Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23

  • PDF

சுழிபுரம் இளைஞர்கள் படுகொலை ஒரு திட்டமிட்ட சதி

டொமினிக் மத்தியகுழுக் கூட்டத்துக்கு இந்தியா செல்லும்போது தற்காலிக தளநிர்வாகக் குழுவே தளத்தில் அனைத்து செயற்பாடுகள் குறித்த முடிவுகளையும் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டிருந்தார். டொமினிக் முடிவுகள் எனக் குறிப்பிட்டிருந்தவை நடைமுறை சம்பந்தமான முடிவுகளாகத்தான் இருந்தன. ஏனெனில் அமைப்பு சம்பந்தமான எந்தப் பிரச்சனைகளுக்குமான தீர்வுகளோ அல்லது முடிவுகளோ தற்காலிக தளநிர்வாகக் குழுவினது கைகளில் இருந்திருக்கவில்லை. படைத்துறைச் செயலர் கண்ணன் தளத்தில் நின்றபோது அவரால் தீர்த்து வைக்கமுடியாமல் இருந்த அல்லது அவர் தீர்த்துவைக்க விரும்பாத பிரச்சனைகளையும், எந்தவித அதிகாரமுமற்ற நிலையில் தளப்பொறுப்பாளராக செயற்பட்ட டொமினிக் தீர்த்து வைக்க விரும்பிய, ஆனால் அவரால் தீர்த்துவைக்க முடியாமல் இருந்த பிரச்சனைகளையும், தற்காலிக தளநிர்வாகக் குழு முகம் கொடுத்த வண்ணம் இருந்தது.

இராணுவப் பொறுப்பாளர்களான சின்னமென்டிஸும், காண்டீபனும் இராணுவப்பிரிவு சம்பந்தமான செயற்பாடுகளிலும் இராணுவப் பிரிவைச் சேர்ந்தவர்களுடனும் தமது நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்தனர். மக்கள் மத்தியில் செயற்பட்டுக் கொண்டிருந்த மகளிர் அமைப்புப் பொறுப்பாளர் ஜென்னியும், ஜீவனும் நானும் இப்பொழுது மக்கள் மத்தியிலிருந்தும், மாவட்ட அமைப்பாளர்கள் மத்தியிலிருந்தும் வந்த அனைத்து விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் முகம் கொடுப்பவர்களாக இருந்தோம்.

மாணவர் அமைப்புப் பொறுப்பாளராக செயற்பட்டுக் கொண்டிருந்த அசோக்கும்(யோகன் கண்ணமுத்து) மாணவர் அமைப்பினரிடமிருந்தும், மாணவர்கள் மத்தியிலிருந்தும் முகம் கொடுக்கமுடியாத அளவுக்கும், பதில் சொல்லமுடியாத அளவுக்கும் கடுமையான விமர்சனங்களையும் கேள்விகளையும் முகம் கொடுத்துக் கொண்டிருந்தார். சுழிபுரம் இளைஞர்கள் படுகொலை குறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட மாணவரமைப்பினரிடமிருந்து எழுந்த எதிர்ப்பலைகளால் குழப்பமடைந்தவராகக் காணப்பட்ட அசோக்(யோகன் கண்ணமுத்து) சுழிபுரம் இளைஞர்கள் படுகொலை எமது ஆட்களின் வேலைதான் என்பதிலும், இது குறித்து அவசியம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதிலும் கருத்துக் கொண்டவராகக் காணப்பட்டார்.

இந்தியாவில் இராணுவப்பயிற்சி பெற்றவர்களினதும் தொலைத்தொடர்பு பயிற்சி பெற்றவர்களினதும் வருகை தொடர்ந்து கொண்டிருந்தது. இந்தியாவில் தொலைத்தொடர்பு பயிற்சிபெற்று வந்தவர்களில் சின்னமலை, வசந்தி போன்றோரும் அடங்கியிருந்தனர்.

