Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22

  • PDF

முடிவில்லாத முரண்பாடுகளுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில் மத்தியகுழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள இந்தியா சென்ற டொமினிக்

புளொட்டின் தள நிர்வாகப் பொறுப்பாளர் டொமினிக்- புதியதோர் உலகம் ஆசிரியர் கேசவன்

தமிழீழ விடுதலை இராணுவ இயக்கத்தை அழித்ததுடன் அதன் முன்னணி உறுப்பினர்களான கூச்(மாரிமுத்து சிற்சபேசன் - அராலி), சேகர் (சுத்தானந்தா - குப்பிளான்) உட்பட தமிழீழ விடுதலை இராணுவத்தினரை கோரத்தனமாகப் படுகொலை செய்தமை தவறான செயலென எமது அமைப்புக்குள் எதிர்ப்புக்குரல்கள், விமர்சனங்கள் எழுந்தன. இத்தகைய செயல் எமது அமைப்பினுடைய கொள்கைக்கு முரணானது மட்டுமல்லாது ஈழவிடுதலைப் போராட்ட நலன்களுக்கும் எதிரானது என்பதும், இத்தகையதொரு செயலை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்பதும்தான் எமது நிலைப்பாடாக இருந்தது. ஆனால் இந்த விடயம் குறித்து யாருடன் பேசுவதென்பது இப்பொழுது பெரும் கேள்விக்குரியதொன்றாக மாறியிருந்தது.

 

 

 

புளொட்டின் தள நிர்வாகப் பொறுப்பாளர் என்றுதான் டொமினிக் அனைவராலும் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால் தளநிர்வாகப் பொறுப்பாளரான டொமினிக்குடன் எந்தவித கருத்துப் பரிமாற்றமுமின்றியே, டொமினிக்குக்குத் தெரிவிக்காமலேயே, டொமினிக்கின் முடிவெதுமின்றியே அனைத்து நடவடிக்கையும் உமாமகேஸ்வரனின் நேரடி உத்தரவு எனக்கூறி இராணுவப் பொறுப்பாளர்கள் செயற்படுத்திக் கொண்டிருந்தனர். டொமினிக்கை ஒரு தளநிர்வாகப் பொறுப்பாளராகவோ அல்லது மத்தியகுழு உறுப்பினராகவோ மதிக்கத் தவறியதுடன் புளொட் அமைப்பின் ஒரு உறுப்பினராகவோ தள இராணுவப் பொறுப்பாளர்கள் மதிக்கத் தவறியிருந்தனர். இதுதான் தளநிர்வாகப் பொறுப்பாளர் என்று சொல்லப்பட்ட டொமினிக்கின் உண்மையான நிலையாக இருந்தது. இந்தநிலை டொமினிக்குக்கு மட்டுமானதாக இருக்கவில்லை. மக்கள் அமைப்பில் - அரசியல் பிரிவில் - செயற்படும் எவரையுமே இராணுவப் பொறுப்பாளர்கள் மதிக்கின்ற ஒருநிலை இருக்கவில்லை. இந்தியாவால் வழங்கப்பட்ட இராணுவப் பயிற்சியையும், இந்தியாவால் வழங்கப்பட்ட ஆயுதங்களையும்தான் எமது இராணுவப் பிரிவினர் நம்பியிருந்தார்களேயொழிய மக்கள் சக்தியிலோ அல்லது மக்கள் அமைப்புக்களிலோ நம்பிக்கை கொண்டோராய் இருக்கவில்லை. எமது இராணுவப் பிரிவினர் ஏற்கனவே மக்களது கோபத்துக்கும் வெறுப்புக்கும் உள்ளாகியிருந்ததோடு, மக்களிலிருந்து அந்நியப்பட்டவர்களாக, மக்களுக்கு மேலானவர்களாகக் காட்டிக் கொண்டதுடன், இப்பொழுது மக்கள் அமைப்பின் - அரசியல் பிரிவின் - கோபத்துக்கும் வெறுப்புக்கும் கூட உள்ளானவர்களாக மாறியிருந்தனர்.

