Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் வால் ஸ்டிரீட் : முதலாளித்துவத்தின் கருவறையை முற்றுகையிடும் அமெரிக்க மக்கள்!

வால் ஸ்டிரீட் : முதலாளித்துவத்தின் கருவறையை முற்றுகையிடும் அமெரிக்க மக்கள்!

  • PDF

"பட்டினி கிடப்போரே பணக்காரனைத் தின்று பசியாறுங்கள்!' "பறித்துக் கொண்டோரிடமிருந்து பறிமுதல் செய்வோம்!' "நமது அரசியல்வாதிகள் முதலாளித்துவத்தின் பூசாரிகள்!' "வால் ஸ்டிரீட்டில் இருக்கின்றன பேரழிவு ஆயுதங்கள்!' "மார்க்ஸ் கூறியது உண்மை உண்மை!'

 

இவை நியூயார்க் நகரின் வால் வீதியில் திரண்டிருக்கும் அமெரிக்க மக்கள், செப். 17 முதல் எழுப்பி வரும் முழக்கங்களில் சில. வால் வீதியென்பது அமெரிக்க முதலாளித்துவத்தின் தலைவீதி. பங்குச் சந்தையும், முதலீட்டு வங்கிகளும் குடி கொண்டிருக்கும் உலக முதலாளித்துவத்தின் புனிதக் கருவறை. அந்தக் கருவறையில் நுழைந்திருக்கும் அமெரிக்க மக்கள், முதலாளித்துவத்தின் சூதாட்டத் தேவதைகளை ஏசுகிறார்கள். தம்மைப் பீடித்திருந்த முதலாளித்துவப் பிரமைகளையும் ஒவ்வொன்றாய்த் தூக்கி வீசுகிறார்கள்.

 

செப். 11, 2001இல் நியூயார்க் இரட்டைக் கோபுரங்களின் மீது விமானங்கள் வெடித்துச் சிதறியபோது அதனை பயங்கரவாதம் என்றது அமெரிக்க அரசு. சரியாகப் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், இன்று அதே நியூயார்க்கில் வெடித்திருக்கும் இந்த மக்கள் போராட்டத்தைக் கண்டு இது வர்க்கப் போர்என்று கூக்குரலிடுகின்றனர் அமெரிக்க முதலாளிகள்.

 

போர்தான். எந்த வால் ஸ்டிரீட் கொள்ளையர்களுக்காக ஆப்கான், இராக், லிபியா போன்ற நாடுகளின்மீது அமெரிக்க அரசு போர் தொடுத்ததோ, யாருக்காக உலக மக்களின் வளங்களையெல்லாம் கைப்பற்றுகிறதோ, அந்த வால் ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம் என்று போர்க்குரல் எழுப்புகிறார்கள் அமெரிக்க மக்கள்.

 

செப்டம்பர் 17ஆம் தேதியன்று வால் ஸ்டிரீட்டில் சில நூறு பேர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு அங்கேயே கூடாரமடித்துத் தங்கியபோது, அதனை ஏளனமாகப் புறந்தள்ளின அமெரிக்காவின் கார்ப்பரேட் ஊடகங்கள்.

 

போராட்டக்காரர்கள் மீது மிளகுத்தூளை பொழிந்து விரட்டியடித்தது போலீசு. அவர்கள் ஓடவில்லை. பின்னர் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பின்வாங்கவில்லை. ஒரு மாத காலத்திற்குள் பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கேயே குவிந்து விடுவார்கள் என்றோ, அமெரிக்காவின் எல்லா நகரங்களுக்கும் இந்தப் போராட்டம் பரவும் என்றோ அரசு எதிர்பார்க்கவில்லை.

 

"ஒரு முனையில் செல்வம் குவிவதன் விளைவாக, அதே நேரத்தில் இன்னொரு முனையில் வறுமைத்துயர் குவிகிறது' என்றார் மார்க்ஸ். அந்த இன்னொரு முனைதான் வால் ஸ்டிரீட்டில் குவிந்து கொண்டிருக்கிறது. செல்வம் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்குப் பொசியும் என்ற முதலாளித்துவப் பித்தலாட்டம் அதன் தலைமையகத்திலேயே எள்ளி நகையாடப் படுகிறது.

 

"கடன் பாக்கிக்காக வீடுகளைப் பறிமுதல் செய்து எங்களை விரட்டுகின்றன வங்கிகள். வீட்டு வாடகை அல்லது மளிகை சாமான் இரண்டில் ஒன்று என நாங்கள் நெருக்கப்படுகிறோம். சோற்றுக்காக தெருவில் கிடக்கிறோம். வேலை இல்லை. இருந்தாலும் நியாயமான கூலி இல்லை. மருத்துவ வசதி இல்லை. ஒரு சதவீதத்தினருக்கு மட்டும் எல்லாம் இருக்கின்றது. எங்களுக்கு எதுவும் இல்லை. நாங்கள் 99மூ பேர். நாங்கள்தான் அமெரிக்கா!' என்று முழங்குகின்றனர் மக்கள்.