சின்னமலை

வசந்தி

தொலைத்தொடர்பு பயிற்சி பெற்றவர்களின் வருகையோடு தளத்துக்கும் இந்தியாவுக்குமான தொலைத்தொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. புளொட்டின் ஆரம்பகாலங்களில் தளத்துக்கும் இந்தியாவுக்குமான பெரும்பாலான தகவல் பரிமாற்றம் படகு மூலமான கடிதத் தொடர்பாக இருந்தநிலை மாற்றமடையத் தொடங்கியதுடன், தளத்துக்கும் இந்தியாவுக்குமிடையில் தகவல்கள் உடனுக்குடன் பரிமாறக்கூடிய நிலை உருவாகியது.

அரசியல் பாசறைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தன. சேரன்(இளவாலைப் பத்தர்), முல்லைத்தீவு வரதன், பாசறை ரவி, கௌரி காந்தன்(சுப்பையா), ரகு, சின்னப்பத்தர்(இளங்கோ), எஸ்ஆர் என்று அழைக்கப்பட்ட புவிராஜகீர்த்தி சிவராம் போன்றோர் அரசியல் பாசறைகளில் வகுப்புகளை மேற்கொண்டு வந்தனர். அத்துடன் புளொட் அமைப்புடன் தன்னை இணைத்துக் கொள்ளாத, ஆனால் நீண்டகால இடதுசாரி அரசியல் பின்னணியைக் கொண்டவரான யாழ்பல்கலைக்கழக மாணவன் ஒருவரும் (இவர் யாழ் பல்கலைக்கழக மாணவனாக இருந்த, புலிகளால் பின்னர் படுகொலை செய்யப்பட தில்லை என்றழைக்கப்பட்ட தில்லைநாதனின் மாமனார்) இத்தகைய அரசியல் பாசறைகளில் கலந்து கொண்டு அரசியல் வகுப்புகளை எடுத்து வந்தார்.

அரசியல் பாசறைகளின் இறுதிநாளில் தளநிர்வாகப் பொறுப்பாளர் டொமினிக்கின் வேண்டுகோளுக்கிணங்க ஜீவனால் "தாபனக் கோட்பாடுகளும் கட்டுப்பாடுகளும்" என்ற தலைப்பில் அமைப்பு உறுப்பினர்கள் கடைப்பிடிக்கவேண்டிய ஸ்தாபனக் கோட்பாடுகள் பற்றியும் கட்டுப்பாடுகள் பற்றியும் வகுப்பு நடத்தப்பட்டு வந்தது.

எஸ்ஆர் என்று அழைக்கப்பட்ட சிவராம் தன்னைச் சுற்றி ஒரு கூட்டத்தை உருவாக்கிக் கொண்டிருந்ததோடு அதை விரிவுபடுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. எந்தவித இராணுவப் பயிற்சியும் பெற்றுக்கொள்ளாமலே, ஏகே47 துப்பாக்கியை எப்படி உபயோகிப்பது என்ற அனுபவம் எதுமில்லாமலே, ஏகே47 துப்பாக்கியை தோளில் சுமந்தவண்ணம் அரசியல் பாசறை நடத்துவதால் மட்டுமே, அரசியலும் இராணுவமும் தன்னிடம் மட்டும்தான் ஒருங்கே இணைந்திருக்கின்றது என நகைப்பிற்கிடமாக அரசியல்பாசறையில் கூறியிருந்த எஸ்ஆர் என்ற சிவராமால் யாழ்ப்பாணம் சுருவில்பகுதியில் , சியாமாஸ்டரின் பொறுப்பில் நடைபெற்ற மாணவர் அமைப்பினருக்கான அரசியல் பாசறையில் "மாணவ சோசலிசம்" என்று புதிய கண்டுபிடிப்பு – புதிய கருத்து – அறிமுகப்படுத்தப்பட்டது.