அமைப்புக்குள் எமது இராணுவப் பிரிவினருக்கும் மக்கள் அமைப்பினருக்கும் (அரசியல் பிரிவினருக்கும்) இடையான முரண்பாடுகள் கூர்மையடைந்து மோசமான நிலைக்கு சென்றிருந்தது. அமைப்புக்குள்ளிருந்தும் அமைப்புக்கு வெளியேயிருந்தும் நாம் முகம் கொடுக்கமுடியாத அளவுக்கும், பதில் சொல்லமுடியாத அளவுக்கும்கூட கடுமையான விமர்சனங்களையும் கேள்விகளையும் எதிர்கொண்டவண்ணமிருந்தோம். இந்தியாவிலிருந்து வந்து புதிதாக மகளிர் அமைப்பைப் பொறுப்பேற்ற ஜென்னி, செல்வியுடன் (செல்வநிதி தியாகராஜா) இணைந்து மகளிர் அமைப்பைப் பலம் பொருந்தியதாக மாற்றும் செயற்பாட்டில் இறங்கியிருந்தார். வடக்கு கிழக்கு பகுதியிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் அமைப்பை விஸ்தரிக்கும் செயற்பாட்டிலும், கிராம மட்டத்தில் பாலர் பாடசாலைகளை அமைத்தல், நெசவுத் தொழில் பயிற்சி, கைத்தொழில் பயிற்சியளித்தல் உட்பட பல செயற்திட்டங்களை மகளிர் அமைப்பினர் மேற்கொண்டிருந்தனர். மகளிர் அமைப்பினரதும் மக்கள் அமைப்பினரதும் உறுப்பினர்களின் ஆதரவுடன் "அன்னையர் முன்னணி" என்ற அமைப்பினரால் அரசபடையினரால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும் மற்றும் பல்வேறு கோசங்களை முன்வைத்தும் யாழ்ப்பாணத்தில் வெகுஜனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மாணவரமைப்பைச் சேர்ந்தவர்களும், தொழிற்சங்க அமைப்பைச் சேர்ந்தவர்களும் தமது தொடர்ச்சியான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருந்தனர்.

EPRLF இன் மாணவர் அமைப்பான ஈழ மாணவர் பொது மன்றம்(GUES) டேவிட்சன், சேகர் (பாஸ்கரன்), திலக், சுகு, செழியன் போன்றவர்கள் உட்பட பலரின் நீண்டகால கடுமையான உழைப்பில் கட்டியமைக்கப்பட்டிருந்தது. ஆனால் எமது மாணவர் அமைப்பானது மிகக் குறுகிய காலத்துக்குள்ளாகவே மிகவும் பலமானதொரு மாணவர் அமைப்பாக மாறியிருந்தது. இதற்காக மாணவர் அமைப்பு பொறுப்பாளர் அசோக்(யோகன் கண்ணமுத்து) தலைமையில் விமலேஸ்வரன், சுகந்தன்(சிறீ), அர்ச்சுனா, ஹப்பி, தீபநேசன், போல், ஷியா, ஆதவன், குரு, கவிராஜ்,  கலா, தமிழ் ஆகியோர் உட்பட பலர் கடுமையாக உழைத்திருந்தனர்.

