Tue04162024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் ஒடுக்கும் தேசியத்தை ஒத்த ஒடுக்குமுறைக்கு எதிரான தேசியம் படுபிற்போக்கானது

ஒடுக்கும் தேசியத்தை ஒத்த ஒடுக்குமுறைக்கு எதிரான தேசியம் படுபிற்போக்கானது

  • PDF

தேசியம் பற்றி ஒற்றைத் துருவப் பார்வை, அரசியலை நிராகரிக்கின்றது. இனத்தை முன்னிறுத்திய படுபிற்போக்கான ஒடுக்கும் தேசியத்தின் அதே தேசியக் கூறையே மீள முன்வைக்கின்றது. தமிழ்த்தேசியம் இப்படித்தான் தன்னை வெளிப்படுத்தியது. இது ஒடுக்கும் தேசியத்தின் இயல்பில் இருந்து, ஒடுக்கப்படும் தேசத்தின் தேசிய இயல்பை தன்னளவில் கூட வேறுபட்டு தன்னை வெளிப்படுத்தியது கிடையாது. ஒடுக்கும் தேசம் சார்ந்த தேசிய உணர்வை, ஒடுக்கப்பட்ட தேசம் தன் தேசிய உணர்வாக கொண்டிருக்குமாயின், அது படுபிற்போக்கானது மட்டுமின்றி அதன் இயல்பில் இருந்தே தோற்றுப்போகும். இது தான் இலங்கையில் நடந்தது.

 

 

 

ஒடுக்கப்பட்ட இனம் சார்ந்த தேசியம், ஒடுக்கும் தேசியத்தின் உணர்வுக்கு எதிரான தேசிய உணர்வைக் கொண்டிருக்கும் போது, அது தனக்குள் மட்டுமின்றி மற்றவனையும் ஒடுக்காது. இதுதான் முற்போக்கானது. இதுதான் மக்களைச் சார்ந்தது. இதுதான் உண்மையான தேசியத்தின் பால் நின்று, அதன் விடுதலையைச் சாதிக்கும். எம்மைச் சுற்றிய தேசிய வரலாறு இதற்கு எதிரான பாதையில், ஒடுக்கும் தேசியத்தின் அதே தேசிய இயல்புடன் பயணித்து எம்மையும் ஒடுக்கி தன்னையும் தோற்கடித்தது.

சிங்களப் பேரினவாத தேசியம் தான், தமிழ் தேசியத்தை ஒடுக்குகின்றது. இங்கு தேசியம், தேசியத்தை ஒடுக்குகின்றது. தேசியம் தேசியத்தை எப்படி ஒடுக்க முடியும்? இதில் உள்ள வேறுபாடு தான் என்ன? நாம் வேறுபட எதைக் கோரினோம்;? ஆக இங்கு தேசியம் பற்றிய கேள்ளி எழுவது இயல்பாகின்றது. கிட்லரின் தேசியம், அமெரிக்க ஏகாதிபத்திய தேசியம், இந்திய விஸ்தரிப்புவாத தேசியம் என்று, உலகெங்கும் இப்படி தேசியங்கள் உண்டு. இந்திய முஸ்லீம் மக்களுக்கு எதிரான இந்து தேசியம், யூத தேசியம், நாசிகளின் நிற இனத் தேசியம் என்று தேசியம் பற்றிய கோட்பாடுகள், சிந்தனைகள் நடைமுறைகள் உள்ளது. இதை எல்லாம் நாம் புரிந்துகொண்டுதான் தேசியத்தைப் பற்றி பேசுகின்றோமா?

