Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் தன்னாதிக்கத்தை அங்கீகரித்தல் வேறு, "தன்னாதிக்கத்திற்காகப் போராடுதல்" வேறு (சுயநிர்ணயம் பகுதி : 07)

தன்னாதிக்கத்தை அங்கீகரித்தல் வேறு, "தன்னாதிக்கத்திற்காகப் போராடுதல்" வேறு (சுயநிர்ணயம் பகுதி : 07)

  • PDF

தன்னாதிக்கம் என்பது, வர்க்க நலன் சார்ந்தது. சுரண்டும் வர்க்க நலன் சார்ந்து தன்னாதிக்கத்துடன் "பிரிந்து போவதும்" அதற்காக "போராடுதலும்" பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அல்ல. இப்படியிருக்க மார்க்சியத்தின் உள்ளார்ந்த அதன் அரசியல் விளக்கங்களை திரித்தலே, பூர்சுவா வர்க்கத்தின் அரசியல் இருப்புக்கான அரசியல் அத்திவாரமாகின்றது. ஒரு முரண்பாட்டின் பொதுத்தன்மையை மறுத்து, குறித்த தன்மையை முதன்மையாக்குகின்ற கூறு தான், பிரிந்து செல்லும் உரிமை சுயநிர்ணய கோசத்தின் மீதான அரசியல் திரிபாகும்.

 

 

 

ஒரு தேசிய இனம் பிரிந்து செல்லும் உரிமையின் அடிப்படையில், ஓடுக்கும் இனத்தைச் சேர்ந்தவர்கள் அதன் தன்னாதிக்கத்தை அங்கீகரித்து போராடுதல் என்பது, பிரிவினைவாதத்துக்கு எதிரான திசையில்தான். இப்படியிருக்க ஒடுக்கப்பட்ட இனத்தை சார்ந்தவர்கள் இந்த உண்மையை திரித்தபடி, "தன்னாதிக்கத்திற்காகப் போராடுதலும்" என்ற தர்க்கத்தை மார்க்சியத்தின் பெயரில் முன்தள்ளுகின்றனர். இது சாராம்சத்தில் பூர்சுவா வர்க்க பிரிவினைவாதக் கோரிக்கையாகும். தனிநாடாக்கக் கோரும் பிரிவினை வாதம் தான், இங்கு "தன்னாதிக்க" மாக முன்தள்ளப்படுகின்றது. பிரிவினைவாதத்தை வேறுபடுத்தாத, தங்கள் வர்க்க கடமையை முன்வைக்காத இந்த சுத்துமாத்து தர்க்கம் அடிப்படையில் மார்க்சியம் மீதான திரிபாகும். ஆக இங்கு "பிரிந்து போவதும் அது தன்னாதிக்கத்திற்காக" போராடுவது என்பதும், ஒடுக்கப்பட்ட பூர்சுவா வர்க்கத்தின் பிரிவினைவாத கோரிக்கையாகும். அதுதான் "ஒரு தேசிய இனம் பிரிந்து போவதும் அது தன்னாதிக்கத்திற்காகப் போராடுதலும்" என்ற அரசியலை முன் தள்ளுகின்றது.

இதில் இருந்து வேறுபட்டது பாட்டாளிவர்க்கத்தின் கோரிக்கை. தன்னாதிக்கத்தை அங்கீகரித்து போராடுதல் வேறு, "தன்னாதிக்கத்திற்காகப் போராடுதல்" வேறு. பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரித்து போராடுதல் வேறு, பிரிந்து செல்வதற்காக போராடுதல் வேறு. மிக நுட்பமான இந்த வேறுபாட்டை அரசியல் ரீதியாக திரிப்பதன் மூலம், மார்க்சியத்தை அரசியல் ரீதியாக செயலற்றதாக்குகின்றனர். இதை மார்க்சியத்தின் பெயரில் செய்கின்றனர்.

இங்கு பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் மற்றொரு தவறான மார்க்சியவாதங்களை பயன்படுத்திக்கொண்டு தான், "பிரிந்து போவது" பற்றியும் "தன்னாதிக்கத்திற்காகப் போராடுதலும்" பற்றியும் முன்வைக்கப்படுகின்றது. பாட்டாளி வர்க்கத்தின் செயல்பூர்வமான சுயமான அரசியல் போக்கை இவ்விரண்டும் மறுக்கின்றது. இதன் சாரம் ஒடுக்கும் இனத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தின் கடமையையும், ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தின் கடமையையும், அதாவது இரு வேறுபட்ட கடமைகளை மறுத்து, அதை எதிர்நிலைக்கு தள்ளி திரித்துவிடுகின்றது.

