறைக்கும் மெத்தப்படித்த அறிவுஜீவி வர்க்கப் பிரிவினர், தாம் இந்தியர் என்றும் தேசியவாதிகள் என்றும் சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுவதாக வெட்கமின்றிப் பீற்றிக் கொள்கிறார்கள். உண்மையில் நாட்டுக்கும் மக்களுக்கும் எதிரான எல்லா துரோகிகளையும்  எதிர்த்துப் போராடுவதில் தான் பெருமை உண்டு.

 

• ஆர்.கே.

Last Updated on Sunday, 11 December 2011 21:22