Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11

  • PDF

யாழ்ப்பாணம் மக்கள் வங்கிக்கிளையிலிருந்து கைப்பற்றப்பட்ட ஒருபகுதி துப்பாக்கிகளுடன் முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் சிறிய இராணுவப் பயிற்சி முகாம் ஒன்று தள நிர்வாகத்தை தற்காலிகமாக கவனித்துவந்த கண்ணாடிச் சந்திரனால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த முகாம் அமைக்கப்பட்டதன் நோக்கம் புளொட் உறுப்பினர்களுக்கு தளத்திலேயே பயிற்சி அளிப்பதும், இந்த முகாமை மையமாகக் கொண்டு வன்னிப்பகுதியில் இராணுவத் தாக்குதல் நிகழ்த்துவதுமாகும். இராணுவ பயிற்சி முகாமுக்குப் பொறுப்பாக மல்லாவிச் சந்திரன் நியமிக்கப்பட்டார். மல்லாவிச் சந்திரனுடன் சுகுணன், நேரு போன்றோர் உட்பட பலர் அந்தப் பயிற்சி முகாமில் இராணுவப் பயிற்சி பெற்று வந்தனர்.

 

 

 

இந்தியாவிலிருந்து தளம் வந்திருந்த மத்தியகுழு உறுப்பினர் ஈஸ்வரன் மட்டக்களப்பில் தாக்குதல் நடத்தப்போவதாகக் கூறி மத்திய வங்கியிலிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளில் சிலவற்றுடன் மட்டக்களப்பு பத்தன் என்பவரோடு அம்பாறை பகுதிக்கு சென்றிருந்தார். வவுனியா இராணுவப் பொறுப்பாளராகச் செயற்பட்டுவந்த வவுனியா தம்பி (தர்மகுலசிங்கம்) வவுனியாவில் சில இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். தள இராணுவப் பொறுப்பாளராக இருந்த பார்த்தனின் மரணத்துக்குப் பின் சிறிய அளவிலான இராணுவத் தாக்குதலுக்கான திட்டங்களையும், அதற்கான முன்னெடுப்புகளையும் காணக்கூடியதாக இருந்தது.

முல்லைத்தீவில் இராணுவப்பயிற்சி முகாமை ஆரம்பித்த பின் முல்லைத்தீவுக்கான பிரதான வீதிவழியாக செல்லும் இராணுவத்தினர் மீது கண்ணிவெடித் தாக்குதல் நிகழ்த்தி ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்கு திட்டமிடப்பட்டது. மட்டக்களப்புக்கு துப்பாக்கிகளை எடுத்துச் சென்றிருந்த மத்தியகுழு உறுப்பினர் ஈஸ்வரனும் மட்டக்களப்பு பத்தனும் அம்பாறை சென்றல்காம்ப் பொலிஸ் நிலையத்தை தாக்கி ஆயுதங்களைக் கைப்பற்ற திட்டமிட்டிருந்தனர். வவுனியா இராணுவப் பொறுப்பாளர் தம்பி வவுனியாவை தனது இரும்புப்பிடிக்குள் வைத்திருந்த மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஆர்தர் கேரத் மீது தாக்குதல் நடத்த திட்டத்தை வகுத்திருந்தார். முல்லைத்தீவில் இராணுவத்தின் மீதான கண்ணிவெடித்தாக்குதல் நடவடிக்கையில் பங்கேற்பதற்கு இந்தியாவிலிருந்து இராணுவப்பயிற்சி முடித்து ஏற்கனவே வந்திருந்த மது, துசியந்தன், உட்பட வேறு சிலரும் முல்லைத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நெடுங்கேணி - முல்லைத்தீவு வீதியில் கண்ணிவெடியைப் புதைத்து வைத்துவிட்டு சிறீலங்கா இராணுவத்தின் வருகைக்காக இவர்கள் பல நாட்களாக காத்திருந்தனர். தாக்குதலுக்குத் தயாராகிச் சென்றபோது அவர்கள் தம்முடன் எடுத்துச் சென்ற உணவு, தண்ணீர் என்பன முடியும் நிலையில் இருந்தது. இந்த நேரம் இராணுவத்தினர் வருவதாக தாக்குதலுக்கு தயாராய் நின்றவர்களுக்கு சற்று தொலைவில் தகவல் அனுப்புவதற்காக வீதியோரத்தில் மறைந்திருந்தவரால் தொலைத்தொடர்பு கருவி மூலம் தகவல் அனுப்பப்பட்டது. இதையடுத்து ஜீப் வண்டி மீது கண்ணிவெடித்தாக்குதல் நிகழ்த்தினர். ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