 

"நாம்தான் 99மூ. ஆனால் 1சதவீதம்  நம்மை ஆள்கிறது. அரசாங்க கணக்கின் படி 5 கோடிப் பேர் (உண்மையில் 10கோடி) வறுமையில் தவிக்கிறார்கள். 5 கோடிப்பேருக்கு மருத்துவக் காப்பீடு இல்லை. 2.5 கோடிப் பேருக்கு வேலை இல்லை. இருப்பினும் பணக்காரர்களுக்கு வரிவிலக்கு. நமக்கு சிக்கன நடவடிக்கை. குடியரசுக்கட்சியும் ஜனநாயகக் கட்சியும் முதலாளிகளின் கட்சிகள். வால் ஸ்டிரீட் நம் வாழ்க்கையைக் கைப்பற்றிவிட்டது. நாம் வால் ஸ்டிரீட்டை கைப்பற்றித்தான் ஆகவேண்டும்'

 

எளிய மொழியில் வெளிப்படும் இந்த வர்க்க அரசியலின் தர்க்கம் அமெரிக்க ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்துகிறது. "இது வர்க்கப்போர்' என்று அலறுகிறார் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தல் களத்தில் நிற்கும் மிட் ரோம்னி. இது முதலாளித்துவப் பொருளாதாரத்தை வீழ்த்துவதற்கு நடக்கும் உலகு தழுவிய கம்யூனிஸ்டு சதி என்று அச்சுறுத்துகிறார் பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியைச் சேர்ந்த கிலென் பெக். வால் ஸ்டிரீட்டை எது தாக்குகிறதோ அதுதான் உலகின் முதன்மை அபாயமாம்! இசுலாமிய பயங்கரவாதம் கம்யூனிசத்துக்கு வழி விட்டு ஒதுங்கிவிட்டது போலும்!

 

கம்யூனிச எதிர்ப்பின் தலைமையகத்திலேயே வர்க்கப் போராட்டமா? அமெரிக்காவில் இத்தீயை மூட்டிய சக்தி எது? பிரிட்டன், பிரான்சு, கிரீஸ், ஸ்பெயின், போர்த்துகல், இத்தாலி என்று கடந்த 3 ஆண்டுகளாக நாடு விட்டு நாடு தாவிப்பரவும் போராட்டத்தீயை மூட்டிய சக்தி எதுவோ அதே சக்திதான்!

 

"நம்முடைய எதிர்காலமும் லண்டனைப் போன்றதுதானா?' என்ற கேள்விக்கு பதிலளித்த உலகின் 3வது பெரிய பணக்கானரரான வாரன் பப்பெட்ஈ "அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது மக்கள் வேகமாக நம்பிக்கை இழந்து வருகிறார்கள். விரக்தியாக மாறுவதற்குள் அதனைத் தடுக்க வேண்டும். இல்லையேல் அந்த விரக்தி தனக்குப் பொருத்தமான எதார்த்தத்தை உருவாக்கிக் கொள்ளும்' என்று எச்சரித்தார். பழம் தின்று கொட்டை போட்ட அந்த ஊகவணிகச் சூதாடியின் ஊகம் பொய்க்கவில்லை.

 

ஏன் எதற்கு என்ற விளக்கமில்லாமல், வெடித்துத் தெறிக்கும் கோபமாக சுழன்றடித்தது லண்டன் கலகம். வால்ஸ்டிரீட் போராட்டமோ அழுத்தமாக, விடாப்பிடியாக, தொடர்ச்சியாகத் தனது எதிர்ப்பைக் காட்டுகிறது. வால் ஸ்டிரீட் பகுதியின் சாலைகள் பூங்காக்கள் எங்கும் மக்கள் கூட்டம். கல்வி உரிமை பறிக்கப்பட்ட மாணவர்கள், வேலையில்லாதவர்கள், நியூயார்க் நகரின் போக்குவரத்து, துப்புறவுப் பணியாளர்கள், வங்கிகளிடம் வீட்டைப் பறிகொடுத்தவர்கள், மருத்துவக் காப்பீடு இல்லாதவர்கள், ஊனமுற்றவர்கள், ஓய்வூதியக்காரர்கள், முன்னாள் இராணுவத்தினர், போர் எதிர்ப்பாளர்கள் எனப்பலதரப்பு மக்கள்! திரள் திரளாகக் கூடி நிற்கும் மக்களிடையே நூற்றுக்கணக்கான கூட்டங்கள் நடந்தவண்ணமிருக்கின்றன.

