Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் உணர்வும் உணர்ச்சியும் கொள்ளாத அரசியல், சமூக மாற்றத்துக்குரிய செயலை மறுக்கின்றது

உணர்வும் உணர்ச்சியும் கொள்ளாத அரசியல், சமூக மாற்றத்துக்குரிய செயலை மறுக்கின்றது

  • PDF

நிகழ்வுகள் மேல் அந்தக் கணமே உணர்வுபூர்வமான உணர்ச்சியுடன் வழிகாட்ட முடியாத செயலற்ற தனம்தான், செயலுக்கு எதிரானது. சமூக மாற்றத்துக்குரிய அரசியலை இது இன்று இல்லாதாக்குகின்றது. இது எம்மைச் சுற்றிய அரசியலாக எங்கும் காணப்படுகின்றது. காலம்கடந்த பின்னான விமர்சன முறைமையே, அறிவுசார் உலகத்தின் பொதுப்பண்பாக மாறியுள்ளது. வலதுசாரியம் சமூகத்தில் இயங்குகின்ற வேகத்தில், அது கருத்துகளை உருவாக்கும் வேகத்திலும் இடதுசாரியமில்லை. இது இடதுசாரிய அரசியல் போக்கில், சந்தர்ப்பவாத அரசியலாக வெளிப்படுகின்றது.

 

 

 

எமது கடந்தகாலம் முதல், நிகழ்காலம் வரையான எம்மைச் சுற்றிய அரசியல் போக்கு, செயலற்ற தனத்தைக் கோரியது. உணர்ச்சியற்ற, உணர்வற்ற, செயலற்ற மௌனத்தைக் கோரியது. நிகழ்ச்சிகளில் இருந்து அரசியல் ரீதியாக விலகியிருக்கக் கோரியது. இது காலம் கடந்த உணர்ச்சியற்ற உணர்வற்ற விமர்சனத்தையும், வில்லங்கமில்லாத செயலுக்கும் வழிகாட்டியது. இதற்கு ஏற்ப, நாம் எம்மை மாற்றிக்கொண்டோம். இதை மாற்றிக்கொள்ளத் தயாரற்ற, இதற்கு தடைவிதிக்கின்ற அரசியல் போக்காக மாறுகின்றது.

இன்று இதுதான் பொதுவான, படுபிற்போக்கான செயல்கள் மற்றும் கருத்துகளுக்கு எதிரான எமது அரசியல் சார் எதிர்வினையாகும். உணர்ச்சிகளை இழந்த உணர்வுள்ள மனிதர்களானோம். நிகழ்சிகள் மீது மௌனம் சாதிக்கும் செயலற்ற பார்வையாளராக மாறுகின்றோம். துன்பம், மகிழ்ச்சி என்ற எந்த நிகழ்ச்சியிலும், வெவ்வேறு சுய அளவுகோல்களுடன் நடைப் பிணமாகின்றோம். கருத்து, நடைமுறைப் போராட்டம் என எதுவாக இருந்தாலும், நாம் இயங்கும் தளம் தான் செயல்தளம். இதை எம் கையில் எடுக்காது, அதை எமது அரசியல் மூலம் ஆளுமைக்குள் கொண்டு வராதவரை, நாம் இயங்கும் அரசியல் சூழலை வெல்ல முடியாது.

உணர்வையும் உணர்ச்சியையும் இழந்த ஜடமாக, ஒரு கணம் கூட வாழ்தல், வாழ முனைதல் சமூக ஒடுக்குமுறைக்கும் அது சார்ந்த கருத்துக்கும் துணைபோவதாகும். நாம் உயிரியல் குணாம்சத்தையும், மனிதத் தன்மையையும் இழந்த ஜடமாக மாறிவிடுகின்றோம்;. எம்மைச் சுற்றிய அரசியல் போக்கு, செயலற்ற தனத்தைக் கோரிய போது, அறிவுசார்ந்த பகுத்தாய்வு முறையை காலம் கடந்த பின்னான விமர்சன முறையாக்கினோம். இதுவே எமது ஆய்வுமுறையாக மாறியுள்ளது. கருத்துகள் காலம் கடந்து வெளிவருகின்றது. அதற்கு உணர்ச்சியும் உணர்வும் இருப்பதில்லை. கல்விசார் தகமையுடன் வெளிவருகின்றது. இதன் பின்னணியில் அரசியல் சந்தர்ப்பவாதமும் முளைவிடுகின்றது. திடீர் இடதுசாரியம், திடீர் புரட்சியாளர்கள், தங்கள் அறிவுசார் தகமையூடாக பிழைக்கின்ற போக்கும் முளைவிடுகின்றது. சமகாலத்தில் படுபிற்போக்குவாதிகளாக அல்லது மௌனவாதிகளாக அல்லது சந்தர்ப்பவாதிகளாக அல்லது இவை அனைத்தையும் அடிப்படையாகக் கொண்ட விமர்சகர்கள், காலம்கடந்த பின்னான விமர்சனத்தை செய்யும் அரசியல் விமர்சகராக மாறுகின்றனர். வர்க்க உணர்ச்சியையும் உணர்வையும் இழந்த இந்த விமர்சனங்கள், வர்க்க அடிப்படையைக் கொண்ட பகுப்பாய்வாக முன்தள்ளப்படுகின்றது. இதில் ஒருபகுதியினர் சமகால நிகழ்வுகள் மீது படுபிற்போக்குவாதிகளாக வாழும் அதே நேரம், கடந்த காலம் பற்றி முற்போக்காக தம்மை வெளிப்படுத்துகின்றனர். உண்மையில் இந்த முற்போக்கின் பின் கூட, சமகால பிற்போக்குடன் கொண்டுள்ள சமரசவாத சந்தர்ப்பவாத பிழைப்புவாத போக்குக் கொண்ட அரசியல் அடிப்படையை உள்ளடக்கியதுதான். சமூகத்தின அறிவு மட்டம் குறைந்ததாக உள்ளவரை, அதை இனம் காணமுடியாத எல்லையில் அவை போற்றுதலுக்கு உள்ளாகின்றது.