ஆனால் அந்த ஜீப் வண்டியில் வந்தது இராணுவத்தினரல்ல, ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரி சுந்தரலிங்கமும் அவருடன் வந்த பொலிசாருமாகும். தாக்குதலுக்கு தயாராக நின்றவர்களுக்கு இராணுவத்தினர் வருவதாக வருவதாக தொலைத்தொடர்பு கருவி மூலம் தகவல் அனுப்பப்பட்டிருந்தது. ஜீப் அண்மித்தபோது இது இராணுவத்தினரின் ஜீப் அல்ல என்று தெரியவந்தவுடன் தகவல் கொடுத்தவர் மீண்டும் தாக்குதல் நடத்த நின்றவர்களுடன் தொடர்புகொள்ள முயன்றார். ஆனால் தாக்குதலுக்குத் தயாராக நின்றவர்கள் அதற்குள் தொலைத்தொடர்பு கருவியை துண்டித்து விட்டு தாக்குதலுக்கு தயாராகி கொண்டிருந்தனர். இராணுவத்தின் மீதான தாக்குதல் திட்டம் பொலிசார் மீதான தாக்குதலில் முடிவடைந்திருந்தது.

அம்பாறை சென்றல்காம்ப் பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. வவுனியாவில் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஆர்தர் கேரத் தனது அலுவலகத்துக்குள் சென்று மேசையில் இருந்த மின்சார அழைப்பு மணி மூலம் தனது உதவியாளரை அழைத்த போது மேசையின் கீழே இணைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து கொல்லப்பட்டார். குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்தர் கேரத் மீதான தாக்குதலை வவுனியா இராணுவப் பொறுப்பாளர் தம்பியும் கல்மடு ராஜனும் (பாக்கியராஜன்) மேற்கொண்டிருந்தனர். இவர்கள் மிகத் துணிகரமாக பலத்த காவலின் கீழ் இருந்த மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஆர்தர் கேரத்தின் அலுவலகத்திற்குள் இரவோடிரவாக புகுந்து இரகசியமாக குண்டினை மேசைக்கு கீழ் பொருத்தி இத்தாக்குதலை செய்தனர்.

ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனவின் ஆலோசகராக கடமையாற்றிய இஸ்ரேலில் பயிற்சி பெற்ற இராணுவ அதிகாரியும் ஜே ஆர் ஜெயவர்த்தனவின் ஒரே மகனுமாகிய ரவீந்திரா விமல் ஜெயவர்த்தனவினதும், ஐக்கிய தேசிய கட்சியின்(U.N.P) அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்த லலித் அத்துலத்முதலியினதும் சிறில் மத்தியுவினதும் பணிப்பின் கீழ் காந்தீயத்தின் நடவடிக்கைகளை முற்றாக முடக்கி பல வன்னி இளைஞர்களை கைது செய்து சித்திரவதை செய்த முக்கிய நபர் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஆர்தர் கேரத் ஆவார். பொலிஸ் அத்தியட்சகர் ஆர்தர் கேரத் மீதான தாக்குதல்களை மேற்கொண்ட வவுனியா தம்பியும், கல்மடு ராஜனும் பிற்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டனர்.

கண்ணாடிச்சந்திரன் வெளியிட்ட துண்டுப்பிரசுரமும் அதனால் ஏற்பட்ட குழப்பங்களும்

இந்தத் தாக்குதல்கள் அனைத்தையும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமே (புளொட்) மேற்கொண்டது என உரிமை கோரி துண்டுப்பிரசுரம் தளநிர்வாகப் பொறுப்பாளராகச் செயற்பட்ட கண்ணாடிச்சந்திரனால் வெளியிடப்பட்டது.

முல்லைத்தீவு கண்ணிவெடித்தாக்குதலில் கொல்லப்பட்ட ஒட்டுசுட்டான் பொலிஸ் அதிகாரி சுந்தரலிங்கம் யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்தவர். மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றவராக பொலீஸ் அதிகாரி சுந்தரலிங்கம் இருந்தார். இதனால் வடமராட்சியில் அமைப்பாளர்களாகச் செயற்பட்டு வந்த கல்லுவம் குரு, கணேஸ் போன்றோர் சுந்தரலிங்கம் மீதான தாக்குதல் குறித்து மக்கள் மத்தியிலிருந்து கடுமையான கேள்விகளையும் விமர்சனங்களையும் எதிர்நோக்க வேண்டியிருந்தது. ஒட்டுசுட்டான் பொலிஸ் அதிகாரி சுந்தரலிங்கம் மீதான தாக்குதல் தவறுதலாக நிகழ்த்தப்பட்ட ஒன்று என்றபோதிலும் கூட, அத்தகையதொரு தவறால் புளொட் பிரச்சனைகளை பல்வேறு திசைகளிலுமிருந்து முகம் கொடுக்க வேண்டி நேர்ந்தது – அமைப்புக்குள்ளேயும் வெளியேயும்.

