Tue04232024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் செங்கொடியின் தற்கொலை அரசியலும், சந்தர்ப்பவாத அரசியலும்

செங்கொடியின் தற்கொலை அரசியலும், சந்தர்ப்பவாத அரசியலும்

  • PDF

தற்கொலை அரசியலை கேள்விக்கு உள்ளாக்காத சந்தர்ப்பவாத அரசியல், போராட்டங்களை தற்கொலைக்குள் தள்ளுகின்றது. தற்கொலை மூலம் வீங்கி வெம்பும் உணர்ச்சி அரசியல், அறிவுபூர்வமான அரசியலை புதைகுழிக்குள் அனுப்புகின்றது. அரசியல்ரீதியாக தற்கொலை போராட்டத்தை "உத்வேகப்படுத்துகின்றது" என்றால், எந்த வகையான போராட்டத்தை அது உத்வேகப்படுத்துகின்றது. அறிவுபூர்வமான வர்க்கப் போராட்டத்தையா!? அல்லது உணர்ச்சி சார்ந்த குட்டிபூர்சுவா வர்க்கம் சார்ந்த வால்பிடிக்கும் சந்தர்ப்பவாத அரசியலையா!?

 

 

தூக்குத்தண்டனைக்கு எதிரான போராட்டத்தை, செங்கொடியின் தற்கொலை நடத்தியதா!? இடைக்காலத் தீர்ப்பு "மக்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி" என்றால், இதை உத்வேகப்படுத்திய செங்கொடியின் தற்கொலைக்கு கிடைத்த வெற்றியல்லவா!? செங்கொடியின் தற்கொலை, போராட்டத்துக்கு உத்வேகத்தைக் கொடுத்தது, வழிநடத்தியது என்றால், இந்த வடிவம் போராட்டத்தை நடத்துவதற்கான அரசியல் தெரிவாக வழிமொழியப்படுகின்றது. நாங்கள் இந்தத் தற்கொலை வடிவத்தை ஏற்பதில்லை என்று கூறிக்கொண்டு, அது உருவாக்கும் உணர்ச்சி அரசியலையும் அது சார்ந்த போராட்டங்களையும் போற்றியபடி, தங்கள் அரசியல் சந்தர்ப்பவாதத்துக்கு ஏற்ப வால்பிடிக்கின்றனர்.

இங்கு தற்கொலை, போராட்டத்தை உத்வேகப்படுத்துகின்றது என்றால், இங்கு உணர்ச்சி வசப்பட்ட அரசியல் தெரிவாகின்றது. இதன் மூலம் அறிவுபூர்வமான அரசியல் நிராகரிக்கப்படுகின்றது. இந்த நிலையில் உணர்ச்சி அரசியலுக்கு பின் வால் பிடிப்பதை நிராகரித்து, அறிவுபூர்வமான போராட்டத்தை வழிநடத்துவதன் அடிப்படையில் தான், இந்த போராட்டத்தில் தலையிட வேண்டும். ஆனால் நடப்பது உணர்ச்சி அரசியலுக்கு வால்பிடித்து அதில் சங்கமிப்பதுதான்.

வரலாற்றைத் திரும்பிப்பார்த்தால் முத்துக்குமரன் தற்கொலை, யாருக்கு, எந்த அரசியலுக்கு பயன்பட்டது? இதை யார் அரசியல் ரீதியாக திரும்பிப் பார்த்திருக்கின்றார்கள்? இதை யார் அரசியல் ரீதியாக விளக்கி இருக்கின்றார்கள்? ஆக தற்கொலை தொடருகின்றது, வால்பிடித்தாலும் தொடருகின்றது.