(விமலேஸ்வரன் -யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தில் பின்நாட்களில் பங்கெடுத்ததால் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்)

ஜீவன், றொபேர்ட், சுரேன், இடிஅமீன் (ஞானம்) போன்றோர் தொழிற்சங்க அமைப்பை மேலும் வலுவுள்ளதாக மாற்ற தீவிரமாக உழைத்துக் கொண்டிருந்தனர். சுரேன், இடிஅமீன் (ஞானம்) போன்றோர் யாழ்ப்பாணத்தில் மூட்டை சுமக்கும் தொழிலாளர், நகரசுத்தித் தொழிலாளர்களுடனான உறவைப் பலப்படுத்தி அவர்களை ஓர் அமைப்பாக்குவதிலும் அவர்களிடத்திலிருந்தே தலைமையை உருவாக்குவதில் வெற்றிகண்டிருந்ததோடு, அவர்களுக்கான அமைப்பின் யாப்புவிதிகளையும் உருவாக்கி அந்த யாப்புவிதிகளுக்கமைய செயற்படுமாறும் வழிநடத்திக் கொண்டிருந்தனர். தொழிலாளர் அனைவரும் ஜக்கியப்படுத்தப்பட்டு அமைப்பாக்கப்பட்டதன் விளைவாக தொழிலாளர்கள் ஒரே குரலில் பேசவும், ஒரு தலைமையில் வழிநடத்தப்படவும் வாய்ப்பளித்தது. இத்தகைய தொழிலாளர்களின் ஒற்றுமையால் யாழ்நகரில் மூட்டை சுமக்கும் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுபட்ட கூலியுயர்வுப் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். முதற்தடவையாக மூட்டை சுமக்கும் தொழிலாளர் சங்கம் ஒன்றுபட்ட ஒரே தலைமையின் கீழ் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூலியுயர்வுப் போராட்டமாக இது அமைந்திருந்தது.

ஜீவன், றொபோட் போன்றோர் கடற்தொழிலாளர்களை அணிதிரட்டுவதில் தமது கூடுதலான கவனத்தைச் செலுத்திவந்ததோடு, கடற்தொழிலாளர்களை அணிதிரட்டி உயர்பாதுகாப்புவலயச் சட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்த கடற்தொழிலாளருக்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றனர். இதன் ஆரம்ப கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தனித்தனியாக இயங்கி வந்த வெவ்வேறு பிரதேச கடற்தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து இலங்கை அரசால் அமுல்படுத்தப்பட்டிருந்த உயர் பாதுகாப்பு வலயச் சட்டத்துக்கு எதிராக யாழ்ப்பாணம் பெரியகோவில் முன்றலில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது.

இதே காலப்பகுதியில் தேசிய இனப் பிரச்சனையில் முஸ்லீம் மக்கள் பற்றிய ஆய்வுகளை முதன்முதலாக மேற்கொண்டு அதைத் தொகுப்பாக அச்சிட்டு வெளியிட்ட வ.ஜ.ச.ஜெயபாலன், கடற்தொழிலாளர் பற்றியும் பயன்மிக்க ஆய்வுகளை மேற்கொண்டு ஆவணப்படுத்திக் கொண்டிருந்தார். வ.ஜ.ச.ஜெயபாலனுடன் மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் அசோக்குக்கு(யோகன் கண்ணமுத்து) ஏற்பட்ட தொடர்பின் காரணமாக ஜீவனும் அசோக்கும் வ.ஜ.ச.ஜெயபாலனை சந்தித்துப் பேசியிருந்தனர்.

ஜீவனாலும் அசோக்காலும் வ.ஜ.ச.ஜெயபாலனுடன் மேற்கொள்ளப்பட்ட கருத்துப் பரிமாற்றங்களை அடுத்து கடற்தொழிலாளர் பற்றியதும் கடல்வளம் பற்றியதுமான வ.ஜ.ச.ஜெயபாலனின் பயன்மிக்க ஆய்வுகளை வெளிக்கொணரும் பொருட்டு, அவரின் விருப்பின் பேரில் "முடிவெடுக்கும் அதிகாரமுள்ளவர்களைச்" சந்தித்துப் பேசவென இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