ஆக இங்கு தேசியம் பற்றிய தெரிவும், தெளிவும் அவசியமாகின்றது. இந்தத் தெளிவின்றி தேசியம் பற்றிய சிந்தனையும், நடைமுறையும் எம்மை நாம் படுகுழியில் தள்ளுவதாகவிருக்கும். இதுவேதான் நடந்து முடிந்தது. ஒரு தேசியம் இன்னொரு தேசியத்தை ஒடுக்குவதால், அதற்கு எதிரான தேசியத்தை ஆதரிக்க வேண்டுமா? அது முற்போக்கானதா? ஒரு தேசியம் இன்னொரு தேசியத்தை ஒடுக்கும் போது, ஒடுக்குமுறைக்கு எதிரான தேசியமும் ஒடுக்கும் தேசியமாக இருந்தால், அந்தத் தேசியம் உண்மையில் ஒடுக்குமுறைக்கு எதிரான தேசியமல்ல. இதுதான் எம்மைச் சுற்றி நடந்தது. உதாரணமாக அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் சிரியாவிலும், ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் ஆக்கிரமிக்க முன்வைக்கும் தேசியமும், இதற்கு எதிராக கடாபி, சதாம் குசைன், தலிபான் முன்தள்ளிய தேசியத்தையும் எடுங்கள். இதில் ஒன்றை நாம் ஆதரிக்க வேண்டுமா? இதில் ஒன்று முற்போக்கானதா? இல்லை. ஆனால் நாங்கள் அப்படித்தான் செய்தோம். தேசம், தேசியம் பற்றிய அடிப்படை அறிவு கூட எம்மிடம் இருக்கவில்லை.

இங்கு தேசியம் பற்றிய அறிவும், தெளிவும் அவசியமானது. இது எமக்கு உண்டா? இலங்கை பேரினவாத தேசியமும், அதற்கு எதிரான புலித்தேசியமும் அல்லது இன்று கூட்டமைப்பின் தேசியத்தையும் எப்படி நாம் பார்ப்பது? எந்த அளவுகோல் கொண்டு இதை அளப்பது?

இதை எதையும் கண்டுகொள்ளாது, நாம் கண்ணை மூடிக்கொண்டு சில பத்து வருடங்கள் குருட்டுத்தனமாக தேசியத்தின் பெயரில் பாரிய இனவழிவு கொண்ட யுத்தத்தைக் கூட நடத்தியிருக்கின்றோம். இதனால் தான் நாம் தோற்கடிக்கப்பட்டு இருக்கின்றோம். ஒடுக்கும் தேசியத்தினை ஒத்த எதிர் தேசியம் வெற்றிபெற முடியாது. ஒடுக்கும் தேசிய சிந்தனை கொண்ட தேசிய உணர்வு, ஒடுக்குமுறைக்கு எதிரான அதே தேசிய சிந்தனை சார்ந்த உணர்வாக அது வெளிப்படும் போது, உண்மையான ஒடுக்கப்பட்ட தேசிய உணர்வை அது இல்லாதாக்கிவிடுகின்றது, அதை அழித்து விடுகின்றது. மக்களின் சாதாரண அடிப்படை உரிமைகளைக் கூட அது இல்லாதாக்கி விடுகின்றது.

 

ஒடுக்கும் தேசியம் கொண்டுள்ள அடிப்படைகள்

 

