Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15

  • PDF

புதிய ஆயுதங்களுடன் படைத்துறைச் செயலர் சென்னையிலிருந்து திடீர் வருகை !

உமாமகேஸ்வரன் மடலில் கேட்டுக்கொண்டதற்கிணங்க டொமினிக் (கேசவன்) தளத்துக்கான அரசியல் பொறுப்பாளராக பொறுப்பேற்றபின் கண்ணாடிச்சந்திரன் டொமினிக்கை(கேசவன்) ஏனைய மாவட்டங்களுக்கு அழைத்துச் செல்லும் வேலையில் இறங்கினார்.

இதன் முதற்கட்டமாக டொமினிக்(கேசவன்) முல்லைத்தீவுக்கு கண்ணாடிச் சந்திரனால் அழைத்துச் செல்லப்பட்டார். முல்லைத்தீவு அமைப்பாளராகச் செயற்பட்ட வரதன் உட்பட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி அமைப்பில் செயற்பட்டவர்களுடன் சந்திப்புக்களை ஏற்படுத்தியதுடன் அரசியல்பாசறை நடத்துவதற்கான ஒழுங்குகளையும் டொமினிக்(கேசவன்) மேற்கொண்டார். டொமினிக்(கேசவன்) இப்பொழுது தீவிரமாகவும் கடுமையாகவும் உழைக்க வேண்டிய நிலைக்குள்ளானார். யாழ் மாவட்டத்திலிருந்து ஏனைய மாவட்டங்களுக்குச் சென்று சந்திப்புக்களை நிகழ்த்துவது, அரசியல் வகுப்புக்கள், பாசறைகள் நிகழ்த்துவது, அமைப்பின் அனைத்து நிர்வாக வேலைகள் என டொமினிக்கின்(கேசவன்) செயற்பாடுகள் அமைந்தன.

 

 

 

(புளொட்டின் படைத்துறைச் செயலர் கண்ணன்)

டொமினிக்(கேசவன்) தள அரசியல் நிர்வாகப் பொறுப்பாளராக பொறுப்பேற்று சில நாட்களுக்குள்ளாகவே புளொட்டின் படைத்துறைச் செயலர் கண்ணன் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்தார். மெய்ப்பாதுகாவலர்களுடனும் புதிய தன்னியக்க ஆயுதங்களுடனும் கண்ணனின் வருகை அமைந்திருந்தது. டொமினிக்கின்(கேசவன்) தளவருகைக்கு முன், தளத்தில் செயற்பட்டு வந்த நாம் ஸ்தாபனரீதியான, அரசியல்ரீதியான, நடைமுறைரீதியான தவறுகளை இழைத்திருந்த போதிலும் புளொட்டின் மக்கள் அமைப்பின் வளர்ச்சியும், மகளிர் அமைப்பு, மாணவர் அமைப்பு , தொழிற்சங்க அமைப்புக்களின் வளர்ச்சியும் பெருவளர்ச்சியாக இருந்ததென்றே சொல்ல வேண்டும். இதைத் தொடர்ந்து தளநிர்வாகப் பொறுப்பாளர் டொமினிக்கின் வரவு, அவரால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் மற்றும் ஸ்தாபன முன்னெடுப்புக்களும் நம்பிக்கையளிப்பதாக அமைந்தது.

டொமினிக்(கேசவன்)

உமாமகேஸ்வரனின் மொறீசியஸ் நாட்டுக்கான பயணமும் அதுகுறித்து புளொட் வெளியீடுகளில் புகைப்படங்களுடன் சிலாகித்து எழுதப்பட்ட கட்டுரைகளும் புளொட்டின் தலைமை மீதும், போராட்டத்தின் மீதும் மேலும் நம்பிக்கையூட்டுவதாக அமைந்தது. புளொட்டின் வானொலிச் சேவையான ”தமிழீழத்தின் குரல்” வானொலி தமிழ், சிங்கள ஆங்கில மொழிகளில் ஈழவிடுதலைப் போராட்டம் பற்றி முற்போக்கானதும், நடைமுறைச் சாத்தியமானதுமான கருத்துக்களை தொடர்ச்சியாக வெளியிட்டுக் கொண்டிருந்தது.