அடுத்ததாக அம்பாறை சென்றல்காம்ப் பொலிஸ் நிலையத்தை தமிழீழ மக்கள் விடுதலைக்கழகமே (புளொட்) தாக்கியதாக துண்டுப்பிரசுரத்தில் உரிமை கோரியிருந்தோம். ஆனால் தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை அமைப்பினரோ தாமே அத்தாக்குதலை நிகழ்த்தியதாகவும், தம்மிடம் சென்றல்காம்ப் பொலிஸ் நிலையத்திலிருந்து கைப்பற்றிய ஆயுதங்கள் அனைத்தும் இருப்பதாகவும் தேவையேற்படின் அவ்வாயுதங்களை காட்சிப்படுத்த முடியும் எனவும் வடமராட்சியில் செயற்பட்டு வந்த புளொட் அமைப்பாளர்களுடன் வாதிட்டனர். நாமோ சென்றல்காம்ப் பொலிஸ் நிலையத் தாக்குதலை புளொட் தான் நடத்தியதென்று வாதிட்டோம்.

இதனால் குறிப்பாக வடமராட்சியில் புளொட் அமைப்பில் செயற்பட்டவர்களிடம் ஒரு குழப்பநிலை தோன்றியிருந்தது. பொலிஸ் அதிகாரி சுந்தரலிங்கம் மீதான தாக்குதல் சென்றல்காம்ப் பொலிஸ் நிலையத் தாக்குதல் என்பனவே இந்தக் குழப்பநிலைக்குக் காரணமாக இருந்தது. உண்மையில் புளொட் சென்றல்காம்ப் பொலிஸ் நிலையத் தாக்குதலை நடத்தியிருக்கவில்லை. மத்தியகுழு உறுப்பினர் ஈஸ்வரன் சென்றல்காம்ப் பொலிஸ் நிலையம் மீது தாக்குதலை நடத்த யாழ்ப்பாணத்திலிருந்து ஆயுதங்களை எடுத்துச் சென்றிருந்தார். புளொட் உறுப்பினர்கள் சென்றல்காம்ப் பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவையினர் சென்றல்காம்ப் பொலிஸ்நிலையத்தை தாக்கி ஆயுதங்களை கைப்பற்றிச் சென்றுவிட்டிருந்தனர்.

புளொட்டால் திட்டமிடப்பட்ட மூன்று தாக்குதல்களுமே வெற்றிபெற்று விட்டதென்று தளநிர்வாகப் பொறுப்பாளராகச் செயற்பட்ட கண்ணாடிச்சந்திரன் அவசரமாக, தவறான தகவல்களைக் கொண்ட துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டதால் வடமராட்சி அமைப்பாளர்களிடமிருந்தும், வடமராட்சி மக்கள் மத்தியிலிருந்தும் கடுமையான விமர்சனங்களை நாம் முகம் கொடுக்க வேண்டியிருந்தது. கண்ணாடிச்சந்திரன் இத் துண்டுப்பிரசுரத்தை வெளியிடுவதில் அவசரம் காட்டாமல் பொறுமையாகவும், பொறுப்பாகவும், சரியான தகவல்களை அடிப்படையாகக் கொண்டும் செயற்பட்டிருக்க வேண்டும். அப்படி அவசரப்பட்டு தவறான தகவல்களுடன் அத்துண்டுப்பிரசுரம் வெளிவந்தபின், நாம் தவறு விட்டுவிட்டோம் என்று தெரிந்த பின்பும் கூட எமது தவறான தகவல்கள் குறித்து மீண்டும் ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டிருக்க வேண்டும். சென்றல்காம்ப் பொலிஸ் நிலையத்தை நாம் தாக்கவில்லை என்பதை நாம் பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்க வேண்டும், முல்லைத்தீவில் பொலிஸ் அதிகாரி சுந்தரலிங்கம் மீதான தாக்குதல் தவறுதலாக நடந்ததென்பதை மக்கள் மத்தியில் கூறி அதற்காக மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும். அதை நாம் செய்யத் தவறியிருந்தோம்.

இதில் மோசமான, வெட்கப்படவேண்டிய விடயம் என்னவெனில், சென்றல்காம்ப் பொலிஸ் நிலையம் புளொட்டால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அல்ல என்ற உண்மை, எமக்குத் தெரிந்ந பின்பும் கூட, நாம் அதை பகிரங்கமாக மக்கள் மத்தியில் சொல்வதற்குத் தயாராக இருக்கவில்லை. இந்த உண்மை தெரிந்த பின்பும் இந்தியாவிலிருந்து வெளிவந்த " புதியபாதை" பத்திரிகையில் கூட சென்றல்காம்ப் பொலிஸ் நிலையத் தாக்குதல் புளொட்டால் மேற்கொள்ளப்பட்டதென்றே உரிமை கோரப்பட்டிருந்தது. தவறுகளை தவறென்று ஒத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டுவருவதற்கு மாறாக தொடர்ந்து நியாயப்படுத்தினோம். எமது தவறுகளை தவறென்று மக்கள் மத்தியில் சொல்வதற்கு தயங்கினோம்.

(தொடரும்).

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5

6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6

7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7

8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8

9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9

10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10

Last Updated on Friday, 01 July 2011 22:06