இங்கு அறிவுபூர்வமாக போராடாத, குட்டிபூர்சுவா வர்க்க இயலாமையில் நின்று தன் சொந்த தற்கொலைப் போராட்டத்தை நடத்தும் என்றளவில் செய்யும் தனிப்பட்ட தியாகம் என்பதைத் தாண்டி, இந்த மரணம் உருவாக்கும் உணர்ச்சி அரசியல் மக்கள் போராட்டத்துக்கு எதிரானது. இதுதான் போராட்டத்தின் பின்னான பொது விளைவுமாகும். இது உருவாக்கும் உணர்ச்சி அரசியல், அறிவியல் பூர்வமாக வழிகாட்ட கூட்டிய அரசியலுக்கு பதில், உணர்ச்சிக்கு வால்பிடிக்கும் அரசியலை வழிகாட்டுகின்றது. அறிவை இழந்த இந்த உணர்ச்சி அரசியலால் மெய்சிலிர்த்துப் போராடுபவர்களில் ஒருவர், நாளை போராட்டத்தை உணர்ச்சியூட்ட தற்கொலை செய்கின்றனர். இதுதான் தொடர்ந்து வழிகாட்டப்படுகின்றது. இதன்பின்தான் சந்தர்ப்பவாத அரசியல் வால்பிடிக்கின்றது.

இதே அரசியல் உத்தியைத்தான் முள்ளிவாய்க்காலில் புலிகள் செய்தனர். மக்களை பலிகொடுத்து, அந்த பிணத்தைக் காட்டி உணர்ச்சியூட்டிய போராட்டத்தை நடத்தினர். இதே அரசியல் உள்ளடகத்தைத்தான், இந்த தற்கொலை அரசியல் பிரதிபலிக்கின்றது. புலிகள் பல காலமாக இதையே வெவ்வேறு வடிவில், அடிக்கடி செய்து வந்தனர்.

மக்கள் தமக்காக தாம் போராடமாட்டார்கள் என்ற தனிமனிதத் தெரிவுதான், தனிமனித பயங்கரவாதம் முதல் தனிமனித தற்கொலை என அனைத்தும் தெரிவாகின்றது. இங்கு சூழல் தான், இந்தத் தெரிவை வேறுபடுத்துகின்றது. தங்கள் இந்தத் தெரிவு போராட்டத்தை நடத்தும் என்று நம்புகின்றனர். அவர்களின் நோக்கம் உயர்வானதாக இருக்கலாம், ஆனால் இதன் பின் மக்களை தாழ்வானதாக கருதுகின்ற அரசியல் தான் இதைத் தெரிவாக்குகின்றது. மக்கள் தமக்காக தாம் போராட மாட்டார்கள் என்று கருதும் பூர்சுவா மனப்பாங்கு சார்ந்த கதாநாயகர்களின் தியாகம் அல்லது பயங்கரவாதம் மூலம் மக்களை உணர்ச்சி ஊட்டி போராட்டத்தை நடத்த முடியும் என்று நம்புகின்றனர். மக்களை அரசியல் ரீதியாக விழிப்புற வைத்து, அணிதிரட்டும் போராட்டத்தை செய்யாது, தற்கொலை மூலம் மக்களைப் போராட வைக்க முடியும் என்று கருதுகின்ற குட்டிபூர்சுவாத்தனத்தை தியாகம் என்றும், போராட்டத்தை உத்வேகப்படுத்தும் அரசியல் செயலாக அரசியல்ரீதியாக மதிப்பிடுவது, இந்த அரசியலுக்கு பின் வால்பிடித்தல் தான். இதன்பின் வெளிப்படுவது சந்தர்ப்பவாத அரசியல்தான்.

அரசியல் போராட்டத்தில் இது, இதுபோன்ற தற்கொலைகள், அறிவுபூர்வமான போராட்டத்தை திசை திருப்புகின்றது. அதை மழுங்கடிக்கின்றது. சந்தர்ப்பவாத அரசியலாக அது மேலும் சீரழிக்கின்றது. வால்பிடிக்கக் கோருகின்றது. உதாரணமாக தூக்குதண்டனை பின்போட்டதை அடுத்து நீதிமன்றத்துக்கு வெளியில் நின்ற தமிழினவாதக் கூட்டம் தம் வெற்றியாக அதை கொண்டாடிய போது, கூட்டத்துடன் கூட்டமாக சேர்ந்து அதே கோசத்தை போட வைக்கின்றது.