எஸ்ஆர் என்ற சிவராம்

அதாவது எஸ்ஆர் என்ற சிவராமின் " மாணவ சோசலிச" த்தின்படி ஆண், பெண் எனத் தனித்தனியே பிரிந்திருத்தல் தவறானதென்றும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருக்கும் பாகுபாடுகள் அழிய வேண்டும் என்றும், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான தோழமை உறவு வளரவேண்டும் என்றும், அரசியல்பாசறைகளில் கலந்துகொள்பவர்கள் ஆண், பெண் என்ற பேதமின்றி இரவில் ஒன்றாக படுத்து உறங்க வேண்டும் என்றும், தேவையேற்படின் பாலியல் தேவைகள் கூட தீர்த்துக்கொள்ளப்படலாம் என்றும் எஸ்ஆர் என்ற சிவராமால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

எஸ்ஆர் என்ற சிவராமின் இத்தகைய கருத்துக்கள் அரசியல் பாசறையில் கலந்துகொண்ட மாணவர்களை தவறான பாதையில் இட்டுச்சென்று தன்பின்னாலான கூட்டத்தை விஸ்தரிப்பதையும் தனது பாலியல் தேவைகளையும் கூட தீர்த்துக்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.

ஆனால் அரசியல் பாசறைகளில் கலந்துகொண்டோரில் ஒருபகுதியினர் எஸ்ஆர் என்ற சிவராமின் தவறான, அதேவேளை உள்நோக்கம் கொண்ட கருத்துக்களில் உடன்படாதவர்களாக இருந்ததோடு, சிவராமின் குழுவாதப்போக்கையும் இனம் கண்டு கொண்டனர். இதனால் தமது பொறுப்பாளர்களுக்கு எஸ்ஆர் என்ற சிவராம் தவறான வழியில் அரசியல்பாசறைகளில் கலந்துகொள்பவர்களை இட்டுச்செல்வதாக தகவல் அனுப்பியிருந்தனர்.

மகளிர் அமைப்பில் செயற்பட்டுக் கொண்டிருந்த செல்வியும் அவருடன் சிலரும் சுருவிலில் அரசியல்பாசறை நடைபெற்ற இடத்துக்குச் சென்று சிவராமால் பாசறையில் முன்வைக்கப்பட்ட உள்நோக்கமும் கபடத்தனமும் கொண்ட கருத்துக்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அரசியல் பாசறையின் இறுதிநாள் ஜீவன் "தாபனக் கோட்பாடுகளும் கட்டுப்பாடுகளும்" என்ற வகுப்பை எடுக்கச் சென்றிருந்த வேளை அப்பாசறையில் கலந்துகொண்டோரில் ஒருபகுதியினர், சிவராம் பாசறையில் கலந்துகொண்டவர்களை தவறான பாதையில் இட்டுச் செல்வதாகவும், அமைப்பை முதன்மைப்படுத்துவதைவிட தன்னை முதன்மைப்படுத்தியே வகுப்புகளை எடுப்பதாகவும் சுட்டிக்காட்டி இருந்தனர். இது குறித்து சிவராமிடம் ஜீவனால் கேள்வி எழுப்பப்பட்டபோது கபடத்தனமும் சூழ்ச்சித்தனமும் கலந்த ஒரு சிரிப்புடன், தவறாக எதுவுமே நடந்துவிடவில்லை என சிவராமால் பதிலளிக்கப்பட்டது.