இன்றைய அரசியல் சூழலில் இவை எல்லாம் செல்வாக்கு வகிக்கின்றது. தனக்கான சொந்த வர்க்க நடைமுறையில் இருந்து, சமூக நடைமுறையைக் கோராத (கல்வி சார்) விமர்சனங்கள், அறிவுசார் படைப்புக்கள் எம்மைச் சுற்றி படைக்கப்படுகின்றது. இது செயலைக் கோருவதில்லை, செயலை மறுக்கின்றது. செயலற்ற அரசியல், விமர்சன அரசியலாக மாற்றம் பெறுகின்றது. சரியான கருத்தைப் படைத்துவிட்டால், அது தானாக மக்களை வெற்றிகொள்ளும் என்று அப்பாவித்தனமாக நம்புமளவுக்கு வாசகர் தளத்தை உருவாக்குகின்றது. சரியான கருத்தை மக்கள் உள்வாங்கிவிட்டால் புரட்சி தானாக நடக்கும் என்று நம்பும் அப்பாவித்தனம் வரை இந்த உடனடி வினையாற்றாத செயலற்ற தனம் கோருகின்றது.

இன்று தகவல் ஊடகங்கள் வகிக்கின்ற அரசியல் செல்வாக்கு, கருத்தியலை உடனடியாகவே உருவாக்குகின்றது. இதன் மேல் உடனடியாக எதிர்வினையாற்றாத எந்தக் கருத்தும், தன் கருத்தின் மேலான செல்வாக்கை இழந்து போகின்றது. இது அரசியலில்; பாரிய அசமந்தப் போக்கை உருவாக்குகின்றது.

உடனடியாக வழிகாட்டாத செயலற்ற தனம் தான், செயலுக்கு எதிரானது. அரசியலில் செயலற்ற போக்கில், இது குறிப்பாக இன்று பங்காற்றுகின்றது. மக்களை அணிதிரட்டும் அமைப்பு முதல் நிகழ்வுகளை ஓட்டிக் கருத்துச் சொல்லும் ஊடகம் வரை, உடனடியாக அரசியல் ரீதியாக வழிகாட்ட வேண்டும். இதுதான் அரசியல் தலைமைத்துவத்தின் குறிப்பான பங்கு. இதன் மூலம் சமூகத்தின் மீது அரசியல் ரீதியாக செல்வாக்கு வகிக்க முடியும்;.

இதற்கு மாறாக பொதுவாக சமூகத்தை ஆய்வு செய்யும் விமர்சகர்கள் காலம் கடந்த பின்னான விமர்சனத்தை முன்வைக்கின்றனர். நிகழ்காலம் மீதான தங்கள் அரசியல் செயலற்ற தனத்தை அடிப்படையாக கொண்ட விமர்சனமுறை இதுவாகும். அந்தக் கணமே விமர்சனம் செய்யாத விமர்சனமும் நடைமுறையும், மக்களை வழிநடத்தாது. இது மக்களின் பின் நின்று சொல்லும் முறையாகும்;. மக்களின் முன்நின்று சொல்லும் முறைக்கு எதிரானது.

இது அரசியல் சந்தர்ப்பவாதத்தை, அரசியல் பச்சோந்தித்தனத்தை, அரசியல் பிழைப்புவாதத்தை அடிப்படையாகக் கொண்ட உணர்ச்சியும் உணர்வுமற்ற விமர்சனப் போக்கை உருவாக்குகின்றது. நிகழ்வுகள் மீதான உடனடியான உணர்வுபூர்வமான உணர்ச்சி சார்ந்த எதிர்வினையை ஆற்றாத அரசியல் போக்கு, அரசியல் சந்தர்ப்பவாதத்தை உருவாக்குகின்றது.

பிற்போக்கான சமூக அடிப்படையைக் கொண்ட சமூகத்தில், பெரும்பான்மை சார்ந்து வெளிப்படுகின்ற அரசியல் போக்குகளின் மேல் மௌனத்தை சாதிக்கின்ற செயலற்ற போக்கு அதை அந்தக்கணத்தில் வழிபடுதலாகும்;. அதை மறுத்துச் செயலாற்ற மறுத்தலாகும். இது செயலுக்குரிய அரசியல் நடைமுறையை நிராகரிக்கின்றது. அந்தக்கணமே எதிர்வினையாற்றாத அரசியல் பச்சோந்தித்தனத்தை உருவாக்குகின்றது. அந்தக் கணம் அந்தப் போக்குடன் உடனடியான சமரசத்தையும், அரசியல் ரீதியான செயலற்ற தனத்தையும், இதற்கேற்ற சந்தர்ப்பவாத அரசியலாகவும் அது மாறுகின்றது. இது எங்கும் எதிலும் இன்று பிரதிபலிக்கின்றது.

நிகழ்வுகள் மேலான அந்தக் கணத்தில் யார் ஒத்த கருத்துடன் இயங்குகின்றனரோ, அவர்கள் ஒரு அரசியல் அமைப்பாகின்றனர். யார் அந்தக் கணத்தில் வழிகாட்டுகின்றனரோ, அவர்கள் அரசியல் ரீதியாக சமூகத்தைத் தலைமை தாங்கும் சமூக உறுப்பாகின்றனர்.

 

பி.இரயாகரன்

09.07.2011

 

 

Last Updated on Saturday, 09 July 2011 08:02