அரசியல்ரீதியான அறிவூட்டல் ஊடாக முன்னேற்ற வேண்டிய போராட்டங்கள், உணர்ச்சிவசப்பட்ட போராட்டமாக மாறி சீரழிகின்றது. இங்கு தற்கொலை செய்து கொண்டவர்கள் இதை தெரிந்து கொண்டு செய்வதில்லை. இதன் பின் பிழைப்புவாத அரசியல் நடத்திக் கொள்கின்றவர்கள், இதை நன்கு தெரிந்துவைத்துக் கொண்டு இதை போற்றுகின்றனர். இதை "தியாகம்", "வீர மரணம்" என்று தங்கள் உணர்ச்சி அரசியலால் ஊக்குவிக்கின்றனர். இந்தப் பின்னணியில் நாமும் வால்பிடித்துக் கொண்டு, போராட்டத்தை இது உத்வேகப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு அரசியல் ரீதியாக ஊக்குவிக்கின்றோம்.

இதில் இருந்து வேறுபடுத்தாத பொது அரசியல் அணுகுமுறை, தற்கொலை அரசியலை தொடர்ந்து ஊக்குவிக்கும். சூழல் சார்ந்தும், சந்தர்ப்பவாத அரசியலும் இந்தப் போக்கை தொடர்ந்து வளர்த்தெடுக்கும். தற்கொலை செய்தவர்கள் விரும்பியது போல், நடக்கும் உணர்ச்சி சார்ந்த உத்வேகத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் மதிப்பீடும், அது சார்ந்த அரசியல் அணகுமுறையும் இந்த தற்கொலை அரசியலுக்கு தொடர்ந்து உத்வேகத்துடன் உதவும்.

செங்கொடி, முத்துக்குமரன் தற்கொலைதான் போராட்டத்துக்கு உத்வேகத்தைக் கொடுக்கின்றது என்றால், அதைத்தான் நாம் அனைவரும் தெரிவு செய்தாக வேண்டும். இதையா அரசியல் தெரிவாக நாம் கொண்டு உள்ளோம்? இல்லை. இல்லையென்றால் அதை மறுத்து, இந்த தவறை எப்படி நாம் அவர்களுக்கு அரசியல்ரீதியாக புரியும்படி விமர்சனம் செய்து விளக்கியிருக்கிறோம்?

இங்கு செங்கொடி, முத்துக்குமரன் உணர்ச்சி அரசியல், தனிப்பட்ட அவர்களின் சொந்தத் தெரிவல்ல. மாறாக

1. பிழைப்புவாத உணர்ச்சி அரசியலுக்கு பலியாகிப் போகும் வண்ணம், அரசியல் ரீதியாக உணர்ச்சிகரமான பிழைப்புவாதம் தொடர்ந்து அதை வழிகாட்டுகின்றது. அதை நாம் எம் சந்தர்ப்பவாதம் மூலம் வால் பிடிக்கின்றோம்.

2. இவர்களுக்கு தலைமை தாங்கக்கூடிய வகையில், புரட்சிகரமான மக்கள் போராட்டங்களையும், வழிகாட்டல்களையும் நாம் செய்வதில்லை.

இந்த நிலையில் தங்கள் கோபத்தையும், இயலாமையையும் தங்கள் அறியாமை மீது வெளிப்படும் போது, தற்கொலை போராட்டத்தை உத்வேகமூட்டும் என்று நம்பி அந்த அரசியல் பின் பலியாகின்றனர். இந்த உணர்ச்சி ஊட்டி அரசியல் செய்யும் உணர்வு, பிழைப்புவாதிகளுக்கே உதவுகின்றது. இதை அவர்கள் உணராத வரை, அதை உணர வைக்காத வரை, அவர்களின் அறியாமை எமது அறியாமையைச் சார்ந்த சந்தர்ப்பவாத அரசியல் மீது தியாகமாகி விடுகின்றது. பிழைப்புவாத உணர்ச்சியும், தனிமனித உணர்ச்சியும் இங்கு ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து வெளிப்படும் போது உணர்ச்சி அரசியலின், மொத்த விளைவு இது.

1970 களில் இலங்கையில் தமிழர் விடுதலைக் கூட்டணி முன்தள்ளிய உணர்ச்சி அரசியல், இளைஞர்களை இரத்தத் திலகமிடுவதில் தொடக்கி வைத்தது. இதன் வளர்ச்சி தனிநபர் உணர்ச்சி சார்ந்த தனிமனித பயங்கரவாத ஆயுத வன்முறையாக பின்னால் வளர்ச்சியுற்று, இது தமிழ் மக்களை தோற்கடித்தது மட்டுமின்றி, தன் சொந்தப் புதைகுழியை வெட்டி தன்னை அழித்துக்கொண்டது. இதன்பின் உணர்ச்சி அரசியல், அறிவுபூர்வமான அரசியலை இல்லாதாக்கியது.