1983ல் மட்டக்களப்பில் கல்லடி என்ற ஊரில் "நாகபடை" என்ற பெயரில் சுரேஷ் என்பவரின் தலைமையில் பதினொருபேருடன் இயங்கிய இயக்கத்தில் செயற்பட்ட சிவராம், பின்னர் நாகபடை உறுப்பினர்கள் மட்டக்களப்பில் மேற்கொண்ட கொள்ளை நடவடிக்கைகளை அடுத்து பொலிசாரால் தேடப்பட்ட நிலையில், 1984 நடுப்பகுதியில் மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்ததிலிருந்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தின் மரங்களின் கீழ் அமைக்கப்பட்ட இருக்கைகளிலும், பல்கலைக்கழக தேனீர் உணவு விடுதியிலும், மறுமலர்ச்சிக் கழகத்திலும் தனது முழுநேரத்தையும் செலவிட்டுக் கொண்டு ஏதாவது ஒரு இயக்கத்தில் இணைவதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்துகொண்டிருந்தவேளை, கண்ணாடிச்சந்திரனால் புளொட்டுக்குள் உள்வாங்கப்பட்டமை சிவராமின் உள்நோக்கங்களுக்குக் கிடைத்த வெற்றியாக அமைந்துவிட்டிருந்ததுடன், அந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு, அரசியல் பாசறைகளை நடத்துவது மிகவும் பயன்மிக்கதாகவும் மாறிவிட்டிருந்தது.

படைத்துறைச்செயலர் கண்ணன் தளத்தில் தங்கிநின்றபோது கண்ணனுடனும் சின்னமென்டிஸுடனும் சிவராமிற்கு ஏற்பட்ட நெருக்கமும், மத்தியகுழு உறுப்பினரான ஈஸ்வரனுடன் ஏற்பட்ட நெருக்கமான நட்பும் - பிரதேசவாதமும் சூழ்ச்சித்தனங்களும் நிறைந்த நட்பும் - கூட இப்பொழுது சிவராமின் பின்னால் ஒரு கூட்டம் உருவாக வாய்பளித்திருந்தது.

அரசியல் பாசறைகளில் சிவராம் நடந்துகொள்ளும் விதங்கள் மற்றும் ஸ்தாபனத்தை முதன்மைப்படுத்தாமல் தன்னை முதன்மைப்படுத்தி குழுவாதத்தை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டதாக இருப்பதாக அரசியல் வகுப்புகளை நடத்திவந்த நீண்டகால இடதுசாரி அரசியல் பின்னணியைக் கொண்ட யாழ்பல்கலைக்கழக மாணவனும் கூட (இவர் யாழ் பல்கலைக்கழக மாணவனாக இருந்த, புலிகளால் பின்னர் படுகொலை செய்யப்பட தில்லை என்றழைக்கப்பட்ட தில்லைநாதனின் மாமனார்) எம்மிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.

தெல்லிப்பளையில் இடம்பெற்ற அரசியல் பாசறையில் சிவராமால் அமைப்புக்குள் குழப்பத்தையும் சீரழிவையும் ஏற்படுத்தும் கருத்துக்கள் முன்னெடுத்துச் செல்லப்பட்டதுடன் அரசியல் பாசறையில் புகைபிடிக்கும் பழக்கத்தையும், பாசறையில் பங்குபற்றுபவர்களின் உதவியுடன் சிகரெட் வாங்குவதையும், அந்த அரசியல் பாசறையில் பங்குபற்றியவர்கள் எமக்கு அறியத் தந்திருந்தனர்.

இதனால் இதற்கு மேலும் சிவராமின் அமைப்புக்கு விரோதமான குழுவாத நடவடிக்கைகளையும், அமைப்பில் உள்ளவர்களை "மாணவ சோசலிசம்" எனக் கூறி சீரழிவை நோக்கி இட்டுச் செல்வதையும் அனுமதிக்க முடியாது என முடிவெடுத்தோம். அரசியல் பாசறை நடைபெற்ற இடமான தெல்லிப்பளைக்குச் சென்ற ஜீவனும் நானும் அரசியல் பாசறையில் "மாணவ சோசலிசம்" என அரசியல் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த சிவராமிடம் அரசியல் வகுப்புக்களை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டதற்கிணங்க அரசியல் வகுப்பு எடுப்பது நிறுத்திவைக்கப்பட்டது.