 

வெட்ட வெளியில் கூடாரம் அமைத்து 30 நாட்களாக வாழ்ந்து வரும் மக்களுக்கு உணவு உறக்கம் அனைத்தும் அங்கேயேதான். இலவச உணவுக்கூடங்கள், இலவச முடி திருத்துமிடங்கள், இலவச மருத்துவ முகாம்கள் என ஒரு புதிய சமூகமாகவே அவர் களைத் திரட்டுகிறது இந்தப் போராட்டம். தம்மிடம் உள்ள நூல்களைக் கொண்டு இலவச நூலகம் அமைக்கிறார்கள்.

 

மார்க்ஸ் முதல் நோம் சாம்ஸ்கி வரையிலான பலரது நூல்கள் விவாதிக்கப்படுகின்றன. இடது சாரி அறிஞர்களும், பல நாட்டு செயல்வீரர்களும் உரையாற்றுகிறார்கள். கார்ப்பரேட் ஊடகங்களின் இருட்டடிப்பை மீறி போராட்டச் செய்தியை உலகெங்கும் கொண்டு செல்கிறது திறந்தவெளியில் அமைக்கப்பட்டுள்ள இணைய மையம். முர்டோச்சின் வால் ஸ்டிரீட் ஜர்னலை ஏளனம் செய்யும் விதத்தில், "கைப்பற்றப்பட்ட வால் ஸ்டிரீட்டின் ஜர்னல்' என்றொரு பத்திரிகையைத் தொடங்கி 50,000 பிரதிகள் அச்சிடுகிறார்கள் போராட்டக்காரர்கள்.

 

தங்களுடைய உடைமைகளையும், உரிமைகளையும் பறித்துக் கொண்டது கார்ப்பரேட் முதலாளித்துவம்தான் என்ற கருத்து எங்கும் பரவி நிற்கிறது. அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம், அதிகரிக்கும் மாணவர்களின் கல்விக்கடன்கள், அதிகரிக்கும் இராணுவச் செலவுகள், அதிகரிக்கும் வரிகள்.. இவையெல்லாம் ஏன் என்பது குறித்து யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.அட்டைகளும் காகிதங்களும் பேனாக்களும் வண்ணங்களும் தூரிகைகளும் ஒரு இடத்தில் குவிக்கப்பட்டிருக்கின்றன. முழக்கங்களை, ஓவியங்களை வரைந்து தள்ளுகிறார்கள் மக்கள்.

 

"நாம் அனைவருமே பாலஸ்தீனியர்கள்தான்' என்று ஒரு முழக்கம். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பினால் வீடிழந்த பாலஸ்தீனியர்களையும், அமெரிக்க வங்கியிடம் கடன் வாங்கி வீட்டைப் பறிகொடுத்த அமெரிக்கர்களையும் பிரிக்கின்ற எல்லைக்கோடு எது? அமெரிக்க நிதிமூலதனமும் இஸ்ரேலின் ஜியோனிசமும் கைகோர்த்து நிற்கும்போது வீடிழந்த அமெரிக்கனும் பாலஸ்தீனியனும் கைகோர்ப்பதில் என்ன தடை இருக்கிறது?

 

தம் துயரத்தையும் அதற்கான காரணத்தையும் விவாதிப்பதன் ஊடாக, தங்கள் பொது எதிரி உலக முதலாளித்துவம்தான் என்ற கருத்தொற்றுமைக்கு அவர்களைக் கொண்டு வருகிறது இந்தப் போராட்டம். வால் ஸ்டிரீட்டில் கூடியிருக்கும் இம்மக்கள் எந்த ஒரு அமைப்பினாலும் திட்டமிட்டுத் திரட்டப்படாதவர்கள். இது தன்னியல்பான போராட்டம் என்பதால், இதனைத் தம் நோக்கத்திற்கேற்ப வளைப்பதற்கு கூட்டத்தில் கலந்திருக்கும் தன்னார்வக் குழுக்கள் முயற்சிக்கின்றன.

 

ஆனால் தன்னார்வக் குழுக்களின் அடையாள அரசியல், நுண் அரசியல் அனைத்தையும் பின்தள்ளிதம் சொந்த அனுபவத்தினூடாக வர்க்கப் போராட்ட அரசியலை உயர்த்துகிறது இந்தப் போராட்டம். "இப்போராட்டம் நிதிச்சந்தையின் செயல்பாடு குறித்த மக்களின் விரக்தியைக் காட்டுகிறது' என்று கூறி, அரசியல் ஆதாயம் தேட ஒபாமா முயன்று கொண்டி ருக்கும்போதே, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ரூபர்ட் முர்டோச், கோச் போன்ற அமெரிக்க கோடீசுவரர்களின் வீடுகளை முற்றுகையிடுகின்றனர்.