மக்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டச்சூழலில் ஏற்பட்ட சிவில் நிர்வாகச் சீர்கேட்டினால் பாதிப்படைந்த வீதிகளைச் செப்பனிடுவதிலும் சிரமதானப் பணிகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அரசபடைகளின் அடக்குமுறைக்கெதிரான வெகுஜனப் போராட்டங்களும், தொழிலாளர் போராட்டங்களும் வெளிப்படையாக நடைபெற்றுக் கொண்டிருந்த அதேநேரம் எமது அமைப்புக்குள்ளேயும் தவறான போக்குகளுக்கும் சரியான போக்குகளுக்கும் இடையிலான ஒரு போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அமைப்புக்கு வெளியே நடைபெற்ற போராட்டமானது இனவாத அரசுக்கெதிரானதாகவும், அரசபடைகளின் அட்டூழியங்களுக்கெதிராகவும் ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காகவும் இருந்த அதேவேளை, அமைப்புக்குள்ளே நடைபெற்றுக்கொண்டிருந்த போராட்டமானது, எமது அமைப்புக்குள் தோன்றி வளரும் அராஜகத்திற்கெதிராகவும் இருந்ததோடு ஒட்டுமொத்த மக்கள் நலனுக்கானதாகவும் இருந்தது.

ஆனால், உண்மைகள் என்றைக்கும் போலவே முரட்டுப்பிடிவாதத்துடன் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. சுழிபுரம் இளைஞர்கள் படுகொலை பற்றிய பல அதிர்ச்சிதரும் புதிய தகவல்கள் சுழிபுரம் பகுதி மக்களிடமிருந்தும், எமது அமைப்பு உறுப்பினர்களிடமிருந்தும், எமது இராணுவப் பிரிவில் செயற்பட்டவர்களிடமிருந்தும் கூட வெளியே வந்துகொண்டிருந்தன. சுழிபுரம் பகுதியில் சுவரொட்டி ஒட்டச்சென்ற தமிழீழ விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் ஆறுபேரையும் எமது இராணுவப் பிரிவினர் கடத்திச்சென்று படுகொலை செய்ததோடு அவர்களது உடல்களை வானில் கொண்டு சென்று புதைத்ததாகவும், அந்த வானில் படிந்திருந்த இரத்தக்கறைகளை கழுவியபோது அதை நேரில் கண்டவர்கள் வெளியிட்ட தகவல்கள் மிகவும் வேகமாகப் பரவத் தொடங்கியிருந்தது. இதனால் சுழிபுரம் இளைஞர்கள் படுகொலை எமது இராணுவப்பிரிவினரால்தான் மேற்கொள்ளப்பட்டது என்பது மறுக்கப்படமுடியாத உண்மையாக மாறிவிட்டிருந்தது.

சுழிபுரம் இளைஞர்கள் படுகொலை தமிழீழ விடுதலைப்புலிகளின் செயலா அல்லது எமது இராணுவப் பிரிவினரது செயலா என்ற கேள்வி எம்மிடமிருந்த நிலைமாறி, எமது இராணுவப்பிரிவினரே இப்படுகொலைகளின் சூத்திரதாரிகளாக வெளிப்பட்டுக்கொண்டிருந்தனர். இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் எமது இராணுவப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தமிழீழ விடுதலை இராணுவத்தினரைச் சேர்ந்த உறுப்பினர்களின் கோரத்தனமான கொலைகளும், தமிழீழ விடுதலை இராணுவம் என்ற இயக்கத்தை முழுமையாக அழித்த நிகழ்வும் அமைந்தன. சுழிபுரம் பகுதி மக்களிடமிருந்து வெளிவந்த இளைஞர்கள் படுகொலை குறித்த தகவல்கள் யாழ்ப்பாண மாவட்டம் உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் பரவத்தொடங்கியிருந்தது. குறிப்பாக தளத்தில் மக்கள் அமைப்பு, மாணவ, மகளிர், தொழிற்சங்க அமைப்பில் செயற்பட்டவர்கள் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு மக்கள் மத்தியிலிருந்து விமர்சனங்களை முகம்கொடுப்பவர்களானார்கள்.