தமிழ்நாட்டில் தற்கொலை, போராட்ட உத்வேக அரசியலாக, போராட்டத்தை ஒருங்கிணைக்க இதுதான் உதவுகின்றது என்றால், இதன் பின் உருவாகும் உணர்ச்சிகரமான அரசியல் அறிவுபூர்வமானதல்ல.

செங்கொடி, முத்துக்குமரன் கொண்டிருக்கக் கூடிய அரசியலின் பின்னணியில், அவர்களின் தார்மீகரீதியான கோபங்கள் சார்ந்த தற்கொலை கூட, உணர்ச்சிகரமானதே ஒழிய அறிவுபூர்வமானதல்ல. இதன் பின்னணியில் அறிவுபூர்வமற்ற உணர்ச்சிபூர்வமான எழுச்சியில் நாம் எம்மைத் தனித்து விலகியிருக்க முடியாது. விலகாது இருப்பது, அதை அறிவுபூர்வமாக மாற்றுவதற்காகத்தான். வால்பிடிப்பதற்கோ, சந்தர்ப்பவாத அரசியலை தொடர்ந்து முன்னெடுப்பதற்காகவோ அல்ல.

இங்கு உணர்ச்சிக்கும் அறிவுக்கும் இருக்கக் கூடிய வேறுபட்ட நோக்கங்களும், அது சார்ந்த போராட்ட வடிவங்களும், அதையொட்டிய தெரிவுகளும், இரண்டு வழிப்பட்டவை என்பதை புரிந்துகொண்டு அணுகவேண்டும். உணர்ச்சி அரசியல் வடியும் போது, போராட்ட உணர்வும் வடிந்து விடுகின்றது. இதன் விளைவால் திடீர் உணர்ச்சி வசப்பட்ட நிலையில், தற்கொலையை தொடர்ந்து போராட்ட வடிவமாக தெரிவு செய்கின்றனர். பிழைப்புவாத உணர்ச்சி அரசியல் இதைத் தொடர்ந்தும் வளர்த்தெடுக்கின்றது. உண்மையான தியாக உணர்வும் அர்ப்பணிப்பும் கொண்டவர்கள், முதலில் இதற்கு பலியாகின்றனர்.

இப்படி பலியாகின்றவர்களின் அர்ப்பணிப்பையும், தியாக மனப்பான்மையையும் மதிக்கின்ற அதேவேளை, இந்த உணர்ச்சி அரசியல் நிராகரிக்கப்பட வேண்டும். இதை விடுத்து இது உருவாக்கும் உணர்ச்சி அரசியலை மக்கள் போராட்டமாக காட்டுவது சந்தர்ப்பவாத அரசியலாகும். பிணம் நாறும் வரை உணர்ச்சிவசப்பட்டு நடத்தப்படும் இந்தப் பிண அரசியல், சமூகத்தை தொடர்ந்து வழிநடத்த வக்கற்றது. இது போராட்டத்துக்கு உத்வேகத்தைக் கொடுக்கவில்லை, போராட்டத்தை திடீரென வீங்கவைத்து, வடிய வைத்து சீரழிக்கின்றது. இது அறிவூட்டுவதையும், அனுபவம் ஊடாக கற்பதையும் தடுத்து நிறத்துகின்றது. திடீர் புரட்சி, திடீர் எழுச்சி என்ற உணர்ச்சியூட்டும் போதைப்பொருளாகவே, இந்தத் தற்கொலை அரசியல் குட்டிபூர்சுவா வர்க்கத்தின் தெரிவாகின்றது. இதன் பின் வால்பிடித்துச் செல்வதே, சந்தர்ப்பவாத அரசியலின் தெரிவாகின்றது. இந்த இரண்டும் அக்கம்பக்கமாக இணைந்து செல்வதும், இதை மக்கள் போராட்டமாக காட்டுவதன் மூலமும், போராட்டங்கள் முன்னேற முடியாத முட்டுச்சந்தியில் முடங்கிப்போகின்றது.

 

பி.இரயாகரன்

02.09.2011

 

 

 

 

Last Updated on Friday, 02 September 2011 09:33