இதன் மூலம் அரசியல் பாசறையில் கலந்துகொண்ட மாணவர்களை "மாணவ சோசலிசம்" எனக் கூறி தவறான பாதையில் இட்டுச்சென்று தன்பின்னாலான கூட்டத்தை விஸ்தரிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்த எஸ்ஆர் என்ற சிவராமின் பிரச்சனைக்கு தற்காலிகமாக ஒரு தீர்வு காணப்பட்டிருந்தது.

எஸ்ஆர் என்ற சிவராம் அமைப்புக்குள் ஏற்படுத்திவிட்டிருந்த குழப்பங்களுக்கு தற்காலிகமாகவேனும் தீர்வு ஏற்பட்டுவிட்டதையிட்டு ஓரளவு திருப்தியடைந்து கொண்டிருந்தவேளையில் சுழிபுரம் இளைஞர்கள் படுகொலை குறித்து உமாமகேஸ்வரனின் உத்தரவின் பேரில் இந்தியாவில் அச்சிட்டு வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் அடங்கிய பொதிகள் தளத்தில் விநியோகிப்பதற்காக வந்துசேர்ந்தன.

அத்துண்டுப்பிரசுரத்தினுடைய தலைப்பு "சுழிபுரம் இளைஞர்கள் படுகொலை ஒரு திட்டமிட்ட சதி" என்பதாக அமைந்திருந்தது. யார் திட்டமிட்ட சதி? தமிழீழ விடுதலைப் புலிகளின் திட்டமிட்ட சதி என துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. சுழிபுரம் இளைஞர்கள் படுகொலையின் உண்மைநிலையை, தளத்தின் உண்மைநிலையை அறிந்துகொள்ளாத அல்லது அறிந்துகொள்ள விரும்பாத, மக்களையும், அமைப்பில் உள்ளோரையும் மந்தைக்கூட்டம் என்று கருதும் ஒருவரால்தான் இத்தகையதொரு உண்மைக்குப் புறம்பான ஒரு விடயத்தை எழுதி, அச்சேற்றி தளம் அனுப்பி வைத்திருக்க முடியும் என எண்ணத் தோன்றியது.

டொமினிக் தளநிர்வாகப் பொறுப்பாளராக செயற்பட்ட காலத்தில் சுழிபுரம் இளைஞர்கள் படுகொலை நடந்தேறியிருந்தது. படைத்துறைச் செயலர் கண்ணனாலும், அதன் பின்னர் உமாமகேஸ்வரனாலும் சுழிபுரம் இளைஞர்கள் படுகொலையை நாம் மேற்கொள்ளவில்லை என மறுத்து அறிக்கை விடும்படி டொமினிக் கேட்கப்பட்டிருந்தார். ஆனால் சுழிபுரம் இளைஞர்கள் படுகொலை குறித்த சரியான விசாரணை இல்லாமல் அத்தகையதொரு மறுப்பறிக்கை வெளியிட முடியாது என டொமினிக் கருத்துத் தெரிவித்திருந்தார்.

அதற்குப் பின்னான நாட்களில் சுழிபுரம் பகுதியில் இருந்து வெளியான தகவல்கள் மூலம், சுழிபுரம் இளைஞர்கள் படுகொலையின் சூத்திரதாரிகள் எமது இராணுவப் பிரிவினர்தான் என்ற உண்மைநிலையை மக்கள் அறிந்துகொண்டதோடு, சுழிபுரம் இளைஞர்கள் படுகொலையைச் செய்தவர்கள் எமது அமைப்பினர்தானென்றும் அதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும் என்றும் நெருக்குதல் கொடுத்திருந்தனர். யாழ்ப்பாண மாவட்டக்குழுவில் செயற்பட்டவர்களில் பெரும்பாலானோர் உட்பட கீழணி உறுப்பினர்கள் வரை சுழிபுரம் இளைஞர்கள் படுகொலையின் கொலையாளிகள் - எமது அமைப்பினைச் சேர்ந்தவர்களான கொலையாளிகள் - தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். உண்மைநிலை இப்படியாக இருக்கும்போது எப்படி சுழிபுரம் இளைஞர்கள் படுகொலை தமிழீழ விடுதலைப்புலிகளால் திட்டமிடப்பட்ட சதியென்று நாம் சொல்லமுடியும்? தமிழீழ விடுதலைப் புலிகள் இத்தகைய செயல்களில் மிகவும் கைதேர்ந்தவர்களாக இருந்தவர்கள் தான்; இத்தகைய செயல்களைக் கச்சிதமாகச் செய்யக்கூடியவர்கள் தான்; ஆனால் சுழிபுரம் இளைஞர்கள் படுகொலை நாம் ஆரம்பத்தில் எண்ணியிருந்ததுபோல் உமாமகேஸ்வரனை குறிவைத்து மேற்கொள்ளப்பட் தமிழீழ விடுதலைப் புலிகளின் திட்டமிட்ட சதியல்ல; எமது இராணுவப் பிரிவினரின் - கொடூரத்தனம்மிக்க, கொலைவெறி கொண்ட ஒரு சிறுபகுதியினரின் - சதியேயாகும் என்பதே எமது கருத்தாக இருந்தது.