மக்கள் அமைப்பினர் கிராமங்களுக்குச் சென்று கருத்தரங்குகள் நிகழ்த்தும் போது மக்கள் மத்தியிலிருந்து கடுமையான விமர்சனங்களை முகம்கொடுக்கவேண்டியிருந்ததுடன் சுழிபுரம் இளைஞர்கள் படுகொலை பற்றிய உண்மையை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும் என்பதில் பிடிவாதமானவர்களாக இருந்தனர். மாவட்ட அமைப்புக்குழுவில் செயற்பட்டவர்களோ சுழிபுரம் இளைஞர்கள் படுகொலை குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற உறுதியான கருத்துக்களை தெரிவிக்கத் தொடங்கினர். இந்தக் கொலைகள் குறித்து அமைப்புத் தலைமை நடவடிக்கை எடுக்காவிட்டால், தம்மால் மக்கள் மத்தியில் சென்று அமைப்புவேலைகளில் ஈடுபடமுடியாது என வாதிட்டனர்.

தளநிர்வாகப் பொறுப்பாளர் டொமினிக் எந்தவித அதிகாரமுமற்ற கையறுநிலையில் இருந்தபோதும் கூட டொமினிக்கிடம்தான் நாம் முகம்கொடுக்கும் பிரச்சனைகளை முன்வைக்க முடிந்தது. தளத்தில் எமது அமைப்பு சுமக்கமுடியாதளவு பிரச்சனைகளையும் விமர்சனங்களையும் முகம்கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், எந்தப்பிரச்சனைகளுக்குமே முடிவின்றி குழப்பகரமான சூழல் தொடர்ந்துகொண்டிருக்கையில், தளத்தில் தங்கியிருந்த படைத்துறைச் செயலர் கண்ணன் தளவருகையின் பின் அமைப்பாளர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சனைகள் அனைத்தையும் மத்தியகுழுக்கூட்டம் கூட்டப்படும்போது தான் நிட்சயம் பேசுவதாகக் கூறிவிட்டு சென்னை திரும்பினார். ஆனால் படைத்துறைச் செயலர் கண்ணன் தளத்தில் தங்கி நின்ற போது இடம் பெற்ற சுழிபுரம் இளைஞர்கள் படுகொலைகளையோ, தமிழ் ஈழ விடுதலை இராணுவம் இயக்கத்தை அழித்து அதன் முன்னணி உறுப்பினர்களை கோரத்தனமாக கொலை செய்தமையையோ, எமது இராணுவப் பிரிவுக்கும் மக்கள் அமைப்புக்கும் இடையே நிலவி வந்த முரண்பாடுகளையோ கண்ணன் ஒரு பிரச்சனையாகக் கருதியிருக்கவில்லை.

கண்ணன் சென்னைக்கு திரும்பிய பின் அனைத்து பிரச்சனைகளையும் முகம்கொடுப்பவராகவும், அவற்றை கையாள வேண்டியவராகவும் டொமினிக் மட்டுமே இருந்தார். மக்கள் அமைப்பில் முன்னணியில் செயற்பட்டவர்கள் உட்பட கீழணி உறுப்பினர்களும் கூட ஒருவித குழப்பமும் விரக்தியும் அடைந்தவர்களாக காணப்பட்டனர். தளத்தில் செயற்பட்ட எம்மைப் பொறுத்தவரை எமது அமைப்பானது ஒரு புரட்சிகர அமைப்பென்றும், அதில் அனைவரினதும் கருத்துக்கும் மதிப்பளிக்கப்படும் என்றும், விமர்சனம் சுயவிமர்சனம் என்ற ஆயுதத்தைக் கொண்டு நாம் தவறுகளைக் களைந்து முன்னேறுவோம் என்றும், எமது அனைத்து முடிவுகளும் குழு முடிவுகளாக இருக்கும் என்றும் கூறிக் கொண்டிருந்தோம்.

