Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் உருத்திரகுமாரனும் சர்வேந்திரா சில்வாவும் வழக்காடுகின்றனர்? எதற்காக?

உருத்திரகுமாரனும் சர்வேந்திரா சில்வாவும் வழக்காடுகின்றனர்? எதற்காக?

  • PDF

மக்களைக் கொன்று குவித்த, குவிக்க உதவிய உருத்திரகுமாரனும் சர்வேந்திரா சில்வாவும் வழக்காடுகின்றனர்? ஆம் அரசும் – புலியும் வழக்காடுகின்றனர். தாங்கள் கொன்று குவித்த மக்களுக்கு, என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறியப் போகின்றனராம்! பலி கொடுத்து பலி எடுக்க அரசியல் நடத்தியவர்கள், அதற்கு முன்பாக ஆயிரம் ஆயிரம் மனித உயிர்களை காவு கொண்டவர்கள். இப்படி மக்கள்விரோத அரசியல் மூலம் போட்டி போட்டுக் கொண்டு, தங்கள் இராணுவ - அரசியல் மூலம் மக்களைக் கொன்று குவித்தவர்கள் இவர்கள். இன்று அதே வழிமுறையில் அதன் எல்லைக்குள் கால்கடுக்க நின்றபடி, உண்மையை அறியவும் நீதியை வேண்டியும் ஓருவருக்கு எதிராக மற்றவர் மல்லுக் கட்டுகின்றனர். அரசியல் கோமாளிகள் தம்மின மக்களுக்கு வேடிக்கை காட்டுகின்றனர்.

 

 

 

எதிர்த்தரப்பின் குற்றத்தை மட்டும் முன்னிறுத்தி வேஷம் போட்டு கோரும் நீதி விசாரணை, மக்களுக்கு உண்மையைக் கொண்டு வராது, நீதியைக் கொண்டுவராது. ஆனால் பரஸ்பரம் குற்றச்சாட்டுகள், இதன் பின்புலத்தில் நடந்த பல சதிகளையும் மனிதவிரோத நடத்தைகளையும் அம்பலத்துக்கு கொண்டுவரும். ஆம் "எந்தத் தீமையிலும் ஏதேனும் நன்மை இருக்கும்" என்ற பழமொழிக்கு ஏற்ப, அரசு மற்றும் புலிகளின் மனிதவிரோதமான, அவர்களுக்கே உரிய கோர முகத்தை அம்பலமாக்க இந்த வழக்கு வழி ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இனச் சாயமடித்து, மக்களுக்கு நடந்த உண்மைகளை புதைக்கின்ற பக்க அரசியலுக்கு இது வேட்டு வைக்குமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

எந்த உண்மையை இவர்கள் கொண்டு வரப்போகின்றார்கள்? எங்கள் மக்களை கொன்றவர்கள் யார் என்பதையா? கைதிகளைக் கொன்றவர்கள் யார் என்றதையா? சட்டத்துக்குப் புறம்பான மரணத்தை வழங்கியவர்கள் யார் என்பதையா? இப்படி ஆயிரம் ஆயிரம் கேள்விகளுக்கு அரசு மட்டுமல்ல, புலிகளும் பதில் அளிக்கவேண்டும்.

இறுதிப் போர் பற்றி மட்டும் பேசப்படுகின்ற பொது அரசியல் பின்னணியில், புலிகள் பற்றிய அக்கறை மட்டும் தான் பிரதிபலிக்கின்றது. தமிழ்மக்களுக்கு என்ன நடந்தது என்ற அக்கறையல்ல. தமிழ் மக்கள் கொல்லப்பட்டது, காணாமல் போனது, கைதான பின் அவர்களுக்கு என்ன நடந்தது என்ற கோணத்தில், புலிகள் முதல் அரசு வரை பதில் அளிக்க வேண்டியுள்ளது.

ரமேஸ் கைதாகி சித்திரவதை செய்யப்பட்டு பின் கொல்லப்பட்ட காட்சி சார்ந்து அமெரிக்காவில் வழக்காடும் புலிகள், அவர்களால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்த பின் காணாமல் போன என்.எல்.எவ்.ரி. மத்தியகுழு உறுப்பினர்களான அன்ரன், ரமணி முதல் தீப்பொறி மத்தியகுழு உறுப்பினர் கேசவன் வரையான 5000 க்கு மேற்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு உருத்திரகுமார் பதில் கூறுவாரா? பச்சைப் பாசிட்டுகள் இவர்கள். அரசைப் போல் கொலைகார மாபியாக் கும்பல். அரசு செய்த குற்றத்துக்கு நிகராக மக்களை கொன்றவர்கள். யார் கூடக் குறைய என்ற வேறுபாடு தவிர, அனைத்து வக்கிரத்தையும் வகை தொகையின்றி செய்தவர்கள். "மக்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றியதான உண்மையும், மக்களுக்கு நீதியும் கிடைக்க வேண்டியுமே" என்று கூறும் உருத்திரகுமார், தங்களால் இந்த மக்கள் சந்தித்த துயரத்துக்கு பதில் அளிப்பாரா? அதற்கான நீதியை எந்த நீதிமன்றத்தில் நாம் பெறமுடியும்? அதையாவது அந்த மக்களுக்குச் சொல்வாரா!?