இதனால் உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தாங்கி வெளிவந்த, தமது ஆறு உறுப்பினர்களை ஏற்கனவே இழந்துவிட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை மேலும் ஆத்திரமூட்டும் "சுழிபுரம் இளைஞர்கள் படுகொலை ஒரு திட்டமிட்ட சதி" என்ற துண்டுப்பிரசுரத்தை எம்மால் மக்களுக்கு விநியோகிக்க முடியாது என்ற நிலைப்பாட்டை கொண்டவர்களாக நாமிருந்தோம்.

ஆனால் சின்னமென்டிஸ், காண்டீபன், போன்றோரின் கருத்துக்கள் எமது கருத்துக்கு முரணாக இருந்தன. இந்தநிலையில் தற்காலிக தளநிர்வாகக் குழுவைக் கூட்டி அந்தக் குழுவிலேயே துண்டுப்பிரசுரம் விநியோகிப்பது குறித்த முடிவை எடுக்கவேண்டியிருந்தது. சின்னமென்டிஸ் காண்டீபன், ஜென்னி, ஜீவன், ஆகியோருடன் நானும் கலந்துகொண்ட தற்காலிக தளநிர்வாகக்குழுக் கூட்டத்தில் பல்வேறுபட்ட முரண்பாடான கருத்துக்களுக்கு மத்தியில் "சுழிபுரம் இளைஞர்கள் படுகொலை ஒரு திட்டமிட்ட சதி" என்ற துண்டுப்பிரசுரத்தை வெளியிடமுடியாது என்ற கருத்தை ஜீவனும் நானும் முன்வைத்தோம்.

ஆனால் சின்னமென்டிஸ், காண்டீபன், ஜென்னி ஆகியோர் செயலதிபர் உமாமகேஸ்வரனால் முடிவெடுத்து வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம் என்பதால் துண்டுப்பிரசுரத்தை நாம் வெளியிடவேண்டும் என்றும், தலைமையின் முடிவுக்கு கட்டுப்படவேண்டும் என்றும் கருத்துக் கொண்டோராய் காணப்பட்டனர். "சுழிபுரம் இளைஞர்கள் படுகொலை ஒரு திட்டமிட்ட சதி" என்ற துண்டுப்பிரசுரம் தலைமையினால்தான் முடிவெடுத்து வெளியிடப்பட்டதென்பதிலும், தலைமையின் முடிவுகளுக்கு நாம் கட்டுப்படவேண்டும் என்பதிலும் நாமும் உடன்பாடானவர்களாய் இருந்தோம்.