எமது இராணுவம் ஒரு மக்கள் இராணுவம் என்றும், புரட்சிகர இராணுவம் என்றும் கூறியிருந்தோம். இவையனைத்தும் வெறும் சொல்லளவிலும், எழுத்தளவிலும் மட்டுமே இருப்பதை இப்போது காணக் கூடியதாக இருந்தது. எமது இராணுவப் பிரிவினர் மக்கள் அமைப்பினருடன் இணைந்து செயற்படாமலேயே தமக்கென ஒரு வலையமைப்பை ஏற்படுத்தி செயற்படத் தொடங்கியிருந்தனர். ஒவ்வொரு பிரதேசத்துக்கும் நியமிக்கப்பட்டிருந்த இராணுவப் பொறுப்பாளருக்கு ஊடாக தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர். வடக்கு கிழக்கில், அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மக்கள் அமைப்பை நாம் உருவாக்கியிருந்தோம்.

ஆயுதரீதியாக பலம்பெற்றவர்களாக நாம் விளங்கியிருக்கவில்லை என்ற போதிலும் பலமான மக்களமைப்பை உருவாக்கியதன் மூலம் மக்கள்பலம் பெற்றவர்களாக விளங்கினோம். ஆனால் எம்மிடமிருந்த மக்கள்பலத்தை இராணுவப் பிரிவினர் பயன்படுத்த தவறியிருந்தனர். யாழ்ப்பாணத்தில் கண்ணன் தங்கிநின்ற போது மட்டக்களப்பில் இராணுவத் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தீட்டப்பட்டது. இந்த தாக்குதல் திட்டத்துக்கு யாழ்ப்பாணத்திலிருந்தே எமது இராணுவப் பிரிவினர் மட்டக்களப்பு செல்ல வேண்டியிருந்தது. மக்களமைப்பில் ஏற்கனவே அனுபவம் வாய்ந்த படகோட்டிகள் பலர் இருந்தபோதும், இதற்கென மாதகலில் இரண்டு படகோட்டிகளை கூலிக்கமர்த்திய எமது இராணுவப் பிரிவினர் கடல் மார்க்கமாக மட்டக்களப்பு செல்ல முற்பட்டனர். அமுதன், மோகன், ஜோர்ச், லெனின் ஆகியோர் ஆயதங்களுடன் கடல்வழியாக மட்டக்களப்பு புறப்பட்டனர். இதேவேளை இத்தாக்குதலுக்கு தலைமை வகிக்க சென்ற தள இராணுவப் பொறுப்பாளர் ரமணனுடன் மகேந்திரன், ரொனால்ட் போன்றோர் பஸ்ஸில் மட்டக்களப்பு புறப்பட்டனர். பஸ்ஸில் மட்டக்களப்பு சென்ற ரமணன், மகேந்திரன், ரொனால்ட் ஆகியோரை களுவாஞ்சிக்குடியில் கைதுசெய்த அதிரடிப்படையினர் இவர்கள் என்ன நோக்கத்துக்காக மட்டக்களப்பு வந்தனர் என்பதை அறிந்துகொண்டதோடு படகில் ஆயுதங்களுடன் தாக்குதலுக்கென ஒருபகுதியினர் வந்துகொண்டிருக்கின்றனர் என்பதையும் அறிந்து கொண்டனர்.