இங்கு இது பற்றி லெனின் கூறுவதைப் பார்ப்போம்; "சிறிய தேசிய இனத்தைச் சேர்ந்த ஒரு சமூக ஜனநாயகவாதி தமது கிளர்ச்சி முறையில் நமது பொதுச்சூத்திரத்தின் இரண்டாவது சொல்லை – "தேசிய இனங்களின் மனப்பூர்வமான ஐக்கியம்" என்பதை வலியுறுத்த வேண்டும். ….. அவர் எல்லாச் சமயங்களிலும் குறுகிய தேசிய இன மனப்பான்மை, தனித்திருத்தல், ஒதுங்கி வாழுதல், ஆகியவற்றுக்கு எதிராக போராட வேண்டும். முழுமையையும் பொதுமையையும் ஏற்றுக் கொள்வதற்காகப் போராட வேண்டும். பொது அம்சத்தின் நலன்களுக்குத் தனி அம்சத்தின் நலன்கள் கீழ்ப்பட்டவை என்பதற்காகப் போராட வேண்டும்." என்றார். (லெனின் தே.வி.பா.ச - பக்கம் 246)

ஒடுக்கபட்ட (சிறிய தேசிய) இன மார்க்சியவாதிகள் "குறுகிய தேசிய இன மனப்பான்மை, தனித்திருத்தல், ஒதுங்கி வாழுதல்" போன்ற போக்குக்கு எதிராக போராட வேண்டும். இதைப் பற்றி பேசாது "பிரிந்து போவது" பற்றியும் "தன்னாதிக்கத்திற்காகப் போராடுதலும்" பற்றி பேசுவது மார்க்சியத்துக்கு எதிரானது. பொது அம்சத்தை மறுத்து அல்லது கீழ்படுத்தி, தனி அம்சத்தை முதன்மைப்படுத்துவது அல்லது அதைப்பற்றி மட்டும பேசுவது மார்க்சியத்துக்கு எதிரானது. பாட்டாளி வர்க்கத்தின் தனித்துவமான, செயல்பூர்வமான அரசியலை மறுத்தலாகும். பூர்சுவா வர்க்கத்தின் பின்னால் பாட்டாளி வர்க்கத்தை வழி காட்டுவதாகும்.

இங்கு இரு வேறுபட்ட வர்க்கங்களின் அரசியல் நிலைபற்றி கூறும் லெனின் "பூர்ஷ்வா தேசியவாதமும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும் இணக்கம் காணமுடியாத பகைமை கொண்ட இருவேறு கோசங்களாகும். இவை முதலாளித்துவ உலக முழுமையிலும் நிலவும் மாபெரும் இருவேறு வர்க்க முகாம்களுக்கு ஏற்ப அமைந்து தேசிய இனப்பிரச்சனையில் இருவேறு கொள்கைகளில் (மேலும் இருவேறு உலகக் கண்ணோட்டங்களின்) வெளிப்பாடுகளாக விளங்குகிறவை." என்றார். (லெனின்- -21, தேசிய இனப்பிரச்சனை பற்றிய விமர்சனக் குறிப்புகள்)

இங்கு ஒடுக்கும் இனம் சார்ந்த கண்ணோட்டத்தில் மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட இனம் சார்ந்த கண்ணோட்டத்திலும் கூட இதுதான் அரசியல் சாராம்சம். ஆக இங்கு லெனின் கூறுவது போல் 'எந்த ஒரு தேசியக்கோரிக்கையையும் ஒரு தேசியப்பிரிவினையையும் தொழிலாளர் வர்க்கப் போராட்டம் என்ற கோணத்திலிருந்து மதிப்பிடுகின்றது." (லெனின் தே.இ.சு.க பக்கம் 33) என்றார்.

பாட்டாளிவர்க்கம் தன் சொந்த வர்க்கத்தின் நலனில் நின்றுதான், ஒடுக்கப்பட்ட தேசியத்தை எதிர்கொள்ளும். ஒடுக்கப்பட்ட தேசியத்தின் பூர்சுவா கோரிக்கையில் உள்ள முரணற்றவற்றை மட்டும்தான் ஆதரிக்கும். அதுவல்லாத அனைத்தும் இணக்கம் காண முடியாதவை. இங்கும் ஒடுக்குமுறைக்கு அது உள்ளாகின்றது என்பதாலோ, இதனால் பிரதான முரண்பாடாக இல்லாது இருப்பதாலோ, அது பகைமையற்ற இணக்கமான ஒன்றுடன் ஒன்று கலந்த கோரிக்கையாகிவிடுவதில்லை. தேசிய இனப்பிரச்சனையில் இருவேறு கொள்கையின் அடிப்படையில், இரு வேறு வாக்க அடிப்படையில் இது எதிர்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். இதை இல்லாததாக்கும் புரட்டுதான் "ஒரு தேசிய இனம் பிரிந்து போவதும் அது தன்னாதிக்கத்திற்காகப் போராடுதலும்" என்ற தர்க்கமும், கோசமும் ஆகும்.

 

பி.இரயாகரன்

06.10.2011

 

1. பிரிவினைக்கும், பிரிவினை மறுப்புக்கும் எதிரானது சுயநிர்ணயம் (சுயநிர்ணயம் பகுதி : 01)

2. பிரிந்து செல்லும் உரிமையற்ற சுயநிர்ணயம் என்பது மார்க்சியமல்ல (சுயநிர்ணயம் பகுதி : 02)

3. மார்க்சியத்தின் பெயரில் முன்வைக்கும் பிரிவினைவாதம் (சுயநிர்ணயம் பகுதி : 03)

4. சுயநிர்ணயத்தின் செயல்பூர்வமான வடிவமே பிரிவினை என்பது புரட்டு (சுயநிர்ணயம் பகுதி : 04)

5. "ஒரு தேசிய இனம் பிரிந்து போவ"தற்காக "போராடு"வது முற்போக்கானதா!? (சுயநிர்ணயம் பகுதி : 05)

6. பிரிவினைவாதத்துக்கு எதிரான பிரிந்து செல்லும் சுயநிர்ணயவுரிமை (சுயநிர்ணயம் பகுதி : 06)