இந் நிலையில் படைத்துறைச் செயலர் கண்ணனின் தளவருகை எமக்கெல்லாம் உற்சாகமளிப்பதாக இருந்தது. அதேவேளை இராணுவப் பயிற்சி பெற்ற புளொட் உறுப்பினர்கள் தாங்கியிருந்த புதிய தன்னியக்க ஆயுதங்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தில் புளொட்டின் இராணுவரீதியான வளர்ச்சியை காட்டுவதாகவே இனம் கண்டோம். போராட்டத்தில் நாம் மட்டுமே சரியான கொள்கைகளையும் நடைமுறையையும் பின்பற்றுகிறோம் என்ற திடமான நம்பிக்கையில் ஏனைய இயக்கத்தவர்களால் புளொட் மீதும், புளொட் மத்தியகுழு உறுப்பினர்கள் சிலர் மீதும் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை, எமது வளர்ச்சி கண்டு பொறுக்கமுடியாமல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களால் முன்வைக்கப்படுபவை எனக் கூறினோம்.

ஆனால் இதே காலப்பகுதியில் ஏனைய இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்களும் கூட புதிய தானியங்கித் துப்பாக்கிகளுடன் தளம் வந்திருந்தனர். அதன் பின்னர் தான் இந்தியா அனைத்து இயக்கங்களுக்கும் ஆயுதங்கள் வழங்கியது என்ற விடயம் எமக்குத் தெரியவந்தது. இந்தியா இயக்கங்களுக்குக் கொடுத்த ஆயுதங்களால் ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களும், ஈழவிடுதலைப் போராட்டமும் பண்பளவில் மாற்றமடையத் தொடங்கியது. வங்கம் தந்த பாடத்தையே பாடமாகக் கொள்ளாமல் இந்திய இராணுவப் பயிற்சிக்கு நூற்றுக்கணக்கானவர்களை அனுப்பியது போலவே, இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட புதிய ஆயுதங்களைப் பற்றி நாம் அலட்டிகொள்ளவில்லை.

 

அனைத்து ஆயுதங்களையும் கையளிக்கும்படி கண்ணாடிச்சந்திரனுக்கு உத்தரவு !

தள நிர்வாகப் பொறுப்பாளர் டொமினிக்குக்கு அனைத்துமாவட்ட அரசியல் அமைப்பாளர்களையும், மற்றும் தொடர்புகளையும் அறிமுகம் செய்துகொண்டிருந்தார் கண்ணாடிச்சந்திரன். இந்நிலையில் தளம் வந்திருந்த படைத்துறைச் செயலர் கண்ணன் யாழ்மாவட்டத்துக்கான இராணுவப் பொறுப்பாளராக காண்டீபனை நியமனம் செய்தார். காண்டீபன் ஜரோப்பிய நாடொன்றிலிருந்து இந்தியா சென்று, புளொட்டில் இணைந்து இராணுவப்பயிற்சி பெற்ற ஒருவர். காண்டீபனை இராணுவப் பொறுப்பாளராக நியமித்தபின் கண்ணாடிச்சந்திரனை சந்தித்த படைத்துறைச் செயலர் கண்ணன் அனைத்து ஆயுதங்களையும் காண்டீபனிடம் ஒப்படைக்கும்படியும், தளத்தில் இராணுவப் பிரிவில் செயற்படும் அனைவரையும் காண்டீபனுக்கு அறிமுகப்படுத்தி வைக்கும்படியும் உத்தரவிட்டதுடன், இவற்றை உடனடியாக செயற்படுத்திவிட்டு இந்தியா சென்று உமாமகேஸ்வரனை சந்திக்குமாறும் கூறினார்.

சத்தியமூர்த்தி, சலீம் கைது செய்யப்பட்டபின்னும் கேதீஸ்வரன், பார்த்தனின் மரணத்தின் பின் அரசியல் மற்றும் இராணுவ விடயங்களைக் கவனித்து வந்த கண்ணாடிச்சந்திரனிடமிருந்து அனைத்து பொறுப்புக்களும் தள நிர்வாகப் பொறுப்பாளர் டொமினிக்காலும் இராணுவப் பொறுப்பாளர் காண்டீபனாலும் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் உமாமகேஸ்வரனிலால் இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சங்கிலி என்றழைக்கப்பட்ட கந்தசாமியால் கண்ணாடிச் சந்திரன் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

படைத்துறைச் செயலர் கண்ணன் தளத்தில் இருந்த காலப்பகுதியிலும் கூட இந்தியாவில் இருந்து பயிற்ச்சி பெற்று வந்திருந்தவர்களுக்கோ அல்லது வருபவர்களுக்கோ சரியான வேலைத் திட்டங்கள் எதுவும் இருக்கவில்லை.