வாகரைப் பகுதியில் படகில் வந்துகொண்டிருந்த எமது இராணுவப் பிரிவினர் மீது இலங்கை அரசின் உலங்குவானூர்தி தாக்குதல் நடத்தியது. இதில் கூலிக்கமர்த்தப்பட்ட இரு படகோட்டிகளும் அமுதனும் கொல்லப்பட்டனர். மோகன், ஜோர்ச், லெனின் ஆகியோர் படகில் இருந்து தப்பி வாழைச்சேனை காட்டுப்பகுதிக்குள் சென்று வழிதெரியாது தவித்தபோது TELO அமைப்பின் உதவியுடன் கிரான் அழைத்துச் செல்லப்பட்டனர். அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட தள இராணுவப் பொறுப்பாளர் ரமணன், தாக்குதலுக்கு தலைமை தாங்க வந்ததை அறிந்து கொண்ட அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லபட்டார். கோமாரி இராணுவமுகாம் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டதாகவும் அதில் மூவர் இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாகவும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. மட்டக்களப்பு பத்தனுக்கே மட்டுமே தெரிந்திருந்த கோமாரி இராணுவ தாக்குதல் திட்டம் எமது இராணுவப் பிரிவினரின் உயிரிழப்புகளுடனும் கைதுகளுடனும் முடிவுற்றது.

தள இராணுவப் பொறுப்பாளர் ரமணன், அமுதன் ஆகிய இருவரும் 1983 ஜூலையில் இடம்பெற்ற இனப்படுகொலைகளும் இனக்கலவரமும் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் மத்தியில் விடுதலை உணர்வை தூண்டியிருந்தபோது தாம் புலம்பெயர்ந்து வாழ்ந்துவந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து சொந்தமண் வந்து ஈழ விடுதலைப் போராட்டத்துக்காக தமது உயிரை தியாகம் செய்திருந்தனர். இவர்களது உண்மையான விடுதலை உணர்வு, அர்ப்பணிப்பு என்பவை மதிக்கப்படவேண்டியதாகும்.

நாம் பல்வேறு குழப்பங்களும், விரக்தியும், ஒருவித கலக்கமும் நிறைந்த அத்தியாயத்துக்குள் பிரவேசித்துக்கொண்டிருந்தோம். மாவட்ட அமைப்பு குழுவில் செயற்பட்டவர்களும் மக்கள் அமைப்புக்களில் செயற்பட்டவர்களும் முன் எப்போதும் இல்லாதவாறு நேரடியாகவும், அழுத்தமான குரலிலும், உறுதியாகவும் தமது கருத்துக்களை தெரிவிக்கத் தொடங்கியிருந்தனர். இவர்களில் குறிப்பாக சுண்ணாகத்தில் மக்கள் அமைப்பில் செயற்பட்ட கதிர், பரணி, ஐ.பீ மற்றும் தொழிற்சங்க அமைப்பில் செயற்பட்ட சுரேன், இடிஅமீன்(ஞானம்) போன்றோரும் அடங்கியிருந்தனர். எமது அமைப்பு சென்று கொண்டிருக்கும் பாதை தவறானதென வெளிப்படையாக கூறினர். எமது கருத்துக்களுக்கும் நடைமுறைக்கும், சொற்களுக்கும் செயல்களுக்குமிடையே எந்தவித ஒற்றுமையும் கிடையாதென்றனர். சுழிபுரம் இளைஞர்கள் படுகொலை, தமிழ் ஈழ விடுதலை இராணுவம் மீதான கோரத்தனம், எமது இராணுவப் பிரிவினரின் தவறான போக்குகள் குறித்து சரியான முடிவு தரப்பட வேண்டுமென்றனர். யாழ்ப்பாண மாவட்ட அமைப்பு குழுவிலும், மக்கள் அமைப்புக்களிலும் செயற்பட்டுக் கொண்டிருந்தவர்களிடத்தில் ஒருவித சோர்வு நிலவ ஆரம்பித்தது. யாழ்ப்பாண மாவட்ட அமைப்புக் குழுவில் முன்னணியில் செயற்பட்ட ஒருசிலரும் மக்களமைப்பில் செயற்பட்ட சிலரும் தமக்கு சரியான முடிவு தரப்படும் வரை அமைப்பு செயற்பாடுகளில் ஈடுபடப் போவதில்லை என்றனர். யாழ்ப்பாண மாவட்ட அமைப்புக் குழுவில் செயற்பட்ட நாம் டொமினிக் மீது அழுத்தம் கொடுக்க வேண்டியிருந்தது. சுழிபுரம் இளைஞர்கள் படுகொலை விசாரணை செய்யப்பட்டு அதில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், தமிழ் ஈழ விடுதலை இராணுவத்தின் மீதான கோரத்தனம் தவறானதென்றும், எமது இராணுவப் பிரிவினரின் தவறான நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும் என்றும், இராணுவப் பிரிவு மக்களமைப்புடன் இணைந்து செயற்படும் அதேவேளை தளநிர்வாகப் பொறுப்பாளருக்கு கட்டுப்பட வேண்டுமென்றும் எமது பக்கக்கருத்துக்களை முன்வைத்தோம். இது குறித்து கருத்து தெரிவித்த டொமினிக் தன்னால் அனைத்து பிரச்சனைகளையும் புரிந்து கொள்ள முடிகின்றதெனவும், தான் இந்தியா சென்று மத்தியகுழுக்கூட்டத்தில் அனைத்து பிரச்சனைகளையும் முன்வைப்பதாகவும் அதுவரை பொறுமையுடன் அமைப்பு வேலைகளை தொடர்ந்து செய்யும்படியும் கேட்டுக் கொண்டார். கண்ணன் இந்தியா சென்று சில வாரங்களில் உமாமகேஸ்வரனிடமிருந்து டொமினுக்குக்கு மடல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அந்த மடலில் மத்தியகுழு உறுப்பினர்களான குமரன்(பொன்னுத்துரை), டொமினிக், ஈஸ்வரன் ஆகிய மூவரையும் மத்தியகுழுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இந்தியா வரும்படி கேட்கப்பட்டிருந்தது.