ஆனால் எம்முன்னே இருந்த கேள்வி என்னவெனில் தலைமையின் எத்தகைய முடிவுகளுக்கு கட்டுப்படவேண்டும் என்பதுதான். அம்பாறை சென்றல் காம்ப் பொலிஸ் நிலையத் தாக்குதல் தமிழ்மக்கள் பாதுகாப்புப் பேரவையால் மேற்கொள்ளப்பட்டிருந்தும் புளொட்தான் அத்தாக்குதலை மேற்கொண்டதென்று கண்ணாடிச் சந்திரன் தவறாக உரிமை கோரியிருந்தார். ஆனால் அது எம்மால் தவறாக உரிமைகோரப்பட்டதென்று நாம் இறுதிவரை ஒத்துக்கொள்ளாதது மட்டுமல்லாமல் அதற்கும் மேலே சென்று இந்தியாவிலிருந்து வெளிவந்த "புதியபாதை" பத்திரிகையில் நாமே அத்தாக்குதலை மேற்கொண்டோம் என உரிமை கோரியிருந்தோம். தவறான ஒரு செயல் தவறென்று ஒப்புக்கொள்ளப்படாததோடு அந்தத் தவறிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவும் நாம் தயாராய் இருக்கவில்லை. செயலதிபர் உமாமகேஸ்வரன் தளத்தில் நின்றபோது, அவருடன் கூடவே படைத்துறைச் செயலர் கண்ணனும் தளத்தில் நின்றிருந்தார். உமாமகேஸ்வரனுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தவர்கள்தான் சுழிபுரம் ஆறு இளைஞர்களை படுகொலை செய்தனர் என்பது உறுதியாக அனைவருக்கும் தெரியவந்து கொண்டிருந்தபோது, அக்கொலைகளை நாம் மேற்கொள்ளவில்லை என உண்மைக்குப் புறம்பாக, அந்தக் கொலைகளுக்கான பழியை தமிழீழ விடுதலைப் புலிகள் மேல் போடுவதும்தான் தவறான செயலாகும்.

இத்தகைய செயல் தலைமையில் உள்ளவர்கள் உண்மையைத் தேடுவதில் நாட்டம் கொண்டவர்களாக இல்லை என்பதைக்காட்டியதோடு, இத்தகைய கொடூரத்தனங்களுக்கும் கொலைகளுக்கும் பின்னால் தலைமையில் உள்ளவர்களின் கரங்கள் செயற்படுவதையே எமக்குக் காட்டி நின்றது.

"சுழிபுரம் இளைஞர்கள் படுகொலை ஒரு திட்டமிட்ட சதி" என்ற துண்டுப்பிரசுரத்தை மக்களுக்கு விநியோகிக்க முடியாது என்ற கருத்தை ஜீவனும் நானும் கொண்டிருந்தபோதும் தற்காலிக தள நிர்வாகக் குழுவில் அங்கம் வகித்தவர்களான சின்னமென்டிஸ், காண்டீபன், ஜென்னி ஆகியோரது பெரும்பான்மை முடிவுக்கமைய அத்துண்டுப்பிரசுரத்தை மக்களுக்கு விநியோகிப்பது என தற்காலிக தள நிர்வாகக் குழுவில் முடிவானது.

தற்காலிக தள நிர்வாகக் குழு கூட்டம் முடிவடைந்த பின் இராணுவப் பொறுப்பாளர் காண்டீபனுடன் ஜீவனும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். சுழிபுரம் இளைஞர்கள் படுகொலை குறித்து கூடுதலாக பேசி விவாதிக்க வேண்டாமென காண்டீபன் எம்மை நட்புறவுடன் வேண்டிக்கொண்டார். சுழிபுரம் இளைஞர்கள் படுகொலை குறித்து பேசுவதால் நாம் தேவையற்ற பிரச்சனைகளை முகம் கொடுக்க நேரலாம் என்பதே அதன் கருப்பொருளாக அமைந்திருந்தது.

மேற்கு ஐரோப்பிய நாடொன்றில் புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த காண்டீபன், 1983 இனக்கலவரங்களை அடுத்து இந்தியா சென்று புளொட்டுடன் இணைந்து கொண்ட ஒருவர். இராணுவப் பொறுப்பாளர்களுக்குள்ளேயே ஒளிவுமறைவின்றி பேசுபவராகவும் நட்புறவுடன் பழகுபவராகவும் காண்டீபன் காணப்பட்டார்.