இராணுவப் பயிற்சி பெற்றிருந்தவர்கள் சமூகத்தில் உள்ள அன்றாட பிரச்சனைகளை தீர்த்து வைத்தல், "சமூக விரோதிகள்" ஒழிப்பு போன்ற செயற்பாடுகளையே மேற்கொண்டு வந்தனர். கண்ணாடிச்சந்திரன் கந்தசாமியால் இந்தியாவிற்கு அழைத்து செல்லப்பட்ட பின்னர் கண்ணாடிச்சந்திரனால் முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட இராணுவப் பயிற்சி முகாம் படைத்துறை செயலர் கண்ணனின் உத்தரவின் பேரில் மூடப்பட்டு அந்த முகாமுக்கு பொறுப்பாக இருந்த மல்லாவிச் சந்திரன், நேரு, சுகுணன் உட்பட அனைவரும் இந்தியாவிற்கு இராணுவப் பயிற்சிக்கென அனுப்பி வைக்கப்பட்டனர். அத்துடன் வவுனியா இராணுவப் பொறுப்பாளராக செயற்பட்ட வவுனியா தம்பி, மற்றும் தளத்தில் இராணுவத் துறையில் செயற்பட்டு வந்தவர்கள் இந்தியாவிற்கு இராணுவப் பயிற்சிக்கென அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதேவேளை உமாமகேஸ்வரனால் இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ரமணன் உமாமகேஸ்வரனின் உத்தரவின்படி தள இராணுவப் பொறுப்பாளராக பொறுப்பேற்றார். ரமணனுடன் தளத்திற்கு உமாமகேஸ்வரனால் அனுப்பப்பட்ட சின்ன மென்டிஸ் யாழ்ப்பாண மாவட்ட இராணுவப் பொறுப்பாளராக பொறுப்பேற்றார். சின்ன மென்டிஸ் யாழ்ப்பாணத்தில் இராணுவப் பயிற்சி முடித்து வந்தவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் தேவைகளை கவனித்து வந்தார். சின்ன மென்டிஸ் யாழ்ப்பாண இராணுவப் பொறுப்பாளராக பொறுப்பேற்ற பின்னர் நாம் சிறிதும் எதிர்பார்த்திராத இன்னொரு விடயமும் நடைபெற்றது.

சுந்தரம் படைப்பிரிவு என்ற பெயரில் தன்னிச்சையான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களும், புளொட்டின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி புளொட்டின் செயற்பாடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியவர்களுமான சுண்ணாகம் வசந்தன், உடுவில் நித்தி, சுண்ணாகம் சிவநேசன் போன்றோரும், சுழிபுரத்தில் சுந்தரம் படைப்பிரிவு என இயங்கியவர்களும் சின்ன மென்டிஸ் தலைமையிலான இராணுவப் பிரிவினருடன் இணைந்து கொண்டனர். இந்தியாவிலோ அல்லது தளத்திலோ எந்தவொரு இராணுவப் பயிற்சியையும் பெற்றிராத இவர்கள் புளொட் உறுப்பினர்களுடன், புளொட் இராணுவத்தினரின் வாகனங்களில் வலம் வந்தனர். இது குறித்து படைத்துறைச் செயலர் கண்ணனின் கவனத்துக்கு யாழ் மாவட்டத்தில் செயற்பட்டுவந்த எம்மால் கொண்டுவரப்பட்டது. ஆனால் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் கண்ணன் எடுக்கவில்லை.

(சின்ன மென்டிஸ்)

இதற்கு காரணம் நாம் சரியான அமைப்பு வடிவங்களை கொண்டிருக்கவில்லை என்பது மட்டுமல்லாமல் அமைப்புக்குள் ஏற்படும் முரண்பாடுகள், பிரச்சனைகளை தீர்ப்பதற்குரிய சரியான பொறிமுறையும் கொண்டிருக்கவில்லை.

புளொட்டின் மக்கள் அமைப்பில் செயற்பட்ட நாம் அரசியல் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். மக்களுடன் நெருக்கமான தொடர்புகளையும், உறவுகளையும் கொண்டிருந்தோம். ஆனால் புளொட்டின் இராணுவப் பிரிவினரோ மக்களுடன் நேரடியான தொடர்புகளையும் உறவுகளையும் கொண்டிராத ஒரு இராணுவமாக செயற்பட்டது மட்டுமல்லாமல், மக்கள் அமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கும் தவறியிருந்தனர்.

தொடரும்.

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5

6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6

7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7

8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8

9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9

10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10

11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11

12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12

13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13

14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14

Last Updated on Friday, 29 July 2011 17:25