தன்னால் தீர்த்து வைக்கப்பட முடியாத பிரச்சனைகளையும், அமைப்பின் உள்முரண்பாடுகளையும் மத்தியகுழுக் கூட்டத்தில் பேசித்தீர்க்க வழிபிறந்துவிட்டது என எண்ணிக் கொண்டாரோ என்னவோ டொமினிக்கினுடைய முகத்தில் என்றுமில்லாத மகிழ்ச்சி - அவர் வெளிக்காட்ட விரும்பாத, ஆனால் அவரையும் அறியாமல் வெளிப்பட்டுக் கொண்டுவந்த மகிழ்ச்சி - வெளிப்பட்டுக் கொண்டது.

யாழ்ப்பாண மாவட்ட அமைப்புகுழுவினராலும் மக்கள் அமைப்பினராலும் முன்வைக்கப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் மத்தியகுழுக் கூட்டத்தில் முன்வைத்து ஒரு நல்ல முடிவுடன் திரும்புவதாகக் கூறினார் டொமினிக். டொமினிக் இந்தியா செல்வதற்குமுன் ஐந்துபேர் கொண்ட ஒரு தற்காலிக தளநிர்வாகக் குழுவை உருவாக்கியதோடு தற்காலிக தளநிர்வாகக் குழுவே அமைப்பு செயற்பாடுகள் குறித்த அனைத்து முடிவுகளையும் எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஐந்துபேர் கொண்ட தற்காலிக தளநிர்வாகக் குழுவில், மகளீர் அமைப்பு பொறுப்பாளர் ஜென்னி, இராணுவப் பொறுப்பாளர்களான சின்ன மென்டிஸ், காண்டீபன், தொழிற்சங்க அமைப்பில் செயற்பட்டுக் கொண்டிருந்த ஜீவன், ஆகியோருடன் நானும் அங்கம் வகித்தேன்.

(தொடரும்)

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5

6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6

7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7

8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8

9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9

10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10

11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11

12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12

13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13

14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14

15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15

16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16

17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17

18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18

19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19

20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20

21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21

Last Updated on Sunday, 30 October 2011 21:30