 

இரண்டு கட்சிகளும் மக்களின் பிரதிநிதி இல்லை என்று முழங்குகின்றனர். "வங்கிகள் நம் வீடு

களைப் பறிமுதல் செய்தால், வங்கிகளைப் பறிமுதல் செய்வோம்! நகர அரசு பள்ளிகளை மூடினால் நாம் அரசை இழுத்து மூடுவோம்!' என்று முழங்குகிறார்கள். "கல்விக்கும், மருத்துவத்துக்கும், ஓய்வூதியத்துக்கும், மக்கள் நலத்திட்டங்களுக்கும் பணம் இல்லை. இந்த நெருக்கடியின் சுமையை நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ளவேண்டும்' என்ற அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கூற்றை மக்கள் ஏற்கவில்லை.

 

வங்கிகளும் நிதிமூலதனச் சூதாடிகளும் உருவாக்கிய 2008 சப் பிரைம்குமிழி வெடிப்பையும், திவாலாக்கப்பட்ட வங்கிகளைக் காப்பாற்ற அம் முதலாளிகளுக்கு அரசு கொட்டிக்கொடுத்த பல இலட்சம் கோடி டாலர் மானியத்தையும் "நெருக்கடி' என்ற சொல்லால் குறிப்பிடுவதையே மக்கள் ஏற்கவில்லை.

 

"உன்னுடைய நெருக்கடிக்கு நாங்கள் பணம் கொடுக்க மாட்டோம்' என்ற முழக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இத்தாலியில் நடைபெற்ற முதலாளித்துவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் முழக்கம். அங்கிருந்து அது கிரீஸ{க்கும் பிரான்சுக்கும் பரவியது. அதே முழக்க ம் வால் ஸ்டிரீட்டில் எதிரொலிக்கிறது.

 

"சந்தை விதிகள் எனப்படுபவை, இயற்கை விதிகள் அல்ல, மாற்றவொண்ணாத புனிதக் கோட்பாடுகளும் அல்ல' என்ற புரிதலை தம்முடைய நடத்தையின் மூலம் மக்களுக்குப் புரியவைத்திருக்கிறார்கள் வால் ஸ்டிரீட்டின் நிதி மூலதனச் சூதாடிகள்.

 

தற்போது நடைபெறும் வால் ஸ்டிரீட் முற்றுகை அமெரிக்க முதலாளித்துவத்தையோ, உலக முதலாளித்துவத்தையோ நாளையே வீழ்த்திவிடப் போவதில்லை. ஆனால் முதலாளித்துவ ஜனநாயகம் குறித்த பிரமையிலிருந்து மக்கள் விடுபட்டு வருவதை இப்போராட்டம் காட்டுகிறது.

 

ஒரேமாதத்திற்குள் வால்ஸ்டிரீட்டின் முழக்கங்கள் உலகெங்கும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. அக்டோபர் 15 ஆம் தேதியன்று உலகின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற

ஆர்ப்பாட்டங்கள், "முதலாளித்துவம் ஒழிக' என்ற ஒரேமுழக்கத்தை பல்வேறு மொழிகளில் முழங்கின. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், தைவான், ஹாங்காங், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றிருக்கின்றனர். லண்டன் பங்குச்சந்தையைக் கைப்பற்றுவோம் என்ற முழக்கத்துடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும், பாரிசில் ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாட்டு வளாகத்தின் எதிரிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருக்கின்றனர். கிரீஸ் விற்பனைக்கல்ல என்ற முழக்கத்துடன் நாட்டின் பொதுச்சொத்துகளை முதலாளிகளுக்கு விற்பதை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான கிரேக்க மக்கள் கிளர்ச்சி செய்திருக்கின்றனர். இத்தாலியில் வேலைவாய்ப்பில்லாதவர்கள், மாணவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் போன்றோர், "அவமதிக்கப்பட்டோர் அணி' என்ற பெயரில் திரண்டு கிளர்ச்சியில் இறங்கியருக்கின்றனர். வங்கிகள் நொறுக்கப்பட்டிருக்கின்றன, போலீசு வாகனங்கள் எரிந்திருக்கின்றன.

 

ரோம் எரிந்து கொண்டிருக்கிறது. வால் ஸ்டிரீட் எரியக் காத்திருக்கிறது.

• மருதையன்

Last Updated on Friday, 18 November 2011 20:38