தேசியத்தின் பெயரில் இன்னுமொரு இனத்தை, நாட்டை ஒடுக்கும் போது, அது தன்னகத்தே கொண்டுள்ள அடிப்படையான அரசியல் குணாம்சம் என்ன? மற்றைய இனத்தையும், மக்களையும் சூறையாடுவதையும், தன் இன மக்களை சுரண்டுவதையும் அடிப்படையாக கொள்கின்றது. இந்த அடிப்படையில் இனம், நிறம், சாதி, மதம், பண்பாடு என்று இதில் ஒன்றை அல்லது பலதை முன்னிறுத்தித்தான் ஒடுக்கும் தேசிய உணர்வை உருவாக்கி மற்றவர்களை ஒடுக்குகின்றது. இந்த தேசியம் மற்றைய இனத்தை அல்லது நாட்டை ஒடுக்கி சுரண்டும் போது, தனது சொந்த மக்கள் மேலான ஒடுக்குமுறையை கைவிடுவது கிடையாது. சொந்த மக்களை ஒடுக்கிச் சுரண்டியபடி, மற்றவர்கள் எம்மை ஒடுக்க முனைவதாக காட்டியபடி ஒடுக்குவதுதான் இந்தத் தேசியம்;. இதுதான் ஒடுக்கும் தேசியம். தன்சொந்த மக்களை ஒடுக்கி, சுரண்டிவாழும் தேசியம். இதுதான் வலதுசாரிய தேசியமாகும். ஒடுக்கும் தேசியத்தை சார்ந்ததாக இருந்தாலும் சரி, ஒடுக்கப்பட்ட தேசியத்தை சார்ந்ததாக இருந்தாலும் சரி, எங்கும் இது ஒரே அரசியல் எல்லைக்குள் ஒரேவிதமானதாகவே இயங்குகின்றது. இந்த அடிப்படையில் தான் சமூக பொருளாதார கூறுகளை முன்வைக்கின்;றது. நண்பர்களையும் எதிரிகளையும் கூட வரையறுக்கின்றது. இந்த வகையில் புலி - அரசு முன்வைத்த தேசியத்தில் (ஒடுக்கும் - ஒடுக்கப்பட்ட தேசியத்தில்) எந்த அடிப்படை வேறுபாடும் கிடையாது.

 

ஒடுக்கப்பட்ட தேசியம் கொண்டுள்ள அடிப்படைகள்

 

இது தன்னை ஒடுக்குவதற்கு எதிரானது. இதனால் தானும் ஒடுக்காது. ஒடுக்கம் தேசியத்தின் அனைத்து கூறுகளுக்கும் முரணானது. இது தனக்குள் மட்டுமின்றி, தாமல்லாத மற்றவர்களையும் ஒடுக்காது. இதனால் இது தன்னளவில் சுரண்டுவதற்கு எதிரானது. மற்றவனை சுரண்டுவதை ஏற்றுக்கொள்வது கிடையாது. சாதிய சமூக ஒடுக்குமுறைக்கு எதிரானது. ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிரானது. நிறப் பாகுபாட்டுக்கு எதிரானது. மதப் பாகுபாட்டுக்கு எதிரானது. ஆக இங்கு மனிதனை மனிதன் வேறுபடுத்துவதற்கும், அவனை அடிமை கொள்வதற்கும், ஒடுக்குவதற்கும் எதிரானது. உண்மையில் அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிரானது. இதுதான் உண்மையான ஒடுக்குமுறைக்கு எதிரான தேசியக் கூறு. இதை அடிப்படையாகக் கொண்டதுதான் மார்க்சியம் முன்வைக்கும் இடதுசாரியம். இதன் அடிப்படையில்தான் சமூக பொருளாதார உறவுகள் முதல், நண்பர்கள் எதிரிகள் வரை வரையறுக்கப்படுகின்றனர்.

 

இறுதியாக

 

உன்னை நான் ஒடுக்குவதை அங்கீகரிப்பதல்ல தேசியம். உனக்குள்ள உரிமைகள் தான் எனக்கு. உன்னை வேறுபடுத்திக் காட்டி, என்னை மேன்மையானவனாக காட்டுவது தேசியமல்ல. எனக்காக நான் போராடுவது தான் தேசியம். மற்றவன் எனக்காக போராடுவது தேசியமல்ல. மற்றவனை ஒடுக்குவது தேசியமல்ல. எமக்குள் நாம் ஒடுக்குமுறைகளை வைத்திருப்பது தேசியமல்ல. மக்கள் தங்களை தாம் நிர்ணயம் செய்யமுடியாத எதுவும் தேசியமல்ல. மக்களை மந்தையாக்கி மேய்ப்பது தேசியமல்ல. நான் "தமிழன்", நான் "சிங்களவன்" என்று உணர்வது தேசியமல்ல.

மற்றவனை ஒடுக்காத உணர்வுதான் தேசியம். மற்றவன் உரிமைகளை அங்கீகரிப்பது தான் தேசியம். இதற்காக போராடுவது தான் தேசியம்.

 

பி.இரயாகரன்

28.07.2011

Last Updated on Thursday, 28 July 2011 21:06