"நீதி விசாரணையை நடாத்துவதற்குரிய சட்டவெளியோ அல்லது அரசியல் வெளியோ இலங்கைத் தீவில் இல்லாத காரணத்தினால்தான், புலத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக" உருத்திரகுமார் கூறுகின்றார். ஆம் உண்மைதான், சரி புலத்தில் கூட தமிழ் மக்களுக்கு புலிகள் இழைத்த அநீதிகளைச் சொல்லும் சுதந்திரம் இன்று வரை கிடையாது. இந்த அரசியல் தயவில் வாழ்ந்தபடி, நீங்கள் வழக்காடும் விசித்திரம். புலத்தில் தமிழ் மக்களுக்கு சுதந்திரம், ஜனநாயகம் கிடையாது என்பது தான் வழக்காடும் உருத்திரகுமாரன் தரப்பு நாடுகடந்த தமிழீழச் சட்டம்.

இங்கு அரசால் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக மட்டும் நீதி கோருகின்றர்வர்கள், உண்மைக்காவும், நீதிக்காவும் போராடவில்லை. தங்கள் குற்றங்களை மூடிமறைத்தபடி தான், அந்த உண்மைகளை புதைத்தபடிதான், அதைச் செய்தவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்விகள் மீது தான், தங்கள் வழக்கை நடத்துகின்றனர்.

இந்த நிலையில் அரசு, புலிகள் செய்த குற்றத்தை இதன் மேல் அம்பலப்படுத்த போவதாக பீற்றிக்கொள்கின்றனர். இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்த போவதாக பம்மி விம்முகின்றனர். சர்வதேச விசாரணை ஒன்றுக்கு உத்தரவிட்டு இதைச் செய்யலாமே. சரி அதைத்தான் செய்யவில்லை, உள்நாட்டு விசாரணையாவது செய்திருக்கலாமே. அதுவுமில்லை. வழக்கு வந்தவுடன் குதித்தெழுந்து கூறுவது, யாரை திருப்திப்படுத்த என்ற கேள்வியை எழுப்பிவிடுகின்றது.

வழக்கைத் தொடுத்த புலிப்பினாமி உருத்திரகுமார் மீதான குற்றச்சாட்டு மூலம் விடுபட முனைகின்றது அரசு. "விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கொள்வனவு செய்தது தொடர்பில் வி.உருத்திரகுமாரன் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கும் இருந்த தொடர்புகள் குறித்தான ஆவணங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் கிடைத்திருப்பதாகவும் தன் மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது இவ் ஆவணங்களை சமர்பிக்க இருப்பதாகவும்" திடீரென இன்று கூறுகின்றனர்.

இப்படி ஆயிரம் ஆவணங்களைப் புதைத்து வைத்து இனவாத அரசியல் நடத்தும் அரசு, பல நூறு ஆயிரம் கோடி புலிப் பணம் முதல் பல நூறு கிலோ புலிகளின் தங்கத்தை அபகரித்தவர்கள் தான். இன்று திடீர் திடீரென காவடி எடுத்து ஆடுவதன் மூலம், தங்களை காப்பாற்ற முனைகின்றனர்.

இங்கு மக்களுக்கு நீதி கிடைக்குமா!?

புலிகள் முதல் அரசு வரை கொன்றுகுவித்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு நீதி கிடைக்குமா!?

இவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு கடத்தியும், காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையாவது வெளிவருமா!? நீதிதான் கிடைக்குமா!?

பலிகொடுப்பு, பலியெடுப்புக்கு பலியான மக்களின் பின் என்ன நடந்தது என்பதாவது வெளிச்சத்துக்கு வருமா!?

கப்பம், கடத்தல், பாலியல் வல்லுறவு, சொத்து அபகரிப்பு, கட்டாய நிதி அறவீடு என்ற விரிந்த தளத்தில் இந்த மக்கள் அனுபவித்த கொடுமைகளாவது வெளிவருமா!?

தமிழ்மக்கள் இனரீதியாக ஒடுக்கிய வரலாற்று ரீதியான உண்மைகளாவது வெளிவருமா!?

மக்களைச் சாராத எந்த விசாரணைகளும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது. உண்மைக்கும், நீதிக்கும் புறம்பானது. இதைக் கோராத விசாரணையும் சாட்சியமும் பொய்யானது புரட்டுத்தனமானது. இதன் பின்னான அரசியல் மக்களை தொடர்ந்து ஒடுக்குகின்ற வக்கிரங்களாலானது.

 

பி.இரயாகரன்

27.09.2011