இந்தியாவிலிருந்து துண்டுப்பிரசுரம் வந்தது குறித்து யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர்களுக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் குழுக்கூட்டம் கூட்டப்பட்டு துண்டுப்பிரசுரம் விநியோகிப்பது குறித்து பேசப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர்களில் பெரும்பாலானவர்கள் துண்டுப்பிரசுரத்தின் சாரத்தை அறிந்து கொண்டவுடன் உணர்ச்சிவசப்பட்டவர்களாக அடக்கிக்கொள்ள முடியாத கோபத்துடன் எம்மீது விமர்சனங்களை அடுக்கிச் சென்றனர். சுழிபுரம் இளைஞர்கள் படுகொலை எம்மத்தியில் எரிந்துகொண்டிருக்கும் பிரச்சனையாக இருக்கும்போது அதன்மேல் எண்ணெயை ஊற்றுவதுபோல் இந்தத் துண்டுப்பிரசுரம் அமைந்துள்ளது என்றனர்; கொலையாளிகள் எமது ஆட்களாக இருக்கும்போது தமிழீழ விடுதலைப் புலிகளை ஏன் அபாண்டமாக பழி சுமத்தவேண்டும் என்றனர்; சுழிபுரம் இளைஞர்கள் படுகொலையில் கொலையாளிகள் எமது இராணுவப் பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் என வெளிப்படையாகக் கூறினர்; சுழிபுரம் இளைஞர்கள் படுகொலையின் கொலையாளிகளையும் தலைமையையும் பாதுகாக்க நாம் முயற்சிப்பதாகவும், தலைமையின் கையாட்களாக செயற்படுவதாகவும் எம்மீது குற்றம் சுமத்தினர்; தலைமையின் முடிவாக இருந்தாலும் கூட தாம் துண்டுப்பிரசுரத்தை விநியோகிக்க முடியாது என்றனர்; பெரும்பாலான மாவட்ட அமைப்பாளர்கள் துண்டுப்பிரசுரத்தை எடுத்துச் செல்லமுடியாது என மறுத்தனர்.

இறுதியாக, யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் குழுவில் "சுழிபுரம் இளைஞர்கள் படுகொலை ஒரு திட்டமிட்ட சதி" என்ற துண்டுப்பிரசுரத்தை மக்கள் மத்தியில் விநியோகிக்க முடியாது என பெரும்பான்மையாக முடிவாகியது.

மாவட்ட அமைப்பாளர்கள் பேசியதில் உண்மையும், அவர்களது கோபத்தில் நியாயமும் இருந்தன. அவர்கள் துண்டுப்பிரசுரத்தை மக்கள் மத்தியில் விநியோகிக்க மறுத்ததிலும் நியாயத்தன்மை பொதிந்திருந்தது. ஏனெனில் அவர்கள் மக்களுடன் நேரடித்தொடர்பைக் கொண்டிருந்தவர்கள் என்பதுடன் உண்மையின் பக்கமும் கூட நின்றிருந்தனர். துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட வேண்டும் என தற்காலிக தளநிர்வாகக் குழுவால் பெரும்பான்மையாக எடுத்த முடிவு யாழ்ப்பாண மாவட்ட அமைப்புக் குழுவினரின் கடுமையான விமர்சனங்களுக்கும் எதிர்ப்புக்கும் மத்தியில் நடைமுறையில் சாத்தியமற்றதாக மாறியிருந்தது. ஆனாலும் தெல்லிப்பளைப் பகுதியில் சில துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தன.

(தொடரும்)

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5

6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6

7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7

8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8

9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9

10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10

11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11

12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12

13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13

14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14

15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15

16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16

17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17

18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18

19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19

20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20

21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21

22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22

Last Updated on Saturday, 05